இந்திய விவசாயிகளுக்கு எதிரான மூன்று விவசாயச் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் பல லட்சம் விவசாயிகள் போராட்டங்களை திவீரமாக்கியிருக்கிறார்கள்.
இன்று 19-வது நாள் போராட்டத்தில் சிங்கு, காஜிப்பூர், திக்ரி போன்ற டெல்லியின் எல்லைப்பகுதிகள் முழுமையாக மூடப்பட்டன. மிக முக்கியமான டெல்லி ஜெய்பூர் நெடுஞ்சாலையையும் விவசாயிகள் மூடி விட்டார்கள். இதானல் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து டெல்லிக்கு வந்து கொண்டிருந்த வாகனங்களும் தடுக்கப்பட்டுள்ளது. டெல்லிக்குச் செல்லும் அனைத்து சாலைகளும் விவசாயிகள் முழுமையாக மூடப்பட்ட நிலையில் நாட்டின் தலைநகர் பிற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. டெல்லிக்கு விமானத்தில் மட்டுமே செல்ல வேண்டிய நிலையை விவசாயிகள் போராட்டம் உருவாக்கியுள்ளது.
இன்னொரு பக்கம் ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப், உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் இருந்தும் விவசாயிகள் பல்லாயிரக்கணக்கில் டெல்லியை நோக்கி வருவதால் நிலமை மேலும் சிக்கலாகி உள்ளது. இன்று போராட்டத்தை தீவிரப்படுத்தும் நோக்கில் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை விவசாயிகள் அறிவித்துள்ளார்கள். காலை 8 மணி முதல் மாலை 5 மணிவரை மாவட்ட தலைநகரங்கள், டெல்லி எல்லையில் உண்ணா விரதம் இருந்து வருகிறார்கள்.
தமிழகத்தில்
தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில் போராட்டங்கள் திவீரமடைந்து வருகிறது. நெல்லுக்கான குறைந்த பட்ச ஆதாரவிலை உத்தரவாதப்படுத்தவில்லை என்ற கோரிக்கையை முன் வைத்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் போராட்டம் நடத்தி வருகிறது. திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ரிலையன்ஸ் பெட்ரோல் பங்கை விவசாயிகள் முற்றுகையிட்டனர். பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் உள்ள ரிலையன்ஸ் மார்ட், ரிலையன்ஸ் பெட்ரோல் பங்குகளை விவசாயிகள் மூடி வைத்துள்ளனர், அது போல ரிலையன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான ஜியோ சிம்கார்டுகளை புறக்கணிப்பதையும் திவீரப்படுத்தியுள்ளனர்.
போராட்டத்தை திசை திருப்ப அரசின் முயற்சிகள்
பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் நடக்கும் பெரிய போராட்டம் இதுவே. காங்கிரஸ் கட்சியோ பிற கட்சிகளோ அரசுக்கு எதிராக இத்தனை பெரிய போராட்டங்கள் எதனையும் இதுவரை முன்னெடுக்காத நிலையில் இடதுசாரிக்கட்சிகளின் ஆதரவோடு விவசாயிகள் போராட்டம் கடுமையாகிஉள்ளது. இதை பாஜக அரசு எதிர்பார்க்கவில்லை. அதனால் இந்த போராட்டங்களைச் சிதைக்க பல்வேறு தந்திரங்களை அரசு பயன்படுத்துகிறது.
ஒன்று மீண்டும் மீண்டும் பேச்சுவார்த்தை என்ற பெயரில் சில விவசாயசங்கங்களை மட்டும் அழைத்து பேசி பிற சங்கங்களிடம் சந்தேகத்தை உருவாக்குவது. இதை புரிந்து கொண்ட விவசாய சங்கங்கள் இனி பேச்சுவார்த்தை கிடையாது என அறிவித்துள்ளனர்.
இன்னொன்று இந்த போராட்டத்தின் பின்னால் மாவோயிஸ்டுகளும் சீனாவும் உள்ளது என தொடர்ந்து பிரச்சாரம் செய்கிறது. மேலும் தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்திற்குள் சமூக விரோதிகள் ஊடுறுவி விட்டதாக பொய் பிராச்சாரமும் செய்து வருகிறார்கள். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடிய இஸ்லாமிய மக்கள் போராட்டங்களுக்கு மத்தியில் துப்பாக்கி ஏந்திர நபர்கள் புகுந்து வன்முறையை உருவாக்கியது போல விவசாயிகள் போராட்டத்திற்குள்ளும் புகுந்து வன்முறையை உருவாக்கலாம் என்ற அச்சம் விவசாயிகளிடம் காணப்படுகிறது. ஆனால், இவை எதுவும் எடுபடாத நிலையில், இப்போது பாஜக விவசாய மசோதாக்களை விளக்கி விவசாயிகளிடம் பிரச்சாரம் செய்யப் போவதாக அறிவித்துள்ளது. ஆனால், அதை பிற மாநிலங்களில் செய்ய முடியாத நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் மட்டும் விவசாய மசோதாவுக்கு ஆதரவான பிரச்சாரங்களை துவங்கியுள்ளது. மொத்தத்தில் ஆளும் பாஜக அரசு விவசாய மசோதாக்களை ரத்து செய்யும் திட்டம் எதுவும் தங்களிடம் இல்லை என்பதை தெளிவாகச் சொல்லியுள்ளது.