Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

எதையெல்லாம் ஒரு மனிதன் இழக்கக் கூடாதோ அதையெல்லாம் இழந்து நிற்கும் ஒரு சமூகத்தில் இருந்து ஒரு குரல் – கவிதா (நோர்வே)

எதையெல்லாம் ஒரு மனிதன் இழக்கக் கூடாதோ அதையெல்லாம் இழந்து நிற்கும் ஒரு சமூகத்தில் இருந்து ஒரு குரல் – கவிதா (நோர்வே) – பகிர்வு 11

யாப்புக்குள் அடங்கக் கூறுவது மரபுக் கவிதை. யாப்பின் திணிப்பறுத்து செய்திக்கு முதன்மை தருவது புதுக்கவிதை. சொற்சுருக்கம், உணர்ச்சிகளின் வேகம், வழக்கிலுள்ள சொல்லாட்சி, என்பன புதுக்கவிதையின் குறியீடுகள். புதுக்கவிதை இன்று தனக்கான ஒரு இடத்தை நிலைப்படுத்திக்கொண்டு பலராலும் விரும்பப்படும் இலக்கிய வடிவமாக இன்று வளர்ந்திருக்கின்றது. சமுதாயச் சீர்கேடுகளை உணர்த்தவும் உடனுக்குடன் பதிவு செய்யவும் இலக்கண யாப்பு தடையாக இருக்கின்றது. கருத்திற்கு முதன்மையளிப்பதே புதுக்கவிதையின் முதன்மை நோக்காகும். போரின் ரணங்களும் அதன் பரிமாணங்களும், விடுதலை வேட்கையும் கலந்த கவிதைகளை கொண்ட நெருப்புப் பூக்கள் என்ற ஒரு கவிதைத்தொகுதி நேற்று என் கைசேர்த்தது.

நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒவ்வொரு நொடியிலும் ஒளிந்து கொண்டிருக்கிறது கவிதை. போர்ச்சூழலில் இருந்து புறப்பட்ட ஈழத்தமிழர்களின் கவிதைகள் ஏராளம். நெருப்புப் பூக்கள் என்ற இக்கவிதை நூல் தனக்காகப் பேசியதைவிட போரையும் ஒரு சமூகத்து வலியையும் பேசியிருக்கிறது. தனது நாட்களையும், தனது உணர்வுகளையும் வெளிப்படையாவே பேசியிருக்கிறார் கவிஞர் கல்லடி றொபட். நேரடியான மொழியில் வாழ்வின் கனத்த தருணங்களை கவிதையாக்கியிருக்கும் கவிஞரின் வரிகளில் பல நேரங்களில் பிரச்சாரத் தொனியும் கலந்து வருகிறது.

எதையெல்லாம் ஒரு மனிதன் இழக்கக் கூடாதோ அதையெல்லாம் இழந்து நிற்கும் ஒரு சமூகத்தில் இருந்து ஒரு குரல் கவிதையாக இப்படிப் பேசுகிறது. இவ்வரிகளில் இருக்கும் தேடல் ஒரு தனிமனிதனின் தேடலாகவோ புலம்பல்கலாகவோ இருக்க முடியாது. இது ஒரு சமூகத்தின் கதறலாக மனப்;பாறைகளில் மோதி விழுகிறது.

என் தாய் அணிந்த புடவை
தங்கை அணிந்த தாவணி
தமக்கை அணிந்த சட்டை
தந்தையின் வேஷ்டி
அண்ணனின் சாரம்

இதில் ஏதாவது
கிடைத்தால் போதும்
நான்
என் தேடலை
நிறுத்திக் கொள்வேன்

சம்பவங்களின் சில பொறியிலிருந்து கவிதை உருவாவது போல. நடைமுறை வாழ்க்கைச் சம்பவங்கள் என்பது மனித வாழ்வையே மாற்றிவிடக்கூடிய வல்லமை கொண்டது. ஈழத்தமிழ்ப் போராடத்தில் எழுந்த இயக்கங்களில் தம்மை இணைத்துக்கொண்ட இளைஞர்களின் வாழ்வை சொல்லும் வலி சுமந்த வரிகள் மார்ப்பை அழுத்துகிறது. சுயமரியாதை உள்ள எந்தப் படைப்பாளியும் பொறுத்துக்கொள்ள முடியாத அவமதிப்புகளின் விளைவுகள் இந்த வரிகள்.

பாலருந்திய
தாயின் மார்பில்
அந்னியன் மிதிப்பது கண்டும்
அண்ணன் கோபப்படவில்லை
அம்மாவை அணைத்தபடி
நான் வீடு சென்றேன்

அண்ணன் வீடு வரவில்லை
காற்றின் அசைவுக்கே
குரைக்கும்
என் வீட்டு நாய்
கிணற்றுக் கட்டில்
இருந்து விட்டு
எழுந்து செல்லும்
உருவம் கண்டு
குரைக்காமல்
வாலாட்டுகிறது

போரின் ரணங்கள் நிரந்தர பிரிவுகளையும் வடுக்களையும் ஏற்படுத்திவிடும். வெறுமையான போர்ச்சூழலில் இளம்பிராயங்களில் மனதில் பதிந்துவிடும் வடுக்கள் ஆழமானவை. வாழ்க்கையின் அனுபவங்கள் சோகம் இழைத்த கவிதை வார்த்தைகளோடு கரைந்து வரும் வார்ப்படம் போல ஒரு குட்டிப்பூனையின் கதை சொல்கிறார் கவிஞர். நான் இரசித்த கவிதைகளில் இந்தப்பூனைக் கதையே இந்த கவிதைகளை உங்களுடன் பகிர்ந்துவிட என்னைத் தூண்டியது.

அன்பாய் ஆசையாய்
அழகிய பூனைக்குட்டி
வளர்த்தேன்

வீதிவழியே போன
பூனைக்குட்டியை
தெருநாய்கள்
கடித்து குதறிவிட்டன

பூனை சீறவில்லை
அதனால் சீறமுடியவில்லை
பூனைக்குட்டி
காணாமல் போய்விட்டது

என் பூனைக்குட்டியைக்
கண்டு வந்த ஒருவன்
என்னிடம் சொன்னான்
என் பூனை இப்போது
சீறுகிறதாம்

தனக்கும் தன் சமூகத்திற்கும் நேரும் அவலங்களை தன் பக்கச்சிந்தனையில் இருந்து கொண்டு எழுதிய பல கவிதைகளை இத்தொகுதியில் காணக்கூடியதாக இருக்கிறது. அன்பைவிட பெரிய சொல் பூமியில் ஆசிர்வதிக்கப்பட்டிருக்க முடியாது என்பதை ஆதாரிக்க முடியாத ஒரு இளைஞனின் உணர்வு வேகத்தை மட்டுமே இந்த வரிகளின் காண்கிறேன். பீறிடும் இரத்தத்தை ரசித்துக்கொண்டு நிற்கும் மனநிலையை எமது போராட்டமும் இயக்க வாழ்வும் எமது சந்ததியினருக்கு திணித்திருக்கிறது என்பதை எதை சொல்லிச் சமாதானமடைய முயன்றாலும் இது குரூரசகாப்தத்தை விட்டுச்சென்ற போர்க்காலம் என்றே குறிப்பிட வேண்டும். வன்முறையை தமக்குள் குடியேற்றிய இளைஞர்களுள் ஒருவராக கல்லடி றொபட் தன் கவிதையிலும் வன்முறையை குடியேற்றி இருப்பதை பல கவிதைகள் பேசுகின்றன.

எனக்கு
என் முன்னோர் மீது
கோபமில்லை

மண்டை வெடித்து
இரத்தம் வழிந்தபோதும்
ஆகிம்சை கோசமே
எழுப்பினார்கள்

என்னால்
அப்படி முடியாது
எதிரியின் இரத்தம்
பீறிதும் போதினில்
எங்காளமிட்டு சிரிப்பேன்

எந்த இடத்தில் எந்த நிலையில் இருந்தாலும் உயிர் கொல்லும் ஆயுதங்கள் என்பவை அச்சத்திற்குரியவையே. ஆயுதத்தின் இதயம் இரும்பால் ஆனது அதற்கு அண்ணன் தங்கை தெரியாது. வெடிக்கவும் உயிர் பறிக்கவும் மட்டுமே பழக்கப்பட்ட ஆயுதங்களை கண்டு அஞ்சும் மனிதர்களைப் பார்த்து பரிதாப்படும் கவிஞரின் இந்தக்கவிதையைப் பற்றிச் சொல்வதைவிட ஏன் என்ற கேள்வியோடு அமர்ந்திருந்து சிந்திப்பதே சிறந்தது.

என்
அண்ணன் அக்கா
தம்பி தங்கைமீது
எனக்கு
கோபம் கோபமாய் வருகின்றது
என் கையிலிருக்கும்
துப்பாக்கி கண்டும்
அஞ்சி நடுங்குகிறார்கள்
இவர்கள்

அனைத்துத் தரப்பு மக்களிலும் சீழ்பிடித்த கொடுங்காயங்களைப் போர்ச்சூழல் ஏற்படுத்திவிடும். போர் என்ற சூழல் உருவாகியபோதே சமூக ஒழுங்கு, கட்டுமாணம் எல்லாம் சிதறிவிடுகிறது. துப்பாக்கிச் சத்தங்கள், உயிரின் வலி, அகதி வாழ்வு, இழப்புகள், இறப்புகள் என்பவை மட்டுமல்ல மனித மனங்களால் தாங்கிக்கொள்ள முடியாத அனர்த்தங்கள் தினசரி நிகழ்வுகளாக மாற்றம் பெறுகிறது. இத்தகைய மாற்றங்கள் என்பது அந்நியர்களால் மட்டுமல்லாது எம் சகோதர இயக்கங்களாலும் கொண்டுவரப்பட்டது என்பதை எற்றுகொள்ள முடியாத மனதின் வார்த்தைகள் இப்படி வந்துடைகின்றன. எப்படித்தான் விளங்கிக்கொள்ள முடிந்தாலும் இனவெறியின் வாசம் இந்தக்கவிதையில் தடவப்பட்டிருப்பதை உணரமுடிகிறது.

எவருடைய விரல்நுனியும்
மேனியில் படுவதை
விரும்பாத நான்

சோதனைச் சாவடியில்
காவிபடிந்த பற்களுடைய
ஆயுதம் தரித்த
அந்நியன
சோதனையென்ற பேரில்
மேனியை தடவுகின்றபோது
பற்களை
இறுகக் கடித்தபடி
உடல் வியர்க்க
அருவருப்புணர்வுடன்
நிலையாய் நிற்கின்றேன்

கலைஞன் என்பவன் பலதரப்பில் இருந்து விசாலமான பார்வையுடன் நியாhயங்களை விசாரணை செய்ய வேண்டியவன். கவிஞர் கல்லடி றொபட் துணிச்சலாக தனது கருத்துக்களை வெளிப்படுத்தியிருக்கிறார் என்றாலும் போர்சூழலின் பக்கவிளைவாக பெருகியிருக்கும் இலக்கியங்கள் வெறும் உணர்ச்சிமிக்க கணங்களின் உளறல்கள் ஆகிவிடாது பக்கசார்பற்ற நிலையை நிதானத்துடன் ஆராயும் படைப்புகள் வெளிவரவேண்டும்.
வெறும் அறிக்கைகளாலும், கூக்குரல்களாலும் மண்டிக்கிடக்கும் தேக்கங்களை உடைத்து விடமுடியாது. விசாலமான பிரபஞ்சதின் முலைமுடுக்கெங்கும் பயணப்படும்; வேகமும் உடைப்பும் கவிதை இலக்கியங்களில் நிகழவேண்டும்.

இளைஞர்களே
யுவதிகளே
ஈழத்துப் போர்களத்துக்கு
வாருங்னளென்று
உங்களை அழைக்கமுடியுமா?
வந்துசேர வேண்டியது
உங்கள் கடமை

சுடலைகள் சோடிக்கப்படுகின்றன
சுதந்திர கீதம் ஒலிக்கப் போகிறது

வன்முறையை கையில் எடுத்த ஒரு ஆயுதப்போராளியின் மனதையும், அனுபவத்தையும் அதற்கேயான பிரச்சாரத்தொனியையும் இப்போர்காலகவிதைகள் கொண்டு வந்திருக்கின்றன. வன்முறை குணங்களையும் வன்முறை மனநிலைகளையும் கலைந்துவிட்டால் பிரச்சாரத் தொனிக்கவிதைகள் மறைந்து காலத்தினாற் சிறந்த பதிவுகளை நாம் பகிர முடியும். இப்படியெல்லாம் பிரச்சாரமாகவும், வன்முறை தூண்டும் விதமும் எழுதலாமா என்ற குற்றச்சாட்டு அல்ல இது. படைப்பாளிகளுக்கு கட்டுப்பாடு எதையும் விதிப்பது பொருத்தமானதல்ல.

கவிதை என்பது அர்த்தங்கள் புதையுண்டுகிடக்கும் கல்லறையல்ல. மாறாக வெளியெங்கும் தூரப் பரவும் விதைகள் என்பதை உணருதலும் அவசியமே. வாசகன் படிக்கும் ஒவ்வொரு கவிதையும் வாசகனுக்குள்ளாக எப்போதும் இருந்துகொண்டுதான் இருக்கிறது. நாம் விதைக்கும்; கவிதைகள் நோய்களைப்போல் பரவி கல்லறைகளில் முடிந்துவிடாக்கூடாது. ஒவ்வொரு கவிதையும பிரபஞ்சம்மெங்கும் பூக்கச்செய்தல் வேண்டும் என்ற எனது அவாவின் தூண்டுதலில் எழுதப்பட்ட பகிர்வே இது.

Exit mobile version