முன்னாள் இந்திய பிரதமரும் ஆசியாவின் முக்கியமான தலைவராகவும் இருந்த ராஜீவ்காந்தியை தமிழீழ விடுதலைப்புலிகள் மனித வெடிகுண்டு ஒன்றின் மூலம் கொன்றார்கள்.இந்த கொலை வழக்கில் கைதாகி பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உட்பட ஏழு பேர் 28 ஆண்டுகளாக வேலூர் சிறையில் ஆயுள் கைதிகளாக உள்ளார்கள்.
இவர்கள் விடுதலை தொடர்பாக ஆளுநர் முடிவெடுக்காமல் காலதாமதம் செய்ததோடு நவம்பர் 25-ஆம் தேதி எழுவரையும் விடுதலை செய்ய முடியாது என்றும் அறிவித்து விட்டார்.
இந்நிலையில், புதுச்சேரியில் இன்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வருகை தந்தார். இது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட நிகழ்வு என்றாலும், ராகுல்காந்தி வருவதற்கு முன்பே புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க பாஜக திட்டமிட்டது. நான்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் பாஜகவில் இணைந்ததால் காங்கிரஸ் அரசு மைனாரிட்டி அரசானது.ஆனால், நாராயணசாமி ராஜிநாமா செய்ய மறுத்து விட்டார். அரசியல் சாசனம் வழங்கியுள்ள உரிமைகளின் படி நடப்பேன் என்றார். இப்போது புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடியை நீக்கி விட்டு அந்த இடத்தில் ஆளுநர் தமிழிசை நியமிக்கப்பட்டிருக்கிறார். அவர் பதவியேற்றதும் நாராயணசாமியை பெரும்பான்மையை நிரூபிக்கச் சொல்வார் என்று தகவல் வெளியானது. புதுச்சேரி அரசியல் சூழல் பரபரப்பாக இருக்கும் நிலையில் ராகுல்காந்தி இன்று புதுச்சேரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
மீனவ மக்களிடம் கலந்துரையாடிய ராகுல்காந்தி புதுச்சேரி பாரதிதாசன் அரசினர் கல்லூரிக்குச் சென்று மாணவிகளுடன் கலந்துரையாடினார். அப்போது ஒரு மாணவி “உங்கள் தந்தையை விடுதலைப்புலிகள் கொலை செய்தார்கள் அது பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?” எனக் கேட்டார். அதற்கு பதிலளித்த ராகுல்காந்தி.
“அது எனக்கு கடினமான நேரமாக இருந்தது. உங்களில் யாரேனும் தந்தையை இழந்திருந்தால் அந்த வலி உங்களுக்குப் புரியும்.என் தந்தையை அந்த வயதில் நான் இழந்தது என் நெஞ்சைப் பிளந்தது போலிருந்தது. அது மிகப்பெரிய வலியையும் வேதனையையும் தந்தது. ஆனால், என் தந்தையைக் கொன்றவர்களை நான் மன்னித்து விட்டேன்.அவர்கள் மீது கோபமோ வெறுப்போ எனக்கில்லை” என்று தெரிவித்தார்.
இந்திய ராணுவம் இலங்கையில் புரிந்து வன் கொடுமைகளுக்கு பழிவாங்கும் விதமாக நடத்தப்பட்ட கொலைதான் ராஜீவ்காந்தி கொலை. ஆனால், அது இந்திய அரசியலிலும் தமிழகத்திலும் மிக மோசமான பின் விளைவுகளை உருவாக்கி விட்டது.