Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஒசாமாவிற்கும் பிரபாகரனிற்கும் வேறுபாடில்லை – அமரிக்கா : கோசலன்

அவலங்களும் அழிவுகளும் நிறைந்த ஈழத் தமிழர்கள் மீதான பெருந்தேசிய ஒடுக்குமுறையை அமரிக்க அரசு தனது மேலாதிக்கத்தை நிலை நாட்டிக்கொள்வதற்கான துருப்புச்சீட்டாகவே பயன்படுத்துகிறது என்பதைதுணை இராஜாங்கச் செயலாளர் ரொபேட் ஒ பிளக் இப்போது நேரடியாகவே கூறியுள்ளார்.

உலககில் எங்கெல்லாம் ஒடுக்குமுறையின் இரத்தக்கறை படிந்திருக்கிறதோ அங்கெல்லாம் அமரிக்க அரசின் பின்புலதைக் கண்டுகொள்ளலாம். அமரிக்காவின் கொல்லைப் புறத்தில் கூடுகட்டியிருக்கும் நாடுகடந்த தமிழீழ அரசும், அதன் அடிமைகள் போலத் தொழிற்படும் உலகத் தமிழர் பேரவையும், தமிழ் நாட்டின் தமிழ் இனவாதிகளும், தமிழர் பேரவை போன்ற புலிகளின் தொடர்ச்சியும் இனிமேலாவது புரிந்துகொள்ளட்டும் அமரிக்கா ஏகாதிபத்தியம் எதிரிதான் என்று.

அமரிக்காவின் சட்டலைட்டுக்கள் படம்பிடித்துக்கொண்டிருக்கும் போதே ஐம்பதாயிரம் மக்கள் முள்ளிவாய்க்காலில் சாட்சியின்றிக் கொல்லப்பட்ட்டார்கள். இன்று வரை ஈழப் பிரச்சனையைச் சற்றேனும் தெரிந்து வைத்திருக்கும் ஒடுக்கப்படும் மக்கள் பிரிவுகள் எல்லாம் இலங்கை அரசிற்கு சார்பான நிலைப்பாட்டை முன்வைத்ததில்லை. புலிகளின் சிந்தனைகளின் தொடர்ச்சியான குறுகிய எல்லைக்குள்ளான தேசியவாதிகளோ அவர்களை அணுகியதில்லை.

ஒடுக்கப்பட்ட மக்களின், ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்திற்கு மேற்குலகச் சார்பு விம்பத்தை உருவமைத்து உண்மையான நண்பர்களை அன்னியப்படுத்திய இனவாதம் அழிவுகளை மட்டுமே விட்டுச் சென்றுள்ளது.

இந்த நிலையில் அமரிக்காவினதும் மேற்கினதும் இறுதி நோக்கங்கள் மக்கள் சார்ந்ததல்ல என்பதை ரொபெர் பிளக் மிகத் தெளிவாகக் கூறியுள்ளார்.

அல் கய்தாவின் ஒஸாமா பின்லாடனுக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளின் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் வேறுபாடு கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வரலாற்றில் இருவரும் பயங்கரவாதத் தலைவர்களாக பதியப்படுவார்கள் எனவும், கொடூரமான பயங்கரவாத அமைப்பாக விடுதலைப் புலிகள் அமைப்பு கருதப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவைப் பொறுத்தவரை இலங்கை ஒரு முக்கியமான நாடு. குறிப்பாக கடற்பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத ஒழிப்பு போன்ற நடவடிக்கைகளில் இலங்கையுடன் நெருங்கிச் செயற்பட அமெரிக்கா விரும்புகின்றது என்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

யுத்தத்தின் பின்னர் இலங்கை அரசாங்கம் சில விடயங்களில் அபிவிருத்தி அடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். உயர் பாதுகாப்பு வலயங்களை வரையறுத்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஒசாமாவிற்கும் பிரபாகரனிற்கும் இடையே வேறுபாடில்லை என்று அமரிக்கப் பிரதினிதி கூறியதனூடாக இரண்டு விடயங்கள் தெளிவாகின்றன. பிரபாகரன் கொல்லப்படுவதையும் இனப்படுகொலை நிகழ்த்தப்படுவதையும் அமரிக்க அரசு ஆதரித்திருக்கிறது. மக்கள் திரள் அமைப்புக்களின் பின்பலமின்றி ஒசாமாவும் பிரபாகரனும் வாழ்ந்த காலங்களில் அமரிக்காவின் நேரடி அல்லது மறைமுக நண்பர்களாக அரசியலை வரித்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஐக்கிய நாடுகளின் அறிக்கை என்பது கொலை வெறிகொண்ட இலங்கை அரசாங்கத்தைத் அமரிக்க அணியை நோக்கி முழுமையாக உள்வாங்குவதற்கான பயமுறுத்தல் மட்டுமே. இனப்படுகொலையின் சூத்திரதாரிகளான ராஜபக்ச குடும்பமும் அதன் ஆதரவாளர்களும் இனிமேல் தமிழ்ப் பேசும் மக்களின் நண்பர்களான ஒடுக்கப்பட்ட மக்களால் மட்டுமே தண்டனைக்கு உள்ளாக்கப்படலாம் என்பதை அமரிக்கா வேறு வார்த்தைகளில் கூறியுள்ளது.

Exit mobile version