ஊழல் அரசாங்கமான மைத்திரி – ரணில் அரசாங்கம் ஊழலைக் கட்டுப்படுத்துவதற்கென மேலதிகமாக 50 அதிகாரிகளை நியமித்துள்ளது.
கடந்த ஆட்சியில் மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் ஒரு ஊழல் அரசாங்கம், மக்களின் சொத்துக்களைக் கொள்ளையடிக்கின்றது, நாட்டிற்குகடன் நெருக்கடி ஏற்பட்டுள்ளது நாம் இதற்கெல்லாம் தீர்வு காண்போம் என பொய் வாக்குறுதி வழங்கி பதவிக்கு வந்த அரசாங்கமே மைத்திரி – ரணில் அரசாங்கம்.
நல்லாட்சி எனும் மாயையைக் காட்டி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் ஒரு வருடத்திற்குள்ளேயே நாட்டு மக்களின் தலையில் கடன்களை ஏற்றியதோடு, அதில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களும் ஊழல், மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் ஒரு சில அமைச்சர்களின் மோசடிகள் அம்பலத்துக்கு வந்தாலும், இன்னும் திரை மறைவில் மோசடிகள் நடந்துகொண்டுதன் இருக்கின்றது.
அண்மையில், நீதி அமைச்சராக இருந்த விஜயதாச ராஜபக்ஷ, மகிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து பல்வேறு சதித்திட்டங்கள் தீட்டியதாகவும், அவரது காலப்பகுதியில் மோசடியில் ஈடுபட்ட பல அதிகாரிகளுடன் தொடர்பினை ஏற்படுத்தி, பல்வேறு மோசடி வேலைகளில் ஈடுபடுகின்றார் எனக் காரணம் காட்டி அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
அத்துடன், நிதி அமைச்சராக இருந்த ரவி கருணாநாயக்க பில்லியன் கணக்கில் கொள்ளையடித்தமை கண்டுபிடிக்கப்பட்டு அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனின் மருமகன் அலோசியஸ் மத்திய வங்கி முறிகள் மோசடியில் ஈடுபட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், இம்மோசடியில் இவருடன் பல அமைச்சர்களும் ஈடுபட்டிருந்தமை தெரியவந்துள்ளது.
இம்மோசடியை விசாரணை செய்வதற்கு மைத்திரிபால சிறிசேனவினால் குழுவொன்று நியமிக்கப்பட்டு அதன் விசாரணைகள் பூர்த்தியடையும்நிலைக்கு வந்துள்ளதுடன், இம்மோசடிக்கு, சிறிலங்காவின் பிரதமராக இருக்கும் ரணில் விக்கிரமசிங்க உடந்தையாக இருந்தமையும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு, உயர்தர மாணவர்களுக்கு வழங்கும் ஐ-பாட்களில் மோசடி இடம்பெற்றுள்ளமை என நாளாந்தம் ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்தில் அங்கம் வகிப்பவர்கள் மக்களின் சொத்தைக் கொள்ளையடித்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள்.
இந்நிலையிலேயே, ஊழலைக் கட்டுப்படுத்தவென மேலதிகமாக 50அதிகாரிகளை நியமித்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலைக் குறிவைத்துள்ள அரசாங்கம், மக்களிடம் நல்லபிப்பிராயத்தினைக் கட்டியெழுப்புவதற்காக சில காய்நகர்த்தல்களைச் செய்துள்ளது. அதிலொன்று ஊழலைக் கட்டுப்படுத்த 50 அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகம் எழுந்துள்ளது.