Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

உயர்தர மாணவர்களுக்கு வழங்கப்படவிருந்த ஐ-பாட்களில் முறைகேடு – மக்களின் வரிப்பணத்தைக் கொள்ளையடிக்கும் அரசாங்கம்!

2018ஆம் ஆண்டு உயர்தர மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், அதிபர்களுக்கு ஒரு இலட்சத்து தொண்ணூற்றையாயிரத்து நூற்றி நாற்பத்தெட்டு ஐ-பாட்களை கொள்வனவு செய்வதற்குத் திட்டமிட்டிருப்பதாக நிதியமைச்சர் மங்களசமரவீர வரவு செலவுத் திட்டத்தினை சமர்ப்பித்திருந்தார்.

இதனையடுத்து வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தின்போது, அமைச்சரவையில் மாணவர்களுக்கு வழங்குவதாகத் தெரிவிக்கப்பட்ட ஐ-பாட்கள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றதா எனக் கேள்வி எழுப்பப்பட்டபோது, கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் இரண்டு இலட்சம் ஐ-பாட்களை கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்திருந்தார்.

அத்துடன், அரசாங்கத்தினால் ஒரு இலட்சத்து 95ஆயிரத்து 148 ஐ-பாட்களைக் கொள்வனவு செய்வதற்கு நிறுவனங்களுக்கு கேள்வி மனுக் கோரல் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இருப்பினும், அரசாங்கம் ஏற்கனவே அறிவித்ததிலிருந்து 4852 ஐ-பாட்கள் மேலதிகமாகக் கொள்வனவு செய்யப்போவதாகவும் அதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அறிவித்துள்ளார்.

கல்வி அமைச்சரின் மேலதிகக் கொள்வனவினால் அரசாங்கத்துக்கு அரசாங்கத்துக்கு 2.7 பில்லியன் ரூபா நட்டம் ஏற்படுகின்றது.

இந்நிலையில், அரசாங்கத்தினால் அனுப்பி வைக்கப்பட்ட கேள்வி மனுக் கோரலுக்கான விலைப் பட்டியலை பல நிறுவனங்கள் சமர்ப்பித்திருந்தன. அதில், ஆகக்கூடிய தொகைiயாக ஒரு நிறுவனம் 6.8 பில்லியன் ரூபா விலை மனுவை அனுப்பியிருந்தது. ஆகக் குறைந்த தொகையாக பிறிதொரு நிறுவனம் 4.1 பில்லியன் ரூபா விலை மனுவை அனுப்பியிருந்தது.

இந்நிலையில்,  ஆகக் குறைந்த தொகையை விடுத்து ஆகக் கூடிய விலை மனு அனுப்பிய நிறுவனத்திடமிருந்து கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.  இதன்மூலம் அரசாங்கத்துக்கு 2.7 பில்லியன் நட்டம் ஏற்படுகின்றது.

இது தொடர்பாக ஏனைய விலை மனு அனுப்புனர்கள் அரசாங்கத்தின் கொள்முதல் மேன்முறையீட்டுக் குழுவிடம் தெரிவித்திருந்தபோதிலும் அரசாங்கம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அரசாங்கத்துக்கு 270 கோடி நட்டம் ஏற்பட்டுள்ளது.

இந்த 270 கோடிப் பணமும் மக்களால் அரசாங்கத்துக்கு செலுத்தப்படும் வரிப்பணம் என்பதை மக்கள் அறிந்துகொள்ளவேண்டும். இவ்வாறு மக்களின் பணத்தினைக் கொள்ளையடித்து அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் உல்லாச வாழ்வு வாழ்கின்றனர்.

Exit mobile version