Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

உணர்வுபூர்வமாக தொடரும் விவசாயிகள் போராட்டம்

டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள், உரிய நிவாரணம் வழங்கக் கோரி, தஞ்சை மற்றும் திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு, தமிழகத்தை பேரிடர் பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும்.தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு, 25 ஆயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளைவலியுறுத்தி, மா.கம்யூ., கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், போராட்டம் நடக்கிறது.

கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் சாலையிலேயே விவசாயிகள் உறங்கினர். இரண்டாம் நாளாக நேற்றும் போராட்டம் தொடர்ந்தது.

சாலையிலேயே அமர்ந்து காலை மற்றும் மதிய உணவு அருந்தினர். விவசாயிகளின் நிலையை விளக்கும் வகையிலான கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. தஞ்சை கலெக்டர் அலுவலக சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு வாகனங்கள் மாற்று வழியில் திருப்பிவிடப்பட்டன.திருவாரூர்: இதேபோல் திருவாரூர் கலெக்டர் அலுவலகம் முன் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாநில தலைவரும், எம்எல்ஏவுமான லாசர், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் முகமதலி ஆகியோர் தலைமையில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் 2ம் நாளாக நேற்றும் அங்கேயே சமைத்து, சாப்பிட்டு போராட்டத்தை தொடர்ந்தனர்.நாகை: நாகை கலெக்டர் அலுவலகம் முன்பும் முற்றுகை போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது.

விவசாயிகள் சங்க மாநில தலைவர் பாலகிருஷ்ணன் எம்எல்ஏ தலைமையில் நடைபெறும் போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர். போராட்டத்தையொட்டி கலெக்டர் அலுவலக கேட் பூட்டப்பட்டிருந்தது. வேறு பாதையில் அலுவலர்கள் அலுவலகத்திற்கு சென்றனர். நாகூர், சிதம்பரம், மயிலாடுதுறை, சீர்காழி, காரைக்கால் வழியாக செல்லும் அனைத்து அரசு மற்றும் தனியார் பஸ்களும் மாற்று பாதையில் இயக்கப்பட்டு வருகிறது. கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மயிலாடுதுறை ஆர்டிஓ அலுவலகம் முன்பும் முற்றுகை போராட்டம் நடைபெற்று வருகிறது.கோர்ட் புறக்கணிப்பு: விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து தஞ்சையில் நேற்று வக்கீல்கள் சங்கத்தினர் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து விவசாயிகளுடன் சேர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Exit mobile version