Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இறுமாப்பு வேண்டாம் –முதல்வர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம்!

தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தலில் திமுக வரலாறு காணாத வெற்றியைப் பெற்றுள்ளது. எதிர்க்கட்சியான அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இது இந்தியா முழுக்க பேசு பொருளாகியிருக்கும் நிலையில் இந்த வெற்றி தொடர்பாக திமுக தலைவர்கள் தொண்டர்களுக்கு எழுதியுள்ள மடலில்,

“தமிழக மக்கள் தங்களின் நலன் காக்கும் நம்பிக்கை இயக்கமான திமுகவின் மீது பாசமும் பற்றும் கொண்டு, 2019 நாடாளுமன்றத் தேர்தலில் நாடே வியக்கும் மகத்தான வெற்றியையும், 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் கூடிய பெருமிதமிக்க வெற்றியையும் வழங்கியதைப் போலவே, 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் வரலாறு போற்றும் மிகப் பெரும் வெற்றியை வழங்கியிருக்கிறார்கள்.

10 ஆண்டுகாலம் தமிழகத்தின் உள்ளாட்சி அமைப்புகளில் இருள் மண்டிக் கிடந்திருந்த நிலையில், கடந்த அதிமுக ஆட்சியின் கடைசிக் கட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்பட்டது. கிராமப்புறங்களுக்கு மட்டுமான தேர்தல் என்பதால் எப்படியாவது திமுகவின் வெற்றியைத் தடுத்துவிட முடியும் என, ஆட்சியதிகாரத்தில் இருந்த அதிமுக போட்ட கணக்கு தப்புக்கணக்காகி, தமிழக உள்ளாட்சித் தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக, எதிர்க்கட்சியான திமுக 50 விழுக்காட்டுக்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்றது.

அதிகாரம் – செல்வாக்கு – பணபலம் – ஆணவம் – அரட்டல் உருட்டல் என, அதிமுகவின் அத்தனை அஸ்திரங்களையும் தொண்டர்களின் கடும் உழைப்பு – மக்களின் பெரும் ஆதரவு எனும் இரு கணைகளால் எதிர்கொண்டு திமுக இந்த வெற்றியைப் பெற்ற நிலையில், திமுக வென்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதி ஆதாரங்களையும் பிற வசதிகளையும் வழங்குவதில் அன்றைய அதிமுக அரசு வேண்டுமென்றே பாரபட்சம் காட்டியது.

எனினும், மக்கள் பணியாற்றுவதில் சளைக்காத திமுகவினர், உள்ளாட்சி அமைப்புகளில் திறம்படப் பணியாற்றி, மக்களின் நம்பிக்கையைப் பெற்றனர். சட்டப்பேரவைத் தேர்தலிலும் அந்த நம்பிக்கை, வெற்றியாக விளைந்தது. கடந்த ஆட்சியில், மாவட்ட எல்லைகள் அவை சார்ந்த ஊராட்சி அமைப்புகளுக்கான எல்லைகளை வரையறை செய்வதில் ஏற்பட்ட காலதாமதத்தால் தேர்தல் நடைபெறாமல் இருந்த 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான ஆக்கப்பணிகள் திமுக அரசால் மேற்கொள்ளப்பட்டு, மாநில தேர்தல் ஆணையத்தால் அக்டோபர் 6 மற்றும் அக்டோபர் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

9 மாவட்டங்களுடன், மேலும் சில மாவட்டங்களில் இடைத்தேர்தல் என, மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சித் தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் என, 23 ஆயிரத்து 998 பொறுப்புகளுக்கான தேர்தல் நடந்து. இதில் பதிவான வாக்குகள் எண்ணுகிற பணி, அக்டோபர் 12-ம் நாள் தொடங்கிய சிறிது நேரத்திலேயே திமுகவுக்கும் அதன் கூட்டணிக்கும் தமிழக மக்கள் பேராதரவு வழங்கியிருப்பது உறுதியானது. 140 மாவட்ட உறுப்பினர் (கவுன்சிலர்) பதவிகளில் 138 இடங்களில் திமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். 

இதன் மூலம் 9 மாவட்ட ஊராட்சித் தலைவர் பொறுப்பினையும் திமுக அணியே பெறுகின்ற வாய்ப்பினை மக்கள் வழங்கியுள்ளனர். அதுபோலவே, 1,381 ஊராட்சி ஒன்றிய உறுப்பினருக்கான இடங்களிலும் 1,000 இடங்களுக்கும் கூடுதலாக திமுக அணி வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் 74 ஊராட்சி ஒன்றியத் தலைவர் பொறுப்புகளில் 73 பொறுப்புகள் திமுக அணியின் வசமாகியுள்ளன. இடைத்தேர்தல் நடைபெற்ற பகுதிகளிலும் திமுக வெற்றியைக் குவித்துள்ளது.

உங்களில் ஒருவனான இந்த ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்’ தலைமையிலான அரசின் 5 மாத கால ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளுக்கு தமிழக மக்கள் மனப்பூர்வமாக வழங்கியுள்ள நற்சான்றிதழ்தான் – பொற்சான்றிதழ்தான் இந்த மகத்தான வெற்றி. ‘இது எனது அரசு அல்ல… நமது அரசு’ என்று உங்களில் ஒருவனான நான் சுட்டிக்காட்டி வருவதை மக்கள் முழுமையாக ஏற்று, திமுக அரசின் திட்டங்களால் பயன்பெற்று, அவை எவ்விதத் தொய்வுமின்றித் தொடர வேண்டும் என ஆதரித்து, வாக்களித்து, திமுகவின் மீதான தங்களின் உறுதியான நம்பிக்கையை வெளிப்படுத்தி உணர்த்தி இருக்கிறார்கள்.

மக்கள் வளர்த்து வைத்திருக்கும் நம்பிக்கையை தேர்தல் களத்தில் மறக்க முடியாத வெற்றியாக மாற்றிக் காட்டிய சாதனையாளர்கள், நம் உயிர் நிகர் தலைவர் கருணாநிதியின் அன்பு உடன்பிறப்புகளான நீங்கள்தான். உங்களில் ஒருவனான நான், உள்ளாட்சித் தேர்தல் களத்தில் நேரடியாகப் பரப்புரை செய்ய இயலவில்லை. அதற்குக் காரணம், முதல்வராகப் பொறுப்பேற்பதற்கு முன்பாகவே காத்திருந்த சவால் நிறைந்த கடமைகளும், அதன் தொடர்ச்சியான செயல்பாடுகளும்தான்.

கொரோனா பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தி, தடுப்பூசி போடும் பணியை விரைவுபடுத்தி, மூன்றாவது அலை குறித்த அச்சத்தைப் போக்கி, நிதி நெருக்கடி மிகுந்த சூழலிலும் திமுக அளித்த 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளில், 150 நாட்களுக்குள்ளாக 202 வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறது நமது அரசு.

நாள்தோறும் திட்டங்கள், துறைதோறும் முழு வீச்சிலான செயல்பாடுகள் எனத் தமிழகத்தின் இருண்ட காலத்தை விரட்டி அடிக்கும் உதயசூரியனாக திமுக ஆட்சி ஒளி வீசுகிறது. அதன் பலனைத் தமிழக மக்கள் நேரடியாக உணர்ந்து, பயன்பெறுகிற காரணத்தால்தான், ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மகத்தான வெற்றியை அளித்திருக்கிறார்கள். திமுக அரசின் செயல்பாடுகளை எடுத்துரைத்து காணொலி வாயிலாக நான் வாக்கு சேகரித்தேன். திமுக உடன்பிறப்புகளான நீங்கள் ஒவ்வொரு வீடாகச் சென்று, திமுக அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி வாக்கு சேகரித்து, வெற்றியை உறுதிசெய்தீர்கள்.

அந்த நற்பணிக்கான நன்றியையும் வாழ்த்துகளையும் இதயப்பூர்வமாகத் தெரிவித்துக் கொள்கிறேன். வெற்றிக்காகக் களப்பணியாற்றிய தோழமைக் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி. வெற்றிபெற்ற திமுகவினர் தங்களின் வெற்றிச் சான்றிதழை என்னிடம் காண்பித்து, வாழ்த்து பெறுவதற்காக நேற்று (அக்டோபர் 13) அண்ணா அறிவாலயத்துக்கு வந்திருந்தார்கள். இடைவிடாத பணிகளுக்கிடையிலும், இரண்டு மணிநேரத்தை அவர்களுக்காக முழுமையாக ஒதுக்கி, வெற்றி பெற்றுள்ள கழகத்தினரை நேரில் பாராட்டி, அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்ந்தேன்.

உள்ளாட்சி நிர்வாகத்தை ஊழல் நிர்வாகமாகச் சீரழித்த முந்தைய ஆட்சியாளர்கள் நம் மீது சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகளை மக்கள் புறங்கையால் தள்ளி, திமுகவுக்குக் கிட்டத்தட்ட 100 விழுக்காடு வெற்றியைத் தந்திருக்கிறார்கள். ஓர் எதிர்க்கட்சிக்குரிய குறைந்தபட்ச அளவிலான வெற்றியைக்கூடத் அவர்களுக்குத் தருவதற்கு மக்கள் முன்வரவில்லை, மனமிரங்கவில்லை. எதிர்க்கட்சி என்பது ஜனநாயகம் எனும் நாணயத்தின் மற்றொரு பக்கம். ஜனநாயகத்தின் சிறப்பம்சம்.

எதிர்க்கட்சியே இல்லாத ஆளுங்கட்சி என்று ஒருபோதும் இறுமாப்பு கொள்ளும் மனப்பான்மை உங்களில் ஒருவனான எனக்குக் கிடையாது. நம்மை ஆளாக்கிய உயிர்நிகர் தலைவர் கருணாநிதி ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் எப்படி செயல்பட வேண்டும் என்ற அரிய அரசியல் பயிற்சியை வழங்கியிருக்கிறார். தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் அதிக எண்ணிக்கையிலான உறுப்பினர்களைக் கொண்ட வலிமையான எதிர்க்கட்சியின் தலைவர் என்ற பொறுப்பை உங்களின் ஒருவனான நான் ஏற்கெனவே வகித்திருக்கிறேன்.

மக்கள் பணியில் ஈடுபடும்போது நமது மனசாட்சியே நமக்கு எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டும். தோழமைக் கட்சிகளின் கோரிக்கைகள், வலியுறுத்தல்கள், ஊடகங்களின் ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள், சமூக வலைதளங்களில் சாதாரண மனிதர்களின் தெளிவான பார்வைகள், பதிவுகள் ஆகியவையும் கூட எதிர்க்கட்சியின் பணிதான். அத்தகைய கருத்துகளை மனதில் கொண்டு, மக்கள் பணி எனும் மகேசன் பணியை நமது அரசு தொடர்ந்து மேற்கொள்ளும்.

உள்ளாட்சி அமைப்புகளே ஜனநாயகத்தின் அடித்தளம், ஆணிவேர். அவை வலிமையாக இருக்க வேண்டும் என்பதை திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் கவனத்தில் கொண்டு செயலாற்றியிருக்கிறது. 1996-ல் நம் உயிர்நிகர் தலைவர் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியில், பெண்களுக்கு 33% இடஒதுக்கீட்டுடன் உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற்றன. 2006-ல் தலைவர் கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த உங்களில் ஒருவனான நான், ஊராட்சித் தேர்தல் நடைபெற முடியாமல் இருந்த பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம், கொட்டகச்சியேந்தல் ஆகிய ஊராட்சிகளுக்கான தேர்தலை நடத்தும் பொறுப்பை ஏற்று, வெற்றிகரமாகச் செயல்படுத்தினேன்.

அண்மையில், அக்டோபர் 2 அன்று கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட்டபோது, அந்த பாப்பாப்பட்டி ஊராட்சிக்கு முதல்வர் என்ற முறையில் சென்று, அந்த மக்களுடன் இணைந்து கிராமசபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து, நிறைவேற்றினேன். திமுகவின் சார்பில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற அனைவரும், மக்களின் நியாயமான கோரிக்கைகைளையும் அவர்களின் அடிப்படைத் தேவைகளையும் நிறைவேற்றக்கூடிய மக்கள் பிரதிநிதிகளாக, மக்கள் சேவகர்களாக எந்நாளும் உழைத்திட, ஊழியம் புரிந்திட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சென்னையின் முதல் மேயர் என்ற பெருமையை 1996-ல் நடந்த மாநகராட்சித் தேர்தலில் சென்னைவாழ் மக்கள் எனக்கு வழங்கியபோது, தலைவர் கருணாநிதி சொன்னது இன்றுவரை என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. ‘இது பதவியல்ல… பொறுப்பு’ என்பதுதான் நம் உயிர்நிகர் தலைவர் சொன்ன வைர வரிகள். அதனை நெஞ்சில் பதிய வைத்து, தொடர்ந்து உழைத்து வரும் உங்களில் ஒருவனான நான், இன்று முதல்வர் என்பதை பதவியாகக் கருதாமல் பொறுப்பு என்றே கருதுகிறேன்.

உள்ளாட்சி அமைப்புகளில் உங்களுக்குக் கிடைத்துள்ள பொறுப்புகளை உணர்ந்து ஊக்கத்துடன் மக்கள் பணியாற்றுங்கள். மே 7-ம் நாள் பொறுப்பேற்ற திமுக அரசு, மக்கள் நலன் காப்பதில் இந்தியாவிலேயே முதன்மையாகக் திகழ்கிறது என்று இந்திய ஊடகங்கள் அனைத்தும் பாராட்டுகின்றன. அந்தப் பாராட்டுப் பத்திரங்கள், பத்திரமாக நிலைத்திடும் வகையில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற திமுகவினர் பொறுப்புடன் செயலாற்ற வேண்டும். தூய்மையான, வெளிப்படையான நிர்வாகத்தினை வழங்கிட வேண்டும்.

மக்களின் குறைகள் தீர்க்கப்பட வேண்டுமேயன்றி, நிர்வாகத்தின் மீது குறை சொல்லக்கூடிய நிலை உருவாகவே கூடாது. ஜனநாயகத்தில் மக்கள்தான் நமக்கு எஜமானர்கள். நாம் அவர்களுக்குத் தொண்டு செய்ய வேண்டியவர்கள் என்பதை எந்நாளும் எப்பொழுதும் நெஞ்சில் கொண்டு செயலாற்றிட வாழ்த்துகிறேன்.

9 மாவட்ட ஊரக உள்ளாட்சிக் களத்தில் உதித்தெழுந்த ஜனநாயக சூரியன், விரைவில் நடைபெறவிருக்கும் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் களத்திலும் உதித்திட வேண்டும். மக்கள் நம் பக்கம்; நாம் மக்களின் பக்கம். அதற்கேற்ப நமது செயல்பாடுகள், மக்கள் நலன் காக்கும் வகையில் தொடர்ந்திடும். இனி உள்ளாட்சி எங்கும் நல்லாட்சி ஒளிரும்!” என்று அதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Exit mobile version