Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

உம்மாநான் சவூதிக்கு போறேன்…! : கவிஞர் பொத்துவில் அஸ்மின்

இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் வாழும் முஸ்லிம்களில் குறிப்பாக தென்கிழக்கு முஸ்லிம்களின் பேச்சுவழக்கில் இக்கவிதை அமைந்துள்ளது.
”ரிசான நபீக்குகளுக்கு” இந்த கவிதை சமர்பணம்.
-கவிஞர் பொத்துவில் அஸ்மின்-

இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் வாழும் முஸ்லிம்களில் குறிப்பாக தென்கிழக்கு முஸ்லிம்களின் பேச்சுவழக்கில் இக்கவிதை அமைந்துள்ளது.
”ரிசான நபீக்குகளுக்கு” இந்த கவிதை சமர்பணம்.

-கவிஞர் பொத்துவில் அஸ்மின்-

உம்மாநான் சவூதிக்கு போறேன்-எங்கட
கவலைகள் கரச்சல்கள் கலஞ்சோடிப்போக…!
உம்மென்று இருக்காதே நீயும்-என்ட
உசுரப்போல் எப்போதும் புள்ளநான் பாப்பேன்!

வாப்பாநீங்க ஒழச்சது போதும்-ஒங்கட
பெரச்சின லாத்தையும் நானினி பாப்பேன்…!
சாப்பாட்டுக் கினியென்ன பஞ்சம்…?-ஒங்கள
மௌத்தாகும் வரைக்கும்நான் மனசாற பாப்பேன்..!

கலியாண வயசுள்ள என்ன-நீங்க
கரசேக்க படுகிற பாட்ட நான் அறிவேன்…!
என்னகா செய்றநான் உம்மா
பொம்புளயா பொறந்தது யாரோட குத்தம்..?

அப்பம் வித்து காக்கா படிச்சார்
கடசியில் நமக்கெல்லாம் என்னத்த கிழிச்சார்…?
கொமர நெற வேத்த முந்தி-காக்கா
கொறுக்காட பேத்திய கலியாணம் முடிச்சார்…

புழிஞ்ச தேங்காப் பூவப் போல
புளிச்சித்தான் போனோம் அவருக்கும் நாங்க-என்ட
கிழிஞ்ச ‘சல்வார” மாத்த-உம்மா
ஒங்கிட்ட காசில்ல யார்ட்ட வாங்க…?

படிச்சாக்கள் இப்பெல்லாம் கூட-இஞ்ச
படிப்புத்தான் உசிரென்றோர் சோத்துக்கு வாட-நான்
பட்டங்கள் படிச்சதும் வீந்தான்-இப்ப
தொழிலின்றி இருந்திட்டா கெடைக்குமோ தீன்தான்…?

அரசாங்க தொழிலையும் காணோம்-நாங்க
அலையாலும் மழையாலும் அழிஞ்சிதான் போனோம்
‘எம்பி”மார் பொய்கள கேட்டா – உம்மா
இதவிட மோசமா அழிஞ்சுதான் போவோம்…!

அதுவரும் இதுவரும் என்பார்-எம்பி
ஆனைய குடுத்தாலும் சோத்தோட திம்பார்
ஊட்டுக்கு தேடிநாம் போனா-‘சேர்”
எடுபிடி அனுப்பி ‘பிஸி” எனச்சொல்வார்…

ரோட்டுல கண்டாலும்கூட
தெரிஞ்சாலும் தெரியாத மாதிரி போவார்
வோட்டுத்தான் அவருக்கு வேணும்-நாங்க
ஏமாந்து ஏமாந்து அழுதது காணும்…

வக்கின்றி வாக்குகள் கேட்டு-ஊட்ட
வருவோர்க்கு உம்மாநீ வாருகள் காட்டு
எருமைங்க கதையல கேட்டு
ஏமாந்து இனிமேலும் போடாதே ஓட்டு….

ஒழைக்காட்டி ஒசந்தவர் யாரு? -நாங்க
ஒழைக்காம தின்டிட்டா மதிக்குமா ஊரு?
ஒழச்சத்தான் கக்கிஷம் போகும்-இத
ஒணராட்டி எப்புடி சோகங்கள் சாகும்..,?

நெனச்சமாரி நாங்க உடுக்க-இழிவா
நெனச்ச மச்சானுக்கு சீதனம் குடுக்க
சவூதிக்கு உம்மாநான் போறேன்-எல்லாம்
சரியாக வந்திடும் சிலநாளில் பாரேன்.

சொளையாக அனுப்புறன் காசி- ஊட்டில்
சொகமாநீ வாழலாம் பூட்டும்மா ‘ஏசி’
தொணையாக இருக்கிறேன் உம்மா-நீயும்
கொளராத கக்கிஷம் போய்விடும் சும்மா…

சொர்க்கத்த வாங்கிட்டு வருவேன்-அந்த
மக்கத்து சொகமெல்லாம் ஒனக்குத்தான் தருவேன்
சொத்துக்கள் உம்மாநீ வாங்கு-எங்கட
சொர்க்கத்தில் இனியாச்சும் சொகமாக தூங்கு…!

மனம்வெச்சி என்னநீ அனுப்பு-சவூதி
நானிப்ப போனாத்தான் எரியும்நம் அடுப்பு..!
போஎன்டு செல்லித்தான் பாரு..-சொட்டு
நாளைக்குள் ஓடும்மா தங்கத்தில் ஆறு…..

ஒயித்தாட புள்ளநான் என்று
ஒதுக்கித்தான் பாக்காக ஊராக்கள் இன்று
அவியலின் முன்னால நாங்க
ஆரேண்டு காட்டித்தான் வாழனும் ஓங்க…

உம்மாநான் சவூதிக்கு போறேன்-எங்கட
கக்கிஷம் எல்லாமே காத்துல போகும்-என்ன
சும்மா நெனைக்காதே நீயும்-நாங்க
சொகுசாக வாழலாம் சொமையெல்லாம் தீயும்…!!

Exit mobile version