நிறங்களை நேசிக்கத் தெரியாதவர்கள்
இன்னும் இருந்தால்
தயவு செய்து வெளியே போங்கள்!
உதிரத்தின் வாடை பரவிக்கிடக்கும்
வெளியெங்கும்
நிறநிறமாய் பூக்களைப் பரவுங்கள்
புன்னகை இழந்த முகங்களும்
அமானுஷ்யம் நிறைந்த அமைதியும்
அருகில் குடியிருக்கிறது
ஆர்சீர்வதிக்கப்பட்ட இந்நிலத்திலும்
மரணத்தின் சாத்தியங்கள் முளைத்திருக்கின்றன
சாத்தான் குஞ்சுகளுக்கும்
இடம் வைத்திருக்கிறது
பூமி
பூக்கள் இல்லாத நகரமாக
நிறங்களைத் தொலைத்த
பூமியாக
ஓவ்வொரு செடியிலிருந்தும்
பூக்கள் பிடுங்கப்படுகிறது
இன்று
வலியினால் உதிர்ந்து போன
இரவுக்கிணையாக
விடைகொடுக்கப்படாத இப்பயணத்தில்
நீங்கள் மௌணித்து உறங்க
இத்தனை பூக்களும்
போதுமானதாயிருந்தால்
எத்தனை இலகுவாயிருக்கும்
– 25.07.2011 (நோர்வே)