எரிபொருள் விலையேற்றத்தினை ஆட்சேபித்து வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் சங்கமும் இடம்பெயர்ந்த மயிலிட்டி மக்களும் இணைந்து அடையாள பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை இன்று காலை ஆரம்பித்துள்ளனர்.
வடக்கு கடற்றொழிலாளர்கள், பெருமளவில் கடற்றொழிலுக்கு மண்ணெண்ணை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் மண்ணெண்ணை விலை சுமார் 35ரூபாவினால் அதிகரித்துள்ளதால் தினசரி 3 ஆயிரம் ரூபா செலவிட்டு, தொழிலுக்குச் சென்றாலும் 2ஆயிரம் ரூபாவிற்கு மேல் வருமானம் பெற முடியாதளவு நிலையியே தற்போதுள்ளது.
இந்நிலையில், மீனவர்களிடம் வளம்போதாத நிலை காணப்படுகின்றது. எனவே எரிபொருள் விலையேற்றத்தினால் கடற்றொழிலாளர்கள் மிக மோசமாக பாதிக்கப்படுகின்றனர். இதேபோல் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களிலும், எரிபொருள் விலையேற்றத்தினால் நேற்றுமுன்தினம் தொடக்கம் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 24கடற்றொழிலாளர் சங்கங்களிலும் கடற்றொழில் முடங்கியுள்ளது. இதேபோல் தென்னிலங்கையிலும், எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து மீனவர்கள் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், பொறுப்புவாய்ந்த அதிகாரிகளிடமிருந்து இதுவரை எந்தவிதமான தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை என கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ஒருங்கிணைத்த கம்யூனிஸ்ட் கட்சி – இலங்கை தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. பேரினவாத அரசின் ஒடுக்குமுறைக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்களை ஒன்றுபடுமாறு அழைப்புவிடுத்துள்ளது.