Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

உயிருள்ளவரை அரசியலில் இருப்பேன்:-கமல்!

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்குப் பின்னர் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்த முக்கிய பிரமுகர்கள் அவரது சர்வாதிகாரப் போக்கை காரணம் காட்டி விலகினார்கள். கிட்டத்தட்ட அனைத்து முக்கிய பிரமுகர்களுமே விலகி விட்ட நிலையில் இன்று காணொளி ஒன்றை கமல் வெளியிட்டுள்ளார், அதில், “நான் ஒரு சிறு விதைதான். இது வீழ்ந்தது,வீழ்த்துவோம் என கொக்கரிக்கும் புள்ளிகளுக்கும் சுள்ளிகளுக்கும் ஒரு செய்தி. விதை விழுந்தாலும் மண்ணில் பற்றிவிட்டால் அது விரைவில் காடாகும்.ஊரடங்கினாலும் வாயடங்காது என்பதற்குப் பல உதாரணங்கள் உண்டு. அவற்றில் ஒன்றாக நாமாகிவிடக்கூடாது. தோல்வியை ஆராய்ந்து, அதில் வெற்றிப்பாடம் கற்பது நாம் இதுவரை கண்ட சரித்திரம். மக்களிடம் முக அறிமுகம் இல்லாதவர்களையும் சற்றே தெரிந்தவர்களையும் புது எழுச்சி அரசியலின் நட்சத்திரங்களாக மின்னவைக்க நாம் நினைத்ததுதான் சர்வாதிகாரமாகத் தெரிகிறது.
இது போக ட்விட்டரில் அவர் வெளியிட்டிருக்கும் பதிவில்,
திறமையின் அடிப்படையில் பெரும் பொறுப்புகளை கட்சியில் சேர்ந்த சில நாட்களிலேயே தந்து வளர வழி செய்தது அன்று அவர்களுக்கு ஜனநாயகத்தின் உச்சகட்டமாகத் தெரிந்திருக்கிறது. பிறகு, காலச்சூழலில் கண்ணுக்கு ஏற்பட்ட மறதியில் அது அவர்களுக்குத் தெரியாமல் போய்விட்டது. கூட்டணி வைத்துக்கொள்வதில் நான் காட்டிய வெளிப்படைத் தன்மையும் அதைத் தேர்ந்தெடுப்பதில் அவர்களுக்கு பொறுப்பு கொடுத்த ஜனநாயகமும் அனைவரும் அறிந்தவை.தோல்விக்குப் பின் அவரவருக்கு இருக்கும் தார்மீக கடமையை ஏற்பது நல்ல ஜனநாயகவாதி செய்யும் செயல். கடமையை மறந்து, நிகழ்ந்துவிட்ட தவறுகளைக் கொட்ட குழி தேடுவது சிலருக்கு ஜனநாயகமாகப்படுகிறது. அது ஜனநாயகமே அல்ல. நம் மய்யக் கிணறு அவ்வளவு சாதாரணமாகத் தூர்ந்துபோய்விடாது என்பது தற்காலிக தாக சாந்திக்காக தண்ணீர் குடிக்க வந்தவர்களுக்கு புரியது. நாற்பதாண்டு காலம் இறைத்து நீர் பார்த்ததில் உடல் சற்றே வியர்த்தாலும் உற்சாக ஊற்று ஊறிக்கொண்டே இருக்கும் என்பது நமக்கு கிடைத்த அனுபவம் சொல்லும் பாடம்.
என்று தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி படு தோல்வியடைந்தது இது கட்சிக்குள் பல சர்ச்சைகளை உருவாக்கியது. அதன் பின்னரே பலரும் விலகினார்கள். சினிமாவில் ஒரு காலும் அரசியலில் ஒரு காலும் வைத்துள்ள கமல் கட்சியை ஒரு கம்பெனி போல நடத்துகிறார் என்ற விமர்சனம் இப்போதும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறது.

Exit mobile version