தந்தி டி.வியில் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் கேள்விகளை தொடுக்கும் ‘மக்கள் தர்பார்’ நிகழ்ச்சிக்கு 30 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களிடம் நிகழ்ச்சியின் இறுதியில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 18 பேர் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்தை ஆதரித்தனர். பொன்னாருக்கு ஆதரவாக 8 பேரே கையை தூக்கினர். நிகழ்ச்சியின் இறுதியை மட்டும் தான் பார்க்க முடிந்தது. கன்னியாகுமரியில் காங்கிரஸ் வெற்றி பெற்ற பிறகு கடந்த இரண்டு வருடங்களாக திருவனந்தபுரம் செல்லும் நான்கு வழிச் சாலை வேலை நடைபெறவில்லை என்றார் பொன்னார். பாஜக தவிர்த்து வேறு யாரை தேர்ந்தெடுத்தாலும் வேலைகள் நடக்காது என்றும், மூன்று வருடங்கள் இனியும் பாஜக தான் மத்தியில் இருக்கப் போகிறது என்றும் மிரட்டும் தொனியில் பேசினார். அதை நாம் தமிழர் வேட்பாளர் உடனே தட்டிக் கேட்கவும் செய்தார். பொன்னார் இன்னொன்றையும் கூறினார். சாதி, மதமென பிரிந்து கிடப்பது போதுமெனவும், மக்களை வாழ விடுங்கள் என்றும் பெரிய யோக்கிய சிகாமணி போல பேசினார். இது பொன்னார் மற்றவர்களை பார்த்துப் பேசினார் என்று நினைப்பதைக் காட்டிலும் தன்னை நோக்கியே பேசினார் என்று எடுத்துக் கொள்ளலாம். மதவாத அரசியலின் உச்ச பலனை பொன்னார் தொட்டு விட்டார். இதற்கு மேல் மதவாதம் வாக்குகளை பெற்றுத் தராது என்ற அனுபவப் பாடத்தை கற்றுக் கொண்டு விட்டார். அதனால் தான் இரவல் சொற்களில் மதச்சார்பின்மை பேசுகிறார். சங்கிலித் திருடன் ஒருவன், ‘அதோ திருடன்…’ என்று சொல்லிக் கொண்டே ஓடுவதை போன்று பொன்னார் மற்றவர்களை பார்த்து மத அரசியல் வேண்டாம் என்று கூறுவது நகைப்புக்கிடமாக இருக்கிறது. மத அரசியலை உதறும் பாவனை கொண்ட பொன்னாரின் தேர்தல் கால சொல்லாடல்களின் இன்னொரு அம்சம் என்னவென்றால் அதானியின் துறைமுக மற்றும் சாலை விரிவாக்கப் பணிகளுக்கு முழுக்க தன்னை நேர்ந்து விட்ட கடப்பாடு. ஒரு பக்கம் இந்துத்துவப் போக்கிரியாகவும் மறுபுறம் அதானிக்கு தம்பிரானாகவும் இருக்க வேண்டிய அந்திம கால அரசியல் நிர்ப்பந்தங்கள் இணைந்து பொன்னாரின் கதையை இன்னொரு முறை முடித்து வைக்க உக்கிரமாகக் காத்துக் கொண்டிருக்கின்றன.