கேள்வி: செயற்குழுவிற்கு எத்தனை பேர் வந்திருந்தார்கள்?
பதில்: மொத்த செயற்குழு உறுப்பினர்கள் 329 பேர். அதில் வருகை தந்தவர்கள் 257 பேர். சிறப்பு அழைப்பாளர்கள் 38 பேர். அதில் வருகை தந்தவர்கள் 31 பேர்.
கேள்வி: எத்தனை தீர்மானங்கள் இன்று நிறைவேற்றப்பட்டன? முக்கியத் தீர்மானம் என்ன?
பதில்: மொத்தம் ஏழு தீர்மானங்கள். முக்கியத் தீர்மானம் போராட்டத் தீர்மானம்.
கேள்வி: போராட்டத் தீர்மானத்தின் மீது எடுத்த முடிவைப் பற்றி கூறுங்கள்?
பதில்: அனைத்து வகையிலும் செயலிழந்து விட்ட அ.தி.மு.க. அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து சென்னை மாநகரில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திலே இருந்து, கடற்கரை சாலை வழியாக, கடற்கரை சாலையிலே உள்ள கலங்கரை விளக்கம் வரையில் – அக்டோபர் 5ஆம் தேதி வெள்ளிக் கிழமை பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரையில் கறுப்புடை அணிந்த மனித சங்கிலியும் – அதுபோலவே தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களிலும் அதே நாளில் பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரையில் அவ்வாறே கறுப்புடை அணிந்த மனித சங்கிலியும் அமைத்து ஆர்ப்பாட்டம் நடத்துவதென்று இந்தச் செயற்குழு தீர்மானித்துள்ளது.
கேள்வி: சென்னையில் நடைபெறும் கறுப்புடை அணிந்த மனித சங்கிலி ஆர்ப்பாட்டத்திற்கு யார் தலைமை ஏற்கிறார்கள்?
பதில்: சென்னையிலே நடைபெறும் கறுப்புடை அணிந்த மனித சங்கிலி ஆர்ப்பாட்டத்திற்கு நானே தலைமை வகிக்கிறேன். மற்ற மாவட்டங்களில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்களைப் பற்றி மாவட்டக் கழகச் செயலாளர்கள் கலந்து பேசி முடிவெடுத்து அறிவிப்பார்கள்.
கேள்வி: டீசல் விலை உயர்வு பற்றி?
பதில்: அதையெல்லாம் உள்ளடக்கித் தான் தீர்மானங்கள் நிறைவேற்றியிருக்கிறோம். ஏழு தீர்மானங்களில் அவைகள் எல்லாம் அடங்கும்.
கேள்வி: மத்திய அமைச்சரவையில் புதிதாக சேர மாட்டோம் என்று சொல்லியிருக்கிறீர்கள். அதற்கு என்ன காரணம்?
பதில்: பங்கு பெறமாட்டோம் என்பதுதான் காரணம்.
கேள்வி: அ.தி.மு.க. பொறுப்பேற்றதிலிருந்து அதிகாரிகள் எல்லாம் அடிக்கடி மாற்றப்படுகிறார்கள். அமைச்சர்கள் மாற்றப்படுகிறார்கள். பேரவைத் தலைவரே இப்போது பதவி விலகியிருக்கிறார். அதைப்பற்றி தி.மு.க. வின் கருத்து?
பதில்: நிறைவேற்றப்பட்டுள்ள ஏழு தீர்மானங்களில் இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் அடங்கியிருக்கிறது.
கேள்வி: ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் நீங்கள் இடம் பெற்றிருக்கிறீர்கள். அன்னிய நேரடி முதலீட்டினை எதிர்த்து எதிர்க் கட்சிகள் நாடாளுமன்றத்திலே தீர்மானம் கொண்டு வந்தால், அதை தி.மு.க. ஆதரிக்குமா?
பதில்: ஆதரவு அளிப்போம்.
கேள்வி:- இப்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் மூன்றாவது அணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?
பதில்: அதற்கான முயற்சிகளிலே சிலர் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்களிடம் கேட்க வேண்டிய கேள்வியை அந்த அணியைப் பற்றியே சிந்திக்காமல் இருக்கின்ற எங்களிடம் கேட்பது நியாயமல்ல.
கேள்வி: பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் நாடாளுமன்றத்திற்கு முன் கூட்டியே தேர்தல் வரும் என்று சொல்கிறார்கள். உங்கள் கருத்து என்ன?
பதில்: நான் ஜோசியம் சொல்ல விரும்பவில்லை. பொதுவாக ஜோசியத்திலே நம்பிக்கையும் இல்லை.
கேள்வி: காங்கிரசுடன் தி.மு.க. விற்கு உறவு எவ்வாறு உள்ளது?
பதில்: உறவு என்பது வேறு. அதற்கிடையே இதுபோன்ற சில பிரச்சினைகளை பேசித் தீர்ப்பது என்பது வேறு. ஆகவே இந்தப் பிரச்சினைகளுக்காக உறவு பாதிக்காது.
கேள்வி: ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் தி.மு. கழகம் தன்னுடைய மாறுபட்ட பிரச்சினைகளை முன் வைத்ததா?
பதில்: கட்சி வேறுபாடு எதுவும் இல்லை. பிரச்சினைகளின் மீது எங்களுடைய கருத்துக்களை தி.மு.க. சார்பிலே கலந்து கொண்டவர்கள் வெளியிட்டிருக்கிறார்கள்.
கேள்வி: ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் தி.மு.க. தன்னுடைய எதிர்ப்புகளைத் தெரிவித்த பிறகும், பிரதமர் எடுத்த முடிவில் மாறுதல் இருக்காது என்று சொல்லியிருக்கிறாரே?
பதில்: உடனடியாக அந்தக் கருத்தைப் பற்றி சவால் முறையில் எதுவும் செய்வதற்கில்லை. மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதில் எங்களுக்குள்ள அக்கறையின் காரணமாக பிரதமர் மன்மோகன் சிங் மேலும் இவைகளைப் பற்றி சிந்திப்பார் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம்.
கேள்வி: கூடங்குளம் பிரச்சினையில் தற்போது போராட்டம் தீவிரம் அடைந்திருக்கிறது. இதில் மத்திய, மாநில அரசுகளுக்கு நீங்கள் சொல்கின்ற கருத்து என்ன?
பதில்: மத்திய அரசு, மாநில அரசைப் போல இருதலைக் கொள்ளியாக செயல்படக்கூடாது என்பதுதான் என்னுடைய கருத்து. கூடங்குளம் பற்றிப் பேசுவதென்றால், அது பெரிய வரலாறு. உங்கள் மொழியிலே, உங்களுக்குத் தெரிந்த மொழியிலே சொல்லவேண்டுமேயானால், அது பெரிய ராமாயணம்.
ஏனென்றால் கூடங்குளம் தொடங்கிய போது, அதனால் மின்சார உற்பத்தி அதிகமாகும், நாட்டிற்குப் பயன்படும் என்றெல்லாம் சொன்னபோது அதை வரவேற்றவர்கள் நாங்கள். இப்போதும் வரவேற்பவர்கள்தான்.
ஆனால் அதனால் மக்களுக்கு ஆபத்து ஏற்படும், வாழ்வாதாரமே சீர்குலையும் என்றெல்லாம் குரல் கிளம்பிய போது அதைப் பற்றி முதலமைச்சர் ஜெயலலிதா உடனடியாக – அவருடைய கட்சிக் கூட்டத்திலே அல்ல, ஆட்சியின் அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி, கூடங்குளத்தில் பணிகளையெல்லாம் நிறுத்தி வைக்கவேண்டுமென்று தீர்மானத்தை நிறைவேற்றி, அதை டெல்லிக்கு அனுப்பி வைத்தார்.
அதன் பிறகு இப்போது, கூடங்குளத்தால் ஏற்படும் ஆபத்துகளை விளக்கிப் போராடுகின்ற மக்களை அழைத்துப் பேசியோ அல்லது அரசின் மூலமாகவோ சமாதானப்படுத்துகின்ற – அவர்களுக்குத் தெளிவு ஏற்படுத்துகின்ற எந்த முயற்சிகளிலும் ஈடுபடாமல், அடக்குமுறையால் அதை ஒடுக்கி விடலாம் என்று கருதி செயல்படுகிறார். அதைத்தான் நாங்கள் கண்டிக்கிறோம்.
கேள்வி: கிரானைட் குவாரி விஷயத்தில் முன்னாள் அமைச்சர் மீதும், இப்போதுள்ள அமைச்சரின் மகன் மீதும் வழக்கு தொடுத்து போலீஸ் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அதை அரசியல் பழிவாங்கும் போக்கு என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
பதில்: அரசியல் பழிவாங்கும் செயல் இன்று சர்வ சாதாரணமாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது தொடுக்கப்படுகிறது என்பதை நான் நன்றாக அறிவேன். இந்த கிரானைட் குவாரி பிரச்சினையில் சம்பந்தப்பட்டவர்கள் என்று யார் யார் மீது குற்றம் சாட்டியிருக்கிறார்களோ, அவர்களைப் பற்றியெல்லாம் பத்திரிகைகளிலே செய்திகள் வருகின்றன.
சிக்கியவர்களில் யார் யார் உண்மையான தவறு செய்தவர்கள், தவறு செய்யாதவர்கள் யார் என்பது என்பதெல்லாம் இப்போது தெரியாது. ஏனென்றால் இந்தத் தொழிலிலே ஈடுபட்டவர்கள் யார் யார் என்பதை கடந்த கால அ.தி.மு.க. ஆட்சியிலேயிருந்து கணக்கிட்டு, அதைப் பற்றி பரிசீலிக்க சி.பி.ஐ. விசாரணை வைப்பதுதான் உசிதமாக இருக்கும் என்று நான் கருதுகிறேன்.
கேள்வி: பல்வேறு முரண்பாடுகளோடு மத்திய அரசு செயல்படும் இந்த நிலையில், தொடர்ந்து தி.மு.க. அவர்களுக்கு ஆதரவு அளிப்பதின் காரணம் என்ன?
பதில்: இந்தியாவிலே ஒரு பிற்போக்குத்தனமான, மதச் சார்புள்ள ஆட்சி வந்து விடக்கூடாது என்பது தான் முக்கிய காரணம்.
கேள்வி: தலைமைச் செயலகத்திற்கு முன்னால் இருந்த கல்வெட்டில் இருந்த உங்கள் பெயரை அழித்திருக்கிறார்கள். பக்கத்திலேயே ஜெயலலிதாவின் பெயர் தாங்கிய கல்வெட்டினை புதிதாக வைத்திருக்கிறார்கள். கறுப்புச் சட்டை மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் அந்த வழியாகத்தான் செல்கிறது. உங்கள் தொண்டர்கள் கல்வெட்டினைப் பார்த்து விட்டு கோபப்படமாட்டார்களா?
பதில்: இதெல்லாம் சாதாரண விஷயம்.