Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இருள் கொஞ்சம் அதிகம்தான் : ச.நித்தியானந்தன்

1983

நோவேதுமில்லாத மூன்றாம் கட்ட பயணம்

போவோமா புதையுண்டு சாவோமா…!

மீண்டும் கலர் கலராய் தோரணங்கள்

வடக்கு வீதியில் சின்ன மேளம்

கிழக்கே மேளச் சமா

தெற்கே காவடி

மேற்கே கச்சான் கடைகளென

தேர்தல் திருவிழா

அரிதாரம் பூசியவர்களின் அணிவகுப்பு

வானத்தை வில்லாய் வளைப்பவர்களாகவும்

விடுதலையை வென்று தருபவராகவும்

சிலர் ஒருபடி மேலே போய்

தாயகத்தை தோண்டி

பெருவாழ்வு பெற்றுத் தருவதாகவும்

ஆளுக்கொரு மூடையுடன் அவர்கள்

மூடைகளின் அளவுகளில்

வேறுபாடிருந்தாலும் எல்லாம்

புளுகுமூடைகள்தான்

தொடுத்த வில்லிற்கும்

கொடுத்த விலைக்கும்

ஈடுதான் என்ன

மாகாண சபைதானா

ஆளுனர் தலையசைத்தால்தான்

மூத்திரமே பெய்யலாம்

கோவணம் இறுக்குவதற்கும்

கொழும்பில்தான் அனுமதியாம்

போக்கறுந்த சபைக்கு பொலீஸ் அதிகாரமும் இல்லை

கந்தறுந்த ஆட்சியால் காணியும் இல்லை

நீதிமான் சொல்கிறார்

மாகாண சபை மூன்றாம் கட்ட போராம்

மூக்குடைபடப் போவது யாரென்று இப்போதே தெரிகிறது

கூலிக்கு வந்தவன் குடியிருக்க

உரிமைக்காரன் தெருவில் நிற்கிறான்

வீதிக்கே போகாத பரம்பரையின்

விதி மாறிக்கிடக்கிறது.

விதிமாற்ற எழுந்த

புனிதர்களை விதைத்தோம் பூமியெல்லாம்

விதைத்த நிலத்தை உழுதது கொத்திப்பேய்

வீழ்ந்தவர்க்கே இந்நிலையென்றால்

வாழ்பவர் நிலையோ

வதைபடும் நிலை

அழுத விழியும் சிந்திய குருதியும்

கானல் நீராய் விடுதலையும்

இன்னும் மற்க்கவில்லை

மீண்டெழவே முடியவில்லை

எந்த நோவுமறியாதவர் எல்லாம்

சபையேற வந்துள்ளார்

காலிழந்தவர் கையிழந்தவர் துணையிழந்தவர்

சேயிழந்தவர் தாயிழந்தவர் எல்லாம்

அனலிடைத் தூங்க

கப்பம் பெற்றவர் கள்ளத்தோணிகள்

காட்டிக்கொடுத்தவர் கூட்டிக்கொடுத்தவர்

தலையாட்டிகள் முகமூடிகள் எல்லாம்

அரியணைக்காய் அரிதாரம் பூசி வந்துள்ளார்

மாயப்பொய்கையில் இறங்கி

தாமரைபறிப்பதாய் இவர்கள் உளறுவார்கள்

இவர்கள் காட்டும்

பொய்மானின் பின்னால் போனாயென்றால்

உடுப்பிழந்து

இடுப்பாடை துறந்து

உள்ளத்து உணர்விழந்து

அம்மணமாய் ஆவதன்றி வேறொன்றும் வாராது

ஆடுபவர் மத்தியில்

ஓரிரு வீரர் முகங்களும்

சாம்பாரில் போடும் கறிவேப்பிலைபோல்

வென்றபின் இவர்கள் தூக்கியெறியப்படுவார்கள்

கறிவேப்பிலையாடா தமிழா நீ

கரும் வேங்கையன்றோ

என்ன கொடுமையப்பா

இதற்கா ஆசைப்பட்டாய் தமிழா…..?

என்ன இழிவடா உனக்கு …..?

எத்தனைபேர் தாளத்துக்கு ஆடப் போகிறாய்

தனியரசென்றான் அடங்காத் தமிழன்

பெருந்தலைவனோ ஐம்பதுக்கு ஐம்பதென்றான்

இணைப்பாட்சியென்றார் தந்தை

மாவட்டசபைக்கிணங்கினார் தானைத்தளபதி

ஓடிப்போன ஒரிசா வீரனோ

மாகாணசபையையே இழித்துரைத்தான்

நாயாய் கிடந்த வாழ்வுதறி

பேயாய் நீ களம் புகுந்தாய்

மிதிபட்டுக்கிடந்தவன்

மேல்நோக்கியெழுந்தாய்

திசையதிர்ந்தது

கட்டில்லா வாழ்வு பெற்றோம்

காமம் கலக்கா கதியடைந்தோம்

நள்ளிரவிலும் நமது நங்கையர் நாற்பது பவுணணிந்து

நாட்டுக்கூத்து பாக்கச்சென்றது அந்தப் பொற்காலம்

எழுந்து நின்ற எம்மை ஏறிமிதித்தனர்

பாதிக்கு பக்கத்துவீட்டானும்

பனிநாட்டானும் காலில் போட்டு நசுக்கினான்

பாதியுயிர்போனது

மானமுள்ளவன் வீழ்ந்தான்

மீதமுள்ளவன் நடைப்பிணமானான்

மீண்டெழவே முடியா மனச்சோர்வானோம்

பாதிவழி கடந்த பயணம்

மீதிவழி போவோமா வந்தவழியே திரும்புவோமா

வந்தவனுக்கெல்லாம்

வெற்றிலை மடித்துக்கொடுத்துவிட்டு

அவன் நீட்டும் எலும்புக்காய் யாசிப்போமா

மாகாண சபையென்பது

பொய்மான்

மெய்யறியாவிட்டால் வினை வந்து சேரும்

கடந்தகாலத்தை கண்ணெறிந்து பார்

பழிசுமந்த படிப்பினை தெரியும்

உடைவாள்மட்டும்தான் இழந்துள்ளாய் இன்னும்

ஓர்மம் இழக்கவில்லை

விடுதலைக்கான வழி தேடு

முட்பாதைதான் முன்னெற முயல்

விடுதலை என்பது வல்லை மைந்தனுக்கு மட்டுமல்ல

உனக்கும் வேண்டும் உன் பிஞ்சுகள் வாழவேண்டும்

நெஞ்சை நிமிர்த்து

வீழ்ந்தான் தமிழன் என்பது பழியல்ல

வீழ்ந்தவன் எழாமல் மாண்டான் என்பதே தீராப்பழி

விடுதலைக்கு நீ படிக்கட்டாகு

உன்கொள்ளுப்பேரன் உன் வரலாற்றை படிக்கட்டும்

உன் பெண் வயிற்றுப் பேர்த்திக்கு

சீதனமாய் கொஞ்சம் சுதந்திரம் கொடு

அம்மப்பா அடங்கிவாழவில்லை என்பதே

அவர்களுக்குப் பெருமை

கவசம் தரி

நான்காண்டாய் வாழ்ந்த

இழிவு அழியட்டும்

முன்னேறு

விட்ட இடம் தெரிகிறது

கிட்டப்போனாயென்றால்

விட்ட பிழை தெரியும்

கூட்டிக்கழித்து பெருக்கி கணக்கிடு

திட்டமிடு திமிருடன்

முன்னேறு

இருள் கொஞ்சம் அதிகம்தான்

ஆனால் ஒளி உன் கண்களில் உள்ளதன்றோ….!

~ச.நித்தியானந்தன் யாழ். பல்கலைக்கழகம்~
Exit mobile version