கிறீஸ் மனிதனின் இனச்சுத்திகரிப்பு நடவடிக்கை இலங்கையில் தமிழ்ப் பேசும் முஸ்லீம்கள் மீதும் கட்டவிழ்த்துவிடப்பட்ட போது அவர்களின் அரசிற்கு எதிரான எழுச்சி புத்துணர்வு தருவதாக அமைந்தது. தமிழ்ப் பேசும் முஸ்லீம் தேசிய இனம் ஏனைய ஒடுக்கப்படும் தேசிய இனங்களோடு இணைந்து பேரினவாதப் பாசிச அரசிற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்கும் புதிய அரசியல் புறச்சூழலை ராஜபக்ச குடும்ப அரசு உருவாக்கியுள்ளது. ஒருபுறத்தில் பேரினவாத அரசும் மறுபுறத்தில் தமிழ் இனவாதப் போராட்டமும் முஸ்லீம் தமிழர்களுக்கும் ஏனைய சிறுபான்மையினருக்கும் இடையே திட்டமிட்டு ஏற்படுத்திய முரண்பாடுகளை முஸ்லீம்கள் இனம்காண ஆரம்பித்துள்ளனர். ஒடுக்கும் ராஜபக்ச அரசிற்கு எதிரான அவர்களின் குரல் முன்னெப்போதையும் விட பலமாக ஒலிக்கின்றது.
அனுராதபுரத்தில் பல நூறு ஆண்டுகள் பழமைமிக்க மசூதியை புத்த பிக்குகள் குழுவொன்று இடித்துத் தரைமட்டமாக்கியது. பேரினவாத ஊடகங்கள் மசூதியை இடித்தவர்களில் படங்களைப் பிரசுரித்து பாராட்டுத் தெரிவித்தன.
பௌத்தர்கள் புனிதமாக கருதும் ஒரு இடத்தில் அது உள்ளது என அதனை இடிப்பதற்காக சென்றிருந்த குழுவுக்கு தலைமை ஏற்றிருந்த பௌத்த பிக்கு கூறினார்.
பாபர் மசூதியைஅ இடித்தவர்கள் கூறிய அதே வார்த்தைகள்.
இதற்குப் பதிலளித்த ராஜபக்ச குடும்பத்தின் பிரதான கொலையாளியான கோதாபய ராஜபக்ச மசூதியை மீண்டும் கட்டித்தருவது குறித்த நடவடிக்கையை மேற்கொள்வது தனது வேலையல்ல எனத் திமிரோடு கூறியிருக்கின்றார்.
மசூதியை தாம் தான் இடித்ததாக பௌத்தபிக்குக்கள் குழுவொன்று வெளிப்படையாக உரிமை கோரியும் அவர்களுக்கு எதிராக இலங்கை அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. சிங்கள-பௌத்த மேலாதிக்க உணர்விற்கு தூபமிட்டு வளர்க்கும் இலங்கை அரசு வடகிழக்குத் தமிழத் தேசிய இனத்தைப் போன்றே முஸ்லீம் தமிழ்த் தேசிய இனத்தையும் மலையக தமிழ்த் தேசிய இனத்தையும் தமது அடிமைகளாக்க முற்படுகின்றது.
அரசிற்கு எதிரான போராட்டத்தை வெறும் மதவாதப் போராட்டமாகக் குறுக்கிக் கொள்ளாது, ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களோடும், சிங்கள மக்கள் மத்தியிலுள்ள ஒடுக்கப்படும் மக்கள் பிரிவினரோடும் இணைந்த மக்கள் விடுதலைக்கான போராட்டமாக முஸ்லீம் தமிழ்த் தேசிய இனத்தைச் சார்ந்தோர் முன்னெடுக்கும் போதே வெற்றியை நோக்கிய நகர்வாக அது அமையும்.