நேற்று இங்கிலாந்துத் தமிழர்களின் தயாரிப்பான ”யாவும் வசப்படும்” என்னும் முழு நீ(ல)ளத் திரைப்படத்தை பார்க்கக்கிடைத்தது.
அண்மையில் NorTamil.no என்னும் இணையத்தளத்தில் ஈழத்து திரைப்படத்துறையின் இயக்குனர்களில் ஒருவரும், பெரும் அனுபவசாலியும், நோர்வேயில் வாழ்பவுருமான சிவபாலன் காசிநாதர் அவர்கள் ”ஈழத்தமிழரும் சினிமாவும் – ஒரு முதியவனின் சில அனுபவக் குறிப்புக்கள்” என்னும் கட்டுரையில் சிறந்த திரைப்படங்களைப் பாருங்கள், என பலதையும் வகைப்படுத்தி, அவை உங்களுக்கு பலதையும் கற்றுத்தரும் என்று மறைமுகமாக சில கருத்துக்ளை தற்போதைய திரைப்படக்கலைஞர்களுக்கு அறிவுறுத்தியிருந்தார்.
அவரின் கருத்து மிகவும் கச்சிதமாக ”யாவும் வசப்படும்” குழுவினருக்கும் பொருந்துகிறது. ஈழத்தவருக்கான சினிமாவை நாம் தேடும் காலம் இது. ஆனால் இப்படியான சினிமாக்கள் தென்னிந்திய சினிமாவின் குப்பைகளை மிஞ்சிவிடும் போலிருக்கிறது. இவ்வளவு பணத்தையும், ஆர்வத்தையும், நேரத்தையும், கலைஞர்களையும் வீணடித்திருக்கிறார்களே, சற்றாவது தரத்தைப் பற்றி அவர்கள் ஏன் சிந்திக்கவில்லை என்று யோசித்துப்பார்க்கிறேன். இதற்கான பதில், திரைப்படக்குழுவின் முக்கிய நபர்களின் கற்பனை மற்றும் கலையுணர்வின் வறுமையில் ஆரம்பிக்கிறது என்றே கருதவேண்டியிருக்கிறது. கற்பனைவளம் என்பது கலைகளின் இதயத்துடிப்பு என்பதை பலரும் மறந்துவிடுகிறார்கள்.
எமது மொழியை பேசாத எம்மவர்களின் சினிமா, நாடகத்தன்மையான அபத்தமான நடிப்பு, கற்பனைத்திறனே இல்லாத வக்கிரமான கமரா கோணங்கள், தொய்வான திரைக்கதை, நாடக பாணியிலான வசனங்கள். இவற்றுடன் பல காட்சிகளில் வரும் இசையை எங்கேயோ கேட்டிருக்கிறேன். நோர்வேயின் பீத்தோவன் என்னும் Edvard Grigஇன் இசையா என்ற சந்தேகமிருக்கிறது, காட்சிகளுக்கு பொருத்தமில்லாத இசை, இயக்குனருக்கு எதைக் கூறுவது என்று பலமாய் யோசிக்கவேண்டியிருக்கிறது. அவர் இப்படத்தை படமாக்கிய பின் பல தடவைகள் பார்த்திருப்பார். அப்படி இருந்தும் ஏன் அவரால் இவ்வளவு அபத்தமான, காட்சிகளை, கமரா கோணங்களை, வசனங்களை, இசையை சற்றாவது திருத்தியமைக்கமுடியவில்லை? நாடகத்தன்மையான செயற்கைத்தன நடிப்பைக்கூடவா அவரால் புரிந்துகொள்ளமுடியவில்லை. ஏன் அவர் திருத்த முயற்சிக்கவில்லை? அல்லது இதுதானா அவர் விரும்பும் திரைப்படம்?
இவ் வருடம் பிரான்ஸ் குறும்பட விழா ஒன்றிற்கு நடுவராக அழைத்திருந்தார்கள். பிரபல தென்னிந்த திரைப்பட இயக்குனர் சசி நடுவர்களுக்கு தலைமைவகித்தாா். அங்கு சொக்கன் விஜிதரனின் 30 நிமிட படம் ஒன்றினை பார்க்கக் கிடைத்தது. அதன் தொழில்நுட்ப நேர்த்தி அத்தனை அற்புதம். இத்தனைக்கும் அவர்கள் மிகவும் சாதாரண கமராக்களையே பாவிக்கிறார்கள். இயக்குனர் சசி ஆச்சர்யப்பட்டு பாராட்டுமளவிற்கு அத்தனை தரம்மிக்கதாக இருந்தது அந்தப்படம். அந்தப் போட்டிகளின் இறுதிச் சுற்றில் பங்கு பற்றிய குறும்படங்களின் தரத்துடன் நாம் இந்தப் திரைப்படத்தை ஒப்பிடவே முடியாது. மலைக்கும் மடுவுக்குமான தூரம் அது.
சொக்கன் விஜிதரன், லெனின், சதாபிரணவன் போன்ற கலைஞர்களிடம் கற்பனைத்திறணையும், கலையுணர்வையும் ஒன்றுசேரக் காணமுடிகிறது. அதனால்தான் அவர்களின் தயாரிப்புக்கள் பெரிதாய் மிளிர்கின்றன. ஒரு கைத்தொலைபேசியில் எடுத்த God is dead என்ற திரைப்படம் பாரீஸ், கொரிய நாடுகளில் முதற்பரிசை வென்றிருக்கிறது என்பதானது ஒரு முக்கிய செய்தியை எமக்கு எடுத்துக்கிறது. தொழில் நுட்பத்தையும், கருவிகளையும் யாரும் பணத்திற்கு வாங்கிக்கொள்ளலாம். ஆனால் கற்பனைத்திறணையும், கலையுணர்வையும் பணத்தினால் வாங்கமுடியாது என்பதே அது. அவையே கலைஞர்களை உருவாக்குகிறது.
இப்படியான காட்சிகள், கமரா கலைஞர்களின் கற்பனை வறுமையும், கலையுணர்வுப் பற்றாக்குறையையும் மிகத் தெளிவாகவே பார்வையாளர்களுக்கு அறியத்தருகின்றன. இயக்குனர்களும் இவற்றை அனுமதிப்பது அவர்களும் இப்படியான காட்சிகளை ஆதரிக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது.
படத்தில் தேவா என்னும் பாத்திரத்தில் நடித்தவர் சிறப்பான இயக்குனரிடம் சிக்கினால் அவரது திறமை மிளிரும். பாத்திரங்களை உணர்ந்து, புரிந்து அதற்கேற்ப நடிக்கக்கூடியவர்களை அடையாளம் கண்டு, அவர்களின் திறமையை வெளிக்கொணர்வது இயக்குனரின் திறமை. இப்படத்தின் மிகப்பெரிய பலவீனமும், இயக்குனரின் தோல்வியும் இவையே. அண்மையில் நோர்வேயில் வெளிவந்த 9c Oslo என்னும் எம்மவரின் திரைப்படத்தின் படத்தின் மிகப்பெரிய பலமே நடிகர்களை அடையாளம் கண்டதும் அவர்களின் திறமையை வெளிக்கொணர்ந்ததுமே ஆகும்.
இன்று மதியம் தென்னிந்தியாவில் பிரபல இயக்குனர் ஒருவரிடம் நடித்துவிட்டு நோர்வே திரும்பியிருக்கும் நண்பர் ஒருவருடன் உரையாடக்கிடைத்தது. நடிப்பது என்பது ஒரு யாகம். அதனை தியானம்போல் உணர்ந்து, விரும்பி, உள்வாங்கி பிரக்ஞையுடன் செய்பாவிடின் உங்களின் நடிப்பு மிளிராது என்றார் அவர். இன்றைய படம் காங்ஸ்டர் படம். ஆனால் காங்ஸ்டர்களுக்கு என்று ஒரு கலாச்சாரம் உண்டு. உதாரணமாக அவர்களின் நடை, உடை, பாவனை, மொழி, வாகனங்கள், குரூரம் என்பற்றைக் கூறலாம். இப்படியான ஒரு படத்தை எடுப்பவர்கள் அவற்றை மிக நுட்பமாக அவதானித்து உள்வாங்கி அவற்றை காட்சிகளில், வசனங்களில், நடிப்பில் காட்டாவிடில் காங்ஸ்டரின் நம்பகத்தன்மை இழக்கப்பட்டுவிடும். படத்தின் மிகப்பெரிய பலவீனங்களில் இதுவுமொன்று.
இதுவா எங்கள் சினிமா? தயவுசெய்து இப்படியான சினிமா எங்களுக்கு வேண்டாம்.
மனதிற்பட்டதை அப்படியே எழுதியிருக்கிறேன். மனங்களை நோகப்பண்ணுவது நோக்கமல்ல. எமக்கான சினிமா குண்டுச் சட்டியில் குதிரையோட்டுவதைக் கடந்து தனித்துவமான பாணியில் வளரவேண்டும் என்றே விரும்புகிறேன்.