Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஈழத்தமிழர்களை சட்டவிரோத குடியேறிகள் என்று நீதிமன்றத்தில் சொன்ன மோடி அரசு!

தமிழகத்தில் வாழும் லட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் சட்டவிரோதமாக தமிழகத்தில் தங்கியுள்ளவர்கள் என்பதால் அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க முடியாது என மதுரை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அகதிமுகாம்களிலும் முகாம்களுக்கு வெளியிலும் லட்சக்கணக்கான அகதிகள் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு இரட்டை குடியுரிமை  வழங்கப்பட வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கை. அதே போன்று திருச்சி கொட்டப்பட்டு சிறப்பு முகாமில் இலங்கை அகதிகள் அடைக்கப்பட்டு  இருந்தனர். இவர்கள் 2009 –ஆம் ஆண்டு மதுரை உயர்நீதிமன்றத்தில் இந்திய குடியுரிமை கேட்டு வின்ணப்பித்தனர். இந்த வழக்கில் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் குடியுரிமை கோரி விண்ணப்பிக்க நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்த நிலையில்,

உத்தரவை முறையாக பின்பற்றாத அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் “இலங்கையில் இருந்து இங்கு இருக்கும் அகதிகள் சட்டவிரோத குடியேறிகள் இவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க முடியாது. அவர்களின் இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்றார்.

இந்த விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடுகள் மாறியுள்ளது எனவே தமிழக அரசின் கருதைக் கேட்க வேண்டும் என்று அகதிகள் தரப்பு வழக்கறிஞர் சொன்ன போதும் மத்திய அரசின் சட்டங்களுக்கு உட்பட்டே தமிழக அரசு நடவடிக்கை எடுக்க முடியும் என்றும். ஆனால் மத்திய அரசின் நிலைப்பாடு இதுதான் என்பது போலவும் மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

குடியுரிமை திருத்தச் சட்டம் அமலாகியிருக்கும் நிலையில் இலங்கை அகதிகளை சட்டவிரோத குடியேறிகள் என மத்திய அரசு குறிப்பிட்டிருப்பது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Exit mobile version