கவிதைகளைப் பற்றி பகிர்ந்து கொள்ளுதலைவிட சிறந்தது கவிதையை ஆறஅமர இருந்து உணருவது. ஒரு கவிதை படித்து உங்களுடன் பகிர்ந்து கொள்ள முயற்சிக்கும் போது சில வேளைகளில் குழப்பம் தோன்றும். கவிதையின் உயிர் இருக்கும் பகுதியை மட்டும் கவிதைக்கு வலித்துவிடாமல் பிரித்து கொணரும்போது சின்னதாய் ஒரு கீறல் கைமீறி மனதில் ஏற்பட்டுவிடுகிறது. கவிதையை எப்படி உணருவது? உணர்வின் அதிர்வை ஏற்படுத்தக்கூடிய உச்சம் கவிதையில் எங்கே கிடக்கிறது? அதை எப்படி உணரப்போகின்றோம்? வார்த்தைகள் பிரசவிக்குமிடத்திலா? மனம் லயிக்கும் இடத்திலா? இதோ இங்கே ஒரு கவிதையை திறந்து பார்ப்போம்.
நான் தென்றலாக
வரவில்லை
அதனாலேயே
புயல் என்று
யார்.. சொன்னது?
….
நான் காதலியாக
வரவில்லை
அதனாலேயே
சகோதரி என்று
யார்… சொன்னது?
….
நான் நானாக
நீ நீயாக
நீயும் நானும்
புதிதாகப் பிறந்தவர்கள்
நான் யார்…?
நாளைய
அகராதி எழுதும்…
அதுவரை
இருக்கின்ற சொற்களில்
என்னை கழுவேற்றி
உன்னை
முடித்துக்கொள்ளாதே
…..
மரபுவழி இலக்கியங்க
எந்த வார்த்தை ஜாலங்களுமற்று, புரியாத புதிராகத் தோற்றங்கொள்ளாமல், நிகழ்கால நிகழ்வுகளை, வாழ்வினில் பிரதிபலிக்கும் ஆதிக்கத்தை, யதார்த்தத்தை, இப்படிச் சொல்லலாம் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகிறது கவிஞர் புதியமாதவியின் கவிதைகள். ஒரு கவிதையில் அவருடைய கோபம் இப்படி வெளிப்படுகிறது.
எழுத்துக்கும் வாழ்க்கைக்கும்
எதிர் முகங்கள் கண்டு –நான்
எழுதுவதை நிறுத்திவிட
எண்ணியதும் உண்டு –நான்
தீயென்று எழுதும் போது
சுட வேண்டும் -அதைத்
தீண்டுகிற நாக்கில்
வடு பட வேண்டும்
என்ற ஆவேசம் மிகுந்த இந்த வரிகளில் தனது கோப உணர்வை மூடி மறைக்காமல் எழுதும் தொனி கிளம்புகிறது. இதுபோன்று சமூகம் தொடர்பான, பெண்கள் தொடர்பான இவருடைய கவிதைகள் வீரியமான வீச்சுக்களைக் கொண்டவை.
புதியமாதவி கவிஞராக மட்டும் நின்றுவிடாது சிறுகதைத் தொகுதி கட்டுரைகள் என்று இவருடைய இலக்கியப் பயணம் பரந்து விரிந்தவை. இவருடைய மூன்று கவிதைத் தொகுப்புகள். ‘சூரியப்பயணம்’ ‘ஹே…ராம்’, ‘நிழல்களைத்தேடி’. ஹேராம் தொகுப்பிலிருந்து மற்றொரு கவிதையின் வரிகள் இப்படி விரிகிறது.
பரமபிதாவே.. எங்களை மன்னியும்
பிழைத்திருப்பதற்காக
நன்றி சொல்ல
எங்களால் முடியாது
பிழைத்திருப்பதே பிழையாகிப்போனதால்
அச்சுப்பிழையில்
அர்த்தமிழந்துவிட்டது உன் வாசகம்
பரமபிதாவே எங்களை மன்னியும்
கோழிமிதித்து குஞ்சகள் மாண்டன
கருவறையே கல்லறையானது
முலைப்பாலில் உயிர்க்கொல்லி
ஒப்பாரியில் உன் சங்கீதம்
பரமபிதாவே எங்களை மன்னியும்..!
புதியமாதவியின் கவிதைச் சொற்களில் எளிமையும், அலங்காரம் துறந்த அனுபங்களும் வார்ப்படங்களாகி வருகின்றன. அவர் பகிர வரும் விடயங்கள் உடல், காலம், இடம், ஒரு சமூகம் சார்ந்து வெளிபடுபனவாகவும் அவருடைய கனவுகள் பரந்து விரிந்த ஒரு தளத்திலிருந்தும் பயணித்து வருகிறது.
ஒற்றை நட்சத்திரம்
போதுமா இருட்டுக்கு?
நகைக்கிறது வானம்
எப்படிப் புரியவைப்பேன்?
முகம் தேடி அலையும் இருட்டில்
எரியும் மெழுகுவர்த்தியிடம்
காணாமல் போகிறது
கண்கூசும் சூரியன் என்பதை.
இனம், மொழி, சாதி, சமயம், வர்க்கம் என்ற பிரிவுகளால் கூறுபோடப்பட்டிருக்கும் மனிதம் எமக்காக எங்கோ ஒரு தூரத்தில் மண்டிக்கிடக்கிறது. மனிதத்தை தேடிப் பயணிக்கும் பல இலக்கியங்களை எம் முன்னே நாம் காணக்கூடியதாக இருக்கிறது. புதிய மாதவியின் கவிதைகளிலும் அதற்கான வெளிப்படையான தேடலை நாம் காணலாம்.
என் வீடு
அப்படித்தான்
அரசு முத்திரைத்தாள்களில்
எழுதப்பட்டிருக்கிறது
இடப்பக்கமும்
வலப்பக்கமும்
பின்பக்கமும்
இருக்கும் வீடுகளின்
சுவர்களால்
கட்டி எழுப்பப்பட்டிருக்கிறது
.கிராமத்து வீட்டை
விற்ற ஏக்கத்தில்
செத்துப்போன
அம்மாவின் நிழற்படம்
நுழைவாசலில்
தொங்கிக்கொண்டிருக்கிறது
இவை தவிர
இது என் வீடு
என்பதற்கான
எந்த அடையாளமும்
என் வீட்டில் இல்லை
இவருடைய கவிதைகளின் வேர் தன்மண்ணுடன் பிணைந்து படர்ந்ததவை. அந்த மண்ணின் துயரங்களை இவருடைய கவிதைகள் காவி வந்து எம் அருகில் உரிமையோடு அமர்ந்து கொள்கின்றன.
ஒவ்வொரு சாவிகளையும்
பத்திரமாக வளையத்தில் கோத்து
அலங்காரமான
விலையுயர்ந்த வெள்ளிச்சாவிக்கொத்தில்
தொங்கவிட்டு பாதுகாத்துவந்த
எங்கள் தலைமுறையின் சாவிக்கொத்து
காணவில்லi
தொலைத்துவிட்டேன்
இனி
எதைக்கொடுப்பேன்
என் மகளுக்கும்
வரப்போகும் மருமகளுக்கும்
எப்படியும்
அவர்கள் கண்டுபிடிக்கவேண்டும்
தொலைந்து போன சாவிக்கொத்தை அல்ல
சாவிகள் இல்லாமல்
பூட்டுகளை உடைக்கும்
புதிய வித்தைகளை..
என்று பூட்டுடைத்து எம் எதிர்காலச் சந்ததியினருக்குமான பெருவெளி சுமந்த கதவுகளையும் திறந்து வைக்கிறார் தன் வரிகளில்.
‘பசியை
அவள் சாப்பிட்டாள்
பசியின் உடலை
அவன்
பசி சாப்பிட்டது’
என்ற இந்த வரிகளைப் படிக்கும் போது ஏழ்மை சுமந்த பெண் வடிவத்தையும் காமபசி அடங்கா ஒரு ஜென்மத்தையும் கொண்ட ஓவியம் ஒன்று மனக்கண்முன் விரிந்து இதயத்தில் அறைகிறது. காமமற்ற மனிதர்கள் என்று யாருமில்லாத உலகம் இது.
அப்படி இயற்கைக்குப் புறம்பாக தம்மை வருத்தி இருக்கவும் தேவையில்லை என்பது என் கருத்து. ஆண்களின் பெண்குறித்தான வேட்கையில் அறிவைத்தாண்டி காதலைத்தாண்டி, மனிதத்தன்மையைக் கடந்து காமம் கண்மறைக்கும் போது வெளிப்படும் செயல்கள் அப்பட்டமான மிருகத்தின் மனநிலையையுடையது என்பதை எடுத்துரைக்கிறது. இக்கவிதையினூடாக. ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் ஏற்படக்கூடிய பரஸ்பர நேசம் பார்வைகளால் பகிரப்படும் தருணங்கள் சொட்டும் நொடிகளை கொலை செய்த ஒரு கொலைகாரனின் முகம் தெறிகிறது.
கணவனின் தோழியர் ‘நிழல்களைத் தேடி’
எதாவது காரணம் சொல்லி
அடிக்கடி சந்திக்கும்
உன் தோழியரின் முகங்கள்
அச்சுறுத்தவில்லை என் இரவுகளை
எப்போதோ சந்தித்த
என் பள்ளிப்பிராயத்து நண்பனை
இப்போதும் நான் சந்திப்பதாக
நீ சந்தேகப்படும் வரை
இலக்கியங்களும் இயற்கையும் வாழ்க்கையை நேசிப்பதற்கு உந்துதல் அளிப்பவை. எப்படி மனிதனின் ஆரோக்கியத்திற்கும் உயிர் வாழ்தலுக்கும் நல்ல உணவும் மருந்தும் தேவையோ அதே போல் நல்ல மனித மனதிற்கும் ஆத்மாவிற்கும் ஆரோக்கியம் அளிப்பதற்கு நல்ல இலக்கியங்கள் தேவை. நல்ல இலக்கியங்கள் மூலம் மனிதர்களை தரப்படுத்தாமல், எந்தத் தரத்தில் இருக்கும் மனிதர்களையும் நேசித்து மகிழக்கூடிய மனப்பக்குவத்தை தரும். இந்தப் பக்குவம் என்பது தற்போது நாம் வாழும் எமது சமூகத்தில் வளருதல் இன்றியமையாதது.
மரபுவழி தந்த இலக்கியங்களை நாம் இன்றைய காலத்திற்கேற்ப்ப ஒப்பீடு செய்து மறுபரிசீலனை செய்து பார்த்திருக்கின்றோமா? எத்தனை தூரம் அதற்கான வழி முறைகளை செய்ய முயன்றிருக்கின்றோம். இவை மட்டுமன்றி நாம் இன்றைய இலக்கிய சூழலில் மட்டும் என்ன ஆணாதிக்க சிந்தனையில் இருந்து விடுபட்டிருக்கின்றோமா?