அமெரிக்காவைப் பிடித்துவந்து ராஜபக்சவைத் தண்டிக்கப் போவதாக புலம்பெயர் விதேசிய அமைப்புக்கள் கூறிவரும் அதே வேளை அமெரிக்க அரச நிதியில் இயங்கும் மார்கா இலங்கையிலிருந்து அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அந்த அறிக்கையில் வன்னியில் நடைபெற்ற படுகொலைகளுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் பொதுமக்களைக் தடுத்துக் கேடையமாகப் பயன்படுத்தியதே காரணம் என்றும் இதனால் படுகொலைகளுக்கு புலிகளே பொறுப்பு என்றும் தெரிவிக்கிறது.
தவிர, அய்க்கிய நாடுகள் நிறுவனம் புலிகளிலிருந்து மக்களைத் தனிமைப்படுத்தி அவர்களை அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு செல்லக் கூடியதான மூலோபாயத்தை வகுக்கத் தவறியுள்ளது என்றும் பிரச்சனையின் மூலத்தை கண்டறியவில்லை என்றும் அறிக்கையில் மேலும் கூறியுள்ளது.
புலிகள் மக்களை வெளியேற விடாமல் தடுத்து வைத்திருந்ததை சுய விமர்சன அடிப்படையில் ஏற்றுக்கொண்டு இனக்கொலையின் சூத்திரதாரிகளான ராஜபக்ச குடும்பத்தைத் தண்டிகக் கோரும் தமிழ் அரசியல் தலைமைகள் எம்மத்தியில் இல்லை.
புலம்பெயர் நாடுகளிலுள்ள தமிழர் தலைமைகளின் ஒரே நோக்கம் மக்களிடமிருந்து இயலக்கூடிய பணத்தைச் சுருட்டிக்கொள்வதே. இந்த அடிப்படையில் நடந்த தவறுகளை சுய விமர்சன அடிப்படையில் ஏற்றுக்கொண்டு இலங்கை பாசிச அரசைத் தண்டிப்பதற்கான நெறிமுறை ஒன்றை ஐக்கிய நாடுகளிடம் கோருவதற்குப் பதிலாக ஐக்கிய நாடுகளை நிபந்தனையின்றி ஏற்றுக்கொண்டுள்ளனர். அமெரிக்க அரசின் தீர்மானத்தில் இரண்டுபக்கமும் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் சுய நிர்ணைய உரிமையை அங்கீகரிக்க மாட்டோம் என்றும் வலிந்து கூறப்பட்டுள்ளது. இதனைக்கூடக் கேள்வி கேட்காத புலம்பெயர் அமைப்புக்கள் அப்பாவிப் போராளிகளைப் போர்க்குற்றவாளிகளாக்கும் ஐ.நாவின் செயலுக்குத் துணை செல்கின்றன.
அமெரிக்க நிதியில் இயங்கும் மார்காவின் அறிக்கை தமிழ்த் தலைமைகளின் வியாபார நோக்கத்தின் விளைபலன். இன்று மார்கா போன்ற அமைப்புக்கள் உலகம் முழுவதும் ஜனநாயக வாதிகளுடன் தமது அரசியல் மொழியில் பேசுகின்றன. இலங்கை அரசைத் தண்டிக்கக் கோரும் தமிழ்த் தலைமைகளை குற்றம் சுமத்துகின்றன. மக்களை ஏமாற்ற புலம்பெயர் தமிழத் தலைமைகள் கூறிய பொய் இன்று அவர்களுக்கு எதிராகத் திரும்பியுள்ளது மட்டுமல்ல உலகின் மிகவும் கோரமான பயங்கரவாதி மகிந்த ராஜபக்சவையும் பாதுகாப்பதில் போய் முடிந்துள்ளது. இடையில் அனைத்தையும் இழந்து அழிவைச் சந்திப்பவர்கள் மக்களுக்காக ஆயுதமேந்திய அப்பாவிப் போராளிகளே.
http://in.reuters.com/article/2014/09/05/srilanka-civil-war-idINKBN0H01NT20140905