ஈழப் போராட்டடம் ஆயுதப் போராட்டமாகத் துளிர்விட்ட ஆரம்பக் காலப்பகுதியின் வாழும் சாட்சி கணேசன்(ஐயர்). ஐயர் என்ற புனைபெயரில் அறியப்பட்ட கணேசன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் பிரபாகரனோடு ஆரம்பித்தவர்களில் ஒருவர். பல சிக்கல்கள் நிறைந்த தனது அரசியல் நினைவுகளை ஐயர் இனியொரு இணையத்தளத்தில் தொடர்ச்சியாகப் பதிவுசெய்திருந்தார்.
இவரின் பதிவுகள் பல புதிய தகவல்களோடு செழுமைப்படுத்தப்பட்ட வடிவில் நூலுருவில் வெளியாகின்றது. உலகம் முழுவதும் தமிழ்ப் பேசும் மக்கள் வாழும் நாடுகளில் ஐயரின் நூல் வெளியிடப்படுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அரசியல் குறித்த விமர்சனம் என்பது சேறடிப்பாக அன்றி எதிர்கால எதிர்ப்பியக்கத்தை அனுபவங்களிலிருந்து செழுமைப்படுத்தும் செயற்பாடாக அமையவேண்டும் என்பதே ஐயரின் கருத்து.
சமூக உணர்வுள்ள அனைவர் மத்தியிலும் ஐயரின் அனுபவ வரலாறு ஆரோக்கியமான விவாதங்களை உருவாக்கியிருந்தது.
பேரினவாத்தின் கோரப்பிடிக்குள் சிக்கியிருக்கும் ஒடுக்கப்பட்ட தமிழ்ப் பேசும் மக்களின் வீரம்மிக்க போராட்டத்திற்கு ஐயரின் நூல் காத்திரமான பங்களிப்பை வழங்கும்.
தமிழ் நாட்டில் நூல் ஏலவே வெளியாகியுள்ளது. இப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் புத்தகக் கண்காட்சியில் கீழைக்காற்றுப் பதிப்பகத்தின் புத்தகச் சந்தையில் ஐயரின் நூலைப் பெற்றுக்கொள்ளலாம்.
சென்னைப் புத்தகக் கண்காட்சியில் கீழைக்காற்று!
கடை எண் 404 -405.
5.1.2012 முதல் 17.1.2012 வரை.
பிரித்தானியாவில் இனியொருவும், கனடாவில் தேடகம் அமைப்பும், பிரான்சில் சமூக அசைவிற்கான எழுத்தியக்கமும் நூல் வெளியீட்டை ஏற்பாடுசெய்துள்ளன.
இலங்கையிலும் ஏனைய நாடுகளிலும் வெளியீடு குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும்.