பகுதி 2
ஆக, முதலாளித்துவக் கட்டமைப்பு என்பது பொருளியல் அடிப்படையில் நிலைபெற முடியாதவொன்றென்பதன் கருத்தாக்கத்திலிருந்தே இந்த ஒழுங்கமைப்புக்களின் தேவை ஏற்படுகிறது.
மூலதனத்தைச் சொந்தமாக வைத்துள்ள குறித்த சில முதலாளிகளின் இலாபத்தை அதிகப்படுத்தலை (Maximisation of profit) மட்டுமே நோக்கமாகக் கொண்டு கட்டியமைக்கப்பட்டிருக்கும் முதலாளித்துவ சமூக அமைப்பானது பணம் ஓரிடத்தில் குவிக்கப்படும் போது பொது மக்களின் பாவனைக்குரிய பணம் பற்றாக்குறையாக, அவர்களின் கொள்வனவு சக்தி அருகிப்போன்ற நிலையில், மொத்த சமூக அமைப்புமே ஆட்டம்காணும் நிலைக்குத் தள்ளப்படும்.
இந்த அடிப்படைகளைப் புரிந்துகொண்ட அதிகாரவர்க்கம் இவற்றிற்கான மாற்றமைப்பை நெருக்கடிக் காலகட்டங்களில் உருவாக்க முனைவதன் விழைவே உலகமயமாதல் வரை நடந்தேறியுள்ள சகல மறு ஒழுங்கமைப்புகளுமாகும்.
பிரதான கட்டங்கள்:
ஒவ்வொரு முறையும் முதலாளித்துவம் மறு ஒழுங்கமைக்கப்படும் போது, அது , கட்டுரையில் பின்னதாக ஆராயப்படும் மூன்று பிரதான கட்டங்களூக நடை பெறுகிறது.
1. உற்பத்தி உறவுகளின் நிலை மாற்றம். ( Transformation of relation of production)
இது உற்பத்தி சாதனங்களின் கட்டுபாடு மற்றும் உரிமை தொடர்பான பிரச்சனை.
2. தொழில்நுட்பத்தின் வரலாற்றுப் போக்கும் அதன் வினியோகமும். (Historical tendencies of technology)
இன்று குறிப்பாக உலக மயமாதற் சூழலில் இலாபத்தைத் தீர்மானிக்கும் புதிய முக்கிய காரணியாக இந்தத் தொழில்நுட்பம் அமைவதைப் பின்னதாக ஆராய்வோம்.
3.முன்னைய ஒழுங்கமைப்பிலிருந்து தொடர்ச்சியாக உருவாகும் அதிகார சக்திகளின் ஒழுங்கமைப்பு. ( Power Configuration)
4. புதிய அதிகார வர்க்கத்தின் வேறுபட்ட உட்பிரிவுகளின் ஆதிக்கமும் அவற்றிடையேயான சமூகச் சமரசமும் (Social compromise) இங்கு முக்கிய பகுதியாகும்.
இவ்வகையில் ஒழுங்கமைக்கப்பட்ட உலக மயமாதலும் ஒரு குறித்த காலகட்டத்திற்குரிய அதிகார ஒழுங்கமைப்பேயாகும் (Power configuration) . சிறுகச் சிறுக நிகழ்ந்தேறும் இம்மாறுதல்கள் உலகின் குறித்த சமூகக் கட்டமைப்பைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்துவதனூடாகவும், அதேவேளை அவற்றை மாற்றியமைபதனூடாகவும், சில வேளைகளில் அழித்தொழிப்பதனூடாகவும் நிறைவேற்றப்படுகிறது.
நிலவுடமைச் சமூகமாகவிருந்த இந்தியா போன்ற மூன்றாவதுலக நாடுகளின் சமூகக் கட்டமைபின் தேசியக் கூறுகள் அழிக்கப்பட்டும், நிலப்பிரபுத்துவ அதிகாரம் பாதுகாக்கப்பட்டும், அதன் ஒருபகுதி மாற்றப்பட்டும் நிகழ்ந்த்தேறிய காலனித்துவத்திற்குப் சற்றுப் பின்னதான காலகட்டம் உலக மயமாதலூடான இன்னொரு மாற்றத்தைச் சந்திக்கிறது.
இவ்வாறு நடந்தேறும் மாற்றங்களின் பின்னர் முதலாளித்துவம் தன்னை ஒருகுறித்த காலப்பகுதிக்குத் தக்க வைத்துக் கொள்கிறது. இலாபத்தையும் மூலதனச் சொந்தக்காரர்களின் வருமானத்தை அதிகரிப்பதையுமே நோக்கமாகக் கொண்ட இந்த ஒழுங்கமைப்புக்கள் மறுபடி நெருக்குதலுக்குள்ளாக இன்னொரு ஒழுங்கமைப்பிற்கான திட்டம் வரையப்படுகிறது.
ஒரு குறித்த ஒழுங்கமைப்பினது கால எல்லை அல்லது காலநிர்ணய எல்லை என்பது பின்வரும் பிரதான காரணிகளில் தங்கியுள்ளது.
1.பொருளாதார ஸ்திரத்தன்மை. ( Stability of the economy)
– பண வீக்கம், பொருளாதார ஸ்திரத்தன்மை போன்ற வகை சார்ர்ந்த நெருக்கடிகளைத் தவிர்த்து இருப்பிலுள்ள கட்டமைப்பைப் பேணுகின்ற ஏகாதிபத்தியப் பொருளாதார அமைப்புமுறையைக் குறித்த காலம் வரை பேணும் தன்மையுள்ள அமைப்புமுறையே இங்கு குறிப்பிடப்படுகிறது.
2.குறிப்பிடத்தக்க பொருளாதார வளர்ச்சியையும் பொருளாதாரக் குவிப்பையும் உறுதிப்படுத்தல். ( Accumulation and Growth)
3. தொழில்நுட்ப வளர்ச்சியை மேலும் விரிவாக்கல் (Prolongation of technology)
இந்தப் பிரதான பொருளியற்காரணிகளே எந்தவொரு மறு ஒழுங்கமைபினதும் கால எல்லையை நிர்ணயிப்பதில் பிரதான பாத்திரம் வகிக்கிறதெனலாம்.
இவற்றை அடிப்படையாகக் கொண்டே உலக மயமாதலின் கால எல்லையும் தீர்மானிக்கப்படலாம்..
மார்க்சிய ஆய்வின் அடிப்படையும் அதன் தொடர்ச்சியும் ( Marxist framework of analysis and it’s continuation)
மார்க்சினதும் ஏங்கல்சினதும் சமூக ஆய்வின் மையமாக அமைந்திருந்தது உற்பத்தி சக்திகளதும் உற்பத்தி உறவுகளதும் அடிப்படை இயக்கமாகும்..
உற்பத்தி சக்திகளென்பது பல்வேறு உற்பத்திக் கருவிகள் மனித உழைப்பு ஆகியவற்றைக் குறிக்கும். சமூகத்தின் இயங்கியல் வளர்ச்சிப் போக்கில் ஒரு குறித்த வளர்ச்சிக் கட்டத்தில் உற்பத்தி உறவில் மாற்றம் விளையும்.
அதாவது உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியானது, உற்பத்தி உறவுகளின் நிலை அல்லது தோற்ற மாற்றத்தை ஏற்படுத்தும் நிபந்தனையாகிறது.
இது இருவகையான சமூகப் பின்னணிகளின் இன்றைய சமூகப் பகைப்புலத்தில் பிரயோகிக்கப்படுகிறது.
1.நிலப்பிரபுத்துவத்திலிருந்து முதலாளித்துவத்திற்கான மாற்றப்போக்கு.
2.முதலாளித்துவ அழிவில் உருவாகும் புதிய சமூக அமைப்பாக்கம்.
ஒவ்வோரு உற்பத்தி உறவுகளின் வடிவமைப்பும் ஒரு குறித்த வகையான வர்க்க அமைப்பு வடிவத்தைக் கொண்டதாகின்றது.
நிலப்பிரபுத்துவ சமூகக் கட்டமைப்பில் இந்த வர்க்க வேறுபாடானது, வெளிப்படைத் தன்மை கொண்டதாக அமைந்திருந்தது. நிலங்களைச் சொந்தமாக வைத்திருந்த நில உடமையாளர்களிலிருந்து பண்ணையடிமைகள் வரை மேலிருந்து கீழான துல்லியமான இந்த முரண்பாடானது மன்னனாலும் மதங்களாலும் ஒழுங்கமைக்கப்பட்டது.
காலனி ஆதிக்கம் மூன்றாமுலக நாடுகளில் வலுப்பெற ஆரம்பித்த பின்னர், இதன் இது சிக்கலானதாகத் திட்டமிட்டு மாற்றப்பட்டது என்பது வேறான விடயம்.
முதலாளித்துவம் ஐரோப்பாவில் உருவான காலகட்டத்தில் வர்க்கங்களிடையேயான முரண்பாடு தெளிவானதாகவும் பெரும்பான்மை உழைக்கும் வர்க்கத்தை உள்ளகத்தே கொண்டதாகவும் அமைந்திருந்தது.
வீழ்ச்சியடைந்துகொண்டிருந்த முதலாளித்துவக் கட்டமைப்ப மறுசீரமைக்கும் தொடர்ச்சியில் சின்னாபின்னமாக்கப்பட்ட மூன்றாமுலக நாடுகளினதும், ஏகாதிபத்திய நாடுகளதும் வர்க்கக் கட்டமைப்பும் வர்க்க முரண்பாட்டின் வெளிப்படைத் தன்மையும் சிக்கலானதாகவும் திட்டமிட்டே உருவாக்கப்பட்ட பல உள்முரண்பாடுகளைக் கொண்டதாகவும் அமைந்தது.
ஆதிக்கத்திலுள்ள வர்க்கத்திற்கும் ஆட்சியிலுள்ள வர்க்கத்திற்குமிடையிலான முரண்பாடு, பலவகையான வர்க்க அடுக்குகளுக்கிடையேயான போராட்டங்களும் அழுத்தங்களும் என்று பல சிக்கல்கள் நிறைந்த சமூகமாக உற்பத்தியின் வளர்ச்சிப் படினிலைப் போக்கில் புதிய தன்மைகளூடாக வளர்ந்து செல்ல, அரசு என்பது இந்த அதிகார அமைப்பு முறையைப் பாதுகாக்கும் அமைப்பு மயப்படுத்தப்பட்ட வடிவமாகவமைந்தது.
உபரியினூடாக (Surplus) பெறப்படும் இலாபத்திலிருந்தே முதலாளித்துவ சமூகம் கட்டமைக்கப்பெறுகிறது. இந்த இலாபத்தை முதலாளி தொடர்ச்சியாகப் பெற்றுக்கொள்வதற்கு மறு உற்பத்தி அவசியமாகின்றது. ஒரு பொருளை உற்பத்தி செய்யும் முதலாளி அதனைச் ச்ந்தைப்படுத்துகிறான். அதில் பெறப்படுகின்ற இலாபததினூடாக தொழிலை விரிவுபடுத்தும் மூலதன உடமையாளானான முதலாளியின் இலாபம் அதிகரித்துச் செல்லும். இப்போது முதலாளிகளிடம் பணம் குவிய பெரும்பான்மை மக்களிடம் பணத்தட்டுபாடு ஏற்படும்.
மக்களிடம் கொள்வனவுச் சக்க்தி குறைந்துபோக உற்பத்தி செய்யப்பட்ட பொருட் களைச் சந்தைப் படுத்த முடியாதநிலை முதலாளிகளுக்கு ஏற்படும். சந்தையில் பொருளின் அளவானது தேவைக்கும் அதிகமானதாகக் காணப்பட பொருளின் விலை குறையவாரம்பிக்கும். இறுதியாக இலாபம் அற்றுப்போக தொழிற்சாலைகள் நஷ்டத்தில் இயங்கவாரம்பிக்க, தொழிலாளர்களின் வேலைநீக்கம் அதிகரிக்க மொத்தச் சமூகமுமே இயக்கமற்று ஸ்தம்பித்துப் போகும்நிலையில் முதலாளித்துவச் சமூக அமைப்பு நிலைபெறமுடியாது குலைந்து போய்விடும் என்பதே மார்க்சியர்கள் முன்வைக்கும் இலகுபடுத்தப்பட்ட தர்கீகமாகும். .
மூலதனம் என்ற புகழ் பெற்ற கார்ல் மார்க்சின் படைப்பின் சாராம்சம் இந்தத் தர்கீகத்தின் அடிப்படையிலிருந்துதான் கட்டியமைக்கப்படுகிறது..
பொருளியல் தொடர்பான மார்க்சிய ஆய்வுக் கட்டமிவானது, அதன் வரலாறு தொடர்பான கட்டமைவுடன் நெருங்கிய தொடர்புடையது.
வரலாற்றுப் போக்கினூள் மறுபடி மறுபடி நிகழ்கின்ற அமைப்பியல் நெருக்கடிகளையும் (Recurrent structural crisis ) , நிலையற்ற தன்மையையும் கொண்ட திட்டமிட்ட மறு ஒழுங்கமைப்பை முதலாளித்துவம் கண்டிராத காலகட்டத்தில் கார்ல் மார்க்சின் விஞ்ஞான ஆய்வுமுறையினூடாக கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையும் மூலதனமும் உருவாகியிருந்தது.
இன்றும் இதன் அடிப்படைகளே வரலாற்றை ஆய்தலிலும் பொருளாதார ஆய்விலும் அடிப்படையாக அமைந்தாலும், ஏகாதிபத்தியம் உருவாக்கிய புதிய சூழ்நிலைகளுக்கமைய இவ்வாய்வுகளை விரிவுபடுத்த வேண்டிய தேவை எழுகிறது. இதனூடாக உலகமயமாதல் தொடர்பான புரிதலையும் அதன் எதிகாலத்தை எதிர்கொள்வது தொடர்பான விவாதத்தையும் உருவாக்கலாம்.
இதன் முதல் படியாக குறித்த ஒழுங்கமைபினுள் முதலாளித்துவத்தின் இயங்குதிறன், முரண்பாடுகளைத் திசைமாற்ற ஏகாதிபத்தியங்கள் திட்டமிட்டு உருவாக்கிய முகாமைத்துவப் புரட்சி அதன் இன்றைய அமைப்பு வடிவம். அண்மைக் கால உருவாக்கமான படைப்பாக்க முதலாளித்துவம் போன்ற பலவேறுபட்ட கருத்தாக்கங்கள் ஆராயப்பட வேண்டும்.
(தொடரும்…)
முதற்பகுதியைப் பார்வையிட.. https://inioru.com/?p=383