தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன் கூறுவது போன்று இலங்கை சிறைச்சாலைகளில் அரசியல் கைதிகள் எவரும் இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. சிறையில் உண்ணாவிரதம் மேற்கொண்டுவரும் சிறை கைதிகள் குறித்து இரா.சம்பந்தன் நேற்று (22) பாராளுமன்றில் ஆற்றிய விசேட உரைக்கு பதில் அளிக்கும் வகையில் இன்று (23) பாராளுமன்றில் உரையாற்றிய அவை முதல்வர், அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பந்தன் சொல்வது போல் அரசாங்கத்தால் எந்தவொரு அரசியல் கைதிகளும் தடுத்து வைக்கப்படவில்லை என்பதை பொறுப்புடன் கூறிக்கொள்கிறோம். இப்போது சிறை மற்றும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அனைத்து கைதிகளும் விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்பதோடு நீதிமன்றின் முன் குற்றப்பத்தரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணைக்கு முகங்கொடுத்து வரும் சந்தேகநபர்களாவர்.
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள 359 கைதிகளும் வழக்குத் தாக்கல் செய்யும் எதிர்பார்ப்புடன் 309 சந்தேகநபர்களும் தற்போது சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அரசியல் சிறை கைதிகள் அல்ல. இவர்களை அரசியல் கைதிகள் என தெரிவித்து சம்பந்தன் பாராளுமன்றையும் சர்வதேசத்தையும் திசைதிருப்பியுள்ளமை கவலைக்குரியது.
தீவிரவாதத்துடன் தொடர்புபட்ட சந்தேகநபர்களாவர். ஊனமுற்ற கைதிகள் சிறையில் இருப்பதாக சம்பந்தன் கூறனார். அவர்கள் ஊனமுற்றது தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதனாலேயே. அதனால் அவர்களை உடனடியான விடுதலை செய்ய முடியாது. இவர்கள் நீதிமன்றின் ஊடாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு சட்ட விதிமுறை ஊடாகவே விடுதலை செய்யப்படுவர்.
புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் மீண்டும் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக வாக்குமூலம் கிடைத்துள்ளதால் சிலர் மீண்டும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். 350 பேர் இவ்வாறு மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீதிமன்ற உத்தரவின்படி 668 கைதிகள் சிறை வைக்கப்பட்டுள்ளனர். சுய விருப்பத்தின் பேரில் நீதிமன்ற நடவடிக்கை மூலம் 672 கைதிகள் புனர்வாழ்வு பெறுகிறன்றனர். 241 பேர் தீவிரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் நீண்ட விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளதால் விரைவில் விடுதலை செய்ய முடியாது. வழக்கு தாக்கல் செய்ய எதிர்பார்த்துள்ள கைதிகள் குறித்து அரசு உடன் நடவடிக்கை எடுக்கும். இது குறித்து சிறைசாலை அமைச்சரும் அவரது குழுவும் விரைந்து செயற்படுகின்றனர்.
சிறையில் 229 கைதிகள் உண்ணாவிரதம் இருக்கின்றனர். சிறையில் வழங்கும் உணவுகளை மாத்திரம் இவர்கள் உண்பதில்லை. வெளியில் இருந்து வரும் உணவுகளை உண்பதாக தகவல் கிடைத்துள்ளது.”
இவ்வாறு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பாராளுமன்றில் இன்று (23) தெரிவித்தார்.