பற்றீசிய பட்டனிஸ் தனது கருத்துப்படிவத்தில் “பெரும்பாலான குற்றச்சாட்டுக்கள் நாட்டின் மூத்த குடிமக்கள், உயர் இராணுவத் தலைமை, அத்தோடு ஜனாதிபதி ராஜபக்ச, அவரது சகோதரர்கள் ஈறாக எதிர்க்கட்சி வேட்பாளர் சரத் போன்சேகா ஆகியோர் மீது காணப்படுகின்றது” என்கிறார்.
“குற்றம் சாட்டப்பட்ட அரசு அதிகாரத்தில் இருக்கும் வேளையில் தனது உயர் அதிகாரிகளையும் தமது இராணுவத்தையும் தானே குற்றச்சாட்டுக்களை விசாரிக்கப் போவதாகக் கூறுவதை இதுவரைக்கும் எந்த உதாரணங்களிலும் பார்க்க முடியாது.” என்று அவர் மேலும் தெரிவிக்கிறார். இந்த கருத்துப்படிவம் அமரிக்க அரசுக்கு அனுப்புவதற்காக தூதுவரால் தயாரிக்கப்ப்பட்டது. இந்த வருடம் ஜனவரி 15 இல் கருத்துப் படிவம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இங்கு வேடிக்கை என்னவென்றால் இவளவையும் தெரிந்திருந்தும் அமரிக்க அரசோ அதன் ஆளுமைக்கு உட்பட்ட ஐக்கிய நாடுகள் சபையோ எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கவில்லை என்பதாகும். ஆக, இந்திய அரசின் அழுத்தங்களுக்கு உட்பட்ட அமரிக்க அரசு , சீன – இந்திய கூட்டு அதிகாரங்களுக்கு எதிரான அதிகாரமாக தன்னை நிலைனாட்டுவதற்குரிய ஆதரங்களாக இவற்றை கையிருப்பில் வைத்திருப்தையே விரும்புவது தெளிவாகிறது.
விக்கி லீக்ஸ் அமரிக்க இந்திய அரசுகளில் அதிர்ச்சி தரும் பல சமூக விரோதச் செயற்பாடுகளையும் அம்பலப்படுத்தியுள்ளது.
உலகில் தமது சொந்த அதிகார நலன்களுக்காக ஆயிரமாயிரமாய் கொலைசெய்யும் இந்த அரசுகளோ சமரசம் செய்து சாதிப்பது என்ற வழிமுறை தோற்றுப் போன ஒன்று. அவர்களுக்கு அழுத்தம் வழங்கி அடிபணிய வைப்ப்பது என்பதே வெற்றி கண்ட வழிமுறையாகும்.
புலம் பெயர் நாடுகளின் இணைய ஊடகங்கள் சில இலங்கை அரசின் நேரடியான ஊதுகுழல்களாக வெளிப்படையாகச் செயற்பட ஆரம்பித்துள்ள நிலையில் இவர்கள் விதைக்கும் நச்சுக்கருத்துக்களுக்கு எதிரான செயற்பாடுகளும் அதேவேளை தவறான போராட்டங்களும் எதிர்கொள்ளப்பட வேண்டும்.
பிரித்தானியாவில் மக்கள் போராட்டங்களும் பரவலான பிரச்சார நடவடிக்கைகளும் ஏதோ ஒரு குறித்த வெற்றியைப் பெற்றுள்ளன. அவற்றை மறுபடி புலி சார் வியாபரிகளின் பிடியிலிருந்து பாதுகாக்கவேண்டிய கடமை ஒவ்வொரு சமூகப்பற்றுள்ள மனிதனுக்கும் உண்டு.