தந்தை அரேபியராக இருந்தால்கூட தாய் திராவிட தமிழ்தானே.அதனால்தானே இஸ்லாம் எங்கள் வழி இன்பத் தமிழ் எங்கள் மொழி என்று வாழ்கின்றோம்.
இங்கிருக்கின்ற முஸ்லிம்கள் இந்துவாக இருந்து இஸ்லாமானவர்கள் என்பதை மறுக்கவோ மறைக்கவோ முடியாது.அதனால்தானே இந்துக்களின் கலாச்சாரம் பண்பாடு அரிதாக இலங்கை முஸ்லிம்களுக்குள் இன்னும் இருக்கிறது.
ஒரு தாய் வயிற்றில் பிறந்த தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் இனியும் வேற்றுமை வேண்டாமே.இரு இனங்களும் அவரவர் தனித்துவத்தை உணர்ந்து கசப்புணர்வுகளை மறந்து இணைந்து செயற்படுவதே இருவருக்கும் வெற்றியை தேடித்தரும்.இல்லாவிட்டால் இருஇனங்களும் நாசமாவதை யாராலும் தடுக்க முடியாது.
இருவருமே தவறு செய்திருக்கிறோம் அந்த தவறுகளை மீண்டும் மீண்டும் பேசிக்கொள்வதால் எமது இருப்பு கேள்விக்குறியாகிறது.இது பழி தீர்க்கும் தருணமல்ல பிரிந்தவர்கள் சேர்வதற்கான சந்தர்ப்பம்.கடந்தகால விடயங்களில் அனைவருமே பாடம் கற்றிருப்போம்.
நீ என்னை மன்னிக்கவில்லை
நான் உன்னை மன்னிக்கமாட்டேன்” என்றால் கவலைகள் தொடரும்.
ஒரு கை ஓசை எழுப்பாது என்பதை உணர்வோம் அன்றுதான் இருவருமே மகிழ்வோம்.
ஒரு விழி அழும்போது
ஒரு விழி சிரிப்பதில்லை….
நீ அழும்போது நான் சிரித்தேன்
நான் அழும்போது நீ சிரிக்கிறாய்
மீண்டும் நீ அழும்போது நான் சிரிப்பேன்
நான் அழும்போது நீ சிரிப்பாய் ….
இது தொடர்கதையாக போனால் நாம் இருவருமே அழுது கொண்டே இருப்போம் அவர்கள் சிரித்துக்கொண்டே இருப்பார்கள்…..!
நான் செய்தது தவறு என்பதையும்
நீயும் தவறு செய்திருக்கிறாய் என்பதையும்
நானும் நீயும் உணராதவரை
நமக்கு சந்தோசம் என்பது சாத்தியமில்லை.
இளைஞர்களே… முகநூலில் வீண்வாதங்களில் ஈடுபட்டு குரோதங்களை வளர்த்துகொள்ளாமல் ஒற்றுமைக்கான பாலமாக செயற்படுவோம் வாருங்கள்.