Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இளமையின் கீதம் : லெனின் மதிவானம்

(சீன பழைமை சமூகத்தை எதிர்த்து போரிட்ட
ஒரு இளம் பெண்ணின் கதை)

“இளமையின் கீதம்” என்ற நாவல் சீன முற்போக்கு இந்தியவாதியான யங்மோவின் ஆற்றல்மிக்க படைப்பாகும். இந்நாவல் கிட்டத்தட்ட 748 பக்கங்களை கொண்டதாக அமைந்துள்ளது. இந்நாவலை மயிலை பாலு தமிழிலே மொழிப்பெயர்த்துள்ளார். மார்ஸிம் கார்க்கியின் ~தாய்| நாவல் ரசிய புரட்சிக்கு முன் எழுதப்பட்டதாகும். அந்நாவலுக்கு ரசிய புரட்சியை சரியான திசையில் இட்டு சென்றதில் முக்கிய பங்குண்டு. இந்நிலையில் மார்சிம் கோர்க்கியின் அனுபவங்களை உள்வாங்கி அதன் வழியில் பட்டைத்தீட்டப்பட்ட அறுவடையாகவும் சில சமயங்களில் அதன் சிகரமாகவும் இந்நாவல் விளங்குகின்றது.

கதை இப்படிதான் தொடங்குகின்றது………!

பழைய சீன நிலப்பிரபுத்துவ வாழ்க்கையினால் சீரழிக்கப்பட்ட குடியான பெண் பெற்றிருந்த மகள் தான் கதையின் கதாநாயகி லின் டாவோசிங். பல்வேறுபட்ட நெருக்கடிகளுக்கு மத்தியில் நிர்கதியான டாவோசிங் தன்னந்தனியாக தனது ஊரை விட்டு வெளியேறி வேறோரு கிராமத்திற்கு வந்திறங்கும் காட்சியிலிருந்து தொடங்குகின்றது நாவல்.

தேடிப்போன மாமாவும் அந்த கடலோர கிராமத்தில் இல்லாமல் இருக்க, ஆதரவின்றி குழப்பத்தில் மூழ்கும் டாவோசிங் தன்னை மறந்து கடலின் அழகினை ரசித்து களிப்புறுவதும் பின் நிராதரவாக நிற்கும் அவளை மேலும் துன்ப துயரங்கள் துரத்த மிகவும் தளர்ந்து தற்கொலைக்கு முயற்சிக்கின்றாள்.

இந்நிலையில் டாவோசிங் மீது காதல் கொண்டு அவளை அறியாமல் பின்தொடரும் யுங் சே என்ற பல்கலைக்கழக மாணவனால் அவள் காப்பாற்றப்படுகின்றாள். பின்னர் இருவரும் காதலர்களாகி கணவன் மனைவியாக வாழ்கின்றனர். பின்னாட்களில் (1930களில்) சீனாவில் மகத்தான போராட்டமானது தேசத்தின் தலைவிதியை இளைய தலைமுறையினரின் தலைவிதியுடன் ஒன்றாக சேர்த்து போராட வேண்டியக் காலக்கட்டத்தில் லூசியா – சுவான் என்ற பல்கலைக்கழக மாணவர் மூலமாக அரசியல் அறிவினையும் அமைப்பாக்க உணர்வினையும் பெறுகின்றாள் டாவோசிங்.

1930களில் ஜப்பானிய ஏகாதிபத்தியமானது சீனாவின் மீதான தனது ஆக்கிரமிப்பை கட்டவிழ்த்திருந்தது. இப்போராட்டத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சியானது ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும் உள்ளுர் பிற்போக்குவாதிகளுக்கு எதிராகவும் தீவிரமாக போராடியது. இத்தகைய பின்னணியில் கதைமாந்தர்களையும் இயக்கங்களையும் பொருளாக கொண்டு எழுதப்பட்டதே இந்நாவல்.

கதையில் வரும் பாத்திரங்கள் யாவும் தன்னிகரற்ற தலைவர்களாகவோ அல்லது பிறவி நாயகர்களாகவோ சித்தரிக்கப்பட்டவில்லை. மாறாக அன்றைய வாழ்க்கைப் போராட்டத்தின் ஊடாக – புதிய ஜனநாயக புரட்சியின் மூலம் வெளிப்பட்ட மனிதர்களே படைப்பாக்கம் செய்யப்பட்டுள்ளனர். சிறு முதலாளிகள், சிறு உடமையாளர்கள், அறிவு ஜீவிகள், கூலி விவசாயிகள், பாட்டாளிகள் என பலத்தரப்பட்டோர் இந்நாவலில் இடம்பெறுகின்றனர். தமது வர்க்க நிலைப்பாடுகளுக்கேற்ப தமது சிந்தனை வன்முறைகளை வெளிப்படுத்துகின்றனர்.

இதுவரைக் காலம் தமது ஒவ்வொரு தலைமுறைக்காகவும் சேகரித்து வைத்த நாகரிகங்கள் அனைத்தையுமே இந்நாட்டின் மானுடம் இழந்து அம்மனமாகி இருக்கும் ஓர் சூழலில், லட்சக்கணக்கான இளைஞர்கள் தமது தேசத்தின் தலைவிதியை மாற்றுவதற்காக போராடிக் கொண்டிருக்கின்ற ஒரு காலக் கட்டத்தில், சமகால போராட்டத்திலிருந்து விலகி நூலகசாலைக்குள்ளும் பரிசோதனை அறைக்குற்றும் இருந்துக் கொண்டு புரட்சி குறித்த அவதூறுகளை பேசும் சிறு முதலாளித்துவ பண்பு சீனாவிற்கு மட்டும் உரித்தானதல்ல. மக்கள் சார்பான தத்துவங்களையும் இலக்கணங்களையும் இவர்கள் தமது சுயநலத்தின் பேரில் தமக்கேற்றவகையில் மாற்றியமைக்க முனைகின்றார்கள். ”ஒரே மூச்சில் புரட்சி அல்லது வீழ்ச்சி” என கூப்பாடு எழுப்பும் இக் கனவான்களை தான் லெனின் புரட்சிகர வாய்ச் சொல் வீரர்கள் என விமர்சிக்கின்றார்.

இத்தகைய சந்தர்ப்பவாதிகளால் புரட்சி எவ்வாறு காட்டிக் கொடுக்கப்படுகின்றது என்பதற்கு நாவலில் வரும் பாத்திரங்களான சூ நிங், தய் யூ ஆகியோர் சிறந்த உதாரணங்களாகும்.

யாவற்றுக்கும் மேலாக புரட்சிகர காலத்தில் காதல் கூட எவ்வாறு ஓர் சமுதாயம் சார்ந்ததாக வெளிப்படுகின்றது என்பதற்கு பின்வரும் இரு காதல் கடிதங்கள் தக்க எடுத்துக்காட்டுகளாகும்.
யூ யூங்சே தனது மனைவியான டாவோ சிங் புரட்சிகர இயக்கத்தில் பங்கெடுப்பது குறித்து ஆத்திரமுற்று லூ சியா சுவான் என்ற கம்யூனிஸ்டுக்கு எழுதுகின்ற கடிதத்தின் சில வரிகள் இவ்வாறு அமைந்திருக்கின்றன.

“சில கொள்கைகளை பிரச்சாரம் செய்ததன் மூலம் என் மனைவியின் மனதை நீ ரொம்பவும் கெடுத்து விட்டிருப்பதை நான் காண்கின்றேன். அவள் உனது ஆணைப்படியே செயல்படுகிறாள். எப்போது பார்த்தாலும் ”புரட்சி”, ”போராட்டம்” என்று தான் பேசிக் கொண்டிருக்கிறாள். மிக மோசமான முறையில் எங்களது குடும்ப மகிழ்ச்சி மறைந்து விட்டது.

நீ உன் விருப்பம் போல் நடந்து கொள்ளலாம் என்றாலும் எனது துன்பத்தில் நீ இன்பம் காண்பதும் எனது அவலத்தில் நீ உனது வாய்ப்பை வளர்த்துக் கொள்வதும் எவ்வளவு வருந்ததக்கது. ஒவ்வொருவருக்கும் ஒரு நீதிநெறி இருக்க வேண்டும்………..”

யூ யுங்சேயை பிரிந்து ஆற்றல் மிக்க தோழராக கட்சி பணிகளை முன்னேடுக்கும் டாவோ சிங்கின் தன்னலமற்ற போக்கு, ஆளுமை நேர்மை என்பன அவள் மீதான மெல்லிய காதலை லூ சியா – சுவானுக்கு தோற்றுவித்திருந்தது. சிறைப்பட்டு மரணத்தின் வாயிலில் நின்று கொண்டிருக்கும் போது அவன் தன் காதலை கடிதம் மூலம் இவ்வாறு வெளிப்படுத்துகின்றான்.

“கடந்த ஆண்டுகளில் கொடுஞ்சிறையில் இருந்த போது உலகின் மிக முன்னேறிய வர்க்கத்தின் போராளியாக நீ மாறிவிடுவாய் என்று நான் முன்னோக்கிப் பார்த்தேன். புரட்சியை முன்னேடுத்துச் செல்பவர்களில் ஒருவராகவும் இருப்பாய் தோழரே. வெற்றியின் நேரத்தை விரிவுபடுத்துவதற்காக ஒவ்வொரு நாளும் கம்யூனிஸ்ட்டுகள் இரத்தம் சிந்துகின்றார்கள், உயிர்த்தியாகம் செய்கிறார்கள்………… அன்புத் தோழரே, அன்பு டாவோசிங் எனது முறை விரைவிலே வரக்கூடும்”

வேறுபட்ட நாகரீகங்களின் வீச்சை நாம் இங்கு தரிசிக்கின்றோம். முன்னைய கடிதம் தனது காதல், மகிழ்ச்சி, இன்பம் குறித்து புலம்புகின்றது. பின்னையது இப்போராட்டத்தில் தான் கொல்லப்பட்டாலும் தன் காதலி அதனை முன்னேடுத்து செல்வாள் என்ற நம்பிக்கையும் கூடவே புரட்சிக்குரிய கம்பீரத்தையும் நமக்கு வழங்குகின்றது.

இந்த நவீனம் பழைமைச் சமூகத்தை எதிர்த்துப் போரிட்ட ஒரு இளம் பெண் அறிவு ஜீவியின் கதையாகும். தாய் நாவலில் ஒரு சாதாரண தாய் எவ்வாறு புரட்சிகர ஆளுமைக்குள் கொண்டு வரப்பட்டாலோ அவ்வாறே இந்நூலில் ஒரு சாதாரண பெண் புரட்சிகர ஆளுமைக்குள் கொண்டு வரப்பட்டு மிக தீவிரமான கம்யூனிஸ்டாக மாறி சீன தேசத்தின் விடுதலைக்காக போராடுகிறாள். மறுபுறத்தில் சீனாவின் பண்ணையடிமைத்தனத்திற்கு பழியான தனது தாய் லிண்டோவை போன்று அந்த அடிமை வாழ்க்கை முறைக்குள் மட்டும் கட்டுண்டுக் கிடக்காது. கதாநாயகி டாவோ சிங் தனது முதல் காதலன் சந்தர்ப்பவாதி என்று தெரிந்தும் அவனை துணிவாக விட்டு விலகி செல்கின்றாள். அந்தவகையில் ஒரு பெண்ணின் ஆளுமையை அழகுற சித்தரித்துக் காட்டப்படுவதில் இந்நாவல் வெற்றியடைகின்றது.

சரித்திரத்தின் தூர தொலைவில், வரலாற்றில் நம்மீது பலாத்தகாரம் கொண்டுள்ள நொடிய கொடூர அலைக்கழிப்புகளினூடே ஒரு உறுதியை இனி ஒரு விதி செய்ய இந்நாவலின் அனுபவங்கள் நமக்கு ஆதர்சனமாக அமைகின்றன.
இனிவரும் காலங்களில் எமது தலைமுறையினருக்கு வெறுமனே சகித்துக் கொண்டு போகும் பண்பை கற்றுக் கொடுக்காமல் அவற்றினை எதிர்த்து போராடும் பண்பை கற்றுக் கொடுக்க வேண்டியுள்ளது. நிமிர்ந்து நிற்கவும் வாழ்க்கைக்காக போராடவும் முற்படுகின்ற போது இந்நாவல் அவர்களின் கையில் வலிமை மிக்க ஆயுதமாக திகழும் என நம்பலாம்.

இறுதியாக மொழிப்பெயர்ப்பு பற்றிக் கூறுவதாயின் நாவலின் உள்ளடக்கம் உருவம் சிதையாதவகையில் மிக எளிமையான எழுத்து நடையில் மயிலை பாலு தமிழில் மொழி பெயர்த்துள்ளார்கள். நெருடலற்ற அவரது மொழிபெயர்ப்பு சீன வாழ்வுடன் எம்மை இணைக்கின்றது. இத்தகைய நவீனத்தை தமிழ் வெளிக் கொணர்வதன் மூலமாக தமிழ் இலக்கியத்திற்கு காத்திரமானதொரு பங்களிப்பினை நல்கியிருக்கிறார் மொழிபெயர்ப்பாளர்.

அந்தவகையில் இந்நாவல் தன்னால் இயன்ற மட்டும் மக்களின் சுக துக்கங்களை இசைக்க முனைகின்றது. இந்நூலை வாங்குங்கள், படியுங்கள், ரசியுங்கள், விமர்சியுங்கள், பலருக்கு சொல்லுங்கள் என்று வாசகர்களை உரிமையுடன் கேட்டுக்கொள்ளலாமா?

Exit mobile version