Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இயக்குநர் ஜனநாதன் அன்பும் மனிதமும்!

இயக்குநர் ஜனநாதன் நீண்ட காலப் போராட்டத்தின் பின்னர் தமிழ் சினிமாவில் இயக்குநர் ஆனவர். 2003-ஆம் ஆண்டு தனது 44-வது வயதில் முதல் படமான இயற்கையை இயக்கினார்.  அந்த ஆண்டு சிறந்த படத்திற்கான தேசிய விருதையும் வென்ற ஜனநாதன்.

2006-ஆம் ஆண்டு ஈ படத்தையும், 2009-ஆம் ஆண்டு பேராண்மை படத்தையும், 2015-ஆம் ஆண்டு புறம்போக்கு என்ற பொது உடமை படத்தையும் இயக்கிய ஜனநாதன் பூலோகம் என்ற படத்திற்கு டயலாக் எழுதினார். இப்போது விஜய் சேதுபதியை வைத்து லாபம் என்ற படத்தை  இயக்கி வந்த நிலையில் அதன் போஸ்ட் புரக்‌ஷன் பணிகளுக்கு மத்தியில் திடீர் உடல் நலக்குறைவால் இறந்திருக்கிறார்.

ஜனநாதனின் ஒவ்வொரு படமும் இந்த சமூகத்தின் மீது அவர் கொண்டுள்ள பேரன்பை வெளிப்படுத்தி நிற்பவையாக உள்ளது. இயற்கை ஒரு காதல் கதையாக இருந்த போதும். இரண்டாவது படமான பேராண்மை பழங்குடிகளுக்கான பாடல்.

#

ரஷ்ய எழுத்தாளர் பரிஸ் வசீலியெவ்வின் “அதிகாலையின் அமைதியில்” என்ற நாவல் மாஸ்கோ பதிப்பக வெளியீடாக அக்காலத்தில் வந்தது. அந்த நாவலின் பாதிப்பில் இருந்து உருவானதுதான் பேராண்மை. படத்தை எடுத்து முடித்த பின்னர் படக்குழுவினருக்கு படத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் இருந்தது. ஆனால், வெளிவந்த பின்னர் அது வெற்றிப்படமானது.

#

நீண்ட போராட்டத்தின் பின்னர் திரைத்துறையில் வெற்றிப்பட இயக்குநராக வலம் வந்த ஜனநாதனின் சினிமா வாழ்க்கை பற்றி அறிந்தவர்கள் பலருக்கும் அவரது குடும்ப பின்னணி பற்றியோ ஆரம்ப காலத்தில் அவர் உருவாகி வந்த விதம் பற்றியோ அறிந்திருக்கவில்லை.

#

அறிவியல் புனைகதைகளை எழுதி பரவலான வாசகர்களிடம் எழுத்தாளர் சுஜாதா சென்று சேர்ந்த நிலையில் அறிவியல் புனைவுகளை திரைப்படங்களில் வெற்றிகரமாக்கி தன்னை நிலை நிறுத்திக் கொண்டவர் ஜனநாதன்.

#

அறிவியல் மீது அக்கறையும் ஆர்வமும் கொண்ட ஜனநாதன் வெறும் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர்.  இளம் வயதில் “தொடரும்” என்ற பெயரில் ஒரு கையெழுத்துப்பத்திரிகை ஒன்றை  நண்பர்களுடன் இணைந்து நடத்தி அதன் ஆசிரியராகவும்  இருந்த ஜனநாதனின் முதல் சிறுகதை அந்த கையெழ்த்துப் பிரதியில்தான் முதன் முதலாக வெளியானது. அந்தக் கதையே ஒரு அறிவியல் புனைவுதான்.

இன்று நாம் டெஸ்ட் டியூப் பேபி பற்றி பேசுகிறோம், ஜனநாதன் அக்கதையில்   ஆணின் விந்தணுவையும், பெண்ணின் கருவையும் செயற்கையாக உருவாக்கி அதாவது சிந்தட்டிக்காக உருவாக்கி ஆண் பெண் இருவரின்  உதவியும் இன்றி அந்த இரண்டையும் இணைத்து ஒரு உயிரை உருவாக்குகிறார். ஒரு தமிழக விஞ்ஞானி.ஆனால் இதில் உடபாடில்லான இன்னொரு விஞ்ஞானி அவரை கொலை செய்து விடுவதோடு கதை முடியும். இக்கதை எழுதப்பட்ட  காலத்தில் டெஸ்ட் டியூப்  கருத்தரித்தல் முறை பிரபலமாகியிருக்கவில்லை. அறிவியல் புனைவுகள் மீது ஜனநாதன் கொண்டிருந்த ஆசையை  அக்கதையில் இருந்து அவர் இயக்கிய அத்தனை கதைகளிலும் காண முடியும்.

#

ஜனநாதனின் திரைப்பட வாழ்வு பற்றி பரவலாக அறியப்பட்டிருக்கும் நிலையில்  ஜனநாதனின் குடும்பம் பற்றியோ அவரது பூர்வீகம் பற்றியோ தகவல்கள் இல்லை.அவரைப் பற்றி அரிதினும் அரிதான நண்பர்களே அவைகளை அறிந்து வைத்திருக்கிறார்.

#

ஐந்து ஆண்டுகள் இரண்டு பெண்கள் என ஜனநாதனோடு பிறந்தவர்கள் மொத்தம் ஏழு பேர்.  சென்னையிலேயே பிறந்து வளர்ந்ததால் ஜனநாதனின் சொந்த ஊர் சென்னை என்றே பலரும் நினைக்கிறார்கள். ஆனால், ஜனநாதனின் சொந்த ஊர் தஞ்சை மாவட்டத்தில் இருக்கிற வடசேரி கிராமம். ஆண் பிள்ளையில் கடைசியான ஜனநாதந்தான் அதிகம் படித்தவர் எஸ்,எஸ்.எல்.சி .

#

தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பனை அறிமுகம் ஆன முதல் வருடத்தில் ஜனநாதனின் அண்ணனுக்கு ஒரு லட்ச ரூபாய் லாட்டரி பரிசு கிடைக்கிறது. தமிழகத்தில் முதன் முதலாக லாட்டரியில் பரிசு வென்றவரும் அவர்தான். அந்த பணத்தை வைத்துதான் மயிலாப்பூரில் குடியேறியது ஜனநாதனின் குடும்பம். ஆனால், அந்த பணத்தை வைத்து அந்த குடும்பத்தால் வசதியாக வாழ முடியாத  சூழலில் வறுமைதான் வாழ்க்கையைத் துயரத்தியது.

#

அப்பா சிறுவயதிலேயே இறந்து போக அம்மாதான் ஏழு பிள்ளைகளையும் வளர்த்திருக்கிறார். சென்னை மயிலாப்பூர் பஜார் சாலையில் ஜனநாதனின் அம்மா ஒரு பட்டாணிக்கடை வைத்திருந்தார். அந்த சின்ன வருவாயில்தான் ஏழுபேரையும் தனியொரு மனுஷியாக வளர்த்தெடுத்தார் ஜனநாதனின் அம்மா.

#

ஜனநாதனுக்கு அம்மாவின்  மீது அளவு கடந்த ப்ரியம் உண்டு. ஜனநாதனின் அம்மா பெயர் பார்வதியம்மாள். தன் அம்மாவைப் பற்றி நினைவுகூறும் போது “இன்று நான் ஒரு முற்போக்கு எண்ணம் உள்ள மனிதனாக வாழ்கிறேன் என்றால் அது நூரு சதவிகிதம் என் அம்மாவிடம் இருந்து கிடைத்தது” என்பார்.

#

ஜனநாதன் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்தார். ஏன் அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று பொதுவான ஒரு கேள்வி உண்டு.  ஏழு பிள்ளைகளையும் வளர்க்க ஒரு பட்டாணிக் கடை வருவாயை மட்டுமே நம்பியிருந்தார் .

ஏனைய ஆறு பேருக்கும் திருமணம் நடந்த நிலையில் ஜனாவுக்கும் திருமணம் செய்து கொள்வதில் பெரிய நாட்டமில்லை. தான் நேசிக்கும் திரைப்படத்தை இயக்காமல் திருமணம் செய்து கொள்வதில்லை என்பதில் உறுதியாக இருந்தார்.

நண்பர்கள் பலர்   ‘‘ஜனா திருமணம் பண்ணிக்கோ கடைசிக் காலத்தில் பார்த்துக்க ஒரு ஆள் வேணும்லியா?’’  என்று கேட்ட போதெல்லாம்.

“நானும் திருமணம் பற்றி யோசிக்கிறேன். திருமணக் கனவுகளில் இருந்து அது வாய்க்காமல் போன ஏதோ ஒரு பெண்ணுக்கு என்னால் ஒரு திருமண வாழ்வு சாத்தியப்படும் என்றால் அது ஏற்றுக் கொள்ளக் கூடியதுதான். ஆனால் கடைசிக் கால உதவிக்காக திருமணம் என்றால் யாரோட கடைசிக் காலம்?   திருமணம் ஆன உடனே நான் போய்ச் சேர்ந்து விட்டால் அந்தம்மாவை கடைசிக் காலத்தில் யார் காப்பாற்றுவார்? திருமணம் என்பது இருவருக்குமே சந்தோசமாக அமைய வேண்டும். குறைந்தபட்சம் ஒருவருக்காவது சந்தோசமாக இருக்க வேண்டும் இருவருக்குமே அப்படி இல்லாமல் போனால் என்ன செய்வது? என்று கேட்பார் ஜனநாதன்.

#

ஜனநாதன் என்று அறியப்படும் ஜனாவின் இயற்பெயரே ஜனநாதந்தானா? என்றால் இல்லை. அவர் உண்மையான பெயர் பழனி.   கதைகள் எழுதத் துவங்கிய காலத்தில் தன் பெயரான பழனியை மாற்ற நினைத்த  ஜனநாதன்  எஸ்.பி என்ற இன்ஷியலை தெரிவு செய்தார்.  அவர்களது பூர்வீக ஊரான தஞ்சை வடசேரியில் இரண்டு இன்ஷியல் வைப்பது வழக்கமாக இருந்திருக்கிறது. எஸ். என்பது இன்ஷியல்.அதவாது செவத்தப்பதியன் என்பது ஜனநாதன் குடும்பத்தினர் பயன்படுத்தும் பெயர் அதில் உள்ள எஸ். முதல் இன்ஷியலாகவும். அவரது அப்பாவின் பெயரான பஞ்சாச்சரத்தில் உள்ள பி யையும் இணைத்து எஸ்.பி  என்றானது.

பின்னர் அரூர் ராமநாதன் எழுதிய ‘வீரபாண்டியன் மனைவி’  என்னும் நாவலில் வருகிற கதாநாயகனின் பெயரான ஜனநாதன் என்ற பெயரை  நண்பர்கள் எல்லாம்  பரிந்துரைக்க  பழனி எஸ்.பி. ஜனநாதன் ஆனது இப்படித்தான்.

#

தமிழர்களின் பழங்கால கட்டக்கலை பற்றி  அக்கால தொழில் நுட்பம் பற்றி காதல் கலந்து  ஒரு படம் பண்ண வேண்டும் என்பது ஜனநாதனின் பல ஆண்டுகால ஆசை. அதற்காக திராவிடர் கட்டக்கலை, தமிழர் கட்டக்கலை என தேடித் தேடி பல நூல்களையும் வாசித்து வந்தார். அந்தக் கதைதான் லாபம் கதையோ என நினைக்கத் தோன்றுகிறது. கட்டக்கலை பற்றிய அதை தனது கனவுத் திரைப்படம் என்று ஒரு முறை குறிப்பிட்டார்.

#

தமிழகத்தின் கட்டப்பட்ட கோயில்களுக்குள் ஏராளமான சொல்லப்படாத கதைகள் இருந்தாலும் அன்றைய தொழில் நுட்பம் கொஞ்சம் வியப்பைத்தான் ஏற்படுத்துகிறது, அன்றைய ராஜாவின் உயரத்தை அளந்து அதை பல பகுதிகளாக வகுத்து அந்த அளவைக் கொண்டே பிரமாண்டக் கோவில்களை உருவாக்கியிருக்கிறார்கள். ஒரு கல்லின் அளவு என்பது சிதம்பரம் கோவிலில் ஒரு அளவாகவும், தஞ்சைக் கோவிலில் ஒரு அளவாகவும் கும்பகோணம் கோவிலில் ஒரு அளவாகவும் வேறுபட்டிருக்க ராஜாக்களின் உயரம் சார்ந்த வேறுபாடே காரணம். இம்மாதிரியான பிரமிக்கத் தக்க வாழ்க்கை முறையை மையமாகக் கொண்டே என் அடுத்த படமும் இருக்கும் இது தொடர்பாகத்தான் இப்போது வாசித்துக் கொண்டிருக்கிறேன்.” என்றார் மொத்தத்தில் லாபம் அந்தக் கதையாக இருக்கலாம்.

#

ஜனநாதன் தன் திரைப்படங்களில் அடித்தட்டு மக்களின் அரசியலை பேசினார்.  அவருடைய ஒவ்வொரு  திரைப்பட்டமும் ரஷ்ய இலக்கியங்கள், ரஷ்ய திரைப்படங்களின் பாதிப்பில் உருவானது. தன் வாழ்வின் இறுதிக்காலம் வரை திரையில் கம்யூனிசம் பேசிய அவர் தன்னை ஒரு கம்யூனிஸ்ட் என எப்போதும் சொல்லிக் கொண்டதில்லை!

Exit mobile version