Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

உடலின் அரசியலே பிரதானம் : குட்டி ரேவதி

நவீன நோய்கள் ஏற்படுத்தும் விபரீதங்களுக்கு ஏற்றாற் போன்றும் பாலியல் விழிப்புணர்வுக்கு ஏற்றாற் போன்றும் தாம் ஒரு சமூகம் தனது பாலியல் விடுதலைகளை விரித்துக்கொள்கிறது. சமீபத்தில் இந்தியாவில் அறிவிக்கப்பட்டுள்ள ஓரினச்சேர்க்கை சட்டப்பூர்வமானது என்ற தீர்ப்பும் அவ்வாறானதே. கடந்த பத்து வருடங்களில் சமூகம் பெரு நோய்களுக்குப் பயந்து கொண்டே தன்னைத்தானே விழிப்புணர்வூட்டிக் கொண்டும் சுதந்திரம் என்பதன் வரையறைகளை தனக்குச் சாதகமாக விரித்துக் கொண்டும் இயங்கத் தொடங்கியிருக்கிறது. தனக்கு நோய் வந்துவிடுமோ என்ற சிந்தனை சமூகத்தையும் தனிமனிதனையும் பீடித்த போது தான் எல்லா விதிகளும் சட்டங்களும் மாறத்தொடங்கின. அரவாணிகள் பற்றிய அக்கறையும் அவ்வாறு தான் ஏற்பட்டிருக்கவேண்டும். இன்றைய ஓரினச்சேர்க்கை சட்ட நெகிழ்வும் அவ்வாறு தான் ஏற்பட்டிருக்க வேண்டும். எயிட்ஸ் நோயில் பாதிக்கப்படுவோர் சதவிகிதமும் அது குறித்த சமூக அச்சமும், அரசை எயிட்ஸ் நோய்க்கு எதிரான பிரச்சாரங்களில் ஈடுபட உந்தியது. குறிப்பாக ’புள்ளி ராஜா’ விளம்பரம் அது குறித்த ஒரு வெகுஜனத்தன்மையை ஏற்படுத்தியது எனலாம். தொடர்ந்து பொதுவெளியில் இவை விவாதிக்கப்பட்டன. இன்று எயிட்ஸ் பற்றிய தெளிவு என்பது அது எந்த வகையான உடலுறவு கொண்டாலும் தாக்கக்கூடிய நோய் என்றும் பாலுறவில் பங்கு பெறாமல் இரத்தப் பரிமாற்றம் இருந்தாலே அவ்வைரஸ் நோய் தொற்றும் என்றும் மக்களின் புரிந்துணர்வு சமூகத்தின் கண்களைத் திறந்தது.

ஒரு காலத்தில் அதாவது பத்து வருடங்களுக்கு முன்பாகக் கூட அரவாணிகள் எனப்படும் திருநங்கையர் குறித்த உரையாடலும் அரசியலும் பொதுவெளிக்கு அந்நியமாக இருந்தது. அவர்கள் ஊடகங்களாலும் சமூக அமைப்புகளாலும் புறக்கணிக்கப் பட்டவராய் இருந்தனர். தொடர்ந்து மூன்று வருடங்கள் அரவாணிகளின் கூவாகம் திருவிழா சென்று வந்த எனக்கு அவர்களின் பண்பாட்டுத் தளங்களின் ஊடுருவலும் சமூகத்திற்கும் அவர்களுக்கும் இடையிலான இடைவெளியும் புரிந்தன. அரவானை அடக்கம் செய்யும் சடங்கு, ஒரு மனிதனின் மரண நிகழ்வைப்போன்றே பெரிய துக்கமும் காவிய உணர்வும் கொண்டும் நிகழும். அது ஒட்டிய வரிசையான சடங்குகள் அரவான் என்போன் காலந்தோறும் வாழ்வதும் மடிவதும் போன்ற உணர்வை ஏற்படுத்துவதுடன் அவனுடனான ஐக்கியத்தையும் மனிதர்களுக்கு ஏற்படுத்துவதை உணரமுடிந்தது. இது ஒரு நாட்டுப்புறத் திருவிழாவிற்கான எல்லா தன்மைகளையும் அங்கிங்கெனாது சமூகத்துடனான ஊடாட்டங்களையும் கொண்டுள்ளதை உணரமுடிந்தது. சமூகத்தால் கேலி செய்யப்பட்டும் புறக்கணிக்கப்பட்டும் இருக்கும் அரவாணிகளுக்கு இது எத்தகைய ஒரு புகல்வெளியாக இருக்கும் என்பதை நாம் உணரமுடியும். இன்று அரவாணிகள் தங்களை, தமக்கென ஒதுக்கப்பட்டிருந்த பாலியல் தொழிலிலிருந்து நகர்த்திக் கொண்டு சமூகத்தின் மற்றெல்லா அறிவுத்துறைகளுக்கும் தங்களை தகுதியுடையவராக்கிக் கொண்டனர். எனக்குத் தெரிந்த ஓர் அரவாணி, அரவாணிகள் பற்றிய ஓர் நாட்டுப்புற ஆய்வினை முழுமையாகச் செய்து முடித்துள்ளார். தொலைக்காட்சியில் அரவாணி ரோஸ் சமூகப் பிரச்சனைகளை அலசுகிறார். பாண்டிச்சேரியில் கல்கி எனும் அரவாணி சிறந்த இசைக் கலைஞராகவும் அதன் பயிற்சியாளராகவும் இருக்கிறார். இன்னும் சிலர் தன்னையொத்தவர்களுக்காகப் போராடும் இயக்கத்தை நடத்துகின்றனர். நாவல்கள் எழுதுகின்றனர். ஓர் இனக் குழுமம் தனக்கான உரிமைகளைப் பெறும் போது தான் சிந்தனை தெளிவையும் பெறுகிறது.

எழுத்தாளர் அம்பை, தனது கணவருமான இயக்குநருமான விஷ்ணு மாத்தூருடன் இணைந்து தயாரித்த அரவாணிகள் பற்றிய ’தேகம்’ எனும் ஓர் ஆவணப்படத்திற்காகப் பணியாற்றினேன். அப்பொழுது தான் உடல் என்பது தமது தவிர்க்கமுடியாத தமது விருப்பத்திற்கேற்றவாறு மாற்றிக் கொள்ள முடியும் ஓர் ஆடையாகவே இருக்கிறது என்பதையும், அந்த உடலின் உள்ளார்ந்த உணர்வு குறித்த பேதலிப்புடன் அவர்கள் வாழ்க்கை அலைக்கழிக்கப்படுவதையும் அறிய நேர்ந்தது. உடல் பற்றிய ஆரோக்கியமான கருத்தாக்கங்களைக் கொண்ட சமூகத்தால் தான் இத்தகைய பாலியல் சிடுக்குகளை மிக எளிதாகக் கையாளமுடியும் என்ற அனுபவத்தைத் தந்தது. ஒவ்வொருவரும் அவரவர் உடலையும் பாலுணர்ச்சியையும் வெவ்வேறாக உணர்கின்றனர், சமூகத்தின் தளைகளுக்குக் கட்டுப்படாமல்.

ஓரினச்சேர்க்கை சட்டப்பூர்வமானது என்று இந்திய அரசாங்கம் தனது சட்டத்தைத் தளர்த்திக் கொண்டது நிறைய புதிய ஆதாயங்களை தரவல்லது. ஆரோக்கியமான மருத்துவம் சார்ந்த தெளிவுகளையும் கோரவல்லது. பாதுகாப்பற்ற ஓரினச்சேர்க்கையால் விளையும் தீமைகளைக் குறித்தும் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும் என்பதே இந்தியாவின் புரிதலும். ஏனெனில் இந்தியா போன்ற நாடுகளில் மருத்துவம் மற்றும் ஆரோக்கியம் குறித்த சிந்தனைகள் மிகவும் பலவீனமானவை. பொருளாதார வசதி மிக்கவர்களே நிறைந்த ஆரோக்கியத்தை அனுபவிக்கத் தகுதியானவர்கள் எனும் அளவிற்கு மருத்துச் செலவுகள் தனி மனிதனால், சாதாரண குடிமக்களால் சமாளிக்க முடியாத அளவிற்கு அவை அதிகமாக இருப்பதால் அவர்கள் மருத்துவம், ஆரோக்கியம், பாலியல் நலன், பாலியல் முறைமைகள் எல்லாவற்றையும் அரசின் வழியாகவே எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது. இந்நிலையில் அரசாங்கம் இதைச் சட்டப் பூர்வமாக்கும் போது மறைவான, குற்றப்பூர்வமான நடவடிக்கைகளில் ஓரினச் சேர்க்கையாளர்கள் ஈடுபடாமல் இருக்க ஏதுவாகும். மேலும் இதை இழுக்காக, இழிவாக நோக்கும் வெகுஜன சமூகத்திற்கும் அப்பார்வையை மாற்றிக் கொள்ளும் மனோபாவம் வளரலாம். ஏனெனில் வெகுஜன மக்களின் மனோபாவமென்பது மந்தை மனோபாவமே. பெரும்பான்மை சமூகம் எதைச் சரியென்று சொல்கிறதோ அதையே ஆமோதிக்கும். இம்மாதிரியான விஷயங்களில் அரசின் நடவடிக்கைகள் மிக முக்கியமான பங்கை வகிக்கின்றன.

லார்டு மெக்காலே 1860-ல் கொண்டு வந்த சட்டம் தான், ஓரினச்சேர்க்கை அல்லது தற்பால்சேர்க்கை என்பது கடும் குற்றம் என்பதும் இயற்கைக்கு மாறான இந்தக் குற்றத்தில் ஈடுபடுவர்களுக்கு ஆயுள் தண்டனை என்பதும். ஏறத்தாழ இது மனுஸ்மிருதி விதிக்கும் தண்டனைகளுக்கு இணையானது எனும் ஆதாரம் அக்காலத்திலும் இத்தகைய சமூக உறவுகள் இருந்தமைக்கு. ஒருவர் பாலியல் முறைகேடுகள் என்று கருதப்படுபவற்றைச் செய்தால் அவர் வேற்றுப் பால்சேர்க்கை உடையவரோ, ஓரினச் சேர்க்கை உடையவரோ அவருக்கான தண்டனைகள் கடுமையானவை. சமூக விலக்கை நிர்ப்பந்திப்பவை. மெக்காலே இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்ததற்கு விநோதமான காராணமும் உண்டு. இங்கிலாந்தில் ஓரினச்சேர்க்கை மிக இழுக்காகக் கருதப்பட்ட பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், அங்கிருந்து மக்கள் இந்தியாவிற்கு இடம் பெயர்ந்து இங்குள்ள சமூக வசதிகளை, பாலியல் ஆதாயங்களை நுகர்ந்து விடக்கூடாதே என்று தான். இப்படிப் பிறந்தது தான் இந்தியத் தண்டனைச் சட்டம் 377.

இத்தகைய சட்டத் தளர்வு, ஒரு பண்பாட்டு அதிர்ச்சியுமன்று. ஏனெனில் விளிம்பு நிலை மக்களும், சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டவர்களும், சிறைக் கைதிகளும், பண்பாடு, பணி நிமித்தம் தனியிடம் சென்று வசிப்பவர்களும் அனுபவிக்கும் தனிமை அவதியும் அதன் அழுத்தப்பட்டத் துயரமும் அதற்கான சமூக ஏற்றத்தாழ்வுகளும் அதிலிருந்து வெளியேறத் துடிக்கும் தனிமனித அவாவும் அவர்களுக்குக் கிட்டாத இயல்பான சமூக உறவுகளும் அவர்களை பொது வெளியிலிருந்து தொலைவிற்குக் கொண்டு சென்றதைப் போலவே பொதுயுரிமையிலிருந்தும் ஒரு கலவரமான வாழ்க்கைக்கு இழுத்துச்சென்று விடுகிறது. இன்று இந்தியாவில் மட்டும் இருபது இலட்சத்திற்கும் மேல் ஓரினச்சேர்க்கையாளர்கள் இருப்பார்கள் என்று கணக்கெடுப்பு சொல்கிறது. 377 சட்டத்திருத்தம் செய்ய முடிவெடுத்ததன் மூலம், விளிம்பு நிலை மக்களெல்லோரும் இவ்வாறு ஒரு புள்ளி விபரமாய் மட்டுமே மாறிப் போகாது இருக்கும் நடவடிக்கையை இந்திய அரசு எடுத்துள்ளது. பிரெஞ்சு எழுத்தாளர் *ழீன் ஜெனே சொல்வார், ”நான் ஓர் ஓரினச்சேர்க்கையாளர்தான்: ஆனால் என், எப்படி என்பவையெல்லாம் அயர்ச்சியூட்டும் கேள்விகள்; என்னுடைய கண்கள் ஏன் பச்சை நிறமாக இருக்கின்றன என்பதை அறிந்து கொள்வதைப் போன்றது தான்.” இந்தியா போன்ற நாடுகளில் ஓரினச்சேர்க்கையின் சமூகப்பின்புலமும் அரசியல் உரையாடலும் மிகுந்தப்பரப்பைக் கொண்டது. அல்லது அப்படிச் சொல்வதற்கான கால கட்டத்தை நாம் இன்னும் எட்டவே இல்லை.

————
* “I’m homosexual… How and why are idle questions. It’s a little like wanting to know why my eyes are green.” -Jean Genet

Exit mobile version