Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

எலி பொரிக்கும் கூட்டுத்தாபனத்தின் செய்திகள்..! – மேதினக் கவிதை: கவிஞர் பொத்துவில் அஸ்மின்

எலி பொரிக்கும் கூட்டுத்தாபனத்தின் செய்திகள்..!

வணக்கம்
இது எலிபொரிக்கும்
கூட்டுத்தாபனத்தின் செய்திகள்.
செய்தி ஆசிரியர்
பெருச்சாளி
செய்திகள் வாசிப்பது
சு.சுண்டெலி…..

முதலில்
முதன்மை செய்திகள்.

விலங்குகளுக்கு இன்று
விடுமுறை நாளாகும்.

அடிமை விலங்குகளுக்கு
ஆளும் விலங்குகள்
விடுதலை வழங்கி
விருந்தளித்து
விருது வழங்கும்
விசேட நிகழ்வு
இன்று காலை பத்துமணியளவில்
சிங்க ராஜவனத்தில்
சிறப்பாக இடம்பெற்றது.

மாடுகளுக்கு
மாலைபோட்டு
மாநாடு நடத்த
கசாப்புக் கடைக்காரர்கள்
கைகோர்க்கும் நிகழ்வென்று
இந்நிகழ்வை
நீர்யாணைகள் விசனித்தாலும்

மான்கள்தான் இக்காட்டின்
மன்னர்கள் என்று
சிங்கமும் புலியும்
சிறப்புரையாற்றி
சிலாகித்தன
இதனைக்கேட்ட
கழுதைகள் கைதட்டின.

இன்றைய மேதினத்தில்
அப்பாவி
ஆடுகளுக்கு
அநீதி நடப்பதாகும்
இடையர்கள் கட்டிவைத்து
அவைகளது
சுதந்திரத்தை பறிப்பதாக கூறி
ஓநாய்கள்
ஊளையிட்டு
ஊர்வலமாய் சென்றன…

மேலும்
இன்றைய நிகழ்வில்
மாங்காய்களின்
மறுமலர்ச்சி நிதிக்காக
குரங்குகளின் குத்தாட்டமும்
மாம்பிஞ்சுகளுக்காய்
வண்டுகள் வழங்கிய
இன்னிசை கச்சேரியும்
இடம்பெற்றது.

‘பாட்டிகளிடம் இருந்து
வடைகளை பாதுகாப்போம்’
என்ற தொனியில்
காகம் கத்தித் திரிய….

‘காகங்களிடம் இருந்து
வடைகளை காப்பாற்றுவோம்’
என்ற வாசகத்தை
ஏந்திப்பிடித்தபடி
நரிகள் சேர்ந்து
நடைபவனி சென்றதாகவும்
செய்திகள் தெரிவிக்கின்றன.

அடுத்து
வெளி நாட்டு
செய்திகள்

வளைகுடாவில்
அலைகளின்
ஆபத்தில் இருந்து
மீன்களை மீட்பதற்காய்
வலைகளும் தோணிகளும்
நடத்திய
உண்ணாவிரதம்
இன்று இரண்டாவது நாளாகவும்
வெற்றிகரமாக நடைபெற்றது.

கோழிக்குஞ்சுகளுக்கான
விசேட காப்புறுதி திட்டத்தை
பருந்துகள்
பாராளுமன்றத்தில்
நேற்று
நிறைவேற்றியுள்ளன.

இதற்கு கடுவன் பூனைகளும்
கீரிப்பிள்ளைகளும்
கடந்தகால கசப்புணர்வை மறந்து
இணைந்து
வாக்களித்ததாக தெரிவிக்கபடுகிறது.

இத்தோடு
இன்றைய செய்திகள்
நிறைவு பெறுகின்றன..

அடுத்த செய்தி
அடுத்த வருடம்
மே மாதம்
முதலாம் திகதி
வழமைபோல் இடம்பெறும்
வணக்கம்.!!

கவிஞர் பொத்துவில் அஸ்மின்

Exit mobile version