இனப்படுகொலை அரசான பேரினவாத இலங்கை அரசின் நிகழ்ச்சி நிரலில் செயற்படும் நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் என்று அழைக்கபடும் உருத்திரகுமார் தலைமைதாங்கிய நாடுகடந்த அரசின் கூட்டத்தொடர் அமரிக்காவில் நடைபெற்றது.
இலங்கையில் தமிழ்ப் பேசும் மக்கள் மீதான இராணுவ ஒடுக்குமுறை நாளாந்தம் அதிகரித்துச் செல்கின்றது. என்றுமில்லாதவாறு மக்கள் அவலத்துள் தள்ளப்பட்டுள்ளனர். நிலம் ஆக்கிரமிக்கப்படுகிறது. கைதிகள் குறித்து எந்த தெளிவான தகவல்களும் இல்லை.
இவை அனைத்திற்கும் எதிரான ஜனநாயக சக்திகளை இணைத்து இதுவரை எந்தப் போராட்டதையும் புலம் பெயர் நாடுகளில் நாடுகடந்த தமிழீழம் போன்றவை நடத்த முன்வரவில்லை.
மாறாக இவ்வாறான போராட்டங்கள் நடைபெறக் கூடாது என்பதில் அக்கறை கொண்டவையாகவே இவ்வமைப்புக்கள் காணப்படுகின்றன.
வெளி நாடுகளில் தமது போலியான அடையாளங்கள், இலச்சனைகள் போன்றவற்றைப் பாதுகாக்கும் குழுவாதச் செயற்பாடுகளுக்கும் அறிக்கைகளுக்கும் அப்பால் இவை முன்னேறுவது இல்லை.
அவ்வாறான நிகழ்வுகள் நடைபெறுகின்ற வேளைகளிலும் அவற்றை நிராகரிக்கவும் முற்படுகின்றன.
மக்களை உணர்ச்சிவயப்படுத்தில் அவர்களிடமிருந்து எஞ்சியிருக்கும் பணத்தையும் பிடுங்கிக் கொள்வதை ஒரு புறத்திலும் மறுபுறத்தில் இலங்கை அரசிற்கு எதிரான அழுத்தங்களை வழங்கும் போராட்டங்களை நிராகரிப்பதிலும் அதிக கவனம் செலுத்துகின்றனர்.
இந்த நிலையில் நாடுகடந்த தமிழீழ அரசின் “பாராளுமன்றக் கூட்டத் தொடரில்” தாயொருவர் உணர்ச்சிவயப்பட்டு தனது தாலியை உருத்திரகுமாரனிடம் வழங்கியுள்ளார்.
கே.பி, நெடியவன் போன்ற இன்னோரன்ன தலைகளிடம் பதுங்கிக்கொண்ட பணத்தொகையோடு ஒப்பு நோக்கினால் தாலியின் பெறுமதி மிகக் குறைவே. எது எவ்வாறாயினும் இன்னும் ஏமாற்றப்படுவதற்கான இடைவெளி காணப்படுகிறது என்பதையே இத் தாலி வழங்கல் விவகாரம் எடுத்துக்காட்டுகிறது.
நிகழ்வில் உரையாற்றிய உருத்திரகுமாரன் “
தாயகத்தில் எமது தாய்மார்களினதும் சகோதிரிகளினதும் கழுத்துக்களில் தொங்கும் தாலிகள் நிலைத்து நிற்க வேண்டும் என்பதற்காக இங்கு ஒரு தாலிக்கொடி இறங்கியது. ஈழத் தமிழர் தேசம் தனக்கெனச் சுதந்திரமான இறைமையுடைய தமிழீழத் தனியரசினை அமைத்து, தமிழீழத் திருநாட்டின் தேசியக் கொடி உலக அரங்கில் பட்டொளி வீசப் பறக்க வேண்டும் என்பதற்காக – இந்த அமர்வில் நமது தேசத்தின் தாய் ஒருவர் தனது கழுத்திலிருந்த தனது தாலிக்கொடியினை தானே இறக்கி – நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திடம் ஒப்படைத்த நிகழ்வை நாம் இந்த அரங்கில் கண்டோம்.” என்றார்.
மரணத்துள் வாழும் மக்கள் கூட்டத்திற்கும் சீ.ஐ.ஏ இன் சிலந்தி வலைக்குள் தாலியறுக்கும் உருத்திரகுமாரனுக்கும் என்ன தொடர்பு?