Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஐ.நா போர்க்குற்ற அறிக்கையும் அழிக்கப்படும் சுய நிர்ணைய உரிமைக் கோரிக்கையும்

United-States-Sri-Lankaஐ.நா போர்க்குற்ற அறிக்கையும் அழிக்கப்படும் சுய நிர்ணைய உரிமைக் கோரிக்கையும்
நீதிமன்ற விசாரணை முறைமை அல்லாத ஐக்கிய நாடுகள் சபை மனித் உரிமைப் பேரவையின் போர்க்குற அறிக்கை வெளியாகியுள்ளது. இந்த அறிக்கை மகிந்த ராஜபக்ச தலைமையிலான இலங்கை அரசாங்கம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீது தீவிர குற்றங்களை முன்வைத்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அல் ஹுசைன், அறிக்கை குறித்துக் கூறும் போது பயங்கரமான வன்முறைகள் இலங்கையில் நடைபெற்றுள்ளன என்றார். முன்று லட்சம் இடம்பெயர்ந்த பொதுமக்கள் உரிமைகள் அனைத்தும் மறுக்கப்பட்டு இடம்பெயர்ந்தவர்களின் முகாம்களில் சர்வதேசச் சட்டங்களுக்கு முரணான காலப்பகுதி முழுவதும் வைக்கப்பட்டிருந்தனர் என அறிக்கை குறிப்பிடுகிறது.

அனைத்துக் குற்றங்களையும் நிராகரிக்கும் நிலையிலிருந்து குற்றங்களை ஒப்புக்கொள்ளும் நிலைக்கு மாறி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான சந்தர்ப்பமாக அறிக்கையைப் பயன்படுத்துமாறு மனித உரிமை ஆணையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.புலம்பெயர்ந்த சமூகம் உட்பட அனைத்து சமூகங்களையும் நோக்கி இக் கோரிக்கையை முன்வைப்பதாக அவர் கூறியுள்ளார்.

இலங்கையில் ஏற்கனவே காணப்படும் நீதிப் பொறிமுறை பாரிய போர்க்குற்றங்களை விசாரணை செய்வதற்குப் போதுமானவை அல்ல எனத் தெரிவிக்கும் ஐ.நா மனித உரிமை ஆணையாளர், சர்வதேச நீதிபதிகளையும் பொறிமுறைகளையும் உள்ளடக்கிய உள்ளக விசாரணைப் பொறிமுறை ஒன்றை இலங்கை அரசு உருவாக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கை அரசின் மீதான குற்றங்களின் சாராம்சம்:

1. பொதுமக்கள், மனிதாபிமானிகள், அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள், தமிழ்ப் பொதுமக்கள் போன்றோரின் படுகொலை.

2. துணை இராணுவக் குழுக்கள் மற்றும் அரச படைகளால் கைதானவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

3. போர்க்காலத்தில் இராணுவத்திடம் சரணடைந்தவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

4. இரரணுவம் சட்விரோத கைதுகள், தடுத்து வைத்தல்கள் போன்றவற்றை மேற்கொண்டுள்ளது. துணை இராணுவக் குழுக்கள் கடத்தல்களில் ஈடுபட்டுள்ளன. இவ்வறான அநேக சந்தர்ப்பங்கள் பலவந்த கடத்தல்கள் மற்றும் சட்டவிரோத படுகொலைகளாக பதிவாகியுள்ளன.

5. இலங்கை அரசின் அனுசரணையுடன் வெள்ளை வான்களில் பலர் கடத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

6. பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்டம் ஆகியனவற்றை பயன்படுத்தி சட்டவிரோத கைதுகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன,

7. யுத்தத்தின் பின்னர் தொகையாகக் கைதான பலர் பலவந்தமான முறையில் காணாமல் போகச் செய்யப்பட்டுள்ளனர்.

8. ஆண்கள் மற்றும் பெண்கள் மீது இராணுவப் படையினர் பாலியல் வன்கொடுமைகளையும், ஏனைய வழிகளிலான பாலியல் சித்திரவதைகளையும் மேற்கொண்டதாகக் கருதத் தேவையான சாட்சியங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

9. காணாமல் போனவர்களின் தகவல்கள் மறைக்கப்பட்டு அவர்களின் குடும்பங்கள் மீது திட்டமிட்ட தகவல் மறுப்பு ஒடுக்குமுறைகளை நடத்தி இலங்கை அரசு அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளது.

10. பொதுமக்கள் இலக்குகள் மீது நடத்தப்பட்ட திட்டமிட்ட தாக்குதல்களில் பலர் காணாமல் போயுள்ளனர். சரணடைந்தவர்கள், அல்லது ஒப்படைக்கப்பட்டவர்கள் காணாமல் போயுள்ளனர்.

11. புலிகளுடன் தொடர்புடையவர்களும், சந்தேகத்திற்குரியவர்களும், பொதுமக்களும் தடுத்துவைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர்.

12. தாக்குதல் சம்பவங்கள் யுத்த விதிமுறைகளுக்கு முரணான வகையில் இடம்பெற்றுள்ளது. தாக்குதல்களில் சிறுவர்கள் உள்ளிட்ட சிவிலியன் கொல்லப்பட்டனர்.

13. பொதுமக்கள் இழப்புக் குறித்துப் கவனம் செலுத்தமல் யுத்தம் நடத்தப்பட்டிருக்கிறது. பொதுமக்கள் இழப்புக் குறித்து தொடர்ந்து விசாரணை செய்யப்பட வேண்டும்.

14. வன்னி வைத்தியசாலை மற்றும் ஏனைய வைத்தியசாலைகள் மீது தொடர்ச்சியாக எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

15. மனிக்பாம் மற்றும் ஏனைய இடம்பெயர் முகாம்களில் வாழ்ந்து வந்த மக்களின் உரிமைகள் முடக்கப்பட்டதுடன் அவர்கள் அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டனர்.

16. பொதுமக்கள் அடர்த்தியாக வாழ்ந்த பகுதிகளில் அரசபடைகள் நடத்திய தாக்குதலில் மக்களின் அழிவு குறித்துக் கருத்தில் கொள்ளாது ஆயுதங்கள் பயன்படுத்தப்படன.

17. யுத்தப்பகுதியில் அடிப்படை மனிதாபிமானத் தேவைகளான உணவு, மருத்துவம், போன்றவற்றை இலங்கை அரசு தடைசெய்து மக்களைப் பட்டினிச் சாவை நோக்கித் தள்ளியது.

18. தமிழ் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இடம்பெயர்ந்தவர்கள் சந்தேகத்திற்கு உட்படுத்தப்பட்டுத் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர்.

19. கருணா குழுவின் சிறுவர் படை சேர்ப்பு விவகாரம் படையினருக்கு தெரிந்திருந்தும் அது கண்டுகொள்ளப்படவில்லை. எனவே இதன் ஊடாக இலங்கை அரசாங்கம் சர்வதேச சிறுவர் உரிமைச் சட்டங்களை மீறியுள்ளது

தமிழீழ விடுதலைப் புலிகள் மீது சுமத்தப்பட்ட போர்க்குற்றங்களின் சாராம்சம்:

1. புத்திஜீவிகள், முரண்பட்டகருத்தைக் கொண்டவர்கள், தமிழர்கள், முஸ்லீம்கள், சிங்களவர்கள், சந்தேகத்திற்கு உரியவர்கள் போன்றோரைப் படுகொலை செய்தமை.

2. தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் அதிகளவு பொதுமக்களே கொல்லப்பட்டனர்.

3. தமிழீழ விடுதலைப் புலிகள் பல ஆண்டுகளாக சிறுவர் போராளிகளை படையில் இணைத்து அவர்களை யுத்தத்தில் ஈடுபடுத்தியுள்ளனர். இறுதிக் கட்ட போர் இடம்பெற்ற மாதங்களில் இந்த நடவடிக்கை அதிகளவில் மேற்கொள்ளப்பட்டது.

4. எறிகணைத் தாக்குதல்களுக்கு எதிர் தாக்குதல் நடத்தும் மையங்களை புலிகள் பொதுமக்கள் வாழும் பகுதிகளுக்கு அருகமையில் நிறுவி பொதுமக்களைப் பாதுகாக்கத் தவறியுள்ளனர்.

5. புலிகள் பொதுமக்களின் வெளியேற்றத்தைத் தடுத்ததுடன் வெளியேற முற்பட்ட சிறுவர்கள் உடப்ட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

6. மனிதாபிமான உதவிகளைக் கட்டுபடுத்தியமை.

7. தமிழீழ விடுதலைப் புலிகள் வயது வந்தவர்களை கடத்தி படையில் இணைத்துக் கொண்டமை

இலங்கை அரச படைகளின் பிரதான குற்றங்களான, கொத்துக்குண்டுகளை வீசியமை, நச்சுவாயுக்களைப் பயன்படுத்தியமை, பேரழிவு மற்றும் தடைசெய்யப்பட்ட யுத்த முறைகளில் ஈடுபட்டவை போன்ற குற்றங்கள் குறித்துப் பேசப்படவில்லை. தவிர, சரணடைந்தவர்களைச் சாட்சியின்றிக் கொலைசெய்தமை போன்ற குற்றச் செயல்கள் முன்வைக்கப்படவில்லை. வன்னியில் இலங்கை அரசுடன் இணைந்து யுத்தக்குற்றங்களில் ஈடுபட்ட இந்தியப் படைகள் குறித்தும், அழிவு ஆயுதங்களை வழங்கிய நாடுகள் குறித்தும் பேசப்படவில்லை.
எதிர்காலம்…

அமெரிக்க சார்பு இலங்கை அரசு யுத்தக் குற்றங்களுக்காகத் தண்டனை வழங்குவதற்குத் தயார் என அறிவித்துள்ளது. பாதுகாப்புச் செயலாளரோ, ஜனாதிபதியோ அன்றி இராணுவத் தளபதிகளோ பெரும் யுத்தக்குற்றங்களில் ஈடுபட்டிருந்தால் தமது அரசு நடவடிக்கை எடுப்பதற்குத் தயார் என இலங்கை அரசின் அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனரத்ன தெரிவித்துள்ளார்.

தென்னாபிரிக்காவில் நடைபெற்ற விசாரணை மாதிரியிலான அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார். அதனூடாக இலங்கையின் நற்பெயரை உலக மட்டத்தில் உயர்த்தும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இலங்கையில் யுத்த காலத்தில் உயர் அமைச்சுப் பதவிகளை வகித்தவர்களைக்கொண்ட இன்றைய இலங்கை அரசு அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலில் செயற்படும் என்பது தெளிவானது.

யுத்தக் குற்றங்கள் என்ற அடிப்படையில் சில பிரதானிகளுக்குத் தண்டனை வழங்கிவிட்டு தனது இனவழிப்பு மற்றும் நவ தாராளவாத அரசியலை இலங்கை அரசு தொடரும். ஒரு புறத்தில் போர்க்குற்ற விசாரணையும், மறுபுறத்தில் வட கிழக்கில் தமிழர்களைச் சிறுபான்மையாகும் முயற்சிகளும் நடைபெறும்.

துரதிருஸ்டவசமாகப் புலம்பெயர் பிழைப்புவாதிகளின் கரங்களின் முடங்கியிருக்கும் தமிழர்களின் அரசியல் பல பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். புலிகளின் தவறான பக்கங்களையும், அரசியலையும், மனித உரிமை மீறல்களையும் நியாயபடுத்துவதன் ஊடாக உலக மக்களிடமிருந்து தமிழர்கள் அன்னியப்படுத்தப்படுவார்கள். இலங்கை அரசாங்கம் நீதியானது என்ற கருத்து உலகம் முழுவதும் ஏற்படும். சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டம் என்பது போர்க்குற்றமிழைத்தவர்களின் வெற்று முழக்கம் என உலக மக்கள் நம்பும் நிலை தோன்றும் சில காலங்களில் சுய நிர்ணைய உரிமைக்கான கோரிக்கை அழிக்கப்பட்டு வடக்குக் கிழக்கு தமிழர்களின் தன்னாதிக்கத்திற்கு உரிய பகுதிகளாக இருந்தன என்பது வரலாற்றுப் புத்தகங்களின் மட்டுமே எழுதப்படும்.

இந்த நிலை மாற வேண்டுமானால் இலங்கை அரசிற்கு முன்னதாக தமிழர்கள் தரப்பிலிருந்து புலிகளின் மனித உரிமை மீறல்களை ஏற்றுக்கொண்டு, அவற்றையும் சுய நிர்ணைய உரிமைப் போராட்டத்தையும் முடிச்சுப்போட வேண்டாம் என்ற குரல் ஒலிக்க வேண்டும். தவறினால் இலங்கை அரசின் திட்டம் நிறைவேறுவது தவிர்க முடியாத ஒன்று. ஆனால் புலிகளது அடையாளங்களும் அதன் இருப்பும் புலம்பெயர் நாடுகளில் மில்லியன்கள் புரளும் வியாபாரமாகிவிட்ட நிலையில் மக்கள் சார்ந்த அரசியலை முன்வைத்து நடைமுறைப்படுத்துவது இன்று சாத்தியமற்றது.

Exit mobile version