Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

எதிர்ப்பு அரசியலின் எதிர்காலம் : யமுனா ராஜேந்திரன்

resistanceவெகுமக்கள் படுகொலைகளை நடத்துவதற்கு முன்பாக, அந்த அசிங்கமான களியாட்டக் காட்சியை வெளியில்  தெரியாமல் மறைத்து விடுங்கள். அதிகவனத்துடன், அந்தக் காட்சிகள் சட்டபூர்வமான வெளிச்சத்திற்கு வந்துவிடாமலும்  பார்த்துக் கொள்ளுங்கள்.

ஜான் பில்ஜர்

1
ஆயிரக்கணக்கிலான ஈழத்துத் தமிழ் வெகுமக்களுடன், விடுதலைப் புலிகளின் தலைமையினர் இலங்கை அரசபடைகளால் முற்றிலுமாகக் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.  சர்வதேசிய தகவல் தொழில்நுட்ப ஊடகங்களையும், மனித உரிமை அமைப்புக்களையும், உலகின் சேவை அமைப்புக்களையும் இலங்கைக்கு வருவதினின்று தடை செய்துவிட்டு, இலங்கை அரசு உலகின் கண்களிலிருந்து தனது படுகொலைகளை மறைத்து விட்டிருக்கிறது.

சமகாலத்தில் குர்திஸ் விடுதலை இயக்கத்தின் தலைவர் அப்துல்லா ஒச்சலான் துருக்கிய அரசினால் இம்ராலி தனிமைச் சிறையில் நிரந்தரமாக அடைக்கப்பட்டிருக்கிறார். பெருநாட்டின் மாவோயிஸ்ட் கொரில்லா இயக்கமான சைனிங்பாத்தின் தலைவர் அபிமல் குஸ்மான் தனிமைச் சிறையில் நிரந்தரமாக அடைக்கப்பட்டிருக்கிறார்.  நேபாளத்தில் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்த மாவோயிஸ்ட்டான பிரசண்டாவின் ஆட்சி மீதான நெருக்கடியை இந்திய அரசு தொடுத்திருப்பதாக அவர் நேரடியாகவே குற்றம் சாட்டியிருக்கிறார். முன்னாள் மார்க்சியரான கிழக்கு திமோர் ஜனாதிபதி குஸாமா சனானா மேற்கத்திய அமெரி;க்க அவுஸ்திரேலிய அரசுகளின் அணுசரணையுடன் ஆட்சியில் இருக்கிறார் இருபத்தியோராம் நூற்றாண்டுக்கான சோசலிசம் குறித்து நேபாளத்தின் பிரசண்டாவும் வெனிசுலாவின் சாவேசும் பேசும் வேளையிலான சர்வதேசிய அரசியல் யதார்த்தம் இதுதான். காலனியாதிக்க தேசிய விடுதலைப் போராட்டங்களின் பின்னான இனத்தேசிய அல்லது குடியரசு நோக்கிய இன்றைய தேசிய விடுதலைப் போராட்டங்கள் எதிர்கொண்டிருக்கும் சமகால அரசியல் யதார்த்தம் இதுதான்.

சதாம் குசைனது ஈராக்கும், கர்ஸாயின் ஆப்கானும் மேற்கத்திய அமெரி;க்க அரசுகளின் நிகழ்ச்சி நிரலுக்குள் இருக்கின்றன. இ;ன்றைய ஈராக்கிய அரசுக்கு முன்பான இடைக்கால அரசில் ஈராக்கிய கம்யூனிஸ்ட் கட்சியும் அங்கத்துவம் பெற்றிருந்தது. வடகொரியா தனது அணுவாயுதத் திட்டங்களை விட்டுக்கொடுப்பதற்கு ஈடாக அமெரிக்காவிடம் பொருளாதார உத்தரவாதங்களை எதிர்நோக்குகிறது. முன்னாள் கம்யூனிஸ நாடான யுகோஸ்லாவியா, பொஸ்னியா கொசவா என ஏழு புதிய தேசங்களாக ஆகியிருக்கின்றன. சோவியத் யூனியனின் உடைவின் பின் பல புதிய தேசங்கள் அப்பிரதேசத்தில் தோன்றியிருக்கின்றன. இது தான் பின்-செப்டம்பர் மற்றும் பின்-சோவியத் உலகின் அரசியல் யதார்த்தம்.

இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பானதும், அந்நாட்டின் போர்க்குற்றங்கள் குறித்ததுமான ஐக்கியநாடுகள் சபையின் கூட்டத்தைக் கூட்டுமாறு, பிரித்தானிய மற்றும் பிரான்ஸ் போன்ற மேற்கத்திய நாடுகள் உள்ளிட்டு, சர்வாதிகாரி பினோசேவின் மனித உரிமை மீறல்களுக்கு உள்ளான சிலே எனும் இலத்தீனமெரிக்க நாடும், இனக்கொலைக்கு உள்ளான கொசவா எனும் புதிய ஐரோப்பிய தேசமும் சேர்ந்து குரலெழுப்பின. இலங்கையின் சார்பாக இந்தியா, சீனா, பாகிஸ்தான், ஈரான், வியட்நாம், ரஸ்யா போன்ற முரண்பட்ட அரசியல் பார்வை கொண்ட நாடுகள் உறுதியாக நிற்கின்றன.

ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை தொடர்பான மனித உரிமை மீறல் விவாதங்களுக்கு ஒப்புதல்தராத நாடுகளாக இலத்தீனமெரிக்காவின் கியூபா, பொலிவியா, நிகரகுவா போன்ற நாடுகள் இருக்கின்றன. முன்னாள் காலனியாதிக்க நாடுகள் மனித உரிமை பேச, முன்னாள் விடுதலை இயக்க தேசங்கள் சிறுபான்மையினர் உரிமை குறித்த விவாதங்களுக்கு முன்னுரிமை அளிக்காதிருக்கிறார்கள். இறுதியில் ஐரோப்பிய நாடுகளின் வரைவு பின்தள்ளப்பட்டு, இலங்கையின் வரைவு வெற்றி பெற்றிருக்கிறது. மனித உரிமைகள் சார்ந்த விவாதம் முற்றிலும் மேற்கலகு-மேற்கல்லாத உலகு என அரசியல்மயப்படுத்தப் பட்டிருக்கிறது. இதுவே நாம் வாழும் காலத்தின் அரசியல் யதார்த்தம். 

சர்வதேசிய கம்யூனிஸ இயக்கம், அவைகளுக்கிடையிலான சர்வதேசிய கம்யூனிஸக் கடப்பாடுகள் என்று எதுவும் இன்று இல்லை. சீனா வியட்நாம் போன்ற நாடுகளை இன்று கொண்டு செலுத்துவது சோசலிசம் எனும் கருத்தாக்கம் இல்லை. உலகவயமாதல் சூழலிலான தேசிய பொருளாதார வளர்ச்சி எனும் கருத்தாக்கம்தான். சீனா வியட்நாம் இடையிலான நடந்து முடிந்த யுத்தத்தையும் கூட அவர்தம் தேசிய அபிலாஷைகள் என்பதற்கு அப்பால் பிற எவ்வாறாகவும் நாம் புரிந்து கொள்ள முடியாது.

இன்றைய சீனாவை கம்யூனிஸ நாடு அல்லது சோசலிச நாடு என வரையறுப்பதற்கான எந்தவிதமான முகாந்தரங்களும் இல்லை. தியானன்மென் சதுக்கத்தில், தமது சொந்த மக்களின் எதிர்ப்பை அவர்கள் மீது ‘மக்கள்’ ராணுவத்தினை ஏவியதின் வழி தீர்த்துக் கட்டிய நாடாக சீனா இருக்கிறது.  உலகில் நிலவிய சோசலிசம் என்பது அஸ்தமனமாகி விட்டது. ஜபடிஸ்ட்டாக்களின் எழுச்சி கூட எந்தவிதமான கற்பனாவுலகு சார்ந்த எதிர்கால சமூகத்தையும் (utopia)  முன்னுணர்ந்து முன்வைக்க முடியாதிருக்கிறது. பின்-காலனிய மற்றும் பின்-செப்டம்பர் மற்றும் உலகவயமாதல் தழுவிக் கொண்டிருக்கும் உலகின் அரசியல் வரைபடம் இப்படியாகத்தான் இருக்கிறது.

2

ஈழத்தின் பிரச்சினைகளாயினும்  சரி, இந்தியாவின் சுமார் 200 மாவட்டங்களில் தன் அதிகாரத்தை முன்வைத்திருக்கும்  நக்ஸலிசத்தின் புத்தெழுச்சியாகத் தோன்றும் புதிய அரசியல் யதார்த்தம் உள்ளிட்ட உலகின் எந்தப் பிரதேசத்தின் பிரச்சினைகளாயினும் சரி, (1) சோவியத் யூனியன் வீழ்ச்சியின் பின்னான, இடதுசாரித் தலைமைத்துவம் குறித்த உரையாடல் (2) பின்-செப்டம்பர் தோற்றுவித்த பயங்கரவாதம் தொடர்பான உரையாடல் (3) இந்த இரண்டு உலக நிகழ்வுப் போக்குகளினது விளைவாக அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாக ஆகியிருக்கிற மனிதஉரிமை மற்றும் ஜனநாயப் பிரதிநிதித்துவம் எனும் உரையாடல் (4) வலது மற்றும் இடது என்கிற வித்தியாசங்கள் இல்லாமல், இன்றைய தேசிய அரசுகளின் முன்னுரிமையாக ஆகியிருக்கிற, உலகவயமாதலைத் தமது தேசிய நலன்களுக்குப் பாவிப்பது எனும் உரையாடல் என்கிற இந்த நான்கு வரலாற்றுப் பிண்ணனிகளும் இல்லாமல், உலகின் அரசியல் பிரச்சினைகளை எவ்வகையிலும் நம்மால் புரிந்து கொள்ள முடியாது.

3

இலங்கை அரசினது இனவாதத் தன்மை குறித்தும், ஈழப் பிரச்சினையின் தோற்றுவாய்கள் குறித்தும், இலங்கை அரசு மற்றும் விடுதலைப்புலிகளின் மனித உரிமை மீறல்கள் குறித்தும், அரச பயங்கரவாதம், குழு பயங்கரவாதம் என இருவரதும் பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்தும், வெகுமக்களின் உயிர்வாழ்தல் குறித்த அக்கறைகளற்ற இருவரதும் அணுகுமுறைகள் குறித்தும், மாற்றுக் கருத்தாளர்களைக் கொன்றொழிக்கும்  இருவரதும்; பரஸ்பர அணுகுமுறை குறித்தும் சர்வதேசிய அரசியல் விமர்சகர்கள் தெளிவாக அறிந்திருக்கிறார்கள் ( Jerome Taylor : Velupillai Prabhakran Obituary : The Independent : 19 May 2009). meerabharathy

 

இனி ஈழவிடுதலைப் போராட்டத்தின் வரலாற்றை எழுதுபவர்கள் எவராயினும் அவர்கள் குறிப்பான நுண்விவரங்களை மட்டுமே பதிவுசெய்ய முடியும். முழுமையில் இந்த பின்வரப்போகும் விவரங்கள் எந்த வகையிலும் இலங்கை அரசு மற்றும் விடுதலைப் புலிகள் குறித்த அரசியல் அறிந்தவர்களின் அவதானங்களை இனி மாற்றிவிடப்போவதில்லை.

இலங்கை அரசு இனவாத அரசு. பௌத்த சிங்கள மேலான்மையை யாப்புவடிவில் வைத்திருக்கும் அரசு. இராணுவம் சிவில் சமூகத்தின் அலகுகள் என முழு சமூகமும் தழுவி இலங்கை அரசு சிங்கள இனத்தின் அரசாகவே இருக்கிறது. சிங்களத் தனிச்சட்டம் துவங்கி, தரப்படுத்தல் ஈராக, அந்தச் சிந்தனை 1983 ஜூலைப் படுகொலையாகப் பரிணாமம் பெற்றது. இலங்கைத் தலைநகர் கொழும்பில் 3000 தமிழர்கள் கொல்லப்பட்டனர். பின்பான கடந்த 25 ஆண்டுகளாக ஒரு அரசியல் தீர்வுத் திட்டத்தை முன்மொழிந்து நடைமுறைப் படுத்த அவர்கள் எத்தனிக்கவில்லை.

இந்திய-இலங்கை உடன்பாட்டின்படி அமைந்த 13ஆவது சட்டத்திருத்தத்தைக் கூட அவர்களால் நடைமுறைப்படுத்த முடியவில்லை. இப்போது வடகிழக்கு இணைப்பு என்பதனைச் சிதறடித்து சட்டபூர்வமாக கிழக்கையும் வடக்கையும் பிரித்து வைத்திருக்கிறார்கள். கடந்த 30 ஆண்டுகளாக 80,000 தமிழ்மக்கள் மரணமுற்ற பின்னாலும், மாறி மாறி ஆட்சிக்கு வந்த சிங்கள அரசுகளின்  தீர்வுத் திட்ட வரையறைகள் காகித அளவிலேயே இருந்துகொண்டிருக்கிறது.

மிகச் சரியான காரணங்களுக்காகத் தோன்றிய ஈழ விடுதலை இயக்கங்களின் செயல்பாட்டைப் பகுதியளவு தீர்மானிக்கும் விசைகளாக அல்லது புறக்காரணிகளாக சர்வதேசிய சக்திகள் இருந்தபோதிலும்,  விடுதலைப் போராட்டத்தின் பின்னடைவுக்கான ஈழமண் சார்ந்த அகக்காரணியாக விடுதலைப் புலிகளின் தீர்க்கதரிசனமற்ற அரசியல் தவறுகளே இருந்தன.

அவர்களது முதல் அரசியல் தவறு சகோதரப் படுகொலைகள். சகலவிதமான அரசியல் முரண்பாடுகளையும், அரசியல் பார்வைகளையும் படுகொலை செய்வதன் மூலம் அழித்தொழிப்பது எனும் அவர்களது நிலைபாடு, சக இயக்கங்கள், வெகுமக்கள் எனப்பரவி அது தமது இயக்கத்தின் உள்ளெழும் முரண்பாடுகளையும் தீர்ப்பதற்கான வழிமுறையாகப் பரிமாணம் பெற்றது. ஸ்டாலினிய எதேச்சாதிகார அரசியல் தலைமைப் பண்பு இவ்வாறாக விடுதலைப் புலிகளின் எழுதப்படாத அரசியல் கோட்பாடாக ஆனது.

தமிழகத்தில் நிகழ்த்தப்பட்ட அவர்களது சகோதர அரசியல் படுகொலைகள் தமிழக வெகுமக்களை மறுபடியும் விடுதலைப் புலிகளிடமிருந்து தூரப்படுத்தியது. மனித உரிமை மீறலாளர்கள் மற்றும் ஜனநாயக நெறிமுறைகளை எந்தவிதத்திலும் கடைபி;டிக்காதவர்கள் எனும் சித்திரம் அவர்களின் மீது விழுந்தது. உலகெங்கிலுமுள்ள தாராளவாதிகளிடமிருந்தும் எழுத்தாளர்கள் கலைஞர்களிடமிருந்தும் இவ்வகையில் இவர்கள் அந்நியமாகிப் போனார்கள்.

குர்திஸ் விடுதலைக்கு ஆதரவாகக் கருத்துக் கூறிய  அமெரி;க்கச் சிந்தனையாளரான நோம் சாம்ஸ்க்கி விடுதலைப் புலிகளைப் பொறுத்து அவ்வாறான ஆதரவான நிலைபாட்டை எடுக்கவில்லை. பர்மிய ஜனநாயகப் போராளியான ஆங் ஸன் சூகியையும், கிழக்கு திமோர் விடுதலைப் போராட்டத் தலைவரான குஸாமா ஜனானாவையும் வெளிப்படையாக ஆதரித்த ஜான் பில்ஜர் (  Distant voices Desperate lives : John Pilger : New Statesman : 14 May 2009  ) விடுதலைப் புலிகளின் மனித உரிமை மீறல்கள் குறித்துச் சுட்டிக் காட்டவே செய்தார்.

ராஜீவ்காந்தியின் படுகொலை இரண்டாவது அரசியல் தவறு. அதனது விளைவுகள் விடுதலைப்புலிகள் இயக்கத்தை அரசியல் ரீதியில் நிரந்தரமான பின்னடைவுக்குத் தள்ளியது.  இந்திய அரசின் நோக்கு தவிர்ந்து, விடுதலைப் புலிகளை தார்மீக ரீதியில் ஆதரிக்கும் இந்திய தமிழக அரசியல் சக்திகளை மட்டுமல்ல, வெகுமக்களையும் அரசியல் ரீதியில் நடைமுறையில் செயலற்றவர்களாக ஆக்கியது ராஜீவ்காந்தியின் படுகொலை. இந்திய அரசியல் கலாச்சாரம் குறித்த அரசியல் அவதானமற்ற விடுதலைப் புலிகளின் உணர்ச்சிகர ஆயுத அரசியலே இதற்கான காரணமாக ஆகியது.

இலங்கை ஜனாதிபதி பிரமதேசா படுகொலை, எல்லையோர சிங்கள வெகுஜனப் படுகொலைகள், தற்கொலைத் தாக்குதல்கள், விமானநிலையம், தேசிய வங்கி போன்ற இலக்குகள் மீதான அவர்களது தாக்குதல்கள், சர்வதேசிய நாடுகளின் மத்தியில் விடுதலைப் புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கம் எனப்பெயரெடுக்கக் காரணமாக ஆனது.

இந்திய அமைதிப்படையை இலங்கையிலிருந்து வெளியேற்ற தமது பிரதான எதிரிகளான சிங்கள இனவாத பிரேமதாசா அரசுடன் விடுதலைப் புலிகள் இணைந்தது, தென் ஆசியச் சுழலில் அவர்களது தவறான அரசியல் தந்திரோபாயமாக ஆனது. இவ்வாறுதான இந்தியாவிலும் தமிழகத்திலும் அவர்களுக்கு வெகுமக்கள் மத்தியிலும் அரசியல்  சக்திகள் மத்தியிலும் முன்பிருந்த வெகுமக்கள் ஆதரவுத் தளத்தை இழந்தார்கள்.

அவர்களது மூன்றாவது அரசியல் தவறு இந்தியாவிலும் உலகெங்கிலும் இஸ்லாமிய மக்களின் மீதான ஒதுக்குதலும் படுகொலைகளும் நிகழந்து கொண்டிருந்த தருணத்தில், இந்துத்துவம் இந்தியாவில் இஸ்லாமிய வெறுப்பை விதைத்துக்கொண்டிருந்த காலகட்டத்தில், 24 மணி நேரங்கள் மட்டுமே கொடுத்து, வெறும் 500 இலங்கை ரூபாய்கள் மட்டுமே எடுத்துக் கொண்டவர்களாக,  இஸ்லாமிய வெகுமக்களை ஆயுத முனையில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றிய நடைவடிக்கையாக இருக்கிறது.

இஸ்லாமிய மக்களின் வெளியேற்றத்திற்கான காரணங்களை ஸ்தூலமாக முன்வைக்க இயலாத அவர்கள், பிற்பாடாக அது தமது தவறு என விடுதலைப்பலிள் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கத்தின் வழி திரும்பத் திரும்பவும் வெளிப்படையாக அறிவித்தாலும், மீளவும் இஸ்லாமிய மக்கள் யாழ்ப்பாணம் திரும்பவதற்கான நம்பிக்கையை அம்மக்களிடம் விதைப்பதில் அவர்கள் தவறினார்கள். இந்திய தமிழக இடதுசாரிகள் மத்தியிலும், இந்துத்துவ எதிர்ப்பாளர்கள் மத்தியிலும் இவ்வகையில் விடுதலைப்புலிகளின் ஆதரவுத் தளம் வீழ்ந்தது.

இவையனைத்துக்கும் அப்பால் செயல்பட்ட அல்லது விடுதலைப் புலிகளின் அரசியல் தவறுகளுக்கான வியாக்யானங்களை வழங்கிய தமிழக விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் கடக்க முடியாத வெளியாக இருந்தது ராஜீவ்காந்தி படுகொலை மீதான இந்திய நீதிமன்றத்தின் தீர்ப்பு. இதன்வழி ராஜீவ்காந்தியின் படுகொலை என்பது அதனது அறம்சார் அரசியல்சார் பரிமாணம் என்பதினின்றும் கடந்து, இந்திய அரசியல் யாப்பு, இந்திய நீதியமைப்பு என்பதான அமைவைப் பெற்றுவிட்டிருந்தது. இவ்வகையில் விடுதலைப் புலிகளின் தலைமைச் சக்திகள் இந்திய அரசினது எதிரிகளாக ஆகியிருந்தார்கள்.

விடுதலைப் புலிகளை நேரடியிலாகவும் வெளிப்படையாகவும் ஆதரித்தவர்கள் இந்திய பாராளுமன்ற அரசியல்வாதிகளாக இருந்தவர்கள், இந்திய அரசியல் அவைகளின் உறுப்பினர்களாக இருந்தவர்கள், இந்திய யாப்பின் மீது சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டவர்கள். இவ்வகையில் இந்திய நீதியமைப்பு அனுமதிக்கிற எல்லைகளைத் தாண்டி இவர்கள் செயல்படுவதற்கான வாயப்புக்கள்  முற்றிலும்; இல்லை. இவ்வகையில் விடுதலைப் புலிகளுக்கான இவர்களது ஆதரவு, இந்திய தமிழகச் சூழலில் அரசியல் பிரதிநிதித்துவ மொழியாகத் ஸ்தூலமாக வெளிப்பட முடியவில்லை.

சிங்கள இனவாதத்தை எதிர்த்த தமது போராட்டத்தில் தமது இயல்பான நேசசக்திகள் இந்திய தமிழக மக்களே எனப் பின்னாளில் அதிகமும் உணர்ந்த விடுதலைப் புலிகள், இவ்வாறாக அரசியல் மொழியிலான இந்திய தமிழக நேசத்தை இழந்தார்கள்.

4

எண்பதுகளில் நடந்து முடிந்த கிழக்கு ஐரோப்பிய மற்றும் சோவியத் யூனியன் சோசலிசத்தின் வீழ்ச்சி, ஐரோப்பாவில் இனத்தின் அடிப்படையிலான தேசியங்கள் தோன்ற வழிசமைத்தன. சோசலிச நாடுகளை இன்னும் இன்னுமாக உடைப்பதிலும், தமக்கான அரசியல் பொருளாதார ஆதிக்க மையங்களை உருவாக்குவதிலும் ஆர்வம் கொண்டிருந்த அமெரிக்க ஐரோப்பிய அரசுகள் புறநிலையில் இந்தச் செயல்போக்கை ஊக்குவித்தன. சோவியத் யூனியனிலிருந்தும் யுகோஸ்லாவியாவிலிருந்தும் பத்துக்கும் மேற்பட்ட புதிய இனத் தேசியங்கள் நாடுகாளாகவும் முகிழ்த்தன.

இதில் கொசாவா சர்வதேசிய அங்கீகாரம் என்பதல்லாமல், அமெரிக்கப் படைகள் தமது நாட்டில் நிலைகொண்டிருக்க தனிநாடாகப் பிரகடனம் செய்தது. அதனை யாவருக்கும் முதலாக அமெரிக்கா அங்கீகரித்தது. இந்த புதிய நாடுகளில்; தேசிய இனப் பிரக்ஞை தோன்றுவதற்கான காரணிகளாக சோவியத் யூனியனில் ரஸ்யப் பெருந்தேசியமும் யகோஸ்லாசியாவில் செர்பியப் பெருந்தேசியமும் இருந்தன. இந்த இனத்தேசியங்களுக்கான அரசியல் பொருளியல் கலாச்சார உரிமைகள் எனும் ஜனநாயக நிபந்தனை அனுமதிக்கப்படாத சூழலில் அதனைப் பெறுவதற்கான வேட்கையாக இந்தப் பிரதேசங்களில் இனத் தேசியப் பிரக்ஞை எழுந்தது.

இனவிடுதலையை அங்கீகரிப்பது எனும் நோக்கிலல்ல, மாறாகத் தமது அரசியல் பொருளியல் வேட்டை நிலங்களாகவே இத்தகைய தேசியங்களை அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் வரவேற்றன. ஆயினும் சகலவிதத்திலும் அதிகாரத்தை பகிர்வது, அடிநிலைகளுக்கு ஜனநாயகத்தைக் கொண்டு போவது எனும் அளவில் இது ஒரு ஆக்கபூர்வமான அரசியல் பாய்ச்சல் என்றே சொல்ல வேண்டும்.

இந்த நிலைமையத்தான், உலகின் சாத்தியமான எதிர்கால அரசியலாக, இனத் தேசிய அடையாள அரசியல் அடையாளம் இருக்கும் என்கிறார் ஆப்ரிக்கக் கலாச்சாரக் கோட்பாட்டாளரான ஸ்டூவர்ட் ஹால். ஆனால், இந்த இனத் தேசியக் கலாச்சார அடையாள வேட்கை வரலாற்றின் போக்கில் ஆக்கபூர்வமான திசையில்தான் செல்லும் என்பதற்கான உத்தரவாதம் என எதுவும் இல்லை என்கிறார் பின்-மார்க்சியரான எர்னஸ்ட் லக்லாவ்.

சமவேளையில்;  ஐரோப்பாவுக்கு வெளியில் குர்திஸ் மக்களின் விடுதலைப் போராட்டமும், இந்தோனேசியாவில் கிழக்கு திமோர் மக்களின் போராட்டமும், இலங்கையில்  தமிழ்த்தேசிய இனப்போராட்டமும் உக்கிரம் பெற்றன. இதுவன்றி, பாலஸ்தீன மக்களின் இறையான்மைக்கான போராட்டமும், காஷ்மீர் மக்களின் இறையாண்மைக்கான போராட்டமும், குடியரசுக்கான நேபாள மாவோயிஸ்ட்டுக்களின் போராட்டங்களும் தொடர்ந்தன.

இந்தப் போராட்டங்கள் அனைத்துமே நேரடியிலாக அமெரி;க்க மேற்கத்திய ஆதரவோ அல்லது அனுசரணையோ இல்லாமல் நடந்த போராட்டங்கள். இந்தப் போராட்டங்களை அல்லது இவைகளை நடத்தும் இயக்கங்களை ஒரு போதும் அமெரி;க்கா அல்லது ஐரோப்பிய அரசுகள் ஆதரித்ததில்லை. அஸே விடுதலை அமைப்பை அமெரிக்காவின் ஆசியுடன் பர்மா அழித்தொழித்தது. அமெரி;க்க மேற்கத்திய ஆசியுடன் துருக்கியும் ஈராக்கும் சிரியாவும் குர்திஸ் விடுதலைப் போராட்டத்தை துடைத்தழிக்க எத்தனப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அவுஸ்திரேலியாவின் அரசியல் செல்வாக்கின் பொருட்டு மேற்கத்திய அமெரிக்க ஆசியுடன் கிழக்கு திமோர் உருவாகி இருக்கிறது. சிறிதுகால உள்நாட்டுப் போரின் பின் அந்தப் புதியநாடு பல்கட்சி ஜனநாயக அரசாக இருக்கிறது. ஓப்பீட்டளவில் விடுதலை இயக்கத் தலைமைகளை எடுத்துக் கொள்கிறபோது விடுதலைப் போராட்டத்தின் போக்கிலும், அதன் பின்பும் ஜனநாயகப் பண்புளைக் கடைபிடித்தவராக கிழக்கு திமோர் விடுதலை இயக்கத்தலைவர் குஸாமா சனானாவைக் குறிப்பிடலாம்.

போராட்டம் எனும் தமது இலக்கு அடையப்பட்டவுடன் தமது விடுதலை இயக்கத்தைக் கலைத்தவர் அவர். மக்களை அணுகாத தனது இயக்கத்தின் நாற்காலிப் புரட்சியாளர்களை விமர்சித்தவர் அவர். வெகுஜனத் தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு அதிகாரத்திற்கு வந்தவர் அவர். தனது இயக்கத்தினுள்ளும் ஜனநாயகத்தைப் பேணியவராக அவர் இருந்தார்.

குர்திஸ் விடுதலை இயக்கத் தலைமையிலோ அல்லது விடுதலைப் புலிகளின் இயக்கத் தலைமையிலோ இந்தப் பண்பை நாம் பார்க்க முடியாது. சகோதர இயக்கப் படுகொலைகளும், ஜனநாயக மறுப்பும், வெகுமக்கள் படுகொலைகளும் நிறைந்த இயக்கங்களாகவே இந்த இரு இயக்கங்களும் இருக்கின்றன. இந்தியாவில் இத்தகைய எதிர்மறைப் பண்புகள் கொண்ட இயக்கமாக பிற அண்;டை மாநில இனமக்களைக் கொன்ற இயக்கமாக அஸாமின் போடா இயக்கம் இருக்கிறது.

தமது இயக்கத்தின் அரசியல் தவறுகள் பற்றியும் சகோதரப் படுகொலைகள் பற்றியும் தமது இயக்கத்தின் மனித உரிமை மீறல்கள் பற்றியும் பின்னாளில் குர்திஸ் விடுதலை இயக்கத் தலைவர் அப்துல்லா ஒச்சலான் வெளிப்படையாகவே சுயவிமர்சனம் செய்துகொண்டார். தமது கடந்த கால அரசியல் தவறுகள் குறித்த இத்தகைய பண்பு என்பது விடுதலைப் புலிகள் அமைப்பில் காணக் கிடைக்காததொன்றாகும். 

கிழக்கு ஐரோப்பா மற்றும் சோவியத் யூனியன் உடைவிலிருந்தான அனுபவங்கள் உலகுக்கு இரண்டு செய்திகளைக் கொண்டிருந்தன.

(1) முதலாவதாக, ஒற்றைக் கட்சி எதேச்சாதிகாரக் கட்சி ஆட்சி அல்லது இயக்க அதிகாரம் என்பது இனிமேல் விடைகொடுத்துவிட வேண்டிய ஒரு அரசியல் முறைமை என்பதாக இருந்தது. புரட்சிகர அமைப்பினுள்ளும் வெளியிலும் தனிநபர் அதிகார அமைப்பு என்பதற்கு மாற்றாக, விவாதத்திற்கான வெளியும் ஜனநாயகத்திற்கான செயல்வெளியும் தரப்பட்டிருக்க வேண்டும் என்பதாக இச்செய்தி அமைந்தது.

நேபாள மாவோயிஸ்ட் கட்சி அமைப்பும், பிற்பாடான அவர்களது பல்கட்சி ஜனநாயக ஏற்பும் இதற்கான எடுத்துக் காட்டாக அமைகிறது. பிரதானமான இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிகள் இரண்டும் பல்கட்சி ஜனநாயகத்தை ஏற்று, ஒற்றைக் கட்சி அதிகார வேட்கையை முற்றாக நிராகரித்திருக்கிறார்கள்.

தென்ஆப்ரிக்க விடுதலைப் போராட்டத்தில் நெல்சன் மண்டேலாவின் ஆப்ரிக்க தேசிய காங்கிரஸை எதிர்த்து, வெள்ளையின ஆட்சியாளர்களோடு செயல்பட்ட புத்லேசியை ஆப்ரிக்க காங்கிரஸ் இயக்கம் படுகொலை செய்யாமல் அவரை அவரது அரசியல் செய்ய அது அனுமதித்தது என்பதையும் நாம் இங்கு முன்னாள் உதாரணமாக நினைவுகூரலாம். அவமானகரமான ஸ்டாலினிய ஒற்றை நபர் எதேச்சாதிகாரத்தை நிராகரிக்க வேண்டியது விடுதலை அமைப்புகளின் முன்நிபந்தனையாக ஆகவேண்டும் என இதனைக்  கருத்தாக்கமெனும் அளவில்  நாம் சொல்லலாம்.

(2). இரண்டாவதாக, அமெரிக்க ஐரோப்பிய அரசுகள் இனத்தேசிய விடுதலையின் காவலர்களாக ஒரு பொய்மைத் தோற்றம் எழுந்திருக்கிறது. ஆனால் இவர்களது இனத்தேசிய ஆதரவு இவர்தம் அரசியல் புவியியல் பொருளியல் ஆதிக்க நோக்கில் அமைகிறது என்பதுதான் நிஜம். கிழக்கு ஐரோப்பிய, சோவியத் தேசியங்களை ஆதரித்த மாதிரியில் இவர்கள் குர்திஸ், ஈழத் தமிழ், அஸே தேசியங்களை ஆதரிக்கவில்லை.

பாலஸ்தீனம், காஷ்மீர் என அரைநூற்றாண்டாகத் தொடர்கிற போராட்டங்களையும் இவர்கள் ஆதரிக்கவில்லை. நேபாள குடியரசுக்கான போராட்டத்தையும் இவர்கள் ஆதரிக்கவில்லை. அந்தந்த பிராந்தியங்களின் ஆதிக்க அரசுகளுடன்தான் தம்மை இவர்கள் பிணைத்துக் கொள்வார்களே ஒழிய கருத்தளவில் இனத்தேசியங்களை இவர்கள் ஆதரிக்கிறவர்கள் இல்லை. இந்த அரசியல் யதார்த்தங்களையும் தாண்டிய, ஒரு விதமான அமெரி;க்க மேற்கத்திய அரசுகளை நோக்கிய விடுதலைப் புலிகளின் நம்பிக்கை கானல் நீராகவே ஆனது. 

5

2001 செப்டம்பர் நியூயார்க் இரட்டைக் கட்டிடத் தாக்குதல் அமெரிக்கா குறித்த அத்தனை பிரம்மைகளையும் தகர்த்ததான விளைவுகளை உருவாக்கியது. தான் ஊட்டி வளர்த்த தலிபான்களை அது பயங்கரவாதிகள் என வேட்டையாடியது. எண்ணெய்வளம் மற்றும் விநியோகம் தொடர்பாகத் தனக்குச் சவால் விடுத்த ஈராக்கை பாரிய அழிவு ஆயுதங்கள் எனும் குற்றச்சாட்டை முன்வைத்து பிணக்காடாக்கியது. பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் வசம் பாரிய அழிவு ஆயுதங்களைக் கொடுத்து அம்மக்களைப் படுகொலை செய்தது.

அல்கைதா எனும் அருவமான பயங்கரத்தை அரசியல் இயக்கமாக அல்லாது ஒரு தொழில்நுட்ப அழிவு இயந்திரமாக அமெரிக்கா  பார்த்தது. அல்கைதா பகிர்ந்து கொள்வது அரசியல் அல்ல, மாறாக அழிவாயுதத் தொழில்நுட்பம் எனப் பார்த்தது. இந்த அழிவுத் தொழில்நுட்பத்தின் ஒரு பகுதியாகவே தற்கொலைக் கொலையாளியின் பயிற்சிகளையும், தொழில்நுட்பங்களையும் அமெரிக்கா பார்த்தது. அரசியல் மாறுபாடுகள் முரண்பாடுகள் என்பதற்கும் அப்பால் இவ்வாறான அழிவுத் தந்திரோபயங்களைப் பாவிக்கும் அனைவரையும் அரசியல் நீக்கப்பெற்ற ஒருமையாகவே அமெரிக்கா பார்த்தது.

இதே கருத்தாக்கத்தை தத்தமது புவிப்பரப்பிலுள்ள சிறுபான்மையினர் மற்றும் பழங்குடியினர் மற்றும் விவசாயிகள் என அனைத்து விதமான மக்களினதும் எதிர்ப்புக்களை ஒடுக்க ரஸ்யாவும் இந்தியாவும் சீனாவும் ஏற்றன. உள்நாட்டுக்கு ஆபத்தான தனியொரு பிரச்சினை நக்ஸலைட் பிரச்சினை என இந்த நோக்கில்தான் மன்மோகன் சிங் அறிவித்தார். இவ்வாறுதான் மகிந்த ராஜபக்சாவும் இலங்கைத் தமிழர் பிரச்சினையை பயங்கரவாதமாக ஆக்கினார்.

நியூயாரக், மாட்ரிட், இலண்டன் எனத் தொடர்ந்த தற்கொலைத் தாக்குதல்கள், வேறு வேறு அரசியல் நோக்குகளுக்காக பாலஸ்தீனத்திலும் இலங்கையிலும் இந்தோனேசியாவிலும் ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் பாகிஸ்தானிலும் இஸ்ரேலிலும் பாவனைக்கு வந்தது. அது முன்பாகவே விடுதலைப் புலிகளின் வடிவில் இந்தியாவிற்குள்ளும் வந்திருந்தது. பிற்பாடு மும்பைக்கும் புதுதில்லிக்கும் ஹைதராபாத்துக்கும் காஷ்மீருக்கும் அது வந்தது.

உலகின் எந்த மூலையில் இத்தகைய தற்கொலைத்தாக்குதல்கள் நடந்தாலும் அதற்கென இரண்டு பொதுப் பண்புகள் இருந்தன. முதல் பண்பு, இந்தக் குண்டுவெடிப்புத் தொழில்நுட்பம் பரஸ்பரமாக இதில் ஈடுபடும் எல்லா இயக்கங்களினாலும் எடுத்துக் கொள்ளப்பட்டது. இரண்டாவது பண்பு, வெகுமக்களை இத்தகைய குண்டுவெடிப்புகள் இலக்காகக் கொண்டிருந்தது. இத்தகைய தாக்குதல்களில் குழந்தைகள் ஆண்கள் பெண்கள் என அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள்.

இத்தகைய குண்டுவெடிப்புகள் உலகெங்கிலும் வாழும் மக்களிடத்தில் பீதியையும் பயங்கரத்தையும் விதைத்தது. வெகுமக்களின் அபிப்பிராயங்கள் மட்டுமல்ல, ஸ்டாலின், போல்பாட், கலாச்சாரப் புரட்சி என அறிந்த தாராளவாதிகளும் இடதுசாரிகளும் கூட இத்தகைய கொலைகளை வெறுத்தார்கள், கண்டித்தார்கள். நியூயார்க் தாக்குதலை பயங்கரவாதம் என்றார் ஃபிடல் காஸ்ரோ. சந்தேகமில்லை பயங்கரவாதம்; என்றார் மஹ்முத் தர்வீஸ். ஆம் பயங்கரவாதம் என்றனர் சீனா ரஸ்யா பிரான்ஸ் போன்ற நாட்டவர்கள். தாக்குதலின் பின்னிருந்த அரசியல் காரணிகளை அவர்கள் சுட்டினாலும் கூட பயங்கரவாதம் ஒப்புக் கொள்ள முடியாதது என அனைவரும் சொன்னார்கள்.

இடதுசாரிகளும் விடுதலைப் போராட்டத்தை நடத்துபவர்களும் மிகப் பெரும் தார்மீக நெருக்கடிகளை அவைகளது எதிரிகளிடம் இருந்து மட்டுமல்ல, ஆதரவாளர்களிடமிருந்தும் தாராளவாதிகளிடமிருந்தும் வெகுமக்களிடமிருந்தும் எதிர்கொண்டார்கள்.

ஜனநாயக மறுப்புக்கு எதிராகவும், உரிமைகள் மறுக்கப்படுவதற்கு எதிராகவும், வெகுமக்களின் உயிர்ப் பாதுகாப்புக்காகவும் போராடுகிற நீங்கள் முதன்மையாக அதனைக் கடைபி;டிக்கிறீர்களா அல்லது அதனை உங்களது அமைப்புகளுக்குள் அதனை மதிக்கிறீர்களா என்பதுதான் அந்த முக்கியமான கேள்வி.

அரசியல் இலட்சியம் எனும் அளவில் சோவியத் யூனியன் அனுபவங்கள் அவர்கள் முன் இருந்தன. கலாச்சாரப் புரட்சி அனுபவங்கள் அவர்கள் முன் இருந்தன. பாசிசம் அவர்கள் முன் இருந்தன.

செப்டம்பரைத் தொடர்ந்த அதே வகையிலான அனுபவங்களை தாம் வாழும் நகர்களில் உலக மக்கள் எதிர்கொண்டார்கள். வெகுமக்கள் இட்லர், ஜோர்ஜ்புஸ், போல்பாட், பின்லாடன் என அனைவரையும் அறிந்திருந்தார்கள். கூடவே ஜனநாயகம், தமது அடிப்படை உரிமைகள், உயிர்வாழ்தலின் அவசியம் போன்றவற்றையும் அவர்கள் அறிந்திருந்தார்கள்.

பயங்கரவாதம் ஒரு யதார்த்தமாக ஆனது. சமவேளையில் ஓடுக்குமுறை அரசுகளால் சிறுபான்மையின மக்கள் ஒடுக்கப்படுவதும் ஒரு யதார்த்தமாக ஆனது. பயங்கரவாதத்திற்கும் விடுதலைப் போராட்டச் செயல்பாடுகளுக்கும் இருக்கும் வித்தியாசத்தை நிலைநாட்ட வேண்டிய பொறுப்பு போராடுபவர்களுக்கு வந்து சேர்ந்தது.

அல்ஜீரிய விடுதலைப் போராட்டம், பாலஸ்தீன விடுதலைப் போராட்டம், அதனோடு மியூனிக் ஒலிம்பிக் படுகொலைகள், வியட்நாம் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து ஜெர்மனியிலும் இத்தாலியிலும் ஜப்பானிலும் இடம்பெற்ற செம்படை அணியினரின் தனிநபர்ப் படுகொலைகள் மற்றும் பொது இடங்களிலான குண்டுவெடிப்புகள் போன்றன அன்று ஆக்கிரமிப்பாளருக்கான எதிர்ப்பைக் காண்பிப்பதற்கான வேறுவழியற்ற சூழலில், கவனயீர்ப்புச் செய்வதாக அல்லது எதிரிக்கு நெருக்கடி தருவதாக நியாயப் படுத்த முடிந்தது.

அல்ஜீரிய வன்முறையயும் பாலஸ்தீனப் போராளிகளின் வன்முறையையும் ஸார்த்தர் இந்நோக்கில் ஆதரித்தார். ஆனால் அதே ஸார்த்தர் ஜெர்மன் சிவப்புப் படையணியினரின் தனிநபர் படுகொலைகளை ஆதரிக்கவில்லை.

இத்தகைய தாக்குதல்கள் மேலதிகமான வன்முறையினை ஒடுக்கப்பட்ட மக்களின்பால் கொண்ட வந்தன என்பதற்கு வரலாறு சான்றாக இருக்கிறது. மேலும் இத்தகைய வன்முறைகள் தமது சொந்த மக்களின் மீதான வன்முறையாகவும் திரும்பியது என்பதனையே சோவியத் சீன அனுபவங்கள் நமக்குத் தெளிவுபடுத்துகின்றன. மேலாக ஒடுக்குமுறையை எவர்களிடமிருந்து எதிர்கொண்டார்களோ, எவரைத் தமது பிரதான எதிரிகளாகக் கருதினார்களோ, அதே எதிரியான அமெரி;க்காவுடன் வியட்நாமும் அமெரிக்காவும் பொருளாதார ஒப்பந்தங்களை மேற்கொண்டன. ஆணு ஆயத ஒப்பந்தங்களை மேற்கொண்டன. இவர்களின் பொருட்டு வன்முறையை ஒரு போராட்ட வழியாக மேற்கொண்டவர்களின் நடவடிக்கைகளின் பொருத்தப்பாடு இன்று மறுபரிசீலனைக்கு உள்ளாக வேண்டி இருக்கிறது.

எதற்காக இந்த வன்முறைகளையும் போராட்டங்களையும் நாம் மேற்கொள்கிறோம்? எந்த எதிர்கால சமூகத்தை எதிர்கொள்வதற்காக இந்தப் போராட்டங்களையும் மேற்கொள்கிறோம்? எமது பல்லாயிரம் போராளிகளதும் வெகுமக்களதும் உயிரிழப்புகள் பெறுமதியானவைதானா? ஜனநாயகம், அடிப்படை உரிமைகள், சுபிட்சமான பொருளியல் வாழ்வுக்காக நடத்தும்போராட்டம், வழிமுறையாகவும் இலக்காகவும் அதற்கு எதிரான சமூகத்துக்காக இருக்குமானால் எதற்காக இவ்வளவு பெரும் உயிரிழப்புகளும் சேதங்களும் நிகழ வேண்டும்? விடுதலை இயக்கங்களும், இடதுசாரி இயக்கங்களும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் எதிர்கொள்ளும் மிகுந்த நெருக்கடியிலான தார்மீகக் கேள்விகள் இல்லை.

நமக்கு முன் சோவியத் யூனியனது வீழ்ச்சி நடந்திருப்பதைக் காணாது கண்மூடி இருக்க முடியாது. மார்க்சியர்களின் மீது அளவற்ற வெறுப்புக் கொண்டிருப்பவர்களாகவும் பயங்கரவாதிகள் இருக்கிறார்கள் என்பதையும் நாம் நிராகரிக்க முடியாது. உலகவயமாதல் எனும் பொருளியல் தேசியநலனின் போக்கில் வியட்நாமும் சீனாவும் அடித்துச் செல்லப்பட்டிருப்பதை நாம் நிராகரிக்கு முடியாது. இந்தியாவில் இடதுசாரிகள் எதிர்கொள்ளும் இந்தப் பதட்டத்தை நாம் நந்திகிராமிலும் சிங்கூரிலும் அனுபவம் கொண்டோம். இந்தச் சிக்கலான கேள்விகளைக் கடந்து போவதிலிருந்து எந்த தேசிய விடுதலைப் போராட்டத் தலைமையும் மீளுதல் சர்த்தியம் இல்லை.

6

ஒடுக்குமறைக்கு எதிராகத் தொடர்ந்து போராட்டங்களை நடத்துபவர்கள் பின்-சோவியத் மற்றும் பின்-செப்டம்பர் அனுபவங்கள் தந்த பாடங்களைக் கற்றுக்கொண்டு, இவைகள் முன்வைக்கும் புதிய சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அந்த சவால்களில் முக்கியமானது, தமது போராட்டத்தின் தார்மீகத் தன்மைகளுக்கு இயைந்த மாதிரியிலான பேராட்ட முறைமைகளை அவர்கள் தேற வேண்டியிருந்தது.

பயங்கரவாதத்திற்கும் விடுதலைப் போராட்டத்திற்கும் இடையிலான செயல் வேறுபாட்டை அவர்கள் காண்பிக்க வேண்டியிருந்தது. அனைத்து விதமான எதிர்ப்புக்களையும், சிறுபான்மையின மக்களது போராட்டங்களையும் பயங்கரவாதம் என நிரல்படுத்த முனைகிற தேசிய அரசுகள் நிலவும் சூழலில் இ;ச்சவால் பூதாகரமான பிரச்சினையாக எழுந்து நிற்கிறது.

வெகுமக்கள் மீதான கொலைகளை கவனமாகத் தவிர்ப்பதன் மூலமும், ஒடுக்கும் எதிரியைத் தன்மைப்படுத்துவதன் பொருட்டு தம்மக்களின் இடையில் ஜனநாயக மரபையும் ஒன்றினைவினையும் கட்டுவதன் மூலமும், இதனை ஒரு விடுதலை இயக்கம் சாதிக்க முடியும். தம்மைக் குறித்த சுயவிமர்சனத்தின் மூலமும், சாத்தியங்களின் கலை அரசியல் எனும் அளவில் தந்திரோபாயமாக விட்டுக்; கொடுத்தலின் மூலமும் இதனைச் சாதிக்க முடியும். மத்தியஸ்தர்களை மதிப்பதன் மூலமும் மத்திமமான தற்காலிகத் தீர்வை எட்டுவதன் மூலமும் மேற்செல்ல முடியும்.

கிழக்கு திமோரின் குஸாமா சனானவும் நேபாளத்தின் பிரசண்டாவும் இநதப் பாதையையே தெரிவு செய்திருக்கிறார்கள். தீர்வு கண்ணுக்கெட்டாத இறுக்கமான நிலைபாட்டினை விடவும் சாத்தியமான புதிய பாதைகளைத் தேர்வது குறித்துப் பேசும் காஷ்மீர் போராளியான மிலானின் முயற்சிகளும் கூட இத்தகையதுதான். இதனை மனப்பூர்வமாகத் தேறவேண்டுமேயொழிய ஒரு தந்திரோபாயம் என்கிற அளவில் பாவிப்பது பாரதூரமான விளைவுகளுக்கே இட்டுச் செல்லும் என்பதற்கான உதாரணமாக விடுதலைப்புலிகளின் வீழ்ச்சி இருக்கிறது.

7

சோவியத் யூனியனது வீழ்ச்சி மற்றும் செப்டம்பர் நிகழ்வின் சர்வதேசிய அரசியல் தாக்கத்தை முன்னுணர்ந்து கொண்டவரான விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் காலஞ்சென்ற அன்டன் பாலசிங்கம் அந்த உணர்வுகளைப் பிரதிபலிக்கும் முகமாக, 2002 ஏப்ரல் மாதத்தில் விடுதலைப் புலிகள் தலைவரான பிரபாகரனுடனான சர்வதேசியப் பத்திரிக்கையாளர்களின் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார்.

தற்கொலைப் போராளிகள், ஜனநாயகப் பாதை, பயங்கரவாதம் போன்றவை குறித்த சொல்லாடல்கள் அந்தச் சந்திப்பில் இடம்பெறுகின்றன. விடுதலைப் புலிகளின் தலைவரை நோக்கி விடுக்கப்பட்ட ராஜீவ்காந்தியின் படுகொலை குறித்த சுயவிமர்சனமோ அல்லது தற்கொலைத் தாக்குதல்கள் நடத்துவது குறித்த கேள்விகளை நேரடியாக அவர் எதிர்கொள்வதோ அந்தச் சந்திப்பில் நிகழவில்லை.

‘தாம் பயங்கரவாதிகள் இல்லை,  விடுதலைப் போராளிகள்’ எனச் சொல்லும் விடுதலைப் புலிகளின் தலைவர், இரண்டு நிலைபாடுகளுக்கும் இடையிலான செயல்களைத் தாம் எவ்வாறு வித்தியாசப்படுத்தப் போகிறோம் என்பது குறித்து எதுவும் சொல்லியிருக்கவில்லை. மட்டுமன்று, விடுதலைப் புலிகள் அரசியல் தரிசனமற்றுச் செய்த அவர்களது எந்த அரசியல் தவறுகளும் எப்போதும், எந்தச் சூழ்நிலையிலும் வெளிப்படையாக ஒப்புக்கொள்ளப்பட்டதோ அல்லது சுயவிமர்சனத்துக்கு உட்பட்டதோ இல்லை.

ராஜீவ் பிரேமதாசா படுகொலைகள், சகோதரப் படுகொலைகள், இஸ்லாமிய மக்கள் வெளியேற்றம், எல்லைப்புற சிங்கள கிராம மக்கள் படுகொலை, வெகுமக்கள் கூடுமிடங்களில்; நிகழ்த்திய தற்கொலைத் தாக்குதல்கள், கருத்து மாறுபாட்டாளர்கள் எனும் காரணத்திற்காகக் கொல்லப்பட்ட அறிவுஜீவிகளான ரஜனிதிரணகமா, கவிஞர் செல்வி, நீலன் திருச்செல்வம் போன்றவர்கள் குறித்து எக்காலத்திலும் அவ்வமைப்பு சுயவிமர்சனம்  செய்துகொண்டதில்லை. இதனது நீட்சியாகவே இவர்களது நடவடிக்கைகளால் உயிராபத்தினை உணர்ந்தவர்கள் ஓன்று அரசு சார்பாளர்களாக ஆகிப்போனார்கள். மற்றதாகப் பலர்  புலம் பெயர்ந்து வெளிநாடுகளுக்குப் போனார்கள்.

விடுதலைப் புலிகள் இயக்கம் தனிநபர் வழிகாட்டலில் ஒரு கட்டுக்கோப்பான ஆயுத அமைப்பாக இருந்ததே ஒழிய, அது ஒரு அரசியல் இயக்கமாக ஆரம்பத்திலிருந்தே முன்னெடுக்கபபடவில்லை. இரண்டாம் கருத்து என்பது பெயரளவில் கூட இருக்க முடியாது எனும் சூழலில் அரசியல் விவாதத்திற்கான சாத்தியங்கள் முற்றிலும் இல்லாததாகிறது. அன்டன் பாலசிங்கத்தின் மறைவின் பின் அரசியலை முன்னெடுக்கு விடுதலைப் புலிகள் இயக்கத்தில் எவரும் இருக்கவில்லை என இதனையிட்டுத்தான் நோர்வே வெளியுறவமைச்சைச் சார்ந்த எரிக் சோல்ஹைம் தெரிவிக்கிறார்.

அரசியல் உரையாடல்கள் முற்றிலும் நிராகரிக்கப்பட்ட சூழலில், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இரண்டு அரசியல் தவறுகள் குறித்துக் குறிபபிடுகிறார் ‘தி கார்டியன் பத்திரிக்கையின் அரசியல் விமர்சகர் டோம் பெரல் ( Tom Ferral :  Velupillai Prabhakaran Obituary :The Guradian : Tuesday 19 May 2009 ). (1). முதலாவதாக ஒரு கொரில்லா ராணுவத்தை மரபு ரீதியான ராணுவம் ஆக்கியது அவர் செய்த முதல் தவறு என்கிறார் அவர். இரண்டாவது தவறு 2005 ஆம் ஆணடு நடைபெற்ற மகிந்த ராஜபக்சே போட்டியிட்ட பொதுத் தேர்தலை அவர் புறக்கணிக்குமாறு கோரியது என்கிறார் பெரல். பிரபாகரனுடன் எந்தவிதமான புரிந்துணர்வுக்கும் வருவதான சாத்தியம் அறவே இல்லையெனும் கடுமையான நிலைபாட்டுக்கு வர இந்தத் தவறுகளே காரணமாக அமைந்தன என்கிறார் பெரல்.

மரபுரீதியிலான ராணுவம் என்பது ஒரு அதீதப்படுத்தப்பட்ட கற்பனையாக இருந்திருக்கிறது என்பதனை நடந்து முடிந்த தாக்குதல் காண்பித்திருக்கிறது. கடற்படை விமானப்படை தரைப்படை எனமுப்படையும் கொண்டதொரு எதிர்ப்பியக்கம் என்பது நடைமுறையில் பொய்த்துப் போயிருக்கிறது. சர்வதேசியச் சட்டங்களின் அடிப்படையிலும், உலக அரசுகளுக்கிடையிலான உறவுகளின் அடிப்படையிலும் இயங்கும் ஒரு அரசை, சோவியத் யூனியனா அல்லது விடுதலைப் போராட்டத்தை ஆதரிக்கிற சக்திகளோ இல்லாத சுழலில், மரபுரிரீதியான அரச ராணுவத்தை அதனது நிகழ்ச்சி நிரல்களின்படி எதிரத்து நிற்பது என்பது சாத்தியமில்லாத நிலைபாடாகவே இருந்திருக்கிறது.

அதிகமான ஆயதப்பாவனைகளைக் கொண்டிருப்பவர் இவ்வாறான சண்டைகளில் முன்னிலையில் வகிப்பது தவிர்க்கவியலாததாகவே இருக்கும். இந்தியா சீனா ரஸ்யா ஈரான் லிபியா பாகிஸ்தான் என அனைத்தும் இத்தாக்குதலுக்னெ மட்டுமெ ஆயதங்களை இலங்கை அரசுக்குக் கொடுத்திருக்கின்றன. இதுவன்றி இலங்கைக்கான வழமையான ஆயதவிற்பனையாளர்களாக அமெரி;க்காவும் பிரித்தானியாவும் இஸ்ரேலும் இன்று வரையிலும் இருந்திருக்கிறார்கள்.

விடுதலைப் புலிகள் ஆதரவு அமைப்பினரின் அமெரி;க்க மேற்கத்திய நாடுகளில் நடைபெற்ற வெகுமக்கள் போராட்டங்கள் மேற்கத்திய அமெரிக்க அரசு மட்டத்தில் திட்டவட்டமான இரண்டுவிதமான பண்புகளை  வெளிப்படுத்தின. முதலாவதாக வெகுமக்களின் மீதான தாக்குதல்களை மனித உரிமை சார்ந்த கருத்தாக்கத்தின் அடிப்படையில் நின்று அமெரிக்க ஐரோப்பிய அரசுகள் கண்டித்தன. ஐக்கிய நாடுகள் சபையிலும் இது குறித்த விவாதிக்க வேண்டும் என இந்நாடுகள் முன்னின்று நடவடிக்கைகள் மேற்கொள்கின்றன.

(2). இரண்டாவதாக விடுதலைப் புலிகள் இயக்கம் வெகுமக்களைக் கேடயங்களாகப் பயன்படுத்துகிறது என்றும், தப்பிச் செல்ல முயல்பவர்களைச் சுடுகிறது எனவும் அவர்கள் சொன்னார்கள். சிவில் சமூகத்தின் அலகான அரச மட்டத்தில் மனித உரிமைகள் பற்றிப்பேசிக் கொண்டிருந்த அவர்கள் ராணுவ மட்டத்தில் விடுதலைப் புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கம் எனும் அளவில் அதனை அழிப்பதை ஆதரித்துக் கொண்டிருந்தார்கள்.

விடுதலைப் புலிகள் மீதான யுத்தம் முடிவு பெற்றதனை இலங்கை ஜனாதிபதியும் ராணுவத் தளபதியும் அறிவித்த பின்னால், சீனா ஈரான் ரஸ்யா அமெரிக்கா பிரித்தானியா என அனைத்து நாடுகளும் பயங்கரவாதத்தை ஒழித்ததற்காக இலங்கை ஜனாதிபதிக்கும் இலங்கை ராணுவத்துக்கும் அவர்களது வெற்றிக்காக வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்கள். இலங்கைப் பாதுகாப்பு அமைச்சகத்தின் இணையவெளி இந்த அதிகாரபூர்வ வாழத்துக்கள் அத்தனையையும் ஆவணப்படுத்தியிருக்கிறது.

முன்னும் பின்னுமாக செப்டம்பருக்குப் பிறகான இந்த அரசியல் யதாரத்;தத்தை விடுதலைப் பலிகள் அமைப்பு புரிந்து கொண்டதற்கான சான்றுகளோ, அதற்கமைய அவர்கள் தமது தந்திரோபாய நிலைபாட்டை நடைமுறையில் மறுபரிசீலனை செய்ததற்கான சான்றுகளோ துப்பரவாகவே இல்லை.

கிளிநொச்சியின் வீழ்ச்சி அதனைத் தொடர்ந்து முள்ளிவாய்க்கால் வரையிலுமான இலங்கை ராணுவத்தின் தாக்குதலை மரபுரீதியாகத் தம்மால் தாக்குப்பிடித்து நிற்கமுடியாது என்பது விடுதலைப் புலிகள் முன்பாகவே அறிந்திருக்க முடியும். தொடர்ந்த பின்வாங்குதலின் மூலம் பலவீனமான நிலையை அவர்கள் அடைந்திருப்பதும் அவர்களுக்கு முன்பே தெரிந்திருக்கும். கிளநொச்சி வீழ்ச்சிக்கும் முள்ளிவாய்க்கால் படுகொலைச் சாவுகளுக்கும் இடையில் ஏறக்குறைய ஐந்து மாதகால அவகாசம் இருந்திருக்கிறது.

ஆயுதங்கைளக் கைவிடுவது ஜனநாயக நீரோட்டத்திற்கு வருவது எனப் பிற்பாடு விடுதலைப் புலிகளின் சர்வதேசியப் பேச்சாளர் கே.பத்மநாதன் அறிவித்த யதார்த்தமானதும் சாத்தியமானதுமான இந்த அரசியல் நிலைபாட்டை அவர்கள் எடுத்திருக்க முடியுமானால் – அரசியல் விவாதங்;களோ மாற்றுக் கருத்துக்களோ கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாத சூழலில் அதற்கான வாப்ப்புக்கள் தர்க்கபூர்வமாக இல்லை – தமக்கேற்பட்ட பேரழிவுகளை விடுதலைப் புலிகள் அமைப்பு தவிர்த்திருக்க முடியும். 

மே மாதம் 16 ஆம் திகதி தாங்கள் முற்றிலும் சுற்றிவளைக்கபட்பட்ட நிலையில்  எடுத்த முடிவினை, தமது நிலையறிந்து முன்பாகவே – ராணுவ ரீதியிலும் அரசியல் ரீதியிலும் – எடுத்திருப்பார்களானால், விடுதலைப் புலிகள் மே மாதம் 18 ஆம் திகதி தேர்ந்த சமாதானப் பாதைக்கும் ஜனநாயகப்  பாதைக்கும் அவர்கள் சென்று இ;ன்று தொடர்ந்து போராடியிருக்க முடியும்.

அரசியல் தவறுகளை ஒப்புக்கொள்ளாமை, உலக யதார்த்தங்களை அங்கீகரித்து ஏற்காமை, எல்லாவற்றுக்கும் பிரதான காரணமாக அமைப்பில் விவாதத்திற்கோ மாற்றுக் கருத்திற்கோ இடமில்லாமல் போனவை அனைத்தும் சேர்ந்தே இவ்வளவு பெரிய பேரழிவை விடுதலைப்புலிகள் இயக்கம் சந்தித்திருக்கிறது.

8

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் குறித்த சர்வதேசியப் பத்திரிக்கைகளின் மரணக் குறிப்புகளிலும் ( The Independent and The Guardian : 18 May 2009) சரி, யுத்தத்தின் மீதான இலங்கையின் ராணுவ வெற்றி குறித்த நாடுகளின் வேறு வேறு நாடுகளின் வாழ்த்துச் செய்திகளில் ஆயினும் சரி, இவைகள் அனைத்திலும் பின்-சோவியத், பின்செப்டம்பர் மற்றும் பயங்கரசவாhம் குறித்த சொல்லாடல்கள் அதிகமும் புழங்குகின்றன. அமெரி;க்காவின் வால் ஸ்டிரீட் ஜேர்னல் ( A win that vindicates one of the major lessons of Septemper 11: Most of the time, terrorists have to be defeated militarily before political accommodation is possible :  Sri Lankas Victory : Wall Street Journal : 20 May 2008 : USA)  பயங்கரவாதத்தின் மீதான இலங்கையின் ராணுவ வெற்றி என்பது பயங்கரவாதம் குறித்த உலகின் போராட்டத்தில் ஒரு முக்கியமான பங்களிப்பு என எழுதுகிறது.

பயங்கரவாதத்தை எதிர்கொள்ள பொதுவாக இரண்டுவிதமான வழிமுறைகள் முன்வைக்கப்படுகிறது. (1). முதலாவதாக பயங்கரவாதத்தின் தோற்றுவாயாக இருக்கிற அரசியல் பிரச்சினைகளைக் கண்டடைந்து அதனைத் தீர்ப்பதற்கான அரசியல் மட்டத்திலான செயல்பாடுகளை முன்னெடுத்துக் கொண்டே, பயங்கரவாதத்தை ஒரு இயக்கம் எனும் அளவிலும் அழிக்க நடவடிக்கை எடுப்பது ஒரு முறை. (2). இரண்டாவதாக பயங்கரவாதத்தின் தோற்றுவாய்கள் எனும் அரசியல் பிரச்சினையைப் பிற்போட்டுவிட்டு பயங்கரவாதத்தை முதலில் வேரறுப்பது எனும் முறை.

மேற்கத்திய நாடுகளில் ஸ்காண்டிநேவிய நாடுகள் மற்றும் ஜெர்மனி, பிரான்ஸ் போன்றன அரசியல் செயல்பாட்டுக்கு முக்கியத்துவம் வழங்குகின்றன. இத்தாலி, அமெரி;க்கா போன்ற நாடுகள் பயங்கரவாதத்தை இயக்கம் எனும் அளவில்  அதனை அழிப்பதற்கு முக்கியத்துவம் தருகின்றன. உலகின் வேறு இரண்டு நாடுகள், துயரம் நிறைந்த மக்களின் வாழ்வு சூழ்ந்த மக்களின் உரிமைகளை முதலில் அங்கீகரிப்பது என்பதற்கு மாற்றாக, அந்தத் துயரங்களிலிருந்து தோன்றிய, வன்முறை இயக்கமாகவும் பயங்கரவாதச் செயல்களிலும் ஈடுபடுகிற இயக்கங்களை முதலில் வேரறுக்க நினைக்கிறது. இந்த இரண்டு நாடுகள்தான் இஸ்ரேலும் இலங்கையுமான நாடுகள்.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                            

இனத்தேசிய விடுதலைப் போராட்டங்களுக்கான ஆயுதக் கொள்வனவு என்பது முன்னாள் சோவியத் யூனியனில் இருந்து பிரிந்த நாடுகளிடமிருந்தும், அழிவுற்ற ஈராக்கிலிருந்தும் தான் பெறுகிறார்கள. பின்லாடன் வீழ்ச்சியுற்ற சோவியத் யூனியன் மற்றும் உலக முதலாளித்துவம் இரண்டுக்கும் மாற்றானதாகத்தான் இஸ்லாமிய உலக முறைமையைக் குறிப்பிடுகிறார். 

யுத்தத்தில் தற்கொலைத் தாக்குதல்கள் என்பது செப்டம்பர் சம்பவத்திற்கு முதலாவதாகவே உலகில் நிகழ்வில் இருக்கிறது. ஈராக் ஈரான் யுத்தத்தில் ஈரானியர்கள் தற்கொலையை ஈராக் ராணுவத்திற்கு எதிராகப் பாவித்திருக்கிறார்கள். ஆனால், செப்டம்பர் சம்பவத்திற்குப் பிறகு இந்தத் தற்கொலைத் தாக்குதல்கள் என்பது ஒடுக்குமறை ராணுவத்திற்கு எதிராக என்பது மாறி, வெகுமக்களைப் பீதியூட்டவும்,  அவர்களைப் பயங்கரத்தில் ஆழ்த்தி வைக்கவும், அதன் மூலம் நிம்மதியற்ற அன்றாட வாழ்வை அவர்கள் எதிர்கொள்ளவும், அதன் வழி அரசுகளுக்கு நிர்ப்பந்தம் கொடுக்கவும் பாவிக்கப்படுகிறது.

வியட்நாம் யுத்தத்தின் போது மேற்கில் நகர்ப்புற கெரில்லா இயக்கங்களால் மேற்கொள்ளப்பட்ட தனிநபர்ப் படுகொலைகள், பாலஸ்தீனப் போராளிகள் மேற்கொண்ட மியூனிக் படுகொலைகள் போன்றவற்றை ஸார்த்தர் அதனது பின்னுள்ள அரசியலை முன்வைத்து அதனது தவிர்க்கவியலாமை குறித்துப் பேசினார். அந்தக் கொலைகளும் கூட ராணுவ அதிகாரிகள், நீதித்திதுறை சார்ந்தவர்கள், காவல்துறை சாரந்தவர்கள் என்பவர்கள் மீதாகவே தொடுக்கப்பட்டது. வெகுமக்கள் கொலைகளை பீதியூட்டுவது எனம் அளவில் அவர்கள் திட்டமிட்டுச் செய்யவில்லை. அச்சூழலில் தனிநபர் கடத்தல்களையும் படுகொலைகளையும் மேற்கொண்டவர்கள் கூட, இடையில் அகப்பட்டு மரணமுற்ற வெகுமக்கள் பற்றி அக்கறையுடன் மன்னிப்புக் கோரியிருக்கிறார்கள்.

செப்டம்பர் தாக்குதலின் பின் வெகுமக்கள் கொலைக்கும் ஒரு கோட்பாட்டு நியாயத்தை வழங்க பின்லாடன் வகை அரசியலாளர்கள் தலைப்பட்டார்கள். இவ்வகையில்தான் இத்தகைய நடவடிக்கைகளை சீனா, கியூபா, வியட்நாம் முதல் இந்தியா, அமெரிக்கா, பிரான்ஸ் வரை பயங்கரவாதம்  என வரையறுப்பதில் ஒன்றுபடுகிறார்கள். இந்தப் புதிய யதாரத்தங்களை – சோவியத் யூனியன் வீழ்ச்சியின் பின்னான காலககட்டத்தில் வாழ்கிறவர்கள் – சதாம் போல்பாட் காலத்தின் பின்னாக வாழ்கிறவர்கள் – நியூயார்க், மாட்ரிட், இலண்டன்,மும்பை எனும் யதாரத்தத்தின் பின்னால் வாழ்கிறவர்கள் – நிராகரித்துவிட முடியாது. விடுதலை இயக்கங்களும் இதனைப் புறக்கணித்துவிட முடியாது.

உலகவயமாதல் என்பது இன்றைய யதார்த்தம். சுரண்டல் உலகவயமாக ஆகுமானால், சுரண்டலுக்கு எதிரான போராட்டங்களுக்கும் உலகவயமான தன்மைகள் இருக்கிறது, சுரண்டல் ஒன்றிணைக்கப்படும்போது, சுரண்டலுக்கு எதிரான போராட்டங்களும் ஒன்றிணைக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் இருக்கிறது. உலகவயமாதலக்கு எதிரான இவ்;வகையிலான எதிர்ப்பைத் தான், உலகவயமாதலுக்கு எதிரான முதலாளித்துவ எதிர்பியக்கத்தினர் (Anti – Capitalist Movement ) முன்வைக்கின்றனர்.

உலகவயமாதலின் பகுதிகளான உலக வங்கியினதும் சர்வதேச நாணய நிதியினது மூலதனத்தையும், பன்னாட்டு மூலதனத்தையும், முன்னாள் சோசலிச நாடுகள் உள்பட, இந்நாள் சோசலிச நாடுகளும் ஏற்கிறது. பன்னாட்டு மூலதனத்தை நேபாளமும் நிராகரிக்கவில்லை. இன்னும் நிலப்பிரபுத்தவத்திற்கு எதிரானை முதலாளத்துவ பொருளாதார வளர்ச்சிக்குத் தான் முன்னுரிமை வழங்குகிறது. விடுதலை பெற்ற இனத் தேசியமான கிழக்கு திமோரும் இதனை நிராகரிக்கவில்லை.

எனினும் சுரண்டலின் தன்மையையும் அது கிராமப்புற விவசாய மக்களின் வாழ்வின் மீது செலுத்தும் நாசகார விளைவுகளையும் இடதுசாரிகள் புறந்தள்ளும் போதுதான் நந்திகிராமும் சிங்கூரும் தோன்றுகின்றன. உலகவயமாதலின் எதிர்மறை விளைவுகளை இன்று சீனப் பாட்டாளி வர்க்கத்தினரும் விவசாயிகளும் எதிர்கொள்ளவே செய்கிறார்கள். இன்று இந்தியாவின் தனித்ததொரு உள்நாட்டுப் பாதுகாப்புக்கான அச்சுறுத்தலாக பிரதமர் மன்மோகன் சிங்கினால் குறிப்பிடப்படும் நக்சலிசம் பரவி வருவது, உலகவயமாதலின் சுரண்டல் அமைப்புகள் எமது நாடுகளில் பரவி வருவதுதான் காரணம்.

உலகவயமாதல் நேரடியிலாக விவசாயிகளையும் பழங்குடி மக்களையும் சிறுபான்மையின மக்களது உரிமைகளையும் அவர்களது வளங்களையும் தான் பாதிக்கிறது. நக்சலிசத்தின் பரவலுக்கான வெகுமக்கள் அடிப்படையும் இவ்வாறுதான் அமைகிறது என்கிறார் இந்திய அரசியல் விமர்சகரான பிரபுல் பத்வாய். பின்சோவியத் அனுபவங்களும், உலகவயமாதல் தோற்றுவித்தருக்கும் மூலதனப் பெயர்ச்சியும் இனத்தேசியங்களை மூர்க்கமாகப் போராடத் தூண்டுகின்றன.

இனததேசிய எழுச்சிகளுக்கு அந்தந்த புவியியல் சார்ந்த அல்லது கலாச்சாரம் சார்ந்த அல்லது இயற்கை சார்ந்த எத்தனையோ கோட்பாட்டு விளக்கங்கள் இன்னும் இருக்கின்றன. பொருளாதார ரீதியில் உலகில் தமது வளங்களைத் தாம் கோருவதும், தமது நிலங்களைத் தாம் கோருவதும், உலகின் மூலதனத்திரட்சியில் தமது பங்கையும் கோருவதுதான் இனத்தேசிய எழுச்சியின் பொருளியல் ரீதியிலான  பண்பாக இருக்கிறது.

சீனாவும் வியட்நாமும் இலங்கையும் எந்த உலகமயமாதல் செயல்போக்கில் தமது தேசிய வளர்ச்சி குறித்துச் சிந்திக்கிறதோ, அதே வகைகயில்தான் இனத் தேசியங்களும் தமது அடையாளத்துக்கு உட்பட்ட மக்களின் அரசியல் பொருளியல் கலாச்சார வளர்ச்சி குறித்துச் சிந்திக்கின்றன. இந்த யதார்த்தத்தை உலகில் இனி எந்த தேசிய அரசும் புறந்தள்ளிவிட முடியாது.

அரசுகள், போராடும் அமைப்புகள் என இரண்டும் புதிய யதார்த்தங்களுக்கு முகம் கொடுக்கத் தலைப்பட்டிருக்கின்றன. அரசு தற்போது ஒடுக்குமறைக்கான கருவி என்பதிலிருந்து வர்க்கங்களக்கிடையிலும் சமூகக் குழுக்கிடையிலும் சமரசம் செய்யும் கருவியாக மாறியிருக்கிறது. சிவில் சமூகத்தின் சகல தளங்களிலும் எதிர்ப்பியக்கத்தைப் போராடுபவர்கள் கட்டமுடியும். இந்தியாவின் முன்னாள் நக்ஸல் இயக்கத்தவர்கள் இந்திய அரசியல் யாப்பின் அடிப்படையிலான மனித உரிமைக்காகப் போராட முடிகிறது. தனிநபர் அழித்தொழிப்பை நிராகரித்த சச்சிதானந்தன் போன்றவர்கள் இந்திய அரசினது பகுதியாக ஆகவும் செய்கிறார்கள். இந்திய மாவோயிஸ்ட்டுகள் முன்வைத்த ‘அழித்தொழித்தல்'( anhilation) எனும் அரசியலை இன்று எவரும் நியாயப்படுத்துகிறார்கள் என்று சொல்ல முடியாது. அதைப்போலவே விடுதலைப் புலிகளின் வெகுமக்கள் கொலைகளையும் எவரும் நியாயப்படுத்த முடியாது. மனித உரிமை மீறல்களையும் எவரும் நியாயப்படுத்திவிட முடியாது.

அக்டோபர் புரட்சி தோற்றுவித்த புரட்சிகர இயக்கங்கள் இன்று இல்லை. அதனது தந்திரோபாயங்களும் இன்று காலாவதியாகிவிட்டன. அரசுகள் போலவே போராடும் இயக்கங்களும் இன்று மூன்று யதார்த்தங்களுக்கு முகம் கொடுத்தே தீர வேண்டும். பின்சோவியத் அனுபவங்கள், பின் செப்டம்பர் அனுபவங்கள் மற்றும் உலகவயமாதல் என்பனதான்; அந்த மூன்று யதார்த்தங்கள். இந்த யதார்த்தங்கள் மனித உரிமைகள், வெகுமக்களின் அடிப்படை உரிமைகள்,  ஜனநாயகம் குறித்த அவர்களது அவாக்களை உலகெங்கிலும் விதைத்திருக்கிறது. விடுதலைப் புலிகள் மட்டுமல்ல, சகலவிதமான எதிர்ப்பு அரசியல் சார்ந்த இயக்கங்களும் இந்த யதார்த்தங்களை எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதற்கு அமையவே அவர்களது எதிர்காலமும் இருக்கப் போகிறது என்பது மட்டும் இன்று நிதர்சனமாக இருக்கிறது.

——————————
capu;ik : [_d; 2009

Exit mobile version