அடூர் அவரது “நாலுபெண்ணுகள்” படத்திற்காக ஏழாவது முறையாக தேசீய விருது பெற்றிருக்கிறார். 2004-ல் சென்னைக்கு வந்த ஆரம்பகாலத்தில் மலையாளப்படங்கள் எனக்கு ஆதர்ஷமாக இருந்தது. அந்த வகையில் எனக்கு பஷீரின் கதையைத் தழுவி அடூர் எடுத்த மதிலுகள் படத்தின் மூலம் ஏற்பட்டது அடூர் மீதான ஈர்ப்பு. பின்னர் திருவனந்தபுரம் செல்லும் போதெல்லாம் அவரை இயலுமாயின் சந்தித்து சிறிது நேரம் உறையாடி வருவேன். அப்படி சில நேர்காணல்களையும் என்னால் செய்ய முடிந்தது.
இந்தியாவின் மிக உயரிய விருதுகளான பத்மவிபூஷன், தாதாசாகேப் பால்கே விருது உள்ளிட்ட பாரத்ரத்னா விருதைத் தவிர எல்லாவற்றையும் பெற்று விட்டார் அடூர். அடூர் அதிகமாகப் பேச மாட்டார் சிக்கனமாக வார்த்தைகளை உபயோகிப்பார் யாருடைய கதையை தழுவுகிறோமோ அவருக்கே கதையில் நேர்மையான அங்கீகாரத்தைக் கொடுப்பார் மற்றபடி அடூர் எடுத்த எல்லா படங்களும் சிறப்பானவைகள் அல்ல திருவனந்தபுரத்தில் அவரைச் சந்தித்த போது,
‘‘நான் இப்போதும் கற்றுக் கொண்டிருக்கிறேன் சினிமா தொடர்பாக படித்ததோ, சினிமா எடுத்ததோ விருதுகளுக்காக அல்ல. விரும்பிய ஒன்றை தெரிந்து கொள்வதற்காகவே” என்று பணிவோடு சொல்லும் அடூர் கோபாலகிருஷ்ணன் , தனது சிறுபிராய சினிமாத் தேடல் குறித்து சொல்லும் போது,எனக்கான சினிமா என்னிடமிருந்துதான் வந்தது.அப்போ நான் ஸ்கூலில் படித்துக்கொண்டிருந்தேன்.என் அம்மாவோட மூத்த சகோதரருக்கு ஒரு சில தியேட்டர்கள் இருந்தது. காசு கொடுக்காம அங்கே போய் ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி.பிரேமலேகா மாதிரியான படங்களை அடிக்கடி பார்ப்பேன்.வருடக்கணக்காக அந்தப்படங்கள் ஒடும்.சினிமாவும் நாடகமும்தான் இனி நம்மோட வாழ்க்கைணு முடிவு பண்ணினது அப்போதான்.பதேர்பாஞ்சாலிண்ணு ஒரு படம் காட்டினாங்க..இது ஒரு பெயிண்டர் எடுத்த படம். ஒரு சில அவாட்ஸ் வாங்கியிருக்கு என்று சொல்லி பதேர்பாஞ்சாலி படத்தோட இயக்குநர் சத்யஜித்ரேயை அறிமுகப்படுத்தினாங்க….முகப்பூச்சு இல்லாத மனிதர்களின் ஜீவிதத்தை முதன்முதலாக தரிசித்தது அந்தப்படத்தில்தான். பூனே இன்ஸ்டியூட்டில் சேர்ந்து டைரக்சன் கத்துக்கணும்ணு முடிவு பண்ணி அங்கே போய் சேர்ந்தேன். ஆனால் அந்தக் காலத்தில் சினிமா எல்லா அக்காடமிக் கல்வி மாதிரி முறையான பாடத்திட்டங்கள் மூலம் கற்றுக் கொள்ளக் கூடிய விஷயம் என்ற எண்ணமோ பார்வையோ பொதுவாக இல்லாமல் இருந்தது. அப்போது ஒரு சினிமா விஐபி ஒரு நாள் எதுக்கு இன்ஸ்டியூட்டுக்கு வந்திருக்கீங்க? என்ன மாதிரி சினிமா எடுப்பீங்க? என்று கேட்டார் நான் சொன்னேன்‘‘பத்து சினிமா எடுத்தால் அதில் ஒரு நல்ல சினிமா வரும்லியா அதுக்குத்தான் நான் வந்தேன்’’ என்று சொன்னேன். அவர் திருப்பிக்கேட்டார்.‘‘பத்து குழந்தைகள் பிறந்து அதில் ஒன்பது ஊனமாகவும் ஒன்று மட்டும் ஆரோக்கியமாகவும் பிறந்தால் போதுமா ? என்று கேட்டார். அது ஒரு சிக்கலான கேள்வி இல்லையா? நல்ல சினிமா என்பது என்ன? ஓடுகிற சினிமாவா? வசூலிக்கிற சினிமாவா? அல்லது சிலரின் கண்ணீரை காவு கேட்கிற சினிமாவா? என்று பலவாரான குழப்பங்கள்.
ஆனால் இது குறித்து சிந்திக்கத் துவங்கினால் ஆரம்பகாலத்தில் இருந்த குழப்பங்கள் இன்றும் வந்து சேர்ந்து விடுகிறது. நான் எனக்கான சினிமா எனது ரசனைக்கான சினிமாவை எடுக்கத் துவங்கினேன். அப்புறம்தான் என்னோட முதல் படமான சுயம்வரம் படத்தை எடுத்தேன். முதல் படம் பெறும் போராட்டமாக இருந்தது.’’ என்று ஆரம்பகால சினிமா ஆர்வம் குறித்துப் பேசுகிறார்
இனி அவரது நேர்காணல்.
?தாதா சாகேப் பால்கே விருது, இப்போது ஏழாவது முறையாக தேசீய விருது சந்தோசமாக இருக்கிறதா? பொதுவாக விருதுகளைப்பற்றிய உங்கள் அபிப்ராயம் என்ன?
நான் மிகவும் மகிழ்ச்சியடைந்திருக்கிறேன்.
தென்னிந்தியாவில் முதல் முதலாக ஒரு இயக்குநருக்கு பால்கே விருது கிடைத்தால் அதுவும் நானாக இருக்கும் போது மகிழ மாட்டேனா? இந்தியா சினிமாவுக்கு நானும் பங்களித்திருக்கிறேன் என்பதை நினைக்கும் போது மகிச்சியாக இருக்கிறது. திரைப்படங்கள் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதற்க்காகவும், சினிமா துறையில் சாதனை படைத்தவர்களை ஊக்குவிப்பதற்காகவும்தான் மத்திய அரசு சினிமா விருதுகளை வழங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் விருதுக்குரியவர்களை தேர்ந்தெடுப்பதற்க்கான ஜூரிக்களை அமைக்கிறது. விருதுகள் தகுதியானவர்களை சென்றடைவதும்,தகுதி குறைந்தவர்களிடம் செலவதும். நியமிக்கப்படுகிற ஜூரிகளின் கையில் உள்ளது. ஒவ்வொரு முறையும் மத்திய அரசு விருதுகள் அறிவிக்கும் போது நம் நாட்டில் சர்ச்சைகள் எழுவதுண்டு. இந்தியாவைப்போல பல மொழி கலாச்சாரங்களைக்கொண்ட நாட்டில் இம்மாதிரி சர்ச்சைகள் எழுவது சகஜம்தான். எனக்கு கிடைத்த விருதுகள் குறித்து நான் கருத்துச் சொல்வதென்றால் விருதுகள் கிடைக்கும் என்றெல்லாம் நான் சினிமா எடுக்கவில்லை . ஆனால் இந்த விருதுகள் மக்களுக்கு ஒரு செய்தியைச் சொல்கின்றது. மறந்து விடாதீர்கள். இது ஒரு நல்ல சினிமா. இது உங்களால் பார்க்கப்பட வேண்டிய படம் என்று மக்களுக்கு அரசு சொல்வதும் அதன் முக்கியத்துவத்தை மக்கள் உணரவுமே இம்மாதிரி விருதுகள் கொடுக்கிறார்கள் என நினைக்கிறேன்.
?இப்போது உங்களுக்கு தேசிய விருதைப் பெற்றுக் கொடுத்திருக்கும்‘நாலு பெண்ணுகள்‘ கதையை தகழியிடம் இருந்து எடுத்து அப்படியே காட்சியாக்கினீர்களா? அல்லது நீங்கள் கதையை மாற்றி அமைத்தீர்களா?
தகழி சிவசங்கரன் பிள்ளை எழுதிய ஏராளமான கதைகளில் நான்கு கதைகளை வெவ்வேறு தொகுப்புகளில் இருந்து தேர்ந்தெடுத்துதான் இந்த நாலு பெண்ணுகள் படத்தை இயக்கினேன்.
நான்கு கதைகள், நான்கு பெண்கள். திருமணமாகியும் கணவனால் தாம்பத்திய சந்தோசத்தை பெற முடியாத பெண், பாலியல் தொழிலாளி, குடும்பத்தலைவி, திருமணமாகாத முதிர் கன்னி, என நான்கு கேரளப் பெண்கள் தங்களின் வாழ்வின் மீது எவ்வாறான நம்பிக்கைகளைக் கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பேசுகிற கதை அது.ஒரு வகையில் இது மனச்சாட்சியை உலுக்குகிற விஷயமும் கூட பெண்கள் குறித்த மதிப்பீடுகளை யதார்த்தமாக உணரச் செய்கிற கதை இது என நினைக்கிறேன்.
?பூனே இன்ஸ்டியூட்டில் படித்த வந்த பிறகு பல ஆண்டுகள் கழித்து அந்த இன்ஸ்டியூட்டுக்கே தலைவரான அனுபவம் எப்படியிருந்தது?
எனக்கு சினிமா மீதான மரியாதையை ஏற்படுத்திக் கொடுத்தது பூனே இன்ஸ்டியூட்தான். என்னோட சொந்த மாநிலத்தில் கிடைக்காத சினிமா நட்புகள் பூனேயில் கிடைத்தது.மலையாளத்தில் சில படங்களை இயக்கியவரும் திரைப்படக்கல்லூரியின் டீனாக இருந்தவருமான ஜாண் சங்கரமங்கலம் என்னுடன் படித்தவர். இயக்குநர்கள் சுபாஷ் கய், மணிகவுல்,நடிகர் அஷ்ராணி,நடிகை சுதாராணி ஷர்மா.இவர்களெல்லாம என்னோட டிப்ளோமோ படத்தில் நடித்தவர்கள்.கேரளத்தின் புகழ் பெற்ற இயக்குநர்கள் ஜாண்ஆப்ரஹாம்,கே.ஜி ஜார்ஜ், என்னோட ஜூனியர்ஸ். ரெம்ப சந்தோசமான பருவமாக பூனா இன்ஸ்டியூட்காலம் எனக்கு இருந்தது .பிற்பாடு இன்ஸ்டியூட்டுக்கு தலைவராக போன போது நான் படித்த போது எனக்கு சினிமா கல்வியில் என்னென்ன கிடைக்கவில்லையோ அதையெல்லாம எதிர்கால சந்ததிக்கு கொடுக்க வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தேன்.சினிமா கல்வியின் பல துறைகளிலும் பாடத்திட்டங்களை மறுசீரமைப்பு செய்தேன். குறிப்பாக டைரக்ஷன் துறையில் பாடத்திட்டத்தில் பல மாற்றங்களை கொண்டுவந்தேன்.ஆனால் என்ன காரணத்தாலோ என் பதவிக்காலத்துக்குப்பிறகு பாடத்திட்டங்கள் பழைய ஸ்டைலுக்கே மாற்றப்பட்டது. மாற்றங்களுக்கான தேவைகள் குறித்து நான் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகிறேன்.
?புனே திரைப்படக் கல்லூரியில் பயின்ற காலத்திய மன நிலைக்கும் இன்றைய மனநிலைக்கும் ஏதாவது வேறு பாடு இருக்கிறதா?
அங்கு செல்வதற்கு முன்னால் நான் தமிழகத்தின் திண்டுக்கல்லில் காந்திகிராமில் படித்துக் கொண்டிருந்தேன்.
ஆனால் அப்போது எனக்கு சினிமா பற்றி எதுவுமே தெரியாது. நான் நேசிக்கிற தெரிந்து கொள்கிற ஆர்வத்தில்தான் புனே கல்லூரிக்குச் சென்றேன். உலகின் ஆகச்சிறந்த படைப்புகளை அங்கு பார்த்தேன் அதில் சில இந்திய இயக்குநர்களும் இருந்தார்கள். 1965ல் படித்து முடித்து விட்டு வெளியேறிய பிறகு நாற்பதாண்டுகள் ஓடிக் கழிந்து விட்டது. அப்போது என்ன மனநிலையில் இருந்தேனோ இப்போதும் அப்படியே இருக்கிறேன். தினம் தோறும் நான் கற்றுக் கொண்டிருக்கிறேன், சினிமாவில் மட்டுமல்ல வாழ்விலும்.
?பொதுவாக உங்களை மாதிரி இயக்குநர்களுக்கு தயாரிப்பாளர்கள் கிடைப்பதில்லையே?
டூயட்,,மயிர்க்கூச்செரியும் சண்டைக்காட்சிகள் நிறைந்த படம் என்று போட்டால்தான் சினிமா. என்று தயாரிப்பாளர்களும் பைனான்சியர்களும் ரசிகர்களும் நினைத்துக்கொண்டிருந்த எழுபதுகளில் நான் சினிமா எடுக்க வந்தேன். அதனால் என் பாணி படங்களுக்கு பைனான்சியர்ஸ் கிடைப்பது கடினமாக இருந்தது. அதனால் ஆரம்பக் கட்டத்தில் நாங்கள் சில நண்பர்கள் சேர்ந்து பணத்தை போட்டு டாக்குமெண்டரி படங்களைத் தயாரித்தோம். என்னுடைய முதல் படத்திற்க்கு பிலிம் பைனான்ஸ் கார்ப்பரேஷனிடம் இருந்த நிதி கிடைக்க ஏழு ஆண்டுகள் காத்திருக்கவேண்டி வந்தது. ஏழு ஆண்டுகளுக்கு பிறகு பிலிம் பைனான்ஸ் கார்ப்பரேஷனிடமிருந்து வந்த பணத்துடன் டாக்குமெண்டரி படங்களின் மூலம் நான் சம்பாதித்த பணத்தையும் சேர்த்து சுயம்வரம் படத்தை எடுத்தேன். அதனால்தான் நான் எனது முதல் படமான ‘சுயம்வரம்’ பெரும் போராட்டமாக இருந்தது என்றேன்.
?சுதந்திரமான மக்கள் சினிமா இயக்கங்கள் கேரளத்தில் ஜாண்ஆப்ரஹாம் துவங்கிய ஓடேஸா’அமைப்பை மாதிரி மக்களுக்கான சினிமா அமைப்புகள் இன்று இல்லாமல் போனதேன்?
மக்களிடம் இருந்தே நிதி வசூலித்து அவர்கள் ஊரிலேயே படம்பிடித்து அங்கேயே அதை16 – எம் எம் படமாக போட்டுக்காட்டும் ஜாணின் ‘ஒடேஸா‘அமைப்பும் அவரும் மக்களோடு மக்களாக சினிமாவை ஒன்று கலந்தார்கள். அல்லது அதற்கு முயர்சித்தார்கள். மக்கள் தயாரிக்கிற படங்களை அவர்களிடமே கொண்டுபோய் சேர்த்த ஜாணின் உழைப்பு மலையாள சினிமாவில் காலாகாலத்துக்கும் போற்றத்தக்கது. ஜாணுக்கு பிறகு அந்த அமைப்பு வெற்றிகரமாக செயல்படவில்லை. ஜாண் மாதிரி ஆத்மார்த்தமான உழைப்பும் இல்லை ஒடேஸா மாதிரி அமைப்பும் இல்லை.
?உங்கள் சினிமாக்களுக்கு கலைப்படங்கள் என்ற முத்திரை விழுவதை விரும்புகிறீர்களா ?
சினிமாவை கம்ர்ஷியல் படங்கள் கலைப்படங்கள் என்று பிரிப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது . எல்லா படங்களும் தங்களால் இயன்ற லாபத்தை தயாரிப்பாளருக்கு பெற்றுத் தரத்தான் செய்கிறது.என்னுடைய படங்களுக்கு அதிக முதலீடு தேவையில்லை.ஆனால் என்னுடைய எல்லா படங்களும் தயாரிப்பாளருக்கு போட்ட பணத்தை பெற்றுத்தந்துள்ளன. பெரும்பாலான படங்கள் லாபத்தையும் சில படங்கள் பெரும் லாபத்தையும் ஈட்டிக்கொடுத்துள்ளன. பெரும்பான்மை மக்களை சென்றடையும் அம்சங்கள் ஒரு படத்தில் இருந்தால் அது கம்ர்ஷியல் படம் என்று நினைக்கிறார்கள்.அதிக பொருட் செலவில் எடுக்கப்படும் கம்ர்ஷியல் படங்கள் படு மோசமான தோல்வியடைந்து பெட்டிக்குள் முடங்குவதும். கலைப்படங்கள் என்று நீங்கள் சொல்லக்கூடிய படங்கள் நன்றாக உலகெங்கிலும் பயணித்து நல்ல வருவாயை ஈட்டிக் கொடுப்பதும் இன்றைய சினிமாவின் வழித்தடத்தில் இறைந்து கிடக்கிறது.ஆகவே சினிமாவை கமர்ஷியல், கலை என்று பிரிப்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது.நான் கமர்ஷியல் படங்களில் இருந்து எந்த வகையிலும் விலகவில்லை. கமர்ஷியல் இயக்குநர்கள் பயன்படுத்தும் அதே கேமிரா, அதே லைட்ஸ், படச்சுருள்களைத்தான் நானும் பயன் படுத்துகிறேன். ஒரே வித்யாசம் நான் என்னுடைய படங்களை எனக்கு பிடித்த மாதிரி படமாக்குகிறேன் என்பதுதான்.
கோடி கோடியாகக் கொட்டி ஒரு பாடலுக்காக ஃபாரின் போகிற சினிமா தொழிலில் கலைப்படங்கள் எடுப்பது செல்வத்துக்கும் செல்வாக்கிற்கும் பயன்படாதே.
? நீங்கள் வாங்கும் ஊதியத்தைச் சொல்ல முடியுமா?
செல்வமும் செல்வாக்கும் சேர வேண்டும் என்று நான் சினிமா எடுக்கவில்லை நான் எடுப்பது கலைப்படங்கள் என்று சொல்லப்படும் ஆர்ட் சினிமாவும் அல்ல, நான் எடுத்த படங்கள் எனக்கு அதிக லாபத்தை ஈட்டிக் கொடுத்திருக்கிறது. நான் என்ன ஊதியம் வாங்குகிறேன் என்பதை உங்களிடம் மட்டுமல்ல உலகுக்கும் சொல்ல மாட்டேன். காரணம் அது என் தனிப்பட்ட விஷயம். நீங்கள் ஏன் சினிமாவை கலைப்படம் என்றும் வணிகப்படம் என்றும் வேறு படுத்துகிறீர்கள்? அப்படி என்றால் அடூர் படங்கள் எடுத்து சம்பாதிக்கவே இல்லையா என்ன? அப்படி எல்லாம் இல்லை. நான் வர்த்தகன் அல்ல கலைஞன். லாபமீட்டும் கலைஞனாகவும் இருக்கிறேன். சினிமா எடுக்கும் போது கலைப்படமாக அல்ல என் விருப்பத்திற்காவும் என் ரசனை சார்ந்தும் இயக்குகிறேன். அதில் வெற்றியும் பெறுகிறேன்.
எனக்கென்று தனித்த விருப்பங்களும் ரசனைகளும் உண்டு. கடந்த நாற்பத்தைந்து ஆண்டுகளில் முப்பது குறும்படங்களும் 11 முழு நீள சினிமாவும்
?இலக்கியத்தோடு இணைந்து பயணித்த மலையாள சினிமா தற்காலத்தில் அதன் ஆன்மாவை தொலைத்து விட்டதா?
பயணத்தில் நாம் இடர்களைச் சந்திக்கிறோம் மேடு பள்ளங்களைக் கடக்க வேண்டியிருக்கிறது என்பதற்காக யாரும் பயணத்தை பாதியில் இடை நிறுத்தி விடுவதில்லை. அது போலவே சினிமாவும் வனப்பும், வறுமையும் வந்து செல்லத்தான் செய்யும். மலையான சினிமா அதன் கெட்ட நேரத்தைக் கடந்து கொண்டிருக்கிறது என நினைக்கிறேன்.
மலையாளத்தில் புதிய தலைமுறை இயக்குநர்களில் நம்பிக்கை தருகிறவர்கள் என்று சில படங்களையோ இயக்குநர்களையோ குறிப்பிட இயலுமா?
மலையாளத்தில் எம். .ஆர். சுகுமாரன்தான் என் மனதுக்குப் பிடித்த இயக்குநர். நடிகர் முரளியை வைத்து அவர் இயக்கிய ‘த்ரிஷாந்தம்‘ படம் மலையாளத்தின் மிகச் சிறந்த படம் என்பேன்.
?கேரளத்தில் மம்மூட்டி மோகன்லால் போன்ற நடிகர்கள் உங்களது சினிமா முயர்ச்சிகளுக்கு உந்துதலாக இருக்கிறார்களா?இப்போது வழமையான மலையாள சினிமா பாரம்பரீயம் சீரழிந்து விட்டதாக அறிவு ஜீவிகள் குற்றம் சாட்டுகிறார்களே?
மம்மூட்டி,மோகன்லால், சுரேஷ்கோபி போன்றோர் என்னுடைய முயர்ச்சிகளுக்கு எப்போதும் ஆதரவாக இருந்திருக்கிறார்கள்.இம்மாதிரி படங்களில் நடித்து அதற்க்குரிய பயனையும் அடைந்திருக்கிறார்கள்.‘அனந்தரம், விதேயன், மதிலுகள் என என்னுடைய மூன்று படங்களில் மம்மூட்டி நடித்துள்ளார்.சிறையிலடைக்கப்படுகிற ஒரு கிரியேட்டருடைய தனிமைக்குள் ஊடுறுவுகிற ஒரு சிறைக் காதலை மதிலுகள் படத்தில் சொல்லொயிருப்பேன். கடைசி வரை அதில் வருகிற பெண் யாரென்றே தெரியாது.துன்பமான சிறையிலிருந்து அவன் விடுதலையாகி வெளியில் போக நினைக்கிறான் விடுதலை தள்ளிப்போகிறது.பெண் சிறைப்பகுதியில் இருந்து ஒரு காதல் கிடைத்து சிறை சொர்க்கம் ஆகும் போது விடுதலை வந்து துன்பம் கொடுக்கிறது.வைக்கம் முகமது பஷீருடைய கதையை நான் படமாக்கிய போது அது வசூலிலும் நல்ல பெயரை சம்பாதித்துக்கொடுத்தது.இப்போதும் நான் சினிமா எடுத்தால் என்னுடைய முயர்ச்சிகளுக்கு நடிகர்கர்கள் துணைபுரிவார்கள் என்று நம்புகிறேன்.
?தமிழ் சினிமா உங்களுக்கு பரிச்சயம் உண்டா அது குறித்துச் சொல்ல முடியுமா?தமிழ் சினிமாவில் உங்களுக்குப் பிடித்தவர்கள் யார்?
எனது துவக்கலாத்தில் நான் தமிழ் சினிமாவைக் கடந்தே வந்திருக்கிறேன். ஒரு முறை சென்னையில் பரணி ஸ்டுடியோவில் 1957&ஆம் ஆண்டு என நினைக்கிறேன் வீரபாண்டிய கட்டப் பொம்மன் ஷூட்டிங் எல்லாம் பார்த்திருக்கிறேன். அந்த ஷாட்டில் சிவாஜிகணேசனும், மனோரமாவும் நடித்துக் கொண்டிருந்தார்கள். தமிழ் சினிமா பற்றிய என் கருத்து என்னவென்றால் செழுமையான தமிழ் இலக்கியத்தைத் தொட்டு தமிழ் மக்களின் வாழ்வோடு பின்னி அதோடு கைகோர்த்து தமிழ் சினிமா பயணிக்கவில்லையோ? என்று தோன்றுகிறது. மற்றபடி தமிழில் இயக்குநர் மணிரத்னமும், நடிகர் கமலஹாசனும்தான் எனக்குப் பிடித்த தமிழ் சினிமா பிரபலங்கள்.
?சினிமாவை டி வி சீரியல்கள் தின்றுவிட்டது என்று குற்றம்சுமத்துகிறார்களே?
சினிமாவைத் தின்பதிருக்கட்டும் தொலைக்காட்சியும் அதில் வரும் சீரியல்களும் போதை வஸ்துவைப்போல மக்களின் மனதை மயக்கி வைத்திருக்கின்றன.
.இதிலிருந்து மக்களை திசைதிருப்புவது கடினம்.வெறுத்துப்போய் மக்களாக திரும்பிவந்தால்தான் உண்டு.
?நல்ல சினிமாவுக்காக அரசு என்ன செய்ய வேண்டும்?
தேசீய திரைப்பட வளர்ச்சி கழகம் N,F.D.C)போன்ற அமைப்புகள் நல்ல சினிமாவுக்கான முற்போக்கு கொள்கைகளை உருவாக்க வேண்டும்.வெறும் பணத்தை கடன் கொடுக்கும் அமைப்புகளாக இல்லாமல் நல்ல சினிமாவை ஊக்குவிக்கும் அமைப்பாக மாறவேண்டும்.நம் நாட்டில் நல்ல படங்கள் பல தியேட்டர்களை அடையாமல் முடங்கிப்போகின்றன. இந்நிலையை மாற்றி நல்ல படங்களை தியேட்டர்களுக்கு விநியோகம் செய்யும் வர்த்தகத்தை அரசே நடத்த வேண்டும்.
?அரசியலுக்கு வரும் சினிமா நடிகர்களைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
ஒரு நல்ல நடிகரால் நல்ல அரசியல்வாதியாகவும் நடிக்க முடியும்.