Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஐஸ்லாந்து – ஒடுக்கப்பட்ட மக்கள் போராட்டங்களின் ஆரம்பம்?:கலையரசன்

உலகின் ஆறாவது பணக்கார நாடான ஐஸ்லாந்தில், இடம்பெற்ற வெற்றிகரமான மக்கள் புரட்சியானது, வரவிருக்கும் புரட்சிகளின் முன்னறிவித்தலா? நிதி நெருக்கடியால் ஐஸ்லாந்து அரசாங்கம் கவிழ்ந்தது, நிச்சயமாக ஒரு தொடக்கம் தான். சர்வதேசம் தனது கவனத்தை ஒபாமாவின் பதவியேற்பு வைபவத்தின் பக்கம் திசை திருப்பிய வேளை தான், அந்த அதிசயம் அரங்கேறியது. செல்வம் கொழித்த மேற்கு ஐரோப்பிய நாடொன்றில், மக்கள் போராட்டம் ஒரு அரசாங்கத்தையே மாற்றியது என்பதையோ, அரச அதிகாரத்தை மக்கள் தமது கைகளில் எடுத்தனர் என்பதையோ, உலகம் அறிய விடாது தடுப்பதில் தான் ஊடகங்கள் குறியாக இருந்திருக்கும்.

“ஐஸ்லாந்து பொருளாதாரம் உறுதியாக இருப்பதாகவும், வளர்ந்து வருவதாகவும்”, ஜூலை 2008 ல் ஐ.எம்.எப். அறிவித்தது. அதற்கு ஓரிரு மாதங்களிற்குப் பிறகு, அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி காரணமாக, மூன்று பெரிய வங்கிகள் அடுத்தடுத்து திவாலாகின. இதே வங்கிகள் தான், ஒரு காலத்தில் கடற் தொழிலையே நம்பி வாழ்ந்த ஐஸ்லாந்து மக்களை, செல்வந்தர்களாக்கின. இன்று தேசப் பொருளாதாரமே ஸ்தம்பிதமடைந்த நிலையில், கல்வியறிவு பெற்ற புதிய தலைமுறை கடலை நம்பி வாழும் கடந்த கால அவல வாழ்க்கைக்கு திரும்ப தயாரில்லை.

மூன்று மாதத்திற்குள், பணவீக்கம் 13% ஆகியது. தேசிய நாணயமான குரானாவின் பெறுமதி அரைவாசியாகியது. பொருளாதாரம் 10 வீதம் சுருங்கியது. திவாலான கம்பெனிகள், 300000 பேர் கொண்ட ஐஸ்லாந்து சனத்தொகையில், 12000 வேலையற்றோரை உருவாக்கின. சுகாதார துறை போன்ற பொதுநல செலவினத்தை குறைத்த போதும், இவ்வருட வரவு செலவு திட்டத்தில் பில்லியன் யூரோ துண்டு விழுந்தது. பொருளாதார பிரச்சினைக்கு, அமைச்சர்கள் வங்கி முதலாளிகளை குற்றஞ்சாட்டினர். வங்கி முதலாளிகளோ அமெரிக்காவை குற்றஞ்சாட்டினர். அரசாங்கம் பொது மக்களின் வரிப்பணத்தை கொடுத்து, வங்கிகளை திவாலாகாமல் தடுக்கப்பார்த்தது. அந்த செலவை ஈடுகட்ட ஐ.எம்.எப். பிடம் கடன் (2 billion dollar) வாங்கியது.

கடனை திருப்பி செலுத்துவதாயின், பொது துறை செலவினத்தை குறைக்கும் படியும், வரிகளை உயர்த்தும் படியும், ஐ.எம்.எப். ஆலோசனை கூறியது. அதாவது வங்கி முதலாளிகள் பங்கு வர்த்தகத்தில் சூதாடி தொலைத்த பணத்தை, பொது மக்களிடம் அறவிடக் கோரியது. பெரும்பான்மை மக்கள் படிக்காத பாமரர்களாயின், இலகுவாக ஏமாற்றி இருக்கலாம். ஐஸ்லாந்து மக்கள் கல்வியறிவு பெற்றது, தமது சம்பாத்தியத்திற்காக மட்டுமல்ல, அரசாங்கத்தை கேள்வி கேட்கவும் தான். அமைச்சர்கள், கம்பெனி நிர்வாகிகள், மக்களுடன் விவாதிக்க பொது மேடைக்கு அழைக்கப்பட்டனர். மக்களின் கேள்விக்கு அவர்களிடம் சரியான பதில் இருக்கவில்லை. ஆளும் கட்சியின் அரசியலில் நம்பிக்கை இழந்த மக்கள், தலைநகர் ரெய்ஜாவிக் தெருக்களில் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில், முதியோர் முதல் சிறுவர் வரை தவறாமால் சமுகமளித்தனர். தேசபக்திப் பாடல்களைப் பாடினர். மக்களை கிளர்ந்தெழ செய்த அந்தப் பாடல்கள்: Land míns föður, landið mitt [எனது தந்தையின் நாடு, எனது நாடு) Hver á sér fegra föðurland (அழகான தந்தையர் நாடு யாருடையது?) . இதற்கிடையே கோடிகோடியாக பணம் சேர்த்து விட்ட பணக்கார கும்பல் நாட்டை விட்டு ஓடிக் கொண்டிருந்தது.

மூன்று மாதங்களாக, பாராளுமன்ற(Althingi) முன்றலான, Austurvöllur யில் மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆளும் வலதுசாரி “சுதந்திரக் கட்சி”, பதவி விலகுமாறு கூறிய மக்களின் குரலுக்கு செவி சாய்க்க மறுத்தது. ஹார்டே தலைமை தாங்கிய அரசாங்கம், பொருளாதார அபாயம் குறித்து மக்களுக்கு ஏற்கனவே அறிவுறுத்த தவறிவிட்டதாக குற்றச் சாட்டுகள் எழுந்தன. அரசாங்கம் புதுவருடத்தில் பாராளுமன்ற கூட்டத்தொடரை, திருடர்கள் போல நகரில் வேறு கட்டடங்களில் கூடியிருந்து நடத்திக் கொண்டிருந்தது. 2009 ஜனவரி, 20 ம் திகதி , ஐஸ்லாந்து புரட்சி ஆரம்பமாகியது. பத்தாயிரத்திற்கும் அதிகமான மக்கள் பாராளுமன்ற கட்டடத்தை சுற்றி வளைத்து நின்றனர். உறைய வைக்கும் கடுங்குளிரையும் பொருட்படுத்தாது, தீவட்டிகளை நட்டு வைத்து காத்திருந்தனர். வீடுகளில் இருந்து எடுத்து வந்த, அலுமினிய பாத்திரங்களை தட்டி ஒலி எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். மக்களின் இந்த முற்றுகை நாட்கணக்காக நீடித்தது.

கலகத் தடுப்பு பொலிசாருடன் சில இளைஞர்கள் மோதிய சம்பவம் தான், போராட்டத்தின் இறுதிக்கட்டம். முகத்தை மூடிக்கொண்ட இடதுசாரி இளைஞர்கள், வங்கி முதலாளிகள் புதுவருடக் கொண்டாட்டம் நடத்திய ஐந்து நட்சத்திர ஹோட்டலை முற்றுகையிட்டனர். அமைச்சர்கள் பாராளுமன்றத்தை அணுக விடாது தடுத்து விரட்டினர். பிரதமர் ஹார்டேயை கூட, அவரது மெய்ப்பாதுகாப்பாளர்கள் மக்க்களிடம் இருந்து பாதுகாத்து அழைத்துச் செல்ல வேண்டி இருந்தது. அதற்குப் பிறகு, வெளிநாட்டில் புற்றுநோய்க்கு வைத்தியம் செய்யப்போவதாக ஒரு காரணத்தை சொல்லி, பிரதமர் நாட்டை விட்டு வெளியேற, அரசாங்கம் தோல்வியை ஒப்புக்கொண்டது. முக்கிய அமைச்சர்கள் அடுத்தடுத்து பதவி விலகினர். 2009 ம் ஆண்டு மே மாதம் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்றும், அதுவரை இடதுசாரி பசுமைக்கட்சியும், சமூக ஜனநாயக கட்சியும் ஆட்சி அமைக்கும் என்று அறிவிக்கப்பட்டது. “அமைதியான”, “அடக்கமான” ஐஸ்லாந்து வன்முறையை அதுவரை கண்டதில்லை, என்று சிலாகித்து எழுதின வெளிநாட்டு பத்திரிகைகள். ஆனால் 1949 ம் ஆண்டு, ஐஸ்லாந்து நேட்டோ அமைப்பில் அங்கத்துவராக சேர்ந்ததை எதிர்த்து நடந்த போராட்டத்திலும், இது போன்ற வன்முறைக் காட்சிகள் அரங்கேறின.

ஐஸ்லாந்தில் நடந்ததை புரட்சி என்று அழைக்கலாமா? அங்கே வர்க்க எழுச்சி காணப்பட்ட போதும், சித்தாந்த ரீதியான வழிகாட்டும் தலைமை இன்னும் உருவாகவில்லை. ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்தியில் இருந்து உருவான புதிய “முற்போக்கு கட்சி”யும், மற்றும் சமூக ஜனநாயக, பசுமைக் கட்சிகளும் மக்கள் நலன் சார்ந்த பொருளாதாரத்தை முன்னெடுக்க வேண்டிய நிலையில் உள்ளனர். அதே நேரம் புதிய அரசியல் நிர்ணய சட்டம் எழுதப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. சுருக்கமாக இதனை வெனிசுவேலா அல்லது பொலிவியாவில் போன்ற நாடுகளில் இடம்பெற்ற, இடதுசாரி அலையுடன் ஒப்பிடலாம். லத்தீன் அமெரிக்க கண்டத்தில் ஏற்பட்ட சமூக மாற்றம், தற்போது ஐரோப்பிய கரையை வந்தடைந்துள்ளது. ஐஸ்லாந்தின் உழைக்கும் வர்க்கம், பிற ஐரோப்பிய நாடுகளின் சகோதரர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்வார்களா? பதவி நாற்காலிகளில் அமர்ந்திருக்கும் ஆளும் கும்பல்கள் தவிப்புடன் பொழுதைக் கழிக்கின்றனர்.

Exit mobile version