மரத்தின் மீது பற்றுக்கொண்ட இன்னுமொரு அமைச்சர், ‘கல்யாணம் கட்ட நான் ரெடி, நீங்க ரெடியா’ என்கிறார். குடும்பங்களை ஆய்வு செய்யுமளவிற்கு அரசியல் வங்குரோத்து நிலையை அடைந்துள்ள நாட்டின் ஆட்சி, எதேச்சாதிகாரத்தை நோக்கி நகர்கின்றது என்று கூறினால், தாமரைத்தடாகக் கூரைகளைப் பிய்த்துக் கொண்டு அரசிற்குக் கோபம் வருகிறது.
இலங்கையில் மட்டுமல்ல, புலம் பெயர் நாடுகளிலும் ‘தமிழ் தேசியம்’ என்கிற பெயரில், தனி நபர்கள் ,அவர்களின் குடும்பத்தார் மீது வக்கிர உணர்வுமிக்க எழுத்துக்களால் சேறடிக்கப்படுவதைக் காணலாம்.
இவைதவிர, சம்பிக்காவின் பிதற்றலை மறுக்கும் இலங்கையின் முன்னாள் ராசதந்திரி தயான் ஜயதிலக, தென்னாபிரிக்க விடுதலைப்போராட்டத்தில் நிறவெறிக்கு எதிராகப்போராடிய விடுதலைவீரர் கோபி பிள்ளை என்று கூறும் அதேவேளை, பேரினவாத ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடிய விடுதலைப்புலிகளை விடுதலைப்போராளிகள் என்று ஏற்க மறுக்கிறார்.
புலிகளின் அரசியல்- இராணுவ வழிமுறை குறித்து, கலாநிதி தயானின் நீலக் கண்ணாடி ஊடான மாக்சியப்பார்வையில் விமர்சனங்கள் இருந்தாலும், ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டம் என்கிற வகையிலாவது அதனை அவர் ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும்.
ஆகவே கோளாறு மாக்சிசத்தில் இல்லை. அதனை தமக்கேற்றவாறு வளைத்து, ஒட்டுமொத்த புரட்சியை ஏற்றுக்கொள்ளாத எந்தப்போராட்டமும் ஏகாதிபத்தியங்களின் நலனிற்கே சேவகம் செய்யும் என்றும், தேசிய இனங்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு ,ஆனால் பிரிந்து செல்லும் உரிமை ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என்று மாக்சிசத்தை திரித்து கூறுபவர்கள் பார்வையில்தான் கோளாறு இருக்கிறது.
இத்தகைய கலாநிதிப் புரட்சியாளர்களுக்கு இந்தியா ஒரு பிராந்திய ஏகாதிபத்தியம், அமெரிக்கா ஒரு உலக ஏகாதிபத்தியம் என்பதோடு , ஐ.நா.வில் தீர்மானங்கள் கொண்டுவருவதால், அமெரிக்கா தமிழர் சார்பானது என்றும், 13 வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தச் சொல்வதால் இந்தியா தமிழர் நலனில் மட்டுமே அக்கறை கொண்டது என்கிற பார்வைகள் உண்டு.
இந்தச் சரிந்த பார்வைகள், அதிகார வர்க்கத்தை நியாயப்படுத்தும் போக்கினைக் கொண்டன என்பது அவர்களுக்கே தெரியும்.
சீனாவின் பிராந்திய மேலாதிக்க விருப்பங்களை நீர்த்துப்போக வைக்க அல்லது வலுவிழக்கச் செய்ய , நீடித்துச் செல்லும் தேசிய இன முரண்பாடானது ஏனைய வல்லரசுகளின் அழுத்தக்கருவியாக பயன்படுத்தப்படுவதை, அரசிற்கு எதிரான- ஆதரவான மாக்சிசவாதிகள் புரிந்து கொள்ளவில்லை என்றால், அது அபத்தமானது.
இதில் சுவாரசியமான இன்னொரு பக்கமும் இருக்கிறது. அதாவது அமெரிக்காவையும் மேற்குலகையும் எதிர்ப்பதற்கு அரசிலுள்ள மாக்சிச விற்பனர்களும், இந்தியாவைக் கடுமையாக விமர்சிப்பதற்கு அரசிற்கு ஆதரவு தரும் பௌத்த சிங்கள பேரினவாத பலயக்களும் இருக்கின்றார்கள். இந்த இரண்டு வாள்களும், அதிகாரத்தைக் காப்பாற்ற, முறையாகத்தான் பயன்படுத்தப்படுகின்றன.
மேலும், நாட்டின் கொடியில் சுத்தியலும் அரிவாளும் அல்லது நட்சத்திரங்கள் பொறிக்கப்பட்டிருந்தால், அந்நாட்டில் பாட்டாளிவர்க்க சர்வாதிகார ஆட்சி அதிகாரம் நிலைநாட்டப்பட்டுள்ளது என்று வாதிடமுடியாது.
கொடிகள் சிவப்பாக இருந்தாலும், உலகமயமாக்கலின் சந்தைப்பொருளாதார ஆடைகளை அணிந்துகொண்டுதான், அவை வருடந்தோறும் தமது புரட்சிநாளை நினைவு கூறுகின்றன.
அவை சிவப்போ நீலமோ, இவற்றிக்கிடையே நிகழும் ஆதிக்கப்போட்டியில், சுயத்தையும் இருப்பினையும் இழந்து கொண்டிருக்கின்றன ஒடுக்குமுறைக்குள்ளாகும் பூர்வீக தேசிய இனங்கள்.
அதேவேளை, சுயநிர்ணய உரிமை கோருவது அல்லது இரண்டு தேசிய இனங்களின் பகிரப்பட்ட இறைமையின் அடிப்படையில் தீர்வினை முன்வைப்பது ( கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளது ) என்கிற பிறப்புரிமை சார்ந்த விவகாரங்கள் எல்லாம், இந்திய- அமெரிக்க ஏகாதிபத்தியங்களின் நலன்களுக்குச் சாதகமானது என்று கூறியவாறு, பேரினவாத ஆட்சிக்கருத்தியலுக்கு துணைபோகும் பெரும்பாலான இலங்கை- மாக்சிஸ்டுகள் , வெளிநாட்டு நேரடி முதலீட்டிற்காக தமிழர் பிரதேசங்கள் தாரை வார்க்கப்படுவது குறித்து, பேசுவதுமில்லை, அதற்கான போராட்டங்களை முன்னெடுப்பதுமில்லை.
அது பற்றி பேசினால், இரண்டு தேசிய இனங்களின் உழைக்கும் வர்க்கங்களுக்கிடையே முரண்பாடு ஏற்பட்டுவிடுமென்று இவர்கள் கருதுவது போலுள்ளது. ஆகவே வர்க்க ஒற்றுமைக்காக, எண்ணிக்கையில் சிறுபான்மையாகவுள்ள தேசியஇனங்கள் நசிபட்டாலும் பொறுமைகாக்க வேண்டுமென்று இவர்கள் எதிர்ப்பார்ப்பது அப்பட்டமான திரிபுவாதம் அல்லது பிழைப்புவாதம் என்று கொள்ளலாமா?.
சிங்கள பாட்டாளிமக்கள் மத்தியில் சென்று, ‘தமிழ் தேசியஇனத்தின் சுயநிர்ணய உரிமை என்பது சரியானது, நியாயமானது’ என்று இவர்களால் ஏன் கூறமுடியாமல் உள்ளது?.
தென்னிலங்கை சமூக வாழ்வின் ஒவ்வொரு அசைவிலும் நீக்கமற வியாபித்திருக்கும் பேரினவாதக்கருத்துநிலையோடு மோதமுடியாமல், பொதுவுடமைவாதிகள் என்கிற முகவரியோடு முதலாளித்துவ டுமாவிலும் ( நாடாளுமன்றம்), தொழிற்சங்கங்களிலும் முடங்கிக் கிடக்கும் சீர்திருத்தப் புரட்சியாளர்கள், முதலாளித்துவ- அரை நிலப்பிரபுத்துவ அடிக்கட்டுமானங்களை அசைத்துவிடுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.
கார்ல் மார்க்ஸ் எழுதிய ‘மூலதனம்’ என்கிற அறிவியல்பூர்வமான நூலின் அடிப்படையே பொருளாதாரம்தான்.
ஆனாலும், ‘தேசிய இனப்பிரச்சினையில் ஏகாதிபத்தியங்களின் தலையீடு’ என்றவாறு, ஒடுக்குமுறைகளையும், இன அழிப்பினையும் மறைமுகமாக நியாயப்படுத்தி அதற்கு முண்டுகொடுப்பவர்கள், அதே ஏக -ஆதிபத்தியங்களின் மூலதன வருகைக்காகக் காத்திருப்பது வேடிக்கையாக இருக்கிறது.
இது குறித்தான அரசின் அரசிறைக் கொள்கைகளை (Fiscal Policy )இவர்கள் விமர்சிப்பதில்லை. வெளிநாட்டு நிதி மூலதனத்தினை வரவழைப்பதற்கு, இந்த ஏகாதிபத்தியங்களிடம் நாட்டின் இறைமை முறிகளை ( Sovereign Bond ) விற்பனை செய்யும் ஆட்சியாளர்களை, ‘ஏகாதிபத்திய எதிர்ப்புவாதிகள்’ என்று எந்தச் சித்தாந்தத்தின் அடிப்படையில் கூறுகிறார்களோ புரியவில்லை….தெரியவில்லை.
2013-2015 காலப்பகுதியில், முதிர்ச்சியுறும் நாட்டிறைமைக் கடனின் (sovereign debt ) அளவு , வருடமொன்றிக்கு சராசரியாக 1.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இதனைத் திருப்பிச் செலுத்துவதற்கு, திறைசேரியில் அன்னியசெலாவணி கையிருப்பு இருக்க வேண்டும். அல்லது திறைசேரி முறிகளில் ( Treasury Bond ) வெளிநாட்டு நிதி முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய வேண்டும்.
ஆனால் ரூபாயின் நாணய மதிப்பு கீழிறங்கிச் செல்கிறது. ஒரு அமெரிக்க டொலருக்கு 135 ரூபாவை கடந்த வாரம் தொட்டுள்ளது.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கையிலிருந்து விலகிச் செல்வதால் இந்த நாணய மதிப்பிறக்கம் நிகழ்வதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலும் சொல்கிறார். இந்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரமும் அதனை வழி மொழிகின்றார்.
இந்தியாவிலும் இதே சிக்கல்தான். அமெரிக்காவின் அரசிறைக் கொள்கையில் அண்மைக்காலமாக ஏற்பட்டுவரும் மாற்றமே இந்த வீழ்ச்சிக்கு காரணம் என்கிறார்கள்.
இந் நிலையில், முதலீட்டாளர்கள் வெளியேறி எங்கே செல்கின்றார்கள் என்கிற கேள்வி எழும். ஏனெனில் எப்போதும், தாம் முதலீடு செய்யும் முறிகளுக்கு யார் அதிக வட்டி தருகிறார்கள் என்பதைப் பொறுத்து அவர்களின் முதலீட்டு இலக்கு நிர்ணயிக்கப்படும்.
ஆகவே இப்போதுள்ள முறிச் சந்தை நிலவரத்தில், அமெரிக்காவின் திறைசேரி முறிகளுக்கே அதிக வட்டி வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. அதுதான் உண்மையும்கூட. ஆகவேதான் அமெரிக்காவை நோக்கி இந்த முறிகளில் முதலீடு செய்வோர் நகர ஆரம்பித்துள்ளார்கள் என்பதனை புரிந்து கொள்வது இலகுவானது.
அமெரிக்காவின் சீரழிந்த பொருளாதார நிலைமையினை தூக்கி நிமிர்த்துவதற்கு, சமஸ்டிக் காப்பகத்தின் (Federal Reserve ) தலைவர் பென் பெனன்கி அவர்கள், முறிகளை வாங்கும் குறுகிய காலத்திட்டம் (Bond purchasing programme ) ஒன்றினை முன் வைத்தார்.
முதிர்ச்சியடையும் திறைசேரி முறிகள் மற்றும் வீட்டுக் கடனுதவிக்கான பிணையங்கள் என்பவற்றில் மீளவும் முதலீடு செய்வதற்காக, ஒவ்வொரு மாதமும் $ 85 பில்லியன் டொலர்களை பெனான்கியின் பெடரல் ரிசேர்வ் ஒதுக்குகின்றது.
ஆனால் முறிகளை வாங்குவதும் விற்பதும் காலநிர்ணயத்திற்கு உட்பட்டவை. உதாரணமாக 10 வருட முறியை கொள்வனவு செய்தால் , அதற்கான வட்டியை ( இதனை yield என்பார்கள்) விற்றவர் வழங்க வேண்டும். அதேபோல், 10வருடம் நிறைவடையும்போது, முதலீட்டாளரின் முழுதொகையினையும் வழங்க வேண்டும். இதைத்தான் ‘பெடரல் ரிசேர்வ்’ ஆனது, முறிகளை வாங்கும் திட்டத்தினூடாகச் செய்கிறது.
தற்போது இந்த நிகழ்ச்சிநிரலில் மாற்றம் ஏற்படுகிறது. அதாவது 85 பில்லியனை 15 பில்லியன் டொலர்களாகக் குறைக்கப்போவதாக செய்திகள் வருகின்றன. அத்தோடு பென் பெனான்கி அவர்களின் பதவிக்காலம் நிறைவுற்று, புதியவர் ஒருவர் அப்பதவிக்கு வரப்போகிறார். அவர் எத்தகைய மாற்றங்களை கொண்டு வருவார் என்பது தெரியாது.
ஆகவே நிதி மூலதன நிறுவனங்கள் அமெரிக்க முறிச்சந்தையை நோக்கி படையெடுப்பதால், பல நாடுகளின் நாணய மதிப்பு வீழ்ச்சியடைகிறது.
நாணயத்தின் மதிப்பு குறைவதால் ஏற்றுமதி அதிகரிக்கும் என்கிற வணிகக் கோட்பாடு, கைத்தொழில் உற்பத்தியில் வளர்ச்சியுற்ற சீனா, ஜப்பான் போன்ற நாடுகளுக்குப் பொருந்தும்.
ஆனால் இந்தியாவிற்கோ அல்லது இலங்கைக்கோ இந்த நாணயப்போர் சாதகமானதல்ல.
இந்நிலையில், இந்த நாடுகள், தமது கைத்தொழில் வளர்ச்சிக்கும், நடப்புக் கணக்கு பற்றாக்குறையை ( Current Account Deficit ) சமாளிப்பதற்கும், அனைத்துலக நாணய நிதியம் மற்றும் பன்னாட்டு நிதி நிறுவனங்களிடம் கையேந்த வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
91 ஆம் ஆண்டளவில், இந்தியாவின் அன்னியச் செலாவணி திவாலாகிப்போனதால், அனைத்துலக நாணய நிதியத்திடம் (IMF ) அந்நாடு சரணடைந்த வரலாற்றினை இப்போது பலர் நினைவூட்டுகின்றார்கள்.
அரசிறைப் பற்றாக்குறையை, மொத்த உள்ளூர் உற்பத்தியின் (GDP ) 4.8% மாக மட்டுப்படுத்துவதற்கு, 10படிமுறைகளை கையாளப்போவதாக கூறுகின்றார், மூன்றாவது தடவையாக நிதி அமைச்சர் பதவி வகிக்கும் ப.சிதம்பரம் அவர்கள்.
அதேவேளை இலங்கையை எடுத்து நோக்கினால், சம்பூரிலுள்ள 818 ஏக்கர் நிலத்தில், $4பில்லியன் முதலீட்டில், கெட்வே இண்டஸ்ட்ரீஸ் லிமிடட் என்கிற சிங்கப்பூர் நிறுவனம் பாரிய கைத்தொழில் பேட்டை ஒன்றினை நிறுவப்போவதாகவும், அதற்கான அமைச்சரவையின் ஒப்புதலும் பெறப்பட்டுவிட்டதாகவும், இலங்கையின் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இத்தொழில் பேட்டை மூலம், மேலும் பல வெளிநாட்டு நேரடி முதலீடுகள் வருவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக நம்பிக்கை கொண்டுள்ள அமைச்சர் யாப்பா, பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாட்டின் ஊடாகவும், $10பில்லியன் டொலர் பெறுமதியான முதலீடுகள் வந்து குவியுமென்று எதிர்பார்க்கின்றார்.
2011 இல் பொதுநலவாய மாநாட்டினை நடாத்திய ஆஸ்திரேலியா, $10பில்லியன் வெளிநாட்டு நேரடி முதலீட்டினைப் பெற்றதைப்போல தாமும் பெறுவோம் என்பதுதான் அமைச்சரின் நம்பிக்கை.
வெளிநாட்டு நேரடி முதலீடுகளை மூன்று வழிகளில் உள்ளே கொண்டுவரலாம். அரச திறைசேரி முறிகளில், உண்டியல்களில் மேற்கொள்ளப்படும் முதலீடு ஒருவகை.
இரண்டாவது, கைத்தொழில் பேட்டைகளில், ஐந்து நட்சத்திர விடுதி கட்டமைப்புக்களில், துறைமுக அபிவிருத்தியில், முதலீடு செய்வது இரண்டாவது வகை. இவை வருவாயை ஈட்டக்கூடிய துறைகள்.
மூன்றாவதாக , நாட்டின் உட்கட்டுமானப் பணிகளுக்கான நிதியை ,வட்டியோடு கூடிய கடனடிப்படையில் வழங்குதல். இதையே சீனா அதிகம் விரும்புகிறது.
இதில் இரண்டாவது முதலீட்டு வழியே, இலங்கைக்கு பொருத்தமானதென திறைசேரிச் செயலாளர் பீ.பி. ஜெயசுந்தராவும், மத்திய வங்கியின் ஆளுநர் அஜித்தும் கணிப்பிடுகின்றார்கள்.
அதற்காகவே, மாநாடுகளையும், முதலீட்டு ஈர்ப்புக் கருத்தரங்குகளையும் அரசு தொடர்ச்சியாக நடாத்துகின்றது. நவிபிள்ளையையும் உள்ளே அனுமதிக்கிறது.
ஆகவே வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, வேலைவாய்ப்பின்மை போன்ற அழுத்தங்களால் சிக்கித்திணறும் பெரும்பான்மையான மக்கள் கூட்டம், வெற்றுக் கோசங்களில் எதையும் எதிர்பார்க்க மாட்டார்கள்.
ஏகாதிபத்திய எதிர்ப்புக் கோசங்களை ஒரு கையிலும், மக்கள் இறைமையை பன்னாட்டு நிறுவனங்களுக்கு அடகுவைக்கும் ஆட்சிக்கான ஆதரவினை மறு கையில் பிடித்திருக்கும் திரிபுவாதிகளை மக்கள் ஏற்றுக்கொள்வது கடினமாகத்தானிருக்கும்.