Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும்-“ஜெ” யின் திருத்திய பதிப்பு – எதுவரை?

எண்பதுகளின் ஆரம்பத்தில் அக்காலத்தைய தமிழக முதல்வர் எம்.ஜீ.ராமச்சந்திரன் அழைப்பு விடுக்க 83 ஜுலைப் படுகொலைகளைக் கண்டித்து தமிழகம் முழுவதும் ஸ்தம்பித்துப் போனது. சில காலங்களுக்கு உள்ளாகவே, இந்திய உளவுத்துறை ஈழப் போராளிகளுக்கு இராணுவப் பயிற்சியும் ஆயுதங்களும் வழங்கிற்று. ஈழப் போராளிகளைக் கையாளும் நோக்கோடு எம்.ஜீஆர் ஐ ஒரு புறத்திலும் மறு புறத்தில் கருணாநிதியையும் இந்திய அரசு பயன்படுத்திக்கொண்டது.

புலிகள் இயக்கத்தை எம்.ஜீ.ஆர் உம் ஏனைய இயக்கங்களைக் கருணாநிதியும் கையாண்டு ஆரம்பத்திலிருந்தே இயக்கங்களுக்கு இடையே முரண்பாடுகளைத் தோற்றுவித்தமை தற்செயலான நிகழ்வுகள் அல்ல.

படிநிலை வளர்ச்சிகளூடாக முதிர்ச்சியடைந்து வெற்றியை நோக்கி நகர்ந்திருக்க வேண்டிய தேசிய விடுதலைக்கான போராட்டம் பகை முரண்பாடுகளால் சிதறடிக்கப்பட்ட இயக்கங்களின் மோதலாக வளர்ச்சிகண்டது. போராட்டம் வெற்றியை நோக்கி நகர்ந்து செல்ல முடியாத அனைத்து புறநிலை சக்திகளையும் இந்தியா திட்டமிட்டு உருவாக்கிற்று. இயக்க மோதல்களை உருவாக்கி, ஜனநாயக, முற்போகு சக்திகளை விரக்திக்கு உள்ளாக்கி பிற்போக்குச் சிந்தனைகளுக்கு இந்திய உளவுத்துறை உரமிட்டது. தேசிய இனவிடுதலைக்கான போராட்டத்தை இனவாதப் போராட்டமாக மாற்றும் முதல் முயற்சியாக புலிகள் இயக்கத்தினூடாக அனுராதபுரத்தில் நூற்றுக் கணக்கான அப்பாவிச் சிங்கள மக்களைக் கொன்று குவித்தது.

உலக நாடுகளின் போராடும் சக்திகளிடமிருந்து ஈழப் போராட்டம் தனிமைப்படுத்தப்பட்டது. 80 களின் இறுதியில் ஈழப் போராட்டம் அதன் ஜனநாயக முற்போக்கு முகத்தை முற்றாகவே இழந்த நிலையை அடைந்திருந்தது. அதன் பின்னர் வல்லரசுகளின் அரசியல் சதுரங்கத்திற்கான தெற்காசியக் களமாகவே ஈழப் போராட்டம் மாற்றமடைந்தது.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் செல்வாக்கு மிக்க தமிழகத்தின் தமிழின வாதிகள் அறிக்கைப் போர் மட்டுமே நடத்திக்கொண்டிருந்தனர். பரந்துபட்ட மக்கள் ஆதரவுத் தளத்தைக் கொண்டிருந்த ஜெயலலிதா தமிழகத்தில் அழிவுகளைத் தடுத்து நிறுத்த எந்தப் போராட்டத்தையும் நடத்தவில்லை. சில அறிக்கைகளோடும் அனுதாபங்களோடும் அனைத்தும் முடிந்து போயின.

இப்போது இனப்படுகொலை  ராஜபக்ச அரசிற்கு வெளிப்படையான ஆதரவு வழங்கிய கருணாநிதி குழுமம் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டுள்ளது. ஜெயலலிதா ஆட்சி உருவான மறுகணமே அதிமுக முத்திரையோடு கூடிய ஒடுக்குமுறைகள் தமிழக மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டன.

ஜெயலலிதாவின் ஒடுக்குமுறை குறித்து:

ஜெயா திருந்திவிட்டாராம்! – நரியைப் பரியாக்கும் கோயபல்சுகள்

இந்த நிலையில் , இலங்கை மீது இந்திய மத்திய அரசாங்கம் பொருளாதார தடையை விதிக்க வேண்டும் எனக்கோரிய பிரேரணை ஒன்றை தமிழக சட்டசபை நிறைவேற்றியுள்ளது.

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் இடம்பெற்றதாக தெரிவித்தே இந்த பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தப்பிரேரணையை முன்வைத்து உரையாற்றிய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, இலங்கையை ஐக்கிய நாடுகள் போர்க்குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இலங்கையின் மீது பொருளதாரத்தடையை விதிப்பதன் மூலமே அந்த அரசாங்கத்தை கட்டுப்படுத்த முடியும் என்றும் ஜெயலலிதா குறிப்பிட்டார். இந்தியாவும் ஏனைய நாடுகளும் இலங்கை மீது பொருளதார தடையை விதித்தால் மாத்திரமே அந்த நாடு, நாங்கள் என்ற சொல்கிறோம் என்பதை கேட்;கும் என்றும் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் தமிழர்கள் தமது சொந்த நாட்டிலேயே இரண்டாம் தரப்பிரஜைகளாக நடத்தப்படுகின்றனர். பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரம் பெற்றபின்னரும் இந்த நிலை தொடர்கிறது. இதன் காரணமாகவே தமிழ் ஈழக்கோரிக்கை முன்வைக்கப்பட்டதாகவும் ஜெயலலிதா சுட்டிக்காட்டினார்.

இதைக்கண்ட தமிழின வாதிகள் புழகாங்கிதம் அடைந்துள்ளனர்.
சிறிலங்க அதிபர் ராஜபக்சவை போர்க் குற்றவாளியென்றும், இலங்கை நாட்டிற்கு எதிராக பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று தமிழக சட்டப் பேரவையில் தீ்ர்மானம் நிறைவேற்றியதற்காக தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இலங்கை மீது மத்திய அரசு பொருளாதாரத் தடை விதிக்க வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு மதிமுக பொதுச்செயலர் வைகோ வரவேற்பு தெரிவித்துள்ளார்.

தமிழினப் படுகொலை செய்த சிறிலங்க அதிபர் ராஜபக்சவை போர்க் குற்றவாளியென்றும், சிறிலங்க அரசிற்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்றும தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நாம் தமிழர் கட்சி வரவேற்றுள்ளது.
ஈழப் போராட்டத்தைப் பயங்கரவாதப் போராட்டம் எனத் தொடர்ச்சியாகக் கருத்துத் தெரிவித்துவந்த ஜெயலலிதா, இப்போது தனது நிலையை மாற்றிக் கொண்டுள்ளார். ஈழப் பிரச்சனையை மத்திய அரசை மிரட்டுவதற்கான துருப்புச் சீட்டாகப் பயன்படுத்துவதே ஜெயலலிதாவின் ஒரே நோக்கம். தனக்குத் தேவையானதை கருணாநிதியின் கட்சியோடு கூட்டுச் சேர்ந்திருக்கும் மத்திய அரசிடமிருந்து பெற்றுக்கொண்டதும், ஜெயலலிதா கருணாநிதியாக உருமாறிவிடுவார்.

தமிழக்த்தில் ஈழ ஆதரவுப் போராட்டங்களுக்கு அண்மைக்காலமாக முற்போக்கு முகம் ஒன்று உருவாகியிருந்தது. போராட்ட பலம் மிக்க சக்திகள் ஈழப் போராட்டத்தில் ஆளுமை செலுத்த ஆரம்பித்திருந்தனர். அதிகார வர்க்கத்திற்கு மட்டுமே பயன்பட்ட ஈழப் போராட்டம் மக்கள் வன்னிப் படுகொலைகளின்  பின்னர் மத்தியில் பரவ ஆரம்பித்திருந்தது. அதிகார வர்க்கத்தின் மீதும்  அரசுகளின்  மீதும் வெறுப்படைந்த பலர்  மக்கள் இயக்கங்களை நோக்கிச் செல்ல  ஆரம்பித்திருந்தனர். ஜெயலலிதாவின் தலையீடு இப்போராட்டத்தை மீண்டும் மக்களிடமிருந்து பிரித்து 80களில் இருந்தது போன்று மீண்டும் அதிகார மையங்களின் பிடியில் சிக்கவைக்கும் அபாயத்தை உருவாக்கும். மீண்டும் ஒரு முறை ராஜபக்ச எதிர்ப்பு சக்திகளை இந்திய உளவுத்துறையின் கரங்களில் ஒப்ப்டைப்பதற்கான செயற்பாடுகளின் ஆரம்பப் புள்ளி இதுவே.

மக்கள் பற்றும், மனிதாபிமானமும் மிக்க முற்போக்கு சக்திகள் ஜெயலலிதாவின் ஈழ ஆதரவு குறித்து எச்சரிக்கை அடையவேண்டும்.

Exit mobile version