Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஈழத்தமிழ் அகதிகள் மூவரையும் நாடுகடத்தக்கூடாது : ஆர்ப்பாட்டம்

ஈழ அகதிகள் மூவரை நாடு கடத்தும் மத்திய மாநில அரசுகளைக் கண்டிக்கிறோம்!

செந்தூரன்
செந்தூரன் உண்ணாவிரதம் (கோப்புப் படம்).

செந்தூரன், ஈழ நேரு மற்றும் சவுந்தரராசன் ஆகிய ஈழ அகதிகள் மூவரை உடனடியாக இலங்கைக்கு நாடு கடத்தும்படி மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக கியூ பிரிவு போலீசார் அவர்களிடம் தகவல் தெரிவித்துள்ளனர். இவர்களை நாடு கடத்துவதற்கு எவ்வித முகாந்திரமும் இல்லை. தங்களை சிறப்பு முகாம் என்ற பெயரில் அடைத்து வதைப்பதற்கு எதிராக இவர்கள் உண்ணா நிலைப் போராட்டம் நடத்துகிறார்கள் என்பதும், மற்ற ஈழ அகதிகளுக்கு உளவுத் துறையினர் இழைக்கும் கொடுமைகளை வெளிக் கொண்டு வருகிறார்கள் என்பதும்தான் மத்திய மாநில உளவுத்துறைகள் இவர்கள் மீது ஆத்திரம் கொள்ளக் காரணம்.

சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்த செந்தூரன் தொடர்ச்சியான போராட்டத்திற்குப் பிறகு இப்போது வெளியில் இருக்கிறார். ஈழ நேரு திருச்சி மத்திய சிறையில் சிறப்பு முகாமில் வைக்கப்பட்டிருக்கிறார். ஈழ அகதிகளை ஆஸ்திரேலியா அழைத்துச் செல்வதாகக் கூறி, ஒரு லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக ஒரு பொய் வழக்கை இவர் மீது கியூ பிரிவு போலீசு போட்டிருக்கிறது. கியூ பிரிவு போலீசார் இந்த வழக்கையே நடத்துவதில்லை என்பது மட்டுமல்ல, வாய்தாவுக்கு கூட அவரை நீதிமன்றத்துக்கு அழைத்து வராமல் வழக்கை வேண்டுமென்றே ஆண்டுக்கணக்கில் இழுத்தடிக்கின்றனர். நீதிமன்றத்துக்கு அழைத்துப் போவதற்கே உண்ணாவிரதப் போராட்டம் நடத்த வேண்டிய நிலையே உள்ளது. இவர் மீதான வழக்கை விரைந்து நடத்தி முடிக்க வேண்டும் என்று மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது.

போலீசின் இத்தகைய முறைகேடுகளை எதிர்த்துப் போராடிய காரணத்தினால்தான் நாடு கடத்தல் என்ற சதியை மத்திய மாநில அரசுகள் அரங்கேற்றுகின்றன. இவர்களை இலங்கை அரசிடம் ஒப்படைப்பது என்பது அவர்களுக்கு மரண தண்டனை விதிப்பதற்கு ஒப்பானதாகும். இது அகதிகளின் உரிமையை மீறுகின்ற கொடும் குற்றமாகும்.

இனப்படுகொலையைக் கண்டிப்பதாகவும், இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்க வேண்டுமென்றும் முதல்வர் வாய் வீச்சு அடித்துக் கொண்டிருக்க, அகதிகள் மீது பொய் வழக்கு போடுவதையும், நாடு கடத்துவதையும் தமிழக போலீசு செய்து கொண்டிருக்கிறது. 2009 இனப்படுகொலைக்குப் பின்னர், எல்லா ஈழத்தமிழ் அகதிகளையும் மீண்டும் இலங்கைக்கு போகச்சொல்லி மத்திய மாநில உளவுத்துறை போலீசார் மறைமுகமாக நிர்ப்பந்தம் கொடுத்து வருகின்றனர்.

ஈழத்தமிழ் அகதிகள் மீதான இக்கொடுமைகளுக்கு எதிராகத்தான் மே நாள் அன்று எமது அமைப்புகளின் சார்பில் சென்னையில் போராட்டம் நடத்தினோம். தமிழகத்தில் உள்ள ஈழத்தமிழ் அகதிகளுக்கு எதிராக போலீசார் இழைத்து வரும் கொடுமைகள் எல்லை இல்லாமல் போய்க்கொண்டிருப்பதற்கு இந்த நாடு கடத்தல் மிரட்டல் தெளிவான எடுத்துக்காட்டாகும்,

ஈழத்தமிழ் அகதிகள் மூவரையும் நாடுகடத்தக்கூடாது.

சிறப்பு முகாம்கள் எனப்படும் சிறைக்கூடங்களை கலைத்து அனைவரையும் விடுவிக்க வேண்டும்.

ஈழத் தமிழ் அகதிகள் மீது தமிழக போலீசு இழைத்துவரும் துன்புறுத்தல்களை, குறிப்பாக பெண்களுக்கு

எதிராக போலீசு நடத்தும் பாலியல் அத்துமீறல்கள் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஈழத்தமிழ் அகதிகள் அனைவருக்கும் இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும் என்று கோருகிறோம்.

இதனை வலியுறுத்தி எமது அமைப்புகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இவண்,

அ. முகுந்தன்,
ஒருங்கிணைப்பாளர்,

மக்கள் கலை இலக்கியக் கழகம்
விவசாயிகள் விடுதலை முன்னணி
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி

சென்னை, 21.8.2013

Exit mobile version