மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய உருத்திரகுமார் அவர்களே!
நாடு கடந்த தமிழீழம் என்பதன் உள்ளார்ந்த அர்த்தம் என்பதே என்னால் புரிந்துகொள்ள முடியாத புதிராக இருக்கிறது. நீங்கள் என்ன செய்கிறீர்கள்? எதாவது செய்கிறார்கள் என்று புலிகள் இயக்கத்திற்கு மாதச் சம்பளத்தையே வாரிவழங்கிய வள்ளல்களில் நானும் ஒருவன். இப்போது பணம் எதற்காக வாங்கினார்கள் எங்கே போனது என்பதெல்லாம் எனக்குப் மட்டுமல்ல அனைவரினதும் மூளையில் குந்தியிருந்து குடையும் நாளாந்தக் கேள்வியாகிவிட்டது.
புலிப்படம் போட்ட கொடியோடு தெருத்தெருவாக ஆயிரக்கணக்கில் தமிழர்கள் போராட்டம் நடத்தியிருக்கிறோம். எல்லாம் எதற்காக? யாரும் எங்களைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லையே! போர் நடந்துகொண்டிருக்கும் போது யாருமற்ற அனாதைகளாக எமது மக்கள் கொல்லப்பட்டுகொண்டே இருந்தார்கள். அதுவும் கத்தை கத்தையாக. கொசுக்கள் போல! புலிகள் சாம்ராஜ்யம் கொடிகட்டிப் பறந்த போது புலம் பெயர் நாடுகளில் தமிழ் மக்கள் அனைவரும் ஒரே கொடியில் தான் அணிதிரண்டிருந்தார்கள்.
தமிழின ஒற்றுமையின் பொற்காலமது… புலம் பெயர் மக்கள் நான்காவது ஈழப் போருக்கு தாமகவே முன்வந்து, பணம் பொருள் தங்களின் உணர்வு என்ற அனைத்தையுமே அர்ப்பணித்திருந்தார்கள். அன்றிருந்த ஒற்றுமை ஒரு கனவு போல. புலிகளுக்கு எதிராகப் பேசியவர்கள் எங்கேனும் ஒரு மூலையில் சத்தம் சந்தடியில்லாமல் பத்துப் பதினைந்து தமிழர்களை வைத்துக் கூட்டம் போட்டுவிட்டுப் போய்விடுவார்கள். எல்லாமே புலிகளின் காலடியில் தான் இருந்தது. மக்கள் அனைவரும் புலிகளின் குடைக்குள் ஒற்றுமைபட்டிருந்தனர்.
இந்த ஒற்றுமையெல்லாம் இலட்சக் கணக்காக மக்கள் கொல்லப்படும் போது எந்தப் பாதுகாப்பையும் தந்துவிடவில்லை. எமது மக்கள் சாகடிக்கப்பட்டுவிட்டார்கள். மறுபடி நீங்கள் ஒற்றுமையைக் கோருகிறீர்கள். எதை நோக்கிய ஒற்றுமை? புலிகளின் அதே தோற்றுப்போன ஒற்றுமையைத் தானா நீங்களும் புலிப்படம் பொறித்த கொடியோடு கோருகிறீர்கள்?
-இது எனது முதல் கேள்வி.
புலிகளின் தோல்விக்குக் காரணம் அவர்களின் அரசியல் வழிமுறையில் எங்கோ தவறு நடந்திருக்கிறது. அதை மீளாய்விற்கு உட்படுத்தி விமர்சனம் செய்து கொண்டீர்களா? அப்படியானால் என்ன தவறு நடந்திருக்கிறது? தவிறுகளிலிருந்த படிப்பினையூடாக நீங்கள் கற்றுக்கொண்ட பாடம் என்ன? உங்களது புதிய திட்டம் என்ன?
-இவை எனது மேலதிக வினாக்கள்..
புலிகளின் கொள்கைத் தவறு என்பதில் இன்னுமொரு விடயத்தையும் எனது மூளையின் முன் நரம்பில் ஒவ்வொரு இரத்த அணுக்கள் சந்திக்கும் போதும் பேசிக்கொள்கின்றன. நம்பக் கூடாதவர்களோடு, மாபியாக்களோடு, கொலைகார அரசுகளோடு, சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளோடு அவர்கள் கூட்டுவைத்துக் கொண்டது தான் என்று குழந்தைகுக் கூட தெரிவதாக அது அமைகிறது. அப்படியானல் அது போகட்டும். இப்போது உங்களோடு இணைந்து கொண்டவர்கள யார்? யார் யாரோடெல்லாம் கூட்டுவைத்திருக்கிறீர்கள்? எந்த அரசுகள் உங்களது நண்பர்கள்? எந்தெந்த அரசியல் வாதிகள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள்?
-இவையெல்லாம் எனது வினாக்கள் மட்டுமல்ல இதுவரைக்கும் போராட்டம் வெற்றிகொள்ளப்பட வேண்டுமென்று கனவு கண்ட, பங்களித்த ஆயிரமாயிரம் தமிழர்களின் கேள்விகள்.
காஷ்மீரிலும், நாகாலாந்திலும், நேபாளத்திலும், லத்தின் அமரிக்காவிலும் ஏன் ஐரோப்பாவிலும் அமரிக்காவிலும் கூட மக்கள் எங்களைப் போல ஒடுக்கப்படுகிறார்களாமே; அவர்களும் எங்களைப் போலப் போராடுகிறார்களாமே! இவர்களோடெல்லாம் நீங்கள் பேசிப் பார்த்திருக்கிறீர்களா? தொடர்பு கொண்டிருக்கிறீர்களா? அவர்கள் எம்மைப்பற்றி என்ன நினைக்கிறார்கள்? சந்தர்ப்பவாதிகளால் ஏமாற்றப்பட்ட எமக்கு அவர்கள் உறு துணையாக வருவார்களா?
-இவைகள் எதிர்காலம் குறித்த எனது கேள்விகள்.
காசாவில் இஸ்ரேலிய அரசு குண்டுபோட்டு மக்களைக் கொலைசெய்யப்படும் போதெல்லாம் ஐரோப்பாவில் மனிதாபிமானிகளும், ஜனநாயக விரும்பிகளும், இடதுசாரிகளும் போராட்டம் நடத்துகிறார்களே, இலங்கையில் ஒரு குக்கிராமத்தில் ஐம்பதாயிரம் மனிதர்கள் சதைகளும் எலும்புகளுமாக சிதைக்கப்பட்ட போது இவர்கள் ஐரோப்பிய அரசுகளுக்கு அழுத்தம் கொடுக்கவில்லையே ஏன்?
பிரித்தானியாவில் ரொனி பிளேரும் அமரிக்காவில் ஜோர்ஜ் புஷ் உம் மக்களால் நிராகரிக்கப் பட்டமைக்கு இவர்கள் நடத்திய போராட்டங்களே காரணம் என்கிறார்கள். இந்தப் பிரிவினருடன் நீங்களும் தொடர்புகளை ஏற்படுத்தி வேலை செய்கிறீர்களா? அவர்களை எங்கள் போராட்டங்களுடன் இணைத்துக் கொள்ள என்ன செய்தீர்கள்? உங்கள் திட்டம் என்ன?
-நேரமிருக்கும் போது இவை பற்றியும் சிந்தித்துப் பதில் தருவீர்கள் என நம்பிக்கையோடு காத்திருப்பேன்.
இறுதியாக புலிகள் பில்லியன் கணக்கில் சொத்துக்களும் பணமும் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறதே அவையெல்லாம் எங்கே? நீங்கள் விசாரித்துப் பார்த்தீர்களா? யார்யார் பணம் வைத்திருக்கிறார்கள், சூறையாடினார்கள் என்பதை எல்லாம் மக்கள் மத்தியில் எப்போது அம்பலப்படுத்தப் போகிறீர்கள்?
உங்களிடமும் மக்களின் பணம் உள்ளதா? அப்படியானால் அதன் மதிப்பு என்ன? பணம் இருந்தால் இலங்கை அரசின் இனப்படுகொலையையும் போர்க்குற்றத்தையும் அம்பலப்படுத்த அதனைச் செலவிட முடியாதா? ஐக்கிய நாடுகளும், மன்னிப்புச் சபையும் தான் எம்மைக் கைவிட்டுவிட்டதே, முறையான ஆவணம் ஒன்றைத் தயாரித்து ஐரோப்பிய அமரிக்க மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி ஐ.நாவிற்கு ஏன் அழுத்தத்தை நீங்கள் வழங்கக் கூடாது?
பிற்குறிப்பாக, கே.பி ஆரம்பித்துவைத்து தான் நாடுகடந்த தமிழ் ஈழம். இப்போது கே.பி இலங்கை அரசின் கையாள் என்று கூறப்படுகிறதே. இது குறித்து மக்களுக்கு ஏன் நீங்கள் தெளிவுபடுத்தவில்லை? ஒரு குட்டி அறிக்கைகூட வெளியிடவில்லை? உங்களுக்கும் இலங்கை அரசிற்கும் ஏதாவது………..? நான் இதுவரை 7500 யூரோக்களைப் பணமாக புலிகளின் போராட்டத்திற்கு வழங்கியுள்ளேன். எனது பணத்தைப் பெற்றுக்கொள்ள உங்களிடம் நான் முறையிடலாமா?
இவை எல்லாமே எனக்கும் என்போன்ற விடுதலை உணர்வுள்ள ஆயிரக்கணக்கனோருக்கும் முன்னால் உள்ள கேள்வி. உங்களுக்கு வசதியான தளத்தில் உங்கள் பதிலை எதிர்பார்க்கும்..
(விடுதலை உணர்வோடு..)
N.சத்தியன்