அந்நிய மேலாதிக்கத்துக்கு எதிரான எந்தப் போராட்டத்திலும் பண்பாட்டுத் துறையில் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் முக்கியமானவை. முற்போக்குச் சிந்தனையாளர்கள் கலை இலக்கியங்கள் சமூகச்சார்பானதும் சமூக முன்னேற்றத்துக்குமான பங்களிப்பைச் செலுத்த வேண்டுமென வற்புறுத்துவர். சமூக விடுதலை இலக்குடையோர் கலை இலக்கியங்கள் அந்த இலக்கிற்குப் பணி செய்ய வேண்டுமென எதிர்பார்ப்பர். அது போலவே அடக்குமுறையாளர் தமது நோக்கங்களைக் கலைஇலக்கியங்களுடு முன்னெடுக்கத் தயங்க மாட்டார்கள். அந்த அளவுக்கு, ஆனால் அந்தளவுக்கு மட்டுமே, கலைஇலக்கியங்கள் பற்றிய பார்வையில் சமூக விடுதலையாளர்கட்கும் அடக்குமுறையாளர்கட்கும் ஒற்றுமை உண்டு. அதற்கப்பால் அணுகுமுறையிலும் உள்ளடக்கத்திலும் எதிர்மாறான தன்மைகளையே நாம் காணலாம்.
சமூக விடுதலையை வேண்டுவோர் கலை இலக்கியங்கள் சமூகச் சார்புடையனவாக இருப்பதை விரும்புவார் மனிதரின் உரிமைகளையும் மனிதரிடையே சமத்துவ அடிப்படையிலான ஒற்றுமையும் நீதியையும் நியாயத்தையும் அவற்றுக்கான எழுச்சிகளையும் பேசுவதை வற்புறுத்துவர். அந்த இலக்குடைய படைப்பாளிகள் அவற்றை உணர்த்துகிற விதமாகக் கலை இலக்கியங்களை உருவாக்குவர். ஒடுக்குமுறையாளர்கள் தங்களது நோக்கங்களை அந்த விதமாக வெளிப்படுத்த இயலுமா? இயலாது எனவே சமூக விழிப்புணர்வை வேண்டி நிற்கிற படைப்புக்களை எதிர்க்க அவர்கள் சமூக உணர்வை மழுங்கடிக்கிற விதமான படைப்புகளை ஊக்குவிப்பர். பொது மக்களின் ரசனையும் சிந்தனை ஆற்றலையும் வளர்த்தெடுக்கிற படைப்புகளின் இடத்தில் அவற்றைக் கீழ்த்தரமானவை ஆக்குகிற காரியங்களை அவர்கள் செயற்படுத்துவர். மனிதரைச் சமூகக் கூட்டடுணர்வு உடையோருக்குகிற முயற்சிகட்கு மாறாகத் தனிமனிதவாதத்தையும் சுய நலப்போக்கையும் வற்புறுத்துவர்.
ஏகாதிபத்தியமோ பிற்போக்காளர்களோ கலை இலக்கியம் பண்பாட்டுத் துறைகளிற் தங்களது மக்கள் விரோதச் செயல்களை நேரடியாகச் செய்வதில்லை. அவற்றுக்குப் பலவேறு முகவர்களைப் பாவிப்பார். சமூக உணர்வு போதாத ஆழமான சமூகச் சிந்தனையற்ற அல்லது சுயநலத்திற்கும் தற்பெருமைக்கும் சுய விளம்பரத்திற்கும் ஆட்பட்ட ஆய்வறிவாளர்களும் படைப்பாளிகளும் அறிந்தோ அறியாமலோ அவ்வாறான காரியங்களைச் செய்யுங் கருவிகளாகின்றனர்.
இலங்கையில் சமூக உணர்வுள்ள இலக்கிய எழுச்சியில் மட்டுமன்றிப் பொதுவான இலக்கிய எழுச்சியிலும் இடதுசாரிகளும் பிற முற்போக்குச் சிந்தனையாளர்களும் ஒரு தலைமைப் பங்காற்றினர். அதை மறுப்பதற்கான பழமைவாதப் பிற்போக்குவாத முயற்சிகள் படுதோல்வி கண்டன. தேசியவாத இலக்கியத்தின் எழுச்சி கூட முற்போக்கு இலக்கியப் போக்கிலிருந்து எழுந்த சமூகச்சார்பான எழுத்தை உள்ளாங்கியே தன்னை அடையாளப் படுத்துமளவுக்குச் சமூகச் சார்பான கலை இலக்கியங்கள் என்ற கருத்தாக்கம் நிலை கொண்டிருந்தது. தூய கலை இலக்கியம் பற்றிப் பேசி முற்போக்கு இலக்கியத்தை நிராகரித்தவர்களே தூய கலை இலக்கியக் கோட்பாட்டை மறந்து தேசியவாதக் கலை இலக்கியங்களைத் தூக்கிப் பிடித்தமை பற்றியும் இங்கு குறிப்பிடலாம்.
இப்போது எல்லாத் தளங்களிலும் ஏகாதிபத்தியவாதிகள் தங்களது தந்திரோபாயங்களை மாற்றிக் கொண்டுள்ளனர். அவர்களது முகவர்கள் போலி மனிதாபிமான முகத்தைக் காட்டுகின்றனர். சமூகப் பொறுப்புக்களை இந்த முகவர்களிடம் ஒப்படைக்குமாறு அரசாங்கங்கள் நெருக்குவாரங்கட்கு உட்படுவதை நாம் அறிவோம். இதன் நோக்கங்கள் எப்படியானவையோ அப்படியானவையே கலை இலக்கியத் துறைகளில் நடைபெறும் ஊடுருவல்களின் நோக்கங்களும்.
இந்தியாவில் நாடகத்துறை முதலாகக் கிராமங்களின் கூத்துக்களை நகரத்துக்குப் புலம்பெயர்கிற காரியங்கள் வரை பல காரியங்களில் என்.ஜி.ஓ. ஊடுருவல் நடந்துள்ளது. மக்கள் மத்தியில் மக்களோடு மக்களாக வாழ்ந்த கலைஞர்களை வணிகக் கலாசாரத்திற்குள் இழுத்து விட்டதோடு என்.ஜி.ஓ. அனுசரணையை நம்பியே செயற்படுகிற ஒரு புதிய பரம்பரையையும் உருவாக்கியதை விட நாடகத்துறைக்கு என என்.ஜி.ஓ. குறுக்கீட்டால் எந்த விதமான நன்மையும் கிடைக்கவில்லை. அவ்வாறே அரசியலில் ஊக்கமாகச் செயற்பட்ட பலரும் இன்று என்.ஜி.ஓ. நிதிக்குப் பின்னால் நாயாய் அலைந்து நாசமாகப் போயுள்ளனர். என்.ஜி.ஓ. பணிகள் சமூகமொன்றின் சுயசார்புக்கு மாற்றிடாகவே வளர்த்தெடுக்கப்படுகிறது.
இலங்கையில் மேஜ், விபவி போன்றவை சிங்கள, தமிழ் மக்கள் மத்தியிலிருந்து வளர்த்தெடுக்கப்பட வேண்டிய மாற்று அரசியலுக்கும் மக்கள் கலை இயக்கத்திற்கும் மாற்றீடாக என்.ஜி.ஓ. வழங்கும் நிதிக்காக இயங்குகிற சில தனி மனிதர்களை முன்னிறுத்த முயன்றன. அவர்கள் எதைச் சாதிக்காவிட்டாலும் பல முன்னாள் இடதுசாரிகளின் சீரழிவை முழுமைப்படுத்த இந்தமாதிரியான என்.ஜி.ஓக்கள் தமது முழுமையான பங்கை ஆற்றியுள்ளன. சமூக சேவை என்கிற பேரில் என்.ஜி.ஓ. நிதியை ஒரு கையால் அள்ளிக்கொண்டு மறு கையால் நிறுவன வசதிகளைத் தங்களது தனிப்பட்ட வியாபார நோக்கங்கட்காகப் பாவித்து வந்துள்ள என்.ஜி.ஓ. பிரமுகர்கள் பற்றி நாம் அறிவோம்.
என்.ஜி.ஓக்களிடம் பெருந் தொகையான நிதி வாங்கி நாடக விருத்தி செய்வதென்ற பேரில் நடத்தப்பட்ட கேவலமான கூத்துக்களை நாம் அறிவோம். போராற் பாதிக்கப்பட்டவர்களின் அவலங்களை யெல்லாம் நடுத் தெருவுக்குக் கொண்டு வந்து அவர்களது அலறல்களை எல்லாம் நவீன நாடகம் என்று சொல்லி நாடகத் துறையையும் பாதிக்கப்பட்ட மக்களையும் ஒன்றாகவே கேலப்படுத்தியவர்கள் தங்கள் இயங்கு தளங்களை இடம் மாற்றி வருகின்றனர்.
இன்று விழுதுகள் என்ற பேருடன் செயற்படுகிற நிறுவனம் தனது பொறுப்பில் பலவேறு பத்திரிகைகளை நடத்தி வருகிறது. சம்பந்தப்பட்ட துறைகளில் அடிப்படையான அறிவோ அனுபவமோ இல்லாத தனி மனிதர்கள் இவற்றில் பெருபாலனவற்றின் பொறுப்பில் உள்ளனர். இந்த நிறுவனத்தின் மூலம் தாய்மொழிக் கல்விக்கு விரோதமான கருத்துக்களும் மாக்ஸிய மறுப்பும் பின்நவீனத்துவம் என்ற பேரில் குழப்பமான சிந்தனைகளும் திட்டமிட்ட முறையில் பரப்பப்பட்டு வருகின்றன. இவர்களுடைய வேலைகட்கான நிதியில் கணிசமான பகுதி ஏகாதிபத்திய நாடுகளின் குறிப்பாக அமெரிக்காவின் அரசாங்கக் கட்டுப்பாட்டில் உள்ள சர்வதேச என்.ஜி.ஓக்களிடம் இருந்து தான் வருகிறது. இந்த நிதி விவகாரங்கள் எல்லாம் பொது மக்களின் பார்வைக்கு வருவதில்லை.
நேர்மையான இடதுசாரிகளையும் மாக்ஸியத்தையும் இழிவுபடுத்துவதற்குக் கொஞ்சமுங் கூசாத இந்த என்.ஜி.ஓக் கூலிப்படைகள் நம் கண் முன்னே நடக்கிற பண்பாட்டுச் சீரழிவுகள் பற்றி எதுவும் பேச முற்படுவதில்லை. அவர்கள் எதைச் சொல்ல அனுமதிக்கப்படுவார்களோ அதற்கும் மேலாகப் பேசிப் பிழைப்பைக் கெடுத்துக் கொள்வார்களா?
இலங்கையில் அண்மைய சூழலின் பத்திரிகைத் துறையில் நிலைத்து நிற்பதற்கு வேண்டிய நிதி வசதியற்ற பத்திரிகைகளும் மேற்குறிப்பிட்ட நிறுவனத்தின் மூலம் நிதி பெற்று இயங்கும் அவலத்திற்கு உள்ளாகிவிட்டது பரிதாபமானது. விழுதுகள் போன்ற நிறுவனங்களில் உயர் பதவிகளில் உள்ள விதேச அமைப்புகளின் முகவர்கள் தங்களுடைய அந்நிய எசமானர்களுக்கு விசுவாசமாக இல்லாவிடின் அவர்களுடைய வியாபாரமே படுத்துவிடும். எனவே அவர்களிடம் கைநீட்டுகிற கட்டாயத்திற்குட்பட்ட பத்திரிகைகள் ஏகாதிபத்திய எதிர்ப்பையோ வெகுசன அரசியலையும் போராட்டத்தையுமோ முதன்மைப்படுத்துகிற விதமாக எதையுமே செய்ய இயலாது.
அது தான் பிழைப்பு என்றால் அதுவும் ஒரு பிழைப்பா என்று தான் கேட்கத் தோன்றுகிறது.