Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கையில் இந்திய முதலாளிகளும்…முதலீடுகளும்.

இலங்கையில் மேற்கொள்ளவிருக்கும் திட்டங்கள் பலவற்றுக்கு இலங்கை அரசின் ஒப்புதலை இந்திய நிறுவனங்கள் பெற்றுவிட்டன. எஞ்சிய திட்டங்களுக்கு ஒப்புதல் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் திட்டங்களைத் தீட்டத் தொடங்கியிருக்கின்றன. லார்சன் அண்ட் டியூப்ரோ நிறுவனம் சுமார் 250 கோடி ரூபாய் மதிப்புள்ள பல மாடி வர்த்தக வளாகம் கட்டும் பணிக்கான ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது. இதற்கான இடமும் தேர்வு செய்யப்பட்டுவிட்டது.

இத்தகவலை இலங்கை முதலீட்டு வாரிய இயக்குநர் சி. இக்னேஷியஸ் தெரிவித்துள்ளார். இந்நிறுவனம் ஏற்கெனவேமேற்கொண்டுள்ள இதே போன்ற திட்டப்பணி அடுத்த ஆண்டில் முடிவடையும் என தெரிகிறது.

அத்துடன் 26 அடுக்கு குடியிருப்பு வளாகம், யூரியாவைச் சேமித்து வைக்கும் மிகப் பெரிய கிடங்கு, உர நிறுவனத்துக்கான பிரில் கோபுரம் ஆகியவற்றை லார்சன் அண்ட் டியூப்ரோ நிறுவனம் தயாரித்து அளிக்கவிருக்கிறது. இலங்கை மின் வாரியத்துக்குத் தேவைப்படும் மின்சார கம்பிவடங்களைத் தாங்கும் உயர் அழுத்த மின் கோபுரங்களையும் இந் நிறுவனம் தயாரித்து அளிக்க உள்ளது. கொழும்பு நகரின் புறநகர்ப் பகுதியில் குடியிருப்பு வீட்டுமனைகளைக் கட்டித் தரும் ஒப்பந்தத்தை கிரீஷ் புரவங்கரா நிறுவனத்தின் துணை நிறுவனமான கங்காதர் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் லிமிடெட் நிறுவனம் பெற்றிருக்கிறது.

கொழும்பு நகரிலேயே வீடுகளை கட்டித்தரும் ஒப்பந்தத்தை புரவங்கரா பெற்றிருக்கிறது. 25 ஏக்கர் பரப்பில் மிகப்பெரிய துணை நகரமாகவே வீடுகள் கட்டப்படுகின்றன. ஒவ்வொரு வீடும் சுமார் 2 லட்சம் அமெரிக்க டாலர்களாக இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது.

இந்தியாவின் மிகப்பெரிய மொபைல் போன் நிறுவனமான பாரதி ஏர்டெல், ஏர்டெல் பெயரில் இலங்கையில் ஏற்கெனவே சேவைகளைத் தொடங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை மின் வாரியத்துடன், தேசிய அனல் மின் கார்ப்பரேஷன் (என்.டி.பி.சி.) நிறுவனமும் இணைந்து 1,000 மெகாவாட் மின்னுற்பத்தித் திறனுள்ள அனல் மின் நிலையத்தை கட்டித் தரும் பணியில் ஈடுபட்டுள்ளது.

கிழக்கு திரிகோணமலையில் சாம்பூர் என்ற இடத்தில் நிலக்கரியை எரிபொருளாகப் பயன்படுத்தி 1,000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் அனல் மின் நிறுவனத்தை நிறுவும் ஒப்பந்தத்திலும் என்.டி.பி.சி. கையெழுத்திடப் போகிறது. கெய்ர்ன் இந்தியா என்ற தனியார் எண்ணெய் வள நிறுவனமும் இலங்கையில் எண்ணெய் வள கண்டுபிடிப்புப் பணியில் ஈடுபடுவதற்கான ஒப்பந்தத்தைப் பெற்றிருக்கிறது.

எச்.சி.எல். மெபாசிஸ், அசென்சர் போன்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் இலங்கையில் தங்களுடைய பணிகளைத் தொடங்க ஆர்வமாக உள்ளன. அயல்பணி ஒப்படைப்பு அலுவலகம் திறக்கவும், மென் பொருள்களை அளிக்கவும் அவை தயாராக இருக்கின்றன. ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, ஆதித்ய பிர்லா குழுமம், டாடா குழுமம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், அசோக் லேலண்ட் ஆகிய நிறுவனங்களும் இலங்கையில் தொழில், வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version