Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

உத்தபுரத்தில் அமைதி நிலவுகிறதாம்- கருணாநிதி சொல்கிறார்.

உத்தபுரத்தில் தலித் மக்களுக்கு எதிராக வெள்ளாளர்கள் தீண்டாமைச் சுவர் கட்டப்பட்டது, நீண்டகாலமாக தீண்டாமையின் வடிவமாக இருந்து வந்த அந்தச் சுவரின் ஒரு பகுதியை மட்டும் இடித்தது தமிழக அரசு. ஆனாலும் மாவட்ட நிர்வாகமும், போலீசும், தமிழக அரசும் ஆதிக்கசாதிகளுக்கு ஆதரவாக நடந்து கொள்கிற நிலையில் உடைக்கப்பட்ட சுவரின் வழியே உருவாக்கப்பட்ட பாதையில் தலித் மக்களின் அடிப்படை நடமாடும் உரிமை கோரி சி.பி.எம் போராடிவந்தது. போராடியவர்களை கடுமையாகத் தாக்கியது கருணாநிதி அரசு. இந்நிலையில் கேள்வியும் நானே பதிலும் நானே பாணியில் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கேள்வி: மதுரை மாவட்டம், உத்தப்புரத்தில் தலித் மக்களின் அடிப்படை உரிமைகள் குறித்து நீண்ட நாட்களாக பிரச்சினை இருந்து வருவதோடு, தாங்களும் பலமுறை அதற்காக மாவட்ட கலெக்டரோடு கலந்து பேசி ஒரு சுமூகமான நிலை இருந்து வந்த நிலையில் திடீரென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அங்கே போராட்டம் நடைபெற்றதாகவும், போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியதாகவும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஏடுகளில் பெரிதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளன. மேலும், அரசுக்கு எதிர்ப்பு என்றால் உடனடியாக கண்டன அறிக்கை விடும் ஒரு சில கட்சிகளும் அறிக்கை விடுத்துள்ளனவே? உண்மை விவரம் என்ன?

பதில்: உத்தப்புரம் கிராமத்தில் இரண்டு தரப்பினருக்கிடையே உள்ள பிரச்சினையைக் களைவதற்காககடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசின் சார்பில் எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன, அதற்காக நான் எத்தனை முறை மாவட்ட கலெக்டரோடு பேசியிருக்கிறேன் என்பதெல்லாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். உத்தப்புரம் கிராமத்தில் வாழும் மக்களும் தற்போது எந்தவிதப் பிரச்சினையும் இல்லாமல் அமைதியாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணித் தலைவர்களால் அவர்கள் அமைதியாக இருப்பதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. மாதத்துக்கு ஒரு முறை அந்தக் கிராம மக்களைத் தூண்டிவிட்டு ஏதாவது பிரச்சினை செய்ய முடியாதா என்று பார்க்கிறார்கள்.

இதற்கோர், உதாரணம் கூற வேண்டுமேயானால், இந்தச் சம்பவம் நடந்த அதே நாளில் உத்தப்புரம் ஊராட்சி மன்றத்தலைவரும், வேறு சில தலைவர்களும் இணைந்து ஒரு பத்திரிகைக் குறிப்பையே ஏடுகளுக்கு வழங்கியிருக்கிறார்கள். அதில், “உத்தப்புரத்தில் கடந்த சில வருடங்களாக இரு சாதி மக்களிடையே தொடர்ந்து பிரச்சினை நிலவி வருவதாக சில அரசியல் கட்சிகள் விஷமப் பிரசாரம் செய்து வருகின்றனர். ஆனால் உண்மையில் உத்தப்புரம் கிராமத்தில் அனைத்துச் சாதியினரும் ஒற்றுமையுடனும், அமைதியுடனும் வாழ்ந்து வருகிறோம். சில அரசியல் கட்சிகள் தங்களின் அரசியல் ஆதாயத்துக்காகவும், சுயநலத்துக்காகவும், உத்தப்புரம் கிராமத்தைப் பயன்படுத்தி வருகிறார்கள்.

எங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் நல்ல முறையில் செய்து வருகிறது. எங்களுக்குள் சிற்சில பிரச்சினைகள் இருந்தாலும் அமைதியுடன் வாழ்ந்து வருகிறோம் என்பதுதான் உண்மைஎன்று எழுதி கையெழுத்திட்டிருக்கிறார்கள். இதிலிருந்து அந்தக் கிராம மக்கள் ஒற்றுமையாகவும், நிம்மதியாகவும் வாழ்ந்த போதிலும் அங்கே ஒற்றுமை நிலவக் கூடாது என்ற எண்ணத்தோடு செயல்படுபவர்கள் யார் என்பதை சுலபமாகப் புரிந்து கொள்ளலாம். கருணாநிதி குறிப்பிட்டுள்ள எழுதிக் கையெழுத்திட்ட அறிக்கை என்பது போலிசாலும் மாவட்ட நிர்வாகத்தாலும் மிரட்டி தலித் மக்களிடம் இருந்து வாங்கப்பட்ட ஒன்றாகும்.

Exit mobile version