Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

எதிர்க்கட்சிகள் சீனப் பூச்சாண்டி காட்டுகின்றன

இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் ஊடுருவல், எல்லையில் பாகிஸ்தான் படையினர் இந்திய வீரர்கள் மீது தாக்குதல், கோர்காலாந்து, தெலங்கானா ஆகிய தனி மாநிலங்களை அமைக்கும் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் வெள்ளிக்கிழமை பிரச்னை எழுப்பி அமளியில் ஈடுபட்டன.

காலையில் மக்களவை தொடங்கியதும் இந்திய எல்லையில் சீனப்படைகள் ஊடுருவியுள்ளதாகக் கூறி பாஜக, சமாஜ்வாதி கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அவை சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் அவை கூடியதும் சீன ஊடுருவல் விவகாரம் தொடர்பாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ், “காங்கிரஸýம் பாஜகவும்தான் எல்லை பிரச்னையை சர்ச்சைக்குரியதாக்கி திபெத்திய நாட்டுப் பகுதிகள் சீனாவின் கட்டுப்பாட்டுக்குச் செல்ல காரணமாக அமைந்தன. சீன ஊடுருவலைத் தடுக்க முடியாத அளவுக்கு நமது படைகள் பலவீனமாக உள்ளனவா? நமது வீரர்களை பாகிஸ்தான் படைகள் தாக்குகின்றன. நம் நாட்டின் மீது சீனா போர் தொடுக்கவும் ஆயத்தமாகி வருகிறது’ என்றார்.

அவரைத் தொடர்ந்து பேசிய பாஜக மூத்த உறுப்பினர் ஜஸ்வந்த் சிங் “ஜம்மு காஷ்மீர் எல்லையில் உள்ள பூஞ்ச் பகுதியில் கடந்த மாதம் ஐந்து இந்திய வீரர்களை பாகிஸ்தான் படையினர் கொன்றனர். அந்நாட்டுக்கு ஆதரவாக சீனா செயல்படுகிறது. அதைத் தடுக்க நமது படைகளால் ஏன் முடியவில்லை’ என்றார்.

இதையடுத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அவை கூடிய பின்னரும் அமளி தொடர்ந்ததால் பிற்பகல் 3 மணிவரை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.

மாநிலங்களவையிலும் இதே பிரச்னைகளை பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பினர். ஊடுருவல், எல்லையில் பாகிஸ்தான் படையினர் நடத்திய தாக்குதல்கள் தொடர்பாக பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பிரச்னை எழுப்பினர். இதனால் அவை சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது.

நண்பகலில் அவை கூடியதும் பாஜக உறுப்பினர் வெங்கய்ய நாயுடு “இந்திய வீரர்களைக் கொல்லும் பாகிஸ்தான் படையினர் பிரச்னை தவிர வேறு எந்த விவகாரத்தயும் விவாதிக்க விரும்பவில்லை’ என்றார்.

மார்க்சிஸ்ட் உறுப்பினர் சீதாராம் யெச்சூரி, “சீன ஊடுருவல் தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பாக விவாதிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினார்.

இதையடுத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் பிற்பகல் 2.30 மணிவரை மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அவை கூடியதும் “இந்த விவகாரம் குறித்து பாதுகாப்பு அமைச்சர் விளக்கம் அளிப்பார்’ என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் ராஜீவ் சுக்லா உறுதியளித்தார். அதன் பிறகே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சமாதானம் அடைந்தனர்.

Exit mobile version