Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

என்னிடம் ஆயுதங்கள் இருப்பது பாதுகாப்பு அமைச்சுக்குத் தெரியும் – கைதுசெய்யப்பட்ட புளொட் உறுப்பினர் நீதிமன்றில் தெரிவிப்பு!

கடந்த வாரம் யாழ் நகரின் மத்தியில், புளொட் அமைப்பினரால் நீண்டகாலமாக பயன்படுத்தப்பட்டுவந்த வீட்டிலிருந்து ஒரு தொகுதி ஆயுதங்கள் மீட்கப்பட்டதுடன், அவ்வீட்டில் தங்கியிருந்த புளொட் அமைப்பின் ஆரம்ப உறுப்பினர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டமை யாவரும் அறிந்ததே.

கைதுசெய்யப்பட்ட குறித்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், சம்பவத்துடன் தொடர்புடைய சிவகுமார் (பவுண்) என அழைக்கப்படும் குறித்த நபரை நீதிமன்றத்தில் முற்படுத்தியபோது தன்னிடம் ஆயுதங்கள் இருப்பது பாதுகாப்பு அமைச்சுக்குத் தெரியும் எனத் தெரியப்படுத்தியுள்ளார்.

சிவகுமாரின் வாக்குமூலமானது மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், பயப்பீதியையும் உருவாக்கியுள்ளது.

யுத்தம் நடைபெற்ற காலத்தில், இராணுவத்துடன் இணைந்து இயங்கிவந்த ஒட்டுக்குழுக்கள் என அழைக்கப்படும் ரெலோ, ஈபிடிபி, ஈபிஆர்எல்எவ் மற்றும் புளொட் அமைப்புக்களுக்கு அரசாங்கத்தினால் ஆயுதங்கள் வழங்கப்பட்டன.

இவ்வொட்டுக் குழுக்களால் யுத்தம் நடைபெற்ற காலத்தில் படுகொலைகள், ஆட்கடத்தல்கள் போன்ற பல குற்றச்செயல்கள் யாழ். நகரம் உட்பட வட கிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

யுத்தம் நிறைவடைந்தபின்னர் இவ்வாறான ஆயுதக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் மீண்டும் அப்போதைய பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ஷவினால் மீளப் பெறப்பட்டன.

இந்நிலையில், புளொட் அமைப்பின் ஆயுதங்கள் திரும்பப் பெறப்பட்டாலும், சில ஆயுதங்கள் ஒப்படைக்கவில்லையெனவும், அவ்வாறான ஆயுதங்கள் அனைத்தும் தான் தங்கியிருந்த வீட்டிலேயே வைத்திருந்ததாகவும் சிவகுமார் எனப்படும் பவுண் நீதிமன்றத்தில் மேலும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், புளொட் அமைப்பினைச் சேர்ந்தவர்கள், சிறிலங்கா இராணுவ புலனாய்வு அதிகாரிக்கும் பவுண் என அழைக்கப்படும் சிவகுமாருக்கும் நெருங்கிய தொடர்பிருப்பதாகவும், இவர் யாழில் நடைபெற்றுவரும் வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்பு பட்டிருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதன்காரணமாகவே அவர் ஆயுதங்களை வெளிப்படையாக அலுமாரியில் பூட்டி வைத்திருந்ததாகவும், இந்த ஆயுதங்கள் தன்னிடமிருப்பது பாதுகாப்பு அமைச்சுக்குத் தெரியும் எனவும் வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார்.

எனினும், சிவகுமாரிடம் நடத்தப்படும் முறையான விசாரணையின்மூலமே, யாழ். குடாநாடெங்கும் நடைபெற்றுவரும் பல்வேறு குற்றச்செயல்கள் பற்றி அறிந்துகொள்ளமுடியும்.

Exit mobile version