இலங்கைத் தமிழரின் பிரச்சனை பற்றித் தமிழகக் கட்சிகட்கு ஏற்படும் அக்கறை இலங்கையின் தேசிய இனப்பிரச்சனை பற்றிய புரிதலின் அடிப்படையிலானதல்ல. வேளைக்கு ஒரு பேச்சுப் பேசுகிற தமிழக அரசியல் கட்சிகளிடம் அப்படி எதையும் எதிர்பார்க்க ஒரு நியாயமும் இல்லை. என்றாலும் இலங்கைத் தமிழரின் அவலங்கள் பற்றித் தமிழக மக்கள் சரிவர அறியாமல் இருக்கும்படி கட்சிகளும் பத்திரிகைகளும் பலகாலமாகவே கவனித்துக் கொண்டன என்பது நாம் கவனிக்க வேண்டிய உண்மை.
இலங்கைத் தமிழரின் அவலம் பற்றிய கவன ஈர்ப்புப் பேரணிகளும் கூட்டங்களும் உண்ணா நோன்புகளும் சென்ற ஆண்டின் இறுதி மாதங்களிலிருந்து பெரிய அளவில் நடைபெறுகின்றன. ஆனால் இலங்கைத் தமிழரின் அவலம் என்ன என்றோ நீண்டகால நோக்கில் அதை தீர்ப்பதற்கான வழிவகைகள் என்னவென்றோ குறுகிய காலத்திற் செய்யக் கூடியன எவையென்றோ ஒரு அடிப்படை உடன்பாட்டைக் காண்பதற்கு இயலாதவர்களாகவே எல்லாரும் இருந்து வருகிறார்கள் இரண்டு சட்டமன்ற இடதுசாரிக் கட்சிகளுங் கூடச் சுயநிர்ணயம் பற்றிப் பேசவில்லை. சி.பி.ஐ. சார்பில் இந்திய மாநிலங்களின் அதிகாரங்களை விடக் கூடிய அதிகாரங்கொண்ட மாநில சுயாட்சி பற்றிப் பேசியுள்ளது. சி.பி.எம். அதிகாரப் பகிர்வும் சுயாட்சி பற்றியும் பேசியுள்ளது. இருப்பினும் இலங்கையின் தேசிய இனப் பிரச்சினையை வெறுமனே சிங்களவர்-தமிழர் மோதலாகப் பார்க்கிற போக்கே மேலோங்கி உள்ளது.
1987ன் இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையிற் தீர்வைக் காணலாம் என்கிற கண்ணோட்டம் பலரிடையே உள்ளது. இன்றைய அவலத்திற்கு அதன் பங்களிப்பு என்ன என்கிற எண்ணமே எவரிடமும் இல்லை. உண்மையைச் சொல்வதானால் முக்கியமான சட்டமன்ற அரசியல் கட்சிகளிடையே காணப்படும் அக்கறை இலங்கைத் தமிழரின் பிரச்சனை பற்றித் தமிழக மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள கொதிப்புணர்வு காரணமானதே ஒழிய எந்த விதமான நேர்மையுள்ள அக்கறையின் விளைவானதும் அல்ல.
கருணாநிதி மட்டுமன்றி அவரது முழுக் குடும்பமும் நாடகமாடுகிறது. கருணாநிதி 1980களில் காட்டிய அக்கறைக்கும் இன்று காட்டுகிறதற்கும் ஒரு வேறுபாடும் இல்லை. எதைச் சொன்னால் டில்லியையும் பகைக்காமல் தமிழ்த் தேசியவாதிகளையும் பகைக்காமல் தன்னையும் தன் குடும்பத்தையும் வளப்படுத்தி அரசியல் அதிகாரத்தில் வைத்திருக்க முடியுமோ அதையெல்லாம் அவர் சொல்லுவார். அவருடைய சொல் மட்டுமல்ல தமிழகத்தில் எவருடைய சொல்லுமே டில்லி அதிகாரத்தின் காதில் விழாது என்று அவருக்குத் தெரியும். மற்றவர்கட்குந் தெரியும். தமிழகத்தில் ஒரு பெரிய அரசியற் புயல் வீசி அது இந்திய அரசாங்கத்தின் உறுதிநிலையைக் குலைக்கும் என்றால் ஒழிய, டில்லி எதற்குமே அசைந்து கொடுக்காது. ஆனால் அதற்குச் சட்டமன்ற அரசியலில் தங்களைத் தக்கவைத்துக் கொண்டு டில்லியிலும் பதவிகளுக்குத் தூண்டில் போடுகிற கட்சிகள் ஆயத்தமில்லை.
கடந்த ஆறுமாத நிகழ்வுகளைக் கவனித்துப் பார்த்தால் கட்சிகளின் உண்மையான நோக்கங்கள் விளங்கும். தி.மு.க. டில்லியை மீறி எதையுமே செய்யாது என்பது மட்டுமன்றி டில்லிக்குச் சங்கடம் ஏற்படுத்துகிற விதமாகவும் எதையுமே சொல்ல மாட்டாது. மக்களை விடுவிக்குமாறு ராஜபக்~ விடுதலைப் புலிகளுக்கு விடுத்த 48 மணி நேரக் கெடுவைத் தி.மு.கவும் தமிழக காங்கிரஸ{ம் மட்டுமே போர் நிறுத்தம் என்றும் பிரணப் முகர்ஜியின் இலங்கைப் பயணத்தின் விளைவு என்றும் இந்திய மத்திய அரசை மெச்சின. மத்திய அரசு கூட அவ்வாறு எதையுமே சொல்லவில்லை என்பது கவனத்துக்குரியது. மற்றப்படி கொட்டும் மழையில் மனிதச் சங்கிலி, ஈழத் தமிழர் உதவி நிதி முதலான சகல நாடகங்களும் இலங்கைப் பிரச்சனையில் இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டால் ஏற்பட்ட சங்கடத்திலிருந்து கருணாநிதி தன்னைக் காப்பாற்றுகிற முயற்சிகளே. இவையெல்லாம் ஏன் தேவைப்பட்டன என்று கேட்டால் தி.மு.க. ஆட்சி பற்றிய அதிருப்தி தமிழகத்தில் மேலோங்கி இருந்த சூழ்நிலையில் இலங்கைத் தமிழர் மீதான இன ஒழிப்பு நடவடிக்கையில் டில்லியும் உடந்தை என்பதுடன் தி.மு.கவும் அதற்கு ஓத்துழைக்கிறது என்ற உண்மை வெளியானால் ஜனவரி 2009ல் நடந்த திருமங்கலம் இடைத் தேர்தலில் தி.மு.கவுக்குக் கேடு என்று யாரும் நினைத்திருக்கலாம். உண்மை அதுவல்ல. தேர்ல்தல்களை வெல்ல எத்தனையோ வழிகள் உள்ளன. அவற்றிலெல்லாம் தேர்ச்சி பெற்றது தி.மு.கவின் குடும்பத் தலைமை. அதைத் திருமங்கலத்தில் பணத்தைவாரி இறைத்தும் அதிகாரத் து~;பிரயோகத்தின் மூலமும் செய்து காட்டியும் உள்ளது. திருமங்கலம் வெற்றி முக்கியமானது. அதைப் பெறுவதற்கு ஈழத் தமிழர் பற்றிய கவன ஈர்ப்பு முக்கியமானது. ஏனென்றால் அக் கவன ஈர்ப்பு தமிழக மக்களின் உண்மையான பிரச்சனைகளில் இருந்து கவனத்தைத் திசை திருப்ப உதவியுள்ளது.
தி.மு.கவின் தோழமைக் கட்சிகளாக இருந்து வந்த, இருந்து வருகிற பா.ம.க, விடுதலைச் சிறுத்தைகள் ஆகியன இன்னொரு வகையான நாடகம் ஆடியுள்ளன. விடுதலைப் புலிகளை ஆதரிக்கிறார்கள் என்று உணர்த்துகிற விதமாக அவற்றின் செயற்பாடுகள் அமைந்தன. ஆனால் தி.மு.க. ஆட்சியைக் கவிழ்க்கவோ டில்லியில் காங்கிரஸ் ஆட்சியை ஆட்டங்காணச் செய்யவோ அவை தயாராக இருக்கவில்லை. மிக அண்மையிலேயே பா.ம.க. தலைமை தி.மு.கவுக்கு எதிராகத் திரும்பியுள்ளதற்கு வரவுள்ள பாராளுமன்ற தேர்தல் தான் காரணமாகும். இச் சிறிய கட்சிகளின் வாக்கு வங்கியிற் கணிசமான பகுதி ஈழத் தமிழர் பற்றிய அக்கறை மிக்கது என்பதை விடத் தமிழ்த் தேசியவாத உணர்ச்சி அரசியலைக் கடந்த காலத்தில் வெகுவாகப் பயன்படுத்தி வந்துள்ள இக் கட்சிகளின் அரசியல் ஆதரவுத் தளம் முற்றிலுஞ் சாதி அடிப்படையிலானது என்பதும் கவனிக்கத் தக்கது.
இலங்கைத் தமிழர்கட்கு ஆதரவு தி.மு.க ஆட்சியுடனும் நட்பு என்கிற விதமாக நாடகம் போடுவதில் மேற்படி கட்சிகட்குச் சிறிதுஞ் சளைக்காதனவாகவே திராவிடர் கழகமும் பழ. நெடுமாறன் போன்றவர்களும் இருந்து வருகிறார்கள்.
கோபாலசாமி விடுதலைப் புலிகட்கான தனது ஆதரவு நிலைப்பாட்டை மறைக்காதவர் என்றாலும் அவரது கட்சியின் அரசியல் நிலைப்புக்கு அவரால் தி.மு.கவுடனோ அ.தி.மு.கவுடனோ கூட்டணி அமைக்காமல் இருக்க இயலாது. பத்தாண்டுகட்கு முன்பு சந்தித்த தேர்தல் தோல்வியிலிருந்து அவர் கற்றுக் கொண்ட பாடம் அது. அதை விட டில்லியுடன் அவர் ஏற்படுத்திக் கொண்ட தொடர்புகள் இந்திய மேலாதிக்கத்துடன் அவரை நெருக்கமாக அடையாளப்படுத்துகின்றன. தமிழக அரசியல்வாதிகளில் இந்தியாவுக்கு எதிரான ‘சீன மிரட்டலைப்” பற்றி அதிகம் பேசுகிறவராக அவர் இருந்து வருவது அவரது அமெரிக்க விசுவாசத்தைக் காட்டுகிறது என்பதும் கவனிக்கத் தக்கது.
வெளிவெளியாகவே விடுதலைப் புலி எதிர்ப்புப் பேசுகிற முக்கியமான தலைவர்களாகக் காங்கிரஸ் தலைவர்களும் ஜெயலலிதாவும் இருந்து வருகின்றனர். இவர்களை விட, வலிய ஊடக நிறுவனங்கள் யாவும் விடுதலைப் புலிகட்கு எதிராகவே இருந்து வந்துள்ளன. ஜெயலலிதா இலங்கைத் தமிழருக்குச் சுயநிர்ணய உரிமை பற்றிப் பேசுகிறார். ஆனால் சுயநிர்ணயம் என்பது எதைக் குறிக்கிறது என்று அவர் தெளிவு படுத்தவில்லை. எனினும் வேறெந்தக் கட்சியும் கோராத ஒன்று இது. மறுபுறும் விடுதலைப் புலி எதிர்ப்பில் காங்கிரஸ{ம் தி.மு.கவும் சமரசம் செய்கிறதாகக் குற்றஞ் சாட்டவும் விடுதலைப்புலிகளை ஆதரிக்கும் கருணாநிதி மீது கடும் நடவடிக்கை தேவை என வற்புறுத்தவும் கிடைக்கிற வாய்ப்புக்களை அவர் தவற விடுவதில்லை. அது மட்டுமன்றி விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக வாய்திறப்பதே தண்டனைக்கு உரிய தேசத் துரோகம் என்று சொல்லுகிற அளவுக்கு அவரது நிலைப்பாடு கருத்துச் சுதந்திரத்தை மறுப்பதாக உள்ளது.
சோனியா காந்தி ராஜீவ் கொலை வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்ட நளினியைச் சந்திக்க மகள் பிரியங்காவைச் சென்ற ஆண்டு அனுப்பியது முதலான பல வேறு நாடகங்களையும் இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகளும் ஊடகங்களும் தமக்கேற்றவாறு வியாக்கியானஞ் செய்தனர். அதனால் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் நடுவில் இதன் விளைவாக இந்தியாவைப் பற்றியும் காங்கிரஸ் மேலிடத்தைப் பற்றியும் ஒரு நெகிழ்வான நிலைப்பாடும் ஏற்பட்டது. இவற்றின் நடுவிலேயே இந்திய அரசு இலங்கை அரசுடனான ராணுவ ஒத்துழைப்பை மிகவும் வலுப்படுத்திக் கொண்டது.
தமிழர் தேசியக் கூட்டணியில் சிலர் அண்மைக்காலமாக பாரதிய ஜனதாக் கட்சியுடன் உறவுகளை வளர்க்க முற்பட்டு வந்துள்ளனர். ஆனாலும் பாரதிய ஜனதாவின் தமிழகத் தலைமை காட்டுகிற அனுதாபமான போக்கு டில்லியில் அதிகாரத்துக்கு வரக்கூடியோரிடம் இருக்குமா? ஏனெனில் அவர்கள் ஆண்ட போது இருந்த நிலைப்பாடு இலங்கைத் தமிழருக்குச் சாதகமான ஒன்றல்ல. இந்த நாடகம் தமிழகத்தில் இலங்கைத் தேசிய இனப் பிரச்சனை தொடர்பாக ஜெயலலிதாவிடமும் கருணாநிதியிடமிருந்தும் விலகிப் போகக் கூடியோரைக் கவருகிற ஒரு உபாயம் என்பதற்கு மேலாக வேறெதுவுமாக இருக்க இயலாது. ஏனெனில் ‘சோ” ராமசாமி போன்ற தமிழக இந்தத்துவவாதிகள் எப்போதுமே விடுதலைப் புலிகளை மட்டுமன்றித் தமிழ்த் தேசிய வாதத்தையும் அறவே வெறுப்பவர்களாவர்.
இரண்டு பாராளுமன்ற இடதுசாரிக் கட்சிகளும் இலங்கைத் தமிழர் விடயத்திற் காட்டுகிற அக்கறை அவர்களது முன்னைய நிலைப்படுகளுடன் ஒப்பிடுகையில் வரவேற்கத் தக்கது. இதில் மாநில மட்டத்து நிலைப்பாட்டைத் தேசிய மட்டத்திலும் அக் கட்சிகள் ஏற்றுள்ளமை குறிப்பிடத் தக்கது. எனினும் சுயநிர்ணய உரிமையைப் பிரிவினையுடன் குழப்பி அது பற்றிப் பேசத் தயங்குவது பாதகமான ஒரு அம்சம். அதை விட இக் கட்சிகள் பலவிதமான பாராளுமன்ற தேர்தற் கூட்டணிக் கணக்குக்களைப் போட்டுத் தேர்தலில் வெல்ல முயல்கிறதால் இக் கட்சிகள் அதிகாரத்திற்கு வரும் கூட்டணி ஒன்றில் இருந்தாலும் அதற்கு ஆதரவு தருகிற ஒரு முக்கியமான அரசியல் சக்திகளாக இருந்தாலும் இலங்கைத் தமிழர் பிரச்சனையிற் தமிழகத்தில் செய்யக் கூடிய பிரசாரத்துக்கு அப்பால் இக் கட்சிகளால் எதுவும் ஆவதற்கு இல்லை.
தமிழ்த் தேசியவாதிகள், திரும்பத் திரும்ப, மக்கள் மத்தியில் அதிகம் செல்வாக்கு அற்றவர்களாகவும் எவ்வளவுதான் வாய்வீரம் பேசினாலும் ஜெயலலிதாவுடனோ கருணாநிதியுடனோ ஒன்டிக் கிடக்கிறவர்களுமான தமிழகக் கட்சிகளையும் பிரமுகர்களையுமே நம்பி இருக்கின்றனர்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வெகுசன அபிப்பிராயத்தைத் தட்டியெழுப்பி டில்லி வரை ஈழத் தமிழருக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கு செய்தளவுக்குத் தமிழகத்தின் ‘நிரந்தர” விடுதலைப் புலி ஆதரவாளர்களால் செய்ய இயலாதது ஏன் என்பது சிந்தனைக் குரியது.
பாராளுமன்ற இடதுசாரிகள், திரிபுவாதிகளாய் இருந்தாலுங் கூட, வெகுசன மட்டத்திற் செயற் படுகிறவர்கள் என்பது முக்கியமான ஒரு உண்மை. அவர்களைவிட நம்பகமாக ஆதரவுச் சக்திகளாக இருக்கக் கூடியவர்கள் மாக்ஸிய-லெனினியப் புரட்சிகர சக்திகள் என்பதும் கவனத்துக்கு உரியது. இவ்வாறு வெகுசனத் தளத்திற் செயற்படுகிற சக்திகளது ஆதரவு மட்டுமே தொடர்ச்சியாகத் தமிழகத்தில் ஈழத் தமிழருக்கு ஆதரவாக குரலை எழுப்பிக் கொண்டிருக்கின்றன. அவை தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க. போன்ற பச்சையான சந்தர்ப்பவாத ஏகாதிபத்தியதாசர்களது நாடகங்களை அம்பலப் படுத்தி வருகின்றன. அதன் மூலம் மக்கள் எழுச்சிகளைத் திசைதிருப்பி அவற்றைக் கருணாநிதி குடும்பமும் ஜெயலலிதாவும் தங்களை அதிகாரத்தில் வைத்திருக்கிறதற்குப் பயன்படுத்தாமல் நேரடியாகவே டில்லிக்கு நெருக்குவாரம் கொடுக்கச் செய்ய இயலும். ஆனால் அத்தகைய நேர்மையான மாச்சிச-லெனினியக் கட்சிகள் நடாத்தும் ஈழத் தமிழர் ஆதரவு வெகுஜன இயக்கங்களைத் தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் ஊடகங்கள் முன்னிலைப் படுத்தாததுடன் மறைத்தும் வருகின்றன என்பது கவனத்திற்கு உரியாதாகும்.
டில்லியால் இலங்கையிற் போர் நிறுத்தத்தையோ நியாயமான தீர்வையோ திணிக்க இயலாது என்பதை விட முக்கியமானது, டில்லியிடம் ஒரு ஈழத் தமிழர் விடுதலை விரோதப் போக்கு உள்ளமையாகும். அது இந்திய விஸ்தரிப்புவாத நோக்கங்களுடன் தொடர்புடையது. எனவே ஈழத் தமிழர் ஆதரவு இயக்கங்கள் வற்புறுத்த வேண்டியது இந்தியக் குறுக்கீட்டை அல்ல. மாறாக இந்தியா இலங்கையின் உள் விவகாரங்களிற் தலையிடாமல் பேரினவாத ஆட்சிக்கு ஒத்துழைப்பு வழங்குவதை நிறுத்த வேண்டும் என்பதே பிரதான கோரிக்கையாக அமைய வேண்டும்.
மற்றப்படி ஒரு தேசிய இனமோ ஒரு தேசிய சிறுபான்மைச் சமூகமோ ஒடுக்கு முறைக்கும் இன ஒழிப்புக்கும் உள்ளாகிற போது அதை எதிர்த்துக் குரல் கொடுக்கிற ஒரு கடமை எல்லா நாடுகட்கும் உண்டு. ஆனால் அதற்கும் மேலாக இலங்கையில் இந்தியாவின் அரசியல் ராணுவ பொருளாதார முதலீடுகள் பெருகி உள்ள நிலையில் இந்தியக் குறுக்கீட்டை வற்புறுத்துவது இலங்கைத் தமிழரதும் சகல தேசிய இனங்களதும் நலனுக்கு உகந்ததாகாது. அது தமிழக மக்களுக்கும் நன்மைதராது.
இந்திய அரசின் சகல தேசிய இன ஒடுக்கற் செயற்பாடுகளையும் எதிர்க்கக் கூடியவர்களது கைகளை வலுப்படுத்துவதன் மூலமே ஈழத்தமிழரின் விடயத்தில் இந்திய ஆட்சியாளரின் வஞ்சகத்தை முறியடிக்கலாம்.