Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஈழத்தமிழ் மக்களின் அரசியலும் எதிர்காலமும் பற்றிய ஒரு புத்தகத்தின் வரவு: யதுஷன்

210இனியொரு (www. inioru.com ) இணையத்தளத்திற்கு தோழர் சி.கா.செந்திவேல் அவர்கள் வழங்கிய நேர்காணல், அதைத் தொடர்ந்த வாசகர்களின் பின்னூட்டங்கள், அதற்கான சி.கா.செந்திவேலின் பதில்கள் என இணையதளம் வழியாக நடந்த நீண்ட உரையாடல் “இன்றைய அரசியல் நிலைமை பற்றிய ஒரு நேர்காணல்” என்ற பெயரில் நூலுருவாக்கம் பெற்றிருக்கிறது.

இணையத்திலிருந்து அச்சுக்கான இணைப்பும் மாற்றமும் இந்நூல் மூலம் சாத்தியமாக்கப்பட்டிருக்கிறது. இலங்கையில் 90மூமானவர்களிடம் இணையத்தள வசதிகள் இல்லாத நிலையில் மக்களிடம் கருத்துக்களைக் கொண்டுபோய்ச் சேர்ப்பதற்கு மாற்றுவழிகளை நாடவேண்டியிருக்கிறது.

எளிமையான அன்றாட வாழ்க்கைக்காக உழைக்கின்ற மக்களிடம் பயனுள்ள கருத்தக்கள் சென்றடையவும் விவாதங்களைத் தொடக்கிவைக்கவும் இவ்வகையான புத்தகங்களின் வருகை பயனள்ளது. நாம் பயணிக்க வேண்டிய திசைவழியே சேர்ந்து பயணிப்பவர்கள் இலங்கையில் உள்ள மக்கள்தான். தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம் இவர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது. அதை வெறுமனே நாம் மறந்துவிடக்கூடாது. ‘நாடுகடந்த அரசாங்கமோ’ வெளிநாட்டுத் தமிழ்ப்பிரதிநிதிகளின் தெரிவோ தமிழ்மக்களுக்கான உரிமையை பெற்றுத்தரப்போவதில்லை என்பதை மிகவும் தெளிவாக இந்த உரையாடல் சொல்கிறது.


இலங்கையின் அரசியல் சூழல் மிகவும் சிக்கலானது. இந்நிலையில் இதை புத்தகமாக வெளியிடுகின்ற முயற்சி பாராட்டப்பட வேண்டியது. இந்தப்புத்தகத்தில் காணக்கிடைக்கின்ற முக்கியமான தகவல்களை வரிசைப்படுத்தினால்:

 வட்டுக்கோட்டைத்தீர்மானத்தைத் தொடர்ந்து தனித்தமிழீழத்தின் சாத்தியப்பாடுகள் பற்றி 1970களில் நடந்த விவாதங்கள் பற்றிய வரலாற்றுச் செய்திகள்.

 9 /11க்குப் பிந்திய உலக ஓழுங்கில் விடுதலைப் போராட்டங்கள் பயங்கரவாதமாகப் பார்க்கப்படும் நிலையில் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையை சாத்தியமாக்குவது பற்றிய கருத்துக்கள்.

 இலங்கை அரசுக்கு ஆதரவாக கியூபா ஐ.நா.வில் வாக்களித்தது குறித்த விவாதமும் விளக்கமும்.

 சுயநிர்ணய உரிமையை விளங்கிக்கொள்ளல்.

 தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலத்திற்கான பொதுவேலைத்திட்டம் பற்றியவை.

 ஈழத்தில் தலித்தியம் பற்றிய எண்ணக்கருவும் பொருத்தப்பாடும்.
என்பனவே அடிப்படையானவையாக இருக்கின்றன.

இவை ஒவ்வொன்றும் புதிய இளம் தலைமுறையினருக்கு வழிகாட்டக்கூடியன. இதன் அவசியமென்ன என்றவொரு கேள்வி எழலாம்.

தமிழீழம் என்ற சாத்தியமற்ற கொள்கையை முன்வைத்ததிலும் அதனை வைத்துப் பாராளுமன்றப் பதவிகள் பெற்றதிலும் தமிழ் மக்களுக்கு அடைய முடியாத நம்பிக்கைகளை வளர்த்ததிலும் தமிழ்த்தேசியவாதிகளின் பங்கும் பாத்திரமும் முக்கியமானது. அவர்களே தமிழீழ எண்ணக்கருவின் மூல கர்த்தாக்கள்.

இத்தகைய குறுந் தேசியவாதம் வழிகாட்டிய தமிழீழத்திற்கான போராட்டம் என்பது கடந்து முப்பது வருட காலத்தில் வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப் பட்டதன் மூலம் மிகப்பெரும் அழிவுகளையும் அவலங்களையும் தமிழ் மக்களும் கூடவே முஸ்லிம் மக்களும் அனுபவிக்க வேண்டியதாயிற்று. இப்போதும் கூட அழிவுகளின் தொகை குறித்த திட்டவட்டமான புள்ளி விபரம் எதுவும் கிடையாது.

இவற்றுக்குப் பொறுப்புக் கூற வேண்டியவர்கள், தமிழ் மக்களுக்குத் தலைமை தாங்குவதாகவும் வழி நடத்துவதாகவும் கூறிக் கொண்டே தமிழ் மக்களுக்குத் மேற்படி பேரவலங்களைத் தேடித் தந்தவர்கள், மூன்று லட்சம் மக்கள் முட்கம்பி வேலிகளுக்குள் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்ட அவல நிலையின் மத்தியில் தேர்தல்களில் போட்டியிட்டவர்கள் எல்லாம் தாங்களே தொடர்ந்தும் வழிகாட்டுகிறோம் என்று அடம்பிடிக்கையில் நேர்மையான விமர்சன -சுயவிமர்சன நோக்கிலான இந்நூலின் வருகை முக்கியமானது மட்டுமல்ல அவசியமானதும் கூட.

இன்று தமிழ்தேசியக்கூட்டமைப்பினர் பிரதேச சுயாட்சி மாநில சுயாட்சி, ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை, புனரமைப்பிற்கு ஒத்துழைப்பு என்றவாறு பேசத் தொடங்கியுள்ளனர். இவை பற்றி எங்கே முடிவு செய்தார்கள் மக்கள் முன்னிலையில் அல்லது அரசியல் அரங்கில் விவாதத்து விடயங்களைக் கூறுகிறார்களா? இவை எழுப்பப்படவேண்டிய கேள்விகள்.

இக்கேள்விகளை எழுப்பவேண்டிய தேவையை “இன்றைய அரசியல் நிலைமை பற்றிய ஒரு நேர்காணல்” முன்மொழிகிறது. மாற்று அரசியல் பேசியவர்களைத் துரோகிகள் என்று பட்டம் சூட்டிய கனவான்கள் தான் இப்போது தமது தியாகிகள் வேடத்தைக் கலைந்து அரசியல் வறுமையில் அம்மணமாக நிற்கிறார்கள். போர்த்திக்கொள்ள ஆடைஅணியலாமா என்று கேட்டு அனுமதிபெற மன்மோகன் சிங்கைச் சந்திக்க அனுமதி கிடையாதால் இன்னும் இவர்களின் அம்மண அரசியல் தொடர்கிறது.

இன்னொரு சாரார் தமது வழமையான புலி எதிர்ப்பில் இறுகிப்போய்ப் பேரினவாத அரசாங்கத்தின் காலடியில் விழுந்து கிடக்கின்றனர். இந்த அரசியல் வறுமையின் நடுவிலே மாற்றுக்கருத்துக்களை முன்வைக்கிற தேவை வலிமையடைகிறது.

தமிழ்ச்சமூகம் சிந்தித்துச் செயற்பட்ட வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அதேவேளை ஆரோக்கியமான ஜனநாயகத்தன்மையுள்ள கருத்தப்பரிமாற்றம் மிகமிகத் தேவையானது. சுதந்திரமாகச் சிந்திக்கிறவர்களை அவமதிக்கிற போக்குக்கள் இவ்வளவு காலமும் தமிழ் மக்களின் ஒற்றுமை, விடுதலைப் போராட்டம் என்ற பேர்களில் அடக்கி வைக்கப்பட்ட கேள்விகள் ஒவ்வொன்றாக முன் வருகின்றன. பேசக்கூடாதவை என்று ஒதுக்கப்பட்டிருந்த சமூக முரண்பாடுகள் பற்றிய கேள்விகள் வேகமாக மேலெழுகின்றன. இனி என்ன செய்வது என்ற கேள்விக்குரிய விடைதேட இதுவரை என்ன செய்யப்பட்டது, அவற்றின் விளைவுகள் என்ன, போராட்ட வரலாறு கூறும் பாடங்கள் என்ன என்ற கேள்விகட்கு விடை தேட வேண்டும். எழுகிற கேள்விகளைத் தட்டிக் கழிக்காமல் பதில் கூற எந்தத் தேசியவாதிக்கும் இயலாமலுள்ளது. கடந்த காலத்தை விசாரிக்கவும் சரி பிழைகளை இனங் காணவும் இயலாத எந்தத் தலைமையாலும் எதிர் காலத்திற்கான பாதையைச் சரியாக இனங்காண முடியாது. அவ்வகையில் மாற்றுக்கருத்துக்களை முன்வைக்கிற மக்கள்மயப்படுத்தப்பட்ட அரசியல் பாதையை முன்மொழிகின்ற இந்நூலின் பெறுமதி உயர்வானதே.

Exit mobile version