ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைப் பேரவையின் 27 ஆவது கூட்டத்தொடர் இன்று ஜெனிவாவில்
ஆரம்பமாகிறது. எதிர்வரும் 26 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள இந்த கூட்டத்தொடரில் மனித உரிமை அலுவலகத்தினால் முன்னெடுக்கப்படும் விசாரணை குறித்த வாய்மூல அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்த 27 ஆவது கூட்டத் தொடரில் உலக நாடுகளின் மனித உரிமை நிலைமைகள் தொடர்பாகவும் பல நாடுகளின் பூகோள கால மீளாய்வு நிலைமைகள் குறித்தும் ஆராயப்படவுள்ளது.
இலங்கை விவகாரத்தைப் பொறுத்தவரை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணை குழுவின் ஏற்பாட்டாளர் சன்ட்ரா பெய்டா அல்லது புதிய மனித உரிமை ஆணையாளர் இந்த வாய்மூல அறிக்கையை வெளியிடவுள்ளார்.
கடந்த கூட்டத்தொடரில் இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான தீர்மானம் அமெரிக்க அரசால் முன்மொழியப்பட்டு பெரும்பான்மை ஆதரவோடு நிறைவேற்றப்பட்டது. இலங்கையின் இறையாண்மைக்கும் தன்னாதிக்கத்திற்கு பாதிப்பற்ற வகையில் இலங்கையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என இத்தீர்மானம் கோரியது. தமிழ்ப் பேசும் மக்களின் பிரிந்து செல்லும் உரிமையை நிராகரித்து போர் நடைபெற்ற வேளையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களை விசாரணை செய்ய வேண்டும் என்பதே தீர்மானத்தின் அடிப்படை. இறுதிக்கட்ட போரின் போது எந்த வித மனித உரிமை மீறலும் நடைபெறவில்லை என்றும், அப்படி ஏதாவது மனித உரிமை மீறல் சம்பவங்கள் நடந்திருந்தால் அது குறித்து நாங்களே விசாரணை நடத்துவோம் என்றும் இலங்கை அரசு அறிவித்தது.
ராஜபக்ச அரசு தீர்மானத்தை எதிர்ப்பதாகவும் அமெரிக்காவும் ஐ.நாவும் தம்மைத் தண்டிக்கப் போவதாகவும் அனுதாப வாக்குகளை சிங்கள மக்களிடமிருந்து பெற்றுக்கொண்டது.
இது தவிர அமெரிக்க அரசு இலங்கையை இராணுவ மயப்படுத்தி வருகின்றது. இலங்கை அரசுடன் இணைந்து நடக்கும் இந்த இராணுவ மயமாக்கலை மறைப்பதற்கே இத் தீர்மானங்களைப் பயன்படுத்துகின்றது.
கோத்தாபயவின் தலைமையில் இரண்டு மிகப்பெரும் தனியார் இராணுவ அமைப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவை இந்துசமுத்திரப் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன. பிரித்தானிய அரசு இத்தனியார் இராணுவ அமைப்பிற்கு ஆயுதங்கள் வழங்குவதற்கு அனுமதியளித்ததாகக் கூறுகிறது.
கண்ணி வெடிகளை அகற்றுகிறோம் என்ற அடிப்படையில் பலாலி வவுனியா போன்ற பிரதேசங்களில் அமெரிக்க இராணுவத்தளம் அமைக்கப்பட்டுள்ளது. வவுனியாவிலிருந்து சிறிய விமானங்கள் ஊடாக போக்குவரத்துக்களை மேற்கொள்ளும் அமெரிக்க இராணுவம், தாய்லாந்து டியாகோகார்சியா போன்ற இராணுவ நிலைகளுடன் நேரடியான தொடர்புகளைக் கொண்டுள்ளதாகக் கருதப்படுகின்றது.
2016 ஆம் ஆண்டு டியாகோகார்சியாவில் அமெரிக்க இராணுவம் நிலைகொண்டிருப்பதற்கான ஒப்பந்தம் முடிவிற்கு வந்த பின்னர் அத் தளத்தை இலங்கைக்கு மாற்றம் செய்யலாம் என சில ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இலங்கையில், குறிப்பாக வடக்கில் அமெரிக்க இராணுவப் பிரசன்னத்தை மறைப்பதற்காகவே போர்க்குற்ற விசாரணை என்ற நாடகம் நடத்தப்படுகிறதா என்ற சந்தேகங்கள் தெரிவிக்கப்படுகின்றன.
இராணுவத்த்தின் செயற்பாடுகள் வெளியில் தெரிவதில்லை. கொழும்பில் பிரபல பல்தேசிய வியாபாரி தம்மிக பெரேராவின் ஐந்து நட்சத்திர விடுதியான கிங்ஸ்பரி ஹொட்லிலிருந்தே ஹெலிகொப்டர்கள் ஊடாக அமெரிக்க இராணுவத்திற்கு உணவு எடுத்துச்செல்லப்படுகிறது. கடந்த 9 மாதங்களாக நிலை கொண்டுள்ள அமெரிக்கப் படைகளில் விமானப்படை மற்றும் கடற்படையினரும் அடங்குவதாக அமெரிக்காவின் பாதுகாப்பு இணையம் தெரிவிக்கிறது.
அமெரிக்க இராணுவத்தின் இணையத்தளம் இலங்கை இராணுவத்துடன் ஒத்துழைக்கிறோம் என்ற தலையங்கத்தில் தமது நிலைகள் குறித்துத் தெரிவித்திருக்கும் போது தமிழ்த் தலைமைகளோ, புலம்பெயர் இணையங்களோ தகவல்களை இருட்டடிப்புச் செய்கின்றன.
சாரிசாரியாக மக்களின் உயிரையும் வளங்களையும் இலங்கை பாசிச சர்வாதிகரிகளிடம் ஒப்படைத்து, மக்களை இரத்ததால் குளிப்பாட்டிய அதே தமிழ்த் தலைமைகள் அமெரிக்க இராணுவப் பிரசன்னம் தொடர்பாக கேள்வியெழுப்பக் கூடத் தயாரில்லை.
தாய்லாந்தை உலகத்தின் பாலியல் தொழிற்சாலையாக மாற்றிய அதே அமெரிக்க இராணுவம் இலங்கையில் நிலைகொள்ள ஆரம்பித்திருக்கும் போது கலாசாரக் காவல்படைகள் போல கருத்து வெளியிடும் பிற்போக்கு தமிழ்த் தலைமைகள் மௌனம் சாதிக்கின்றன.
இந்த நிலையில் மனித உரிமைகள் ஆணையகத்தின் கூட்டத்தொடர் ஆரம்பமாகிறது. கூட்டத் தொடரின் ஆரம்ப அமர்வில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் புதிய ஆணையாளர் செயித் அல் ஹுசைன் ஆரம்ப உரையை நிகழ்த்தவுள்ளார். அந்த உரையின்போது இலங்கை விவகாரம் குறித்தும் புதிய மனித உரிமை ஆணையாளர் பிரஸ்தாபிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
.அந்த வகையில் ஜெனிவாவில் உள்ள இலங்கையின் வதிவிட பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க தலைமையிலான தூதுக்குழு 27 ஆவது கூட்டத்தொடரில் கலந்து கொள்ளவுள்ளது. அத்துடன் சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து இரண்டு உயர் அதிகாரிகள் ஜெனிவாவுக்கான தூதுக்குழுவில் இணைந்துகொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.