இலங்கைக்கு புதிய அரசியலமைப்பொன்று தேவை என்பது எனது கொள்கையாகும். இவ்வாறானதொரு புதிய அரசியலமைப்பில் ஒற்றையாட்சி வலியுறுத்தப்படுவதை நான் எதிர்க்கவில்லை. ஆனால், ஒற்றையாட்சிக்குள் மாகாண சபைகள், அதிகாரப் பரவலாக்கல் உள்ளடக்கப்பட வேண்டும். மாகாண சபைகள் இல்லாத ஒற்றையாட்சியை ஏற்றுக்கொள்ள முடியாது.
இவ்வாறு தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாடு தொடர்பான அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். அமைச்சர் பதவிக்காக இனக்கொலை அரசோடு இணைந்துகொண்ட வாசுதேவ விற்கு இடைக்கிடை மனச்சாட்சி உறுத்தும் போது இவ்வாறு அறிக்கைகள் வெளிவரும்.
அத்தோடு ஒற்றையாட்சிக்குள் நாடு பிரியும் என்ற விவாதம் அர்த்தமில்லாததாகும். இந்தியாவில் இந்த முறைமைதான் உள்ளது. அங்கு அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டு மாநில ஆட்சி நடைபெறுகிறது. அங்கு நாடு பிரிந்ததா, இல்லையே. மக்கள் அதிகாரங்களோடு வாழ்கின்றனர்.
பெரும்பான்மை இன சிங்கள மக்களின் ஆதரவுடன் மட்டுமே புதிய அரசியலமைப்பு உருவாகினால் அது வெற்றிபெறப் போவதில்லை. தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவும் இதற்கு கிடைக்க வேண்டும். இல்லாவிட்டால் அது நடைமுறை சாத்தியமாகாது.