Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இரும்புச் சுவரின் நீள அகலங்களுடன் : லென்னி பிரன்னருடன் எச்.பீர் முஹம்மது உரையாடல்

அறிமுகம் 

லென்னி பிரன்னர் அமெரிக்க மார்க்சிய சிந்தனையாளர். இவரது குடும்பம் பாலஸ்தீன் யூத பின்னணியை கொண்டது. 19 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் ஏற்பட்ட யூத வெறுப்பு அதன் விளைவாக எழுந்த யூத இனச்சுத்திகரிப்பு குறித்து விரிவாக ஆராய்ந்தவர் லென்னி பிரன்னர். குறிப்பாக நாசிகளுக்கும் சியோனிஸ்ட்களுக்குமான இரகசிய உறவைப்பற்றி முதன் முதலாக வெளிக்கொணர்ந்தவர். இதன் காரணமாக அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய யூத அடிப்படைவாதிகளிடமிருந்து கடுமையான எதிர்வினைகளை சந்திக்க நேர்ந்தது.  

பெரும் சவால் ஒன்றின் எதிர்வோடு தன் ஆய்வு முடிவுகளை வெளிப்படுத்தினார். இதன் பிரதிபலிப்பாக 2002 ல் வெளிவந்த 51 documents : zionist collaboration with the Nazis என்ற இவரின் நூல்  மேற்குலகில் சிறந்த விற்பனை நூலானது. இவரின் முதல் நூல் Zionism in the age of Dictators என்ற பெயரில் வெளிவந்தது. On Separation of Church and state, writings on religion and secularism, Jews in America today, The lesser evil  போன்றவை இவரின் பிற நூல்கள்.  காலனியம் யூத அடிப்படைவாதத்தோடு எவ்வாறு வேர் கொண்டது என்பதை குறித்து நிறையவே ஆராய்ந்திருக்கிறார் லென்னி பிரன்னர். ஹைடெக்கரின் மாணவியும் காதலியுமான அனா அரந்தின் Origin of Totalitarianism  என்ற நூலால் அதிகம் தாக்கமுற்ற பிரன்னர் அனாவை தன் முன்னோடி சிந்தனையாளராக கருதுகிறார். டிராஸ்கியிஸ்டான இவர் ஸ்டாலின் குறித்த தன் விமர்சனங்களை பல தருணங்களில் பதிவு செய்திருக்கிறார்.  

மேற்கில் கல்விதுறைக்கு வெளியில் இருக்கும் அறிவுஜீவி லென்னி பிரன்னர். லென்னி சியோனிசம் குறித்த கருத்தரங்கிற்காக அரபு பல்கலைகழகத்திற்கு சமீபத்தில் வருகை தந்திருந்தார். தாரிக் அலி, சமீர் அமீன் வரிசையில் இவருடனும் நான் உரையாட தீர்மானித்தேன். வழக்கமாக என்னை ஆதரிக்கும் பல்கலைகழக பேராசிரியர் முனீர் ஹசன் மஹ்மூத் இதற்கு எனக்கு உறுதுணையாக இருந்தார். லென்னியின் அவசரம் காரணமாக குறைந்த நேரமே அவருடன் உரையாட முடிந்தது.  

எச். பீர் முஹம்மது 
 
 

லென்னி பிரன்னருடன் ஊரையாடல் 

Dear Lenni> சரியான தருணத்தில் நம் சந்திப்பு நிகழ்கிறது. உங்கள் மூதாதையர்கள் பாலஸ்தீன் பின்னணியை சார்ந்தவர்கள். உங்களை நான் அறிந்த காலந்தொட்டு இன்று வரை உங்கள் வாழ்க்கை குறிப்பை படிக்கும் போதெல்லாம் ‘இவர் 12 ஆம் வயதில் நாத்திகராக மாறினார். 15 வயதில் கம்யூனிஸ்டாக மாறினார்’ என்பதான தொடர் பிரதிபலிப்பு நிகழ்கிறது. அமெரிக்காவில் வசிக்கும் நீங்கள் இதை எவ்வாறு எதிர்கொள்கிறீர்கள்? 

இதை நான் கவனித்தே வந்திருக்கிறேன். பிறந்தது அமெரிக்காவில். வைதீக யூத பின்னணியை கொண்டதான குடும்பத்தில் நான் ஒருவன். வாசிப்பு செயல்பாடு அல்லது தேடல் என் குடும்பத்தை பாதித்திருந்தது. என்னுடைய உறவினர் ஒருவர் இளமைகாலத்தில் என் சகோதரரிடம் பார் மிஷ்வாவின் Story of mankind vdஎன்ற புத்தகத்தை படிக்க கொடுத்தார். மனித சமூக தோற்றம் குறித்த கதையாடல் அது முழுக்க நிரம்பியிருந்தது. எனக்கு அப்போது பத்து வயதிருக்கும். வரலாறு எவ்வாறு காலத்தை கடக்கிறது என்பதை குறித்த பிரக்ஞை அப்போது எனக்கு ஏற்பட்டது. வரலாற்று உணர்ச்சி நிரம்பியவனாக மாறினேன். இதுவே பதினைந்தாவது வயதில் என்னை சோசலிச சிந்தனை நோக்கி நகரச் செய்தது.  

என்னுடைய முதல் வேலையே புத்தக கிடங்கொன்றில் தான் ஆரம்பமானது. இப்போது அதை மீண்டும் எனக்குள் வரவழைத்து  நமுட்டாக சிரித்துக் கொள்ளலாமா என்று தோன்றுகிறது. அமெரிக்க உள்நாட்டுப் போர் குறித்து இன்றைய சராசரி அமெரிக்கர்கள் அறிந்திருப்பதை விட அதிகமாக அன்று படித்தேன். வெறும் தகவல்கள் ஏற்படுத்தும் சாதாரணத்தனத்தை விட உள்ளுணர்வோடு கூடிய தூண்டலாக உள்நாட்டு போர் பற்றிய வரலாறு எனக்குள் மாறியது. இது தொடர்பான பல்வேறு தரவுகள், புத்தகங்களை தேடிப் படிக்கத் தொடங்கினேன். அன்றைய கட்டத்தில் வாசிப்பு எனக்குள் ஒரு செயல்பாடாக மாறிப் போனது. அறுபதுகளில் ஜேம்ஸ் பார்மர் தலைமையிலான அமெரிக்க சிவில் இயக்கத்தில் இணைந்தேன். அமெரிக்க இனவெறிக்கு எதிரான போராட்டங்களை அப்போது அந்த இயக்கம் முன்னெடுத்தது. அது நடத்திய பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்றிருக்கிறேன். சான்பிரான்ஸிஸ்கோவில் நடந்த போராட்டங்கள் அது. அமெரிக்க சிறைச்சாலைகளின் நீள அகலங்கள் அப்போது தான் எனக்குத் தெரிய ஆரம்பித்தது.  அன்றாட வாழ்வின் இயல்பிலிருந்து விலக்கப்பட்டவனாக, உடலோடு மட்டுமே உரையாடல் நிகழ்த்தும் அனுபவத்தை அப்போது தான் நான் உணர்ந்தேன்.  

அதிலிருந்து வெளிவந்த தருணத்தில்; அமெரிக்க வியட்நாம் மீது போர் தொடுத்து கொண்டிருந்தது. இதை எதிர்த்து உலகம் முழுவதுமாக கிளர்ச்சிகள், எதிர்க்குரல்கள் இருந்து கொண்டிருந்தன. அந்தத் தருணத்தில் நான் அமெரிக்காவில் நடைபெற்ற போர் எதிர்ப்புப் பேரணிகளில் கலந்து கொண்டு உரையாற்றி இருக்கிறேன். அதற்குப் பிந்தைய கட்டத்தில் 1968 இல் அயர்லாந்து உரிமைக்கான தேசிய இயக்கத்தில் இணைந்து பல போராட்டங்களை முன்னெடுத்திருக்கிறேன். அதன் பிறகு இனவாதம் மற்றும் சியோனிசத்திற்கு எதிரான இயக்கங்களை மற்றவர்களுடன் இணைந்து ஆரம்பித்திருக்கிறேன். அதன் காரணமாக அமெரிக்க சியோனிஸ்ட்களின் அச்சுறுத்தலுக்கும் ஆளானேன். அனுபவம் உருவாக்கும் வெளி ஒரு முன்னகரலுக்கான தொடக்கமே. 

உங்களின் சியோனிசம் பற்றிய ஆய்வுகளுக்கு நீங்கள் அனா அரந்தை முன்னோடியாக கருதுவதாக சொல்கிறீர்கள். நான் நேசிக்கும் ஐரோப்பிய அறிவு ஜீவிகளில் அனா அரந்த் ஒருவர். அவருடைய Origin of Totalitarianism என்ற நூல் நான் விரும்பிப் படித்தவற்றுள் ஒன்று. அவரின் முழு உருவமும் அந்த புத்தகத்தின் அட்டைப்படத்தில் நிரம்பியிருக்கும். ஐரோப்பியச் சூழலில் அவர் தான் அதிகமாக யூத வெறுப்பு குறித்து ஆராய்ந்தவர். யூத இனப் பின்னணி குறித்து அதிகம் ஆராய்ந்த நீங்கள் அவரை எவ்வாறு அணுகுகிறீர்கள்?. 

நாசிகள் தங்கள் கொடூரங்களை நிகழ்த்திய இருபதாம் நூற்றாண்டு ஜெர்மனியில் சிக்கலான கட்டத்தில் தோன்றியவர் அனா. இருபதாம் நூற்றாண்டு தொடக்க கட்டத்தில் ஐரோப்பாவில் ஆதிக்கம் செலுத்திய இரு பெரும் ஆளுமைகளான மார்டின் ஹைடெக்கர் மற்றும் கார்ல் ஜாஸ்பர் ஆகியோரிடத்தில் தத்துவம் பயின்றவர். இருவரிடமும் அவருக்கு ரொமாண்டிக் உறவு இருந்தது. இறுதியில் குந்தர் ஸ்டெர்ன் என்ற தத்துவவாதியை திருமணம் செய்து கொண்டார்.  

நாசிகள் காலத்து ஒடுக்குமுறையின் போது இவர் பாரிசுக்குப் புலம் பெயர்ந்தார். அங்கு தான் வால்டர் பெஞ்சமினையும், ரைமண்ட் ஆரானையும் சந்தித்தார். அவரின் கருத்தியல் விரிவுக்கு அவர்கள் நட்பு துணையாக இருந்தது. இருத்தலியலின் தொடக்க நிலையாளரான ஹைடெக்கரின் பாதிப்பு தான் அவரிடத்தில் கடைசி வரை தங்கி இருந்தது. இந்தத் தொடர்ச்சியில் தான் அவர் Origin of Totalitarianism நூலை எழுதினார். எதேச்சதிகாரம் அதன் உள்ளடக்கத்தில் இருந்து எம்மாதிரியான வெளிப்பாட்டு வடிவங்களுக்கு உட்படுகிறது, அதன் கோட்பாட்டு வடிவம் என்ன என்பதை பற்றி விரிவாக அதில் ஆராயப்பட்டிருக்கிறது. சிமிட்டிக் கருத்துருவத்தின் பின்புலம், நிலப்பரப்பின் அடையாள விரிவு என்பதாக அவரின் ஆய்வு நீண்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டு ஐரோப்பிய யூத வெறுப்பு வேர்கொண்ட விதத்தை காலனியாதிக்கத்தின் பதிலீடாக அனா காண்கிறார்.  

மேற்கில் அதிகம் அதிர்வை உண்டாக்கிய என்னுடைய 51 Documents: Zionist collaboration with nazis என்ற நூலில் அவரின் சியோனிசம் பற்றிய ஆவணம் ஒன்றை இணைத்திருக்கிறேன். அனா நாசிக் கட்சியில் இருந்த ஹைடெக்கரின் தொடர்ச்சியில் வந்ததால் தான் அவர் யூதர்களுக்கு எதிரான நிலைபாட்டை எடுக்கிறார் என்ற விமர்சனம் அவர் மீது சியோனிஸ்ட்களால் வைக்கப்பட்டது.  

என்னைப் பொறுத்தவரை அனா ஒர் அனார்கிஸ்ட். ஐரோப்பிய மேட்டுக் குடி சமூகத்தில் இறுக்கமாக நிறுவிப்போன மரபுகளை கேள்விக்குட்படுத்தியவர். ஒரு தேர்ந்த சிந்தனையாளராக அனா அந்த விஷயத்தைச் செய்தார். எல்லாவித சவால்களையும் அதன் போக்கில் அவர் எதிர்கொள்ள வேண்டியதிருந்தது. அவருடைய மற்றொரு நூல்Eichmann in Jerusalem.  .  இதில் ஹிட்லருக்கும் யூத அடிப்படைவாதிகளுக்கும் இடையே இருந்த உறவு விவரிக்கப்பட்டிருக்கிறது. வரலாறு எவ்வாறு ஏமாற்றமானதாகவும், பிம்பங்களை உற்பத்தி செய்யக்கூடியதாகவும் இருக்கிறது என்பது நம்மின் பிரதி அனுபவம். நம்முடைய கருத்துகள் சமூகத்தின் மற்ற கருத்துகள் மீது எப்போதும் சவாலுக்காக நின்று கொண்டு இருக்கின்றன. 

அனாவின் தொடர்ச்சியில் நீங்களும் அமெரிக்க மார்க்சியராக நின்று கொண்டு சியோனிசத்தை விமர்சனக் கண்ணோட்டத்தோடு அணுகுகிறீர்கள். இந்த விஷயத்தில் நீங்கள் நோம் சாஸ்கி மற்றும் நார்மன் பின்கல்ஸ்டீன் ஆகியோருக்கு முந்தைய இடத்தில் வருகிறீர்கள். 2002 இல் வெளிவந்த உங்களின் Zionist collaboration with nazis என்ற நூலை இதற்கு உதாரணமாக குறிப்பிடலாம். யூதப் பின்னணியில் இருந்து கொண்டு உங்களால் எப்படி இந்த சிக்கலில் வீழ முடிந்தது? 

ஐரோப்பிய யூத எதிர்ப்பு மனோபாவமும், அதன் விளைவாக யூதர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட சுத்திகரிப்பு நடவடிக்கையும் வரலாற்றின் நிகழ்போக்கில் மிகத் தெளிவாக இருக்கிறது. இதே காலகட்டத்தில் ஜெர்மானிய யூதர்களின் பாலஸ்தீன இடப்பெயர்வு அது அரபுலகத்தில் ஏற்படுத்திய மறு விளைவு ஆகியவை எனக்கு ஒரு தேடலுக்கான கோட்டை வரைந்து காட்டியது. இதன் வரைதடத்தில் சென்று அது எவ்வாறு பதியப்பட்டிருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டிய அவசியத்திற்கு நான் உள்ளானேன். சியோனித்தை பொறுத்தவரை மார்க்சியத்தின் சமகாலமாக, மற்ற கருத்தியல்களை போல அது 19 நூற்றாண்டின் கருத்தியல் வடிவம். மொத்த உலகமும்  முதலாளித்துவம் மற்றும் ஏகாதிபத்தியம் நிரம்பிய ஒன்றாக இருந்தது. இதன் பின்னலில் தேசிய, மத அடையாளங்களும் மோதிக் கொண்டிருந்தன. இதன் தொடர்ச்சியில் ஐரோப்பாவில் தொழிலாளி, சியோனிச கருத்தியல் வடிவம் தோன்றியது. இவர்கள் சோசலிச சாய்வாக இருந்தனர். போல்ஷ்விக்குகள் அவர்களை மூன்றாம் அகிலத்தில் இணைய சொன்னார்கள்.  

இது லெனினின் கவனத்தில் வந்த போது லெனின் சொன்னார். ‘நாங்கள் தேசிய இனங்கள் அடிப்படையில் கட்சியில் யாரையும் இணைக்க விரும்பவில்லை’. 19 ஆம் நூற்றாண்டிலும், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் யூத சமூகத்தில் வர்க்க அடிப்படையிலான கூர்மையான பிரிவினை ஏற்பட்டிருந்தது. யூத மத்திய வர்க்கம் தன் பிள்ளைகள் பள்ளியில் ஹிப்ரூ மொழி படிப்பதை நிரப்;பந்தமான ஒன்றாக வைத்தது. அதே நேரத்தில் யூத தொழிலாளி வர்க்கம் அதை விரும்பவில்லை. அதற்குப் பதிலாக அவர்கள் யுத்திஷ் மொழியைப் பேசினார்கள். இந்த இரண்டு வர்க்கத்தினரிடையேயும் உராய்வு அதிகமாக இருந்தது. தொழிலாளி வர்க்கத்தை சேர்ந்தவர்கள் இவர்கள் சமூகத்தின் இன்னொரு பரிணாமத்தை அடைய வேண்டும் என்று விரும்பினார்கள்.  

அன்றைய போலந்தில் யூத சமூகமானது மத்தியதர வர்க்கம், தொழிலாளி வர்க்கம், அடிப்படைவாத யூத சமூகம் என்பதாக பிளவுப்பட்டிருந்தது. இதனுடன் பலம்பொருந்திய ஜெர்மானிய சமூகமும் சூழ்ந்திருந்தது. இந்நிலையில் போலந்து யூத மத்தியதர வர்க்கம், தங்களை மற்றவர்கள் விரட்டிவிடுவார்கள், இங்கு தங்களுக்கு எதிர்காலம் இல்லை என்று கருதியது. இதன் காரணமாக அவர்கள் பாலஸ்தீன் தான் தங்கள் இருப்பிடம் என்பதைப் புனைந்து உருவாக்கினார்கள்.  

சியோனிசம் இந்த இடத்தில் மிகுந்த தாக்கத்தைச் செலுத்தியது. ஆனால்  அது பரவிய இருபதுகளில் பெரும்பாலான யூதர்கள் அதை மேடைக்கு வெளியே உள்ள குரலாகத் தான் பார்த்தார்கள். இதன் தொடர்ச்சியில் தான் ஜெர்மன் நாசிசத்திற்கும், சியோனிசத்திற்கும்  இடையே உள்ள தொடர்பை பற்றி விவரிக்க வேண்டியதிருக்கிறது. ஹிட்லரின் யூத வெறுப்பு அனுபவ வெளி சார்ந்தும், சில இலச்சினைகளை அடிப்படையாக கொண்ட ஒன்றாகவும் இருந்தது. இன்னொன்றை சொல்ல வேண்டுமென்றால் ஹிட்லரின் தந்தை கூட யூத வெறுப்பை இடது மநக் கோட்பாடாகத் தான் பார்த்தார். இளமைக்கால ஹிட்லர் ஆஸ்திரியாவின் வீதிகளில் பல உருவங்கள், வித்தியாச தோற்றமைப்புக் கொண்ட மனிதர்களை கண்டார். இவர்கள் ஜெர்மானியர்களா? யூதர்களா என்ற சிந்தனை அப்போது ஹிட்லருக்கு ஏற்பட்டது.  

நனவிலி நிலையில் ஏற்பட்ட ஒரு கருத்து வடிவம், பிந்தைய கட்டத்தில் பரிணாமத் தன்மையை எட்டியது. 1919 இல் ஹிட்லர் ஜெர்மன் சோசலிஸ்ட்களுடன் இணைந்து ஜெர்மானிய சமூகம் பற்றிய பிரக்ஞைக்கு வந்தார். ஹிட்லரின் மற்றொரு உட்கிரகிப்பு, எஸ்தோனிய ஜெர்மன் அகதியான ஆல்பர்ட் ரோசன்பர்க்கின் சியோனிசம் குறித்த நூலான The Trace of the Jews in the wanderings of Time என்பது  தான். அதில் ரோசன்பர்க் சியோனிசத்தின் தடங்கள் குறித்து விவரித்திருப்பார். சியோனிஸ்ட்கள் தங்கள் சர்வதேசச்; சதித் திட்டத்திற்கான மறைவிடத்தை தேடினார்கள். ஹிட்லர் இந்தப் புள்ளியிலிருந்து தொடங்கி அவர்களின் இனவாதமும், தங்களுக்கான தேசிய அரசை ஏற்படுத்த இயலாமையும் இன்னொரு வாசல் ஒன்றிற்கு திறவுகோலாக அமையும் என்று நினைத்தார்.  

இதன் தொடர்ச்சியில் 1920 இல் பாலஸ்தீன் தான் யூதர்களுக்கு ஏற்ற இடம் என்ற கருதுகோளுக்கு ஹிட்லர் வந்தார். அதே காலகட்டத்தில் நாசி கட்சி பத்திரிகை இதை முன்னெடுக்க தொடங்கியது. இதைக் குறித்து தனது ‘மேன் கேம்’ நூலில்; எழுதிய ஹிட்லர் இவ்வாறு குறிப்பிடுகிறார்: ‘சியோன்கள் யூதர்களின் தேசிய உணர்வு குறித்த கருத்தை உலகம் முழுவதும் நம்பச் செய்யும் முயற்சியின் திருப்தியில் இருக்கிறார்கள். இது வெறுமனே அவர்கள் தேசிய அரசைக் கட்டமைக்க முடியாது. மாறாக சர்வதேச அளவில் அமைப்பாகத் திரள்வதும், மற்ற அரசுகளின் தலையீடு இல்லாமல் அவர்கள் தங்களுக்கான உரிமையை வகுத்து கொள்ளவும் உதவியாக இந்த கருத்தியல் நிற்கும்’. இந்நிலையில் 1932 ல் நாசிகளால் ஜெர்மனியில் யூத எதிர்ப்புப் பேரணி நடத்தப்பட்டது. அதில் ‘பாலஸ்தீன் செல்லத் தயாராகுங்கள்’ ‘பாலஸ்தீனுக்கான ஒரு வழி பிரயாண சீட்டு’ போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன.  

அந்நேரத்தில் வெளியிடப்பட்ட நாசி அறிக்கையானது 1897 இல் தியோடர் ஹெர்ஸ் குறிப்பிட்ட ‘யூதர்கள் தங்கள் உரிமைகளில் குறுக்கிடும் எந்த அந்நிய அரசுக்கு எதிராகவும் கலகம் செய்ய வேண்டும்’ என்ற வரியை மேற்கோள்காட்டி இதனை எதிர்கொள்ள நாசிகள் தயாராக வேண்டும் என்றது. இதற்குப் பிந்தைய கட்டத்தில் ஹிட்லர் அதிகாரத்திற்கு வந்த போது ‘மேன் கேம்’பை மீறி யூதர்கள் விஷயத்தில்  இறுதித் திட்டம் என்ன என்பதைத் தன்னுடைய நெருங்கிய நண்பர்களிடம் கூட ஹிட்லர் தெரிவிக்கவில்லை.  

இந்நிலையில் யூதர்கள் மற்ற நாட்டு அந்நிய முதலாளிகளுடன் வணிக உறவு வைத்திருந்தார்கள். சமூகத்தில் ஏற்படும் வணிகச் சிக்கல்கள் யூதர்களின் விஷயத்திலும் நடந்தேறியது. 1933 இல் ஜெர்மனியில் ஹிட்லர் பதவிக்கு வந்த காலத்தில் எந்த சியோனிஸ்ட்களும் ஹிட்லரின் முழு அர்த்ததை அறிந்து கொண்டிருக்கவில்லை.  1933  ஜுன் 21 இல் ஜெர்மானிய சியோனிசக் கூட்டமைப்பு நாசிகளுக்கு ரகசிய கடிதம் ஒன்றை அனுப்பியது. அதில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது : ‘யூத நிலைமையின் சிக்கல் குறித்து சியோனிசத்திற்கு எந்த மாயங்களும் இல்லை. இது அதன் எல்லா அசாதாரண முறைகளையும் , அறிவுத்தனங்களையும் உள்ளடக்கியிருக்கிறது. மேலும் கடந்த பத்தாண்டுகளான அதன் சீரான போக்கையும், அதன் சிதைவிற்கான அறிகுறியையும் அதை எதிர்கொண்டு யூத வாழ்க்கையை சீர்திருத்துவதற்கான சவாலையும் ஏற்றுக்கொண்டிருக்கிறது’. 

இருபதாம் நூற்றாண்டு  ஐரோப்பிய மத்தியப் பகுதி வரலாறு முழுவதுமே சியோனிஸ்ட்களின் நாசிகளுடனான கேவலமான உறவின் தொடர்ச்சியாகவே இருக்கிறது. 1936 மார்ச் 29 இல் இவர்கள் கடல்சார் பள்ளி ஒன்றை ஆரம்பித்தனர். இது இத்தாலிய பாசிச அரசின் நிதி உதவியோடு ஆரம்பிக்கப்பட்டது. இதில் யூத இளைஞர்களுக்கான மாலுமிப் பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் சியோனிஸ்ட்கள் நாசிகளுடன் அன்றைய பிரிட்டிஷ் கட்டுப்பாட்டு பாலஸ்தீனுக்கு  தங்கள் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்காக தொழில் உறவை வைத்திருந்தார்கள். இதன் தொடர்ச்சியில் தான் அன்றைய ஜெர்மன் அமைச்சரான அடால்ப் ஈச்மென் 1937 .ல் பாலஸ்தீன் மற்றும் எகிப்திற்கு பயணம் செய்தார். அங்கு பல சியோனிச தலைவர்களை சந்தித்தார்.  

ஹிட்லரின் யூத படுகொலை ஆரம்பிக்கப்பட்ட 1942 காலத்தில் ஈச்மென் சியோனிச வெறியர் என வர்ணிக்கப்பட்ட ஹங்கேரிய யூதரான ருடால்ப் கேஸ்ட்னருடன் தொடர்பு வைத்திருந்தார். அந்த நேரத்தில் ஹங்கேரிய யூதர்கள் பலர் ஹிட்லரின் வதை முகாமிற்கு அனுப்பப்பட்டனர். அப்போது ஈச்மென்  இதைப்பற்றி பின்வருமாறு குறிப்பிட்டார் : ‘அவர் அரசியல் நோக்கத்தை அடைவதற்காக ஆயிரக்கணக்கான அல்லது இலட்சக்கணக்கான இரத்தங்களை தியாகம் செய்வார். இவர் பழைய மற்றும் ஹங்கேரிய சமூகத்தோடு ஒன்றிப்போன யூதர்கள் மீது ஆர்வமாக இருக்கவில்லை. மாறாக மற்றவர்களைத் தான் தியாகம் செய்கிறார். மேலும் கேஸ்ட்னர் வதை முகாம்கள் கலகம் ஏதும் இன்றி அமைதியாக இருக்க உதவி செய்தார். நான் அவரின் ஆதரவாளர்கள் அதிலிருந்து தப்பிப்பதற்கு உதவினேன்’.  

இன்னொரு முன்னோக்கும் விஷயம் என்பது 1935 இல் இயற்றப்பட்ட யூத இனத்திற்கு எதிரான நியூரம்பர்க் சட்டத்திற்கு பிந்தைய கட்டத்தில் நாசி ஜெர்மனியில் இரு கொடிகள் மட்டுமே பறக்க அனுமதிக்கப்பட்டன. ஒன்று ஹிட்லரின் விருப்பப்பொருளான ஸ்வஸ்திகா பொறிக்கப்பட்ட கொடி. மற்றொன்று நீல மற்றும் வெள்ளை நிறத்தாலான சியோனிசக் கொடி. மேலும் சியோனிஸ்ட்கள் தங்களுக்கென பத்திரிகை நடத்த அனுமதிக்கப்பட்டனர். மேலும் ஆப்ரகாம் ஸ்டெர்ன் என்ற யூதத் தலைவர் இரண்டாம் உலகப் போர்க் காலகட்டத்தில் ஹிட்லருக்கு எழுதிய கடிதத்தில் ‘ இங்கிலாந்துக்கு எதிராக ஜெர்மனி போரிடுவதன் மூலம் ஐரோப்பாவில் யூத பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரலாம். மேலும் இது யூதர்களுக்கென வரலாற்று ரீதியான அரசை ஏற்படுத்துவதற்கு உதவிகரமாக இருக்கும். அதாவது இங்கிலாந்து கட்டுப்பாட்டில் இருக்கும் பாலஸ்தீன் நிலப்பகுதியை கைப்பற்றுவதன் மூலம் யூதர்களின் இருப்பிட தேவை நிறைவேறும்’.  

ஸ்டேர்னின் இந்தக் கடிதக் கோரிக்கை இரண்டாம் உலகப்போருக்கு பிந்தைய கட்டத்தில் துருக்கியில் உள்ள ஜெர்மன் தூதரகத்தில் காண கிடைத்தது. இவ்வாறாக சியோனிஸ்ட்-நாசி உறவு குறித்து நாம் நிறையவே விவாதிக்க முடியும். ஹிட்லரின் மரணத்திற்கு பிறகு அவரின் வெளியுறவு அமைச்சர் ‘நாங்கள் எல்லா யூதர்களையும் வெறுக்கவில்லை’ என்று நியூரம்பர்க் விசாரணையில் சொன்னது இதனின் நீட்சி தான். நாசிகளும் சியோனிஸ்ட்களும் ஜெர்மானிய யூதர்களை பாலஸ்தீனில் குடியமர்த்தும் விஷயத்தில் பொதுவான கருத்தையே கொண்டிருந்தனர். ஒடுக்குமுறை அமைப்புகள் எவ்வாறு ஒரே நேர்கோட்டில் வருகின்றன என்பதற்கு இந்த வரலாறு ஓர் உதாரணம். 

சியோனிச-நாசி உறவு முறையின் வெளிப்பாட்டில் இன்னொன்று என்பது அறிவு ஜீவிகள் பற்றியது. நான்  இதுவரை உரையாடிய எல்லோரிடமும் கேட்ட கேள்வியை  தான் உங்களிடத்திலும் கேட்கிறேன். சில பின் நவீனத்துவ மற்றும் மார்க்சிய அறிவுஜீவிகள் ஏன் யூத-பாலஸ்தீன் விவகாரத்தை இனவாத அணுகுமுறையோடு பார்க்கிறார்கள்? அமெரிக்க மார்க்சியர் என்ற வகையில் நீங்கள் இதை எவ்வாறு மதிப்பிடுகிறீர்கள்? 

இதை மிக எளிமையான, நேர்மறையான கண்ணோட்டத்தோடு வரலாற்று பூர்வமாக அணுகும் போது நியாயப்பாடு ஒன்றுமில்லை. ஹைடக்கரின் அணுகுமுறையும் அவ்வாறு தான் இருந்தது. நீட்சேயின் மாமனிதர் ((Super man) கோட்பாட்டை ஹிட்லர் எடுத்து கொண்டது மாதிரி கருத்தியல் அணுகுமுறை என்ற சிக்கல்களுக்குள் அறிவு ஜீவிகள் சிக்கி  விடுகிறார்கள்.  

இனவாதம் ஒரே கட்டத்தில் தனக்கான முரணைக் கொண்டிருக்கிறது. இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு மற்றும் ஒடுக்குமுறை இன்னொரு நிலையில் ஹிட்லரின் இனச்சுத்திகரிப்போடு பதிலீடு செய்கிறது. இஸ்ரேல் விஷயத்தில் அதற்கு ஆதரவாக நிற்கும் அறிவுஜீவிகளின் வாதமே  ஒரு இனத்தின் தேசிய இருப்பிடம் தான்.  ஸ்டாலின் இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் போலந்து  மற்றும் லிதுவேனியா மீது நடத்திய தாக்குதல் மற்றும் அவரவர் எல்லைப்பகுதி தொடர்பாக  ஹிட்லருடன் செய்து கொண்ட ஒப்பந்தம், போலந்து மற்றும் லிதுவேனியாவிலுள்ள கட்யனின் ஏராளமானவர்கள் படுகொலை செய்யப்பட்டது போன்றவை ஒரு வரலாற்றுக் குற்றமாக இன்றும் ஸ்டாலின் மீது வைக்கப்படுகிறது.  

ஹிட்லர் மற்றும் ஸ்டாலின் இந்த இரு ஆளுமைகளின் செயற்பாட்டை ஒரே அளவுகோலைக் கொண்டு மதிப்பிடும் பார்வைகளும் இன்று இருக்கின்றன. இந்த ஒப்பீட்டைத் தான் இந்த விஷயத்தில் நான் வைக்கிறேன்.  

பூக்கோ, சார்த்தர், எடின் பாலிபர், லியோதர்த், ஐஸையா பெர்லின் என இன்னும் சிலர் இந்த உதாரண வளையத்தில் வருகிறார்கள். ஐஸையா பெர்லினிடத்தில் நான் இது குறித்து நிறையவே விவாதித்திருக்கிறேன். பூக்கோ மற்றும் சார்த்தரிடம் நண்பர் எட்வர்ட் செய்த் விவாதித்திருக்கிறார். பூக்கோ மற்றும் சார்த்தரிடம்  நான் கண்டது ஒரு வகையான கருத்தியல் ஏமாற்றம்தான். ஐஸையாவிடம் நான் சியோனிசத்திற்கும், நாசிகளுக்கும் இருந்த தொடர்பைப் பற்றி விவாதித்த போது அவர் அதை ஒத்துக்கொள்ளவே இல்லை.  

அவரின் நிலைபாடு வேறு மாதிரி இருந்தது. உடனடியாக அவர் டிராஸட்கிக்கு தாவுகிறார். போஸ்விக் கட்சியில் டிராஸ்ட்க்கி யூதர்களை அதிகமாக சேர்த்து கொள்ள வேண்டும் என்று சொன்ன விஷயத்தை அவர் சொன்னார். நான் சொன்னேன் : ‘அது ஒரு காலகட்டத்தின் நிகழ்தகவு. லெனின் அதற்கு மாறுபட்டு  நின்றதைக் கவனித்தீர்களா? அடையாளங்கள் மோதுவதன் வெளிப்பாடு என்பதை தவிர வேறொன்றுமில்லை’. 

அந்த வகையில் ஹெகலை எடுத்துக் கொண்டால் புரிந்து கொள்ள முடியாதவர் என்ற விமர்சனம் அவர் மீது இருந்தது. பயர்பார்க் ஒரு தேர்ந்த சிந்தனையாளராகவும் அதே நேரத்தில் அடிப்படைவாதியாகவும் இருந்தார். ஐரோப்பிய வரலாறு முழுக்க அறிவு ஜீவிகளின் வேடிக்கை நிகழ்வுகளால் நிரம்பியிருக்கிறது. வரலாறு வெகுகாலம் கழித்தே தன்னை அறிந்து கொள்ளும். அதுவரையிலும் இடைவெளிகள் நிரம்பியதாகவே இருக்கும்.  

Mr.Lenni thanks for your informative dialgoue and valuable time. 
 

பின் குறிப்புகள் : 

1. சியோனிசம் என்பது 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் ஐரோப்பாவின் கிழக்கு மற்றும் மத்திய பகுதியில் உருவான யூத தேசிய இருப்பிடம் பற்றிய கருத்து வடிவம். வரலாற்று அடிப்படையிலான ஜெருசலத்திற்குத் திரும்புவது என்பது இதன் நோக்கம். பண்டைய யூதர்கள் வாழ்ந்ததாகச் சொல்லப்படும் சியோன் மலைப்பகுதி என்பதிலிருந்து சியோனிசம் என்ற சொல் விரிவு பெற்றது. 

2. ஐரோப்பிய அறிவுத்துறை வரலாற்றில் அனா அரந்த் முக்கியமான இடத்தில் வருகிறார். ஜெர்மன் நகரான ஹனோவரில் 1906 ஆம் ஆண்டு பிறந்தவர் அனா. இருத்தலியல் மூலத் தத்துவவாதியான ஹைடெக்கரின் மாணவி. ஹைடெக்கர் இவரை அதிகம் காதலித்தாகச் சொல்லப்படுவதுண்டு. ஐரோப்பாவில் ஏற்பட்ட யூத வெறுப்புக்கான காரணங்களை பற்றி முதன் முதலாக ஆராய்ந்தவர்.  Origin of Totalitarianism,  The Human Condition, Between Past and Future, On Revolution, Lectures on Kant political philosophy, The Life of the Mind போன்ற ஏராளமான நூல்களின் ஆசிரியர். 

3. ஐரோப்பாவின் பல்வேறு அரசியல், பொருளாதார,  மற்றும் சமூகப் பிரச்சினைகளில் இடதுசாரி நிலைப்பாட்டை எடுத்த அறிவுஜீவிகளில் சிலர் பாலஸ்தீன் விவகாரத்தில் இஸ்ரேல் சார்பு நிலைபாட்டையே எடுக்கிறார்கள். இதனைக் குறித்து அறிவு ஜீவிகளுக்கிடையே பல்வேறு விவாதங்கள் நடைபெற்றிருக்கின்றன. குறிப்பாக எட்வர்ட் செய்த் மற்றும் தாரிக் அலி ஆகியோர் பூக்கோ, சார்த்தர், லியோதார்த் போன்றவர்களிடம் அதிக அளவில் உரையாடி இருக்கிறார்கள். எட்வர்ட் செய்த்தின் இந்த உரையாடல்களில் சிலவற்றை நான் மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறேன்.

Exit mobile version