Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

எனது நிழல் நியாயம் கேட்கிறது : பாமினி

எனக்கு யாழ்ப்பாணம் தெல்லிப்பளை தெரியாது. கனவுவும் கற்பனையுமாக தெல்லிப்பளைக்கு ஒரு உருவத்தைக் கொடுத்து வைத்திருந்தேன். அங்கெல்லாம் இராணுவத்தின் பாதுகாப்புவலைய எல்லைக்குள் விழுவதற்கு முன்பு பனைமர நிழலில் கண்களை மூடி கரங்களைக் கோர்த்து பால்ய நண்பர்களுடன் ஒடி விளையாடியது மங்கலாக நினைவிருந்தது. ஆமிக்காரன் வந்ததும் கூட்டத்தோடு கூட்டமாக ஓமந்தைக்கு வந்து குடியேறியது கூட அம்மா அழும் போது மட்டும் தான் வலிக்கும்.

தொண்ணுற்று மூன்றாம் ஆண்டில் எனக்கு எட்டு வயது நிரம்பியிராதா வேளையில் யாழ்ப்பாணத்தைக் கடந்து கூட்டத்தோடு கூட்டமாக வெளியேறிய காலத்தில் நல்லூர்க் கோவிலில் அப்பா கற்பூரம் கொழுத்தி அழுதபோது நானும் அழுதேன். எனக்கு சரியாக என்ன நடந்தது என்று விளங்கியிருக்கவில்லை.

ஊர் நினைவுகளோடு ஓமந்தையில் ஏழு வருடங்கள் ஓடிய நாட்களை அம்மா துரத்திப் பிடித்துக்கொண்டிருந்தார். நான் நாட்காட்டியிலிருந்து விலகி ஓடியே பெரியவளாகிவிட்டேன். அம்மாவுக்கு ஆறுதல் சொல்லும் அளவுக்கு வளர்ந்துவிட்டதை எண்ணிப்பார்க்கும் போது அப்பாவின் கடின உழைப்பின் துயரம் தெரிந்தது.

2000 ஆம் ஆண்டு கடைசிப் பகுதியாக இருக்கும் என நினைக்கிறேன். தமிழீழம் கிடைத்தால் எல்லாம் துன்பங்களும் தீர்ந்துவிடும் என்று படுக்கைப் பாயிலிருந்தபடி அப்பா எங்களுக்கெல்லம் சொல்லிக்கொண்டிருந்தார்.

அம்மாவும் நானும் பேசாமல் கேட்டுக்கொண்டிருந்தோம். அம்மாவைக் கலியாணம்முடித்து ஒரு வருடத்துக்குள்ளாகவே நான் பிறந்துவிட்டேனாம். கல்யாணத்துக்கு முதல் அப்பா ஒரு இயக்கத்தின் ஆதரவாளராம். பெயர் கூட அப்போ சரியாக நினைவுக்கு வரவில்லை. இயக்கம் அழிக்கப்பட்டது அப்பாவுக்கு கவலை என்றாலும் பழசை எல்லாம் கதைச்சுக் கொண்டிராமல்ஆகவேண்டியதைப் பார்க்கவேண்டும் என அடிக்கடி சொல்லுவார்.

அம்மாவோடு அதிகமாகப் பேச்சுக்கொடுத்தாலும் அப்பா தான் எனக்கு ஹீரோ. அப்பா வேலைக்குப் போகாத நாளில் அவரோடு சைக்கிள் கரியரில் அமர்ந்து கடைக்குப் போய் ஐஸ்கிரீம் வாங்கிச் சாப்பிடும் நாளெல்லாம் எனக்குத் தீபாவளி தான்.

அப்பா தொடர்ந்தார்.. ‘எங்கட ஊரில என்ன குறை? என்ன பாவம் செய்தமெண்டு இப்பிடி அலைய வேணும்?? உலக நாடுகள் எல்லாம் கனகாலத்துக்குப் பார்த்துகொண்டிருகாது என்று பூனகரியில் நடத்தின கூட்டத்தில இயக்கப் பொறுப்பாளர் சொன்னவர். ஆனா நாங்களும் போராட வேணும்.. வீட்டுக்கு ஒருத்தர் இயகத்தில சேரவேணும் என்று வேற சொன்னவர்’.

எனக்கு அண்டைக்கு முழுவது உறக்கம் வரவில்லை. திரும்பித் திரும்பி படுத்துகொண்டிருந்தேன். அம்மா அடிக்கடி எழுந்து எனக்கு உடல் நலக் குறைவோ என்று கேட்டார்.

மறுநாள் எல்லாருக்கும் முன்னதாகவே எழுந்துவிட்டேன். அப்பா வேலைக்குப் போகும் வரை பார்த்துக்கொண்டிருந்துவிட்டு அம்மாவிடம் பேச்சுக் கொடுத்தேன்.

அப்பா சொன்னது சரிதானே அம்மா, நான் ஏன் இயக்கத்தில சேரக்கூடாது என்றேன். அம்மா ஒப்பாரி வைக்க ஆரம்பித்துவிட்டா. நீ ஒரே பிள்ளை அப்படி எல்லாம் பேசாத. பதினைந்து வயதில இயக்கத்துக்கெல்லாம் போகக்கூடாது. நீ வளர்ந்து அப்பாவையும் என்னையும் பார்த்துக்கொள்ள வேணும் என்றார்.

அன்றைக்கு அப்பா தாமதமாகவே வந்தார். நாங்கள் இரண்டு பேரும் வாக்குவாதப் பட்டதில் அப்பாவுக்காகக் காத்திருந்தோம். இரண்டு பேரும் பேசிக்கொள்ளவில்லை. ஞாயிற்று கிளமை என்பதால் வீட்டிலேயே நாள் முழுவதும் அம்மாவோடு தொலைந்துபோனது. இரவுச் சாப்பாடு எட்டு மணிக்குச் சாப்பிடும் போது எனக்கும் அம்மாவுக்கும் இன்னும் வாக்குவாதம் முற்றியது. அப்பா வந்தால் எப்படியும் இயக்கத்துக்குப் போக விடுவார் என்றேன். சாப்பாட்டை இடையில் விட்டுவிட்டு உறங்கப் பாயில் குப்புறப் படுத்துக்கொண்டிருந்தேன். சில நிமிடங்கள் மட்டும் பேசாமலிருந்த அம்மா சாப்பாட்டுக் கோப்பையோடு ஊட்டிவிட அருகில் வந்தும் நான் அடம்பிடித்தேன். அம்மா கதவுப்பக்க மூலையிலிருந்த அழ ஆரம்பித்துவிட்டா.

அப்பா வரும் சத்தம் கேட்டதும் கண்களைத் துடைத்துக்கொண்டு இரண்டு பேரும் எதுவும் நடக்காதது போல நாடகமாடினோம். மங்கலாக விளக்கு எரிந்துகொண்டிருந்து. அப்பா சாப்பாட்டுக் கோப்பையோடு எனக்குப் பக்கத்தில் அமர்ந்துகொண்டார்.

அப்பா சாப்பிட்டு முடித்ததும் அம்மா ஆரம்பித்துவிட்டார். நான் இயக்கத்துக்குப் போக ஆசைப்படுவதாகச் சொன்னார். அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த அப்பா நீண்ட நேரம் ஒன்றும் பேசாமல் படுக்கப் போய்விட்டார். எனக்கு உறக்கம் வராமல் அப்பாவின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன். சின்ன வயதில் நல்லூரில் கற்பூரம் கொழுத்திய போது அப்பாவின் கண்களிலிருந்து வடிந்த கண்ணீரை இரவின் மங்கலான ஒளியில் பார்த்தேன். எனக்குத் தெரியும்; நானும் அப்பாவும் அன்று இரவு முழுவதும் உறங்கவில்லை.

காலையில் அப்பாவின் கண்கள் சிவந்திருந்தன. வேலைக்குப் போகும் முன்னர் எனக்குச் சொன்னார் ‘அவசரப்படாத குஞ்சு’.

எனக்கு எதுவும் சரியாக விளங்கவில்லை. அன்றைக்குப் பள்ளியில் எதுவும் ஏறவில்லை. பக்கத்துவிட்டு சியாமினி அக்கா ஓமந்தை இயக்க முகாமில் படையணிப் பயிற்சி முடித்துவிட்டு ஒரு நாள் வீட்டுக்கு வந்து தங்கிச் சென்ற போது அம்மா சமைச்சு சாப்பாடு கொடுத்தது நினைவுக்கு வந்தது.

தொடரும்..
(யாவும் கற்பனை அல்ல)

Exit mobile version