Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இனப்படுகொலை – சர்வதேசக் குற்றமிழைக்கும் இலங்கை அரசு : சபா நாவலன்

இனப்படுகொலையின் ஆரம்பம்

இனப்படுகொலை என்பது ஒரு அரசால் அல்லது அதிகார மையத்தால், அதனது எல்லைக்குட்பட்ட மக்கள் பகுதி மீது நிறைவேற்றப்படும் கருத்தியல் சார்ந்த குற்றச்செயல். இரண்டாவது உலகப் போர் காலகட்டத்தில் யூதர்கள் மீதான ஜேர்மனிய அரசின் திட்டமிட்ட படுகொலையைத் ஐந்திலிருந்து ஆறு லட்சம் உயிர்களைக் காவுகொண்டது. இது தான் இனப்படுகொலை தொடர்பான கருத்தாடல்களையும் அது தொடர்பான சிந்தனைப் படிமங்களையும் தோற்றுவித்தது.

உலகம் இனப்படுகொலை தொடர்பாக அறிந்துகொண்ட போது இனப்படுகொலையின் சூத்திரதாரிகளைச் சர்வதேசச் சட்டங்களுக்கு முன்நிறுத்துவதுவதையொட்டிய வாதப் பிரதிவாதங்கள் எழலாயின. 1948 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபை Convention on the Prevention and Punishment of the Crime of Genocide (UHCG), என்ற பிரதி வரைமுறையை முன்மொழிந்தது. இப்பிரதியானது அனைத்துத் தரப்பாலும் இனப்படுகொலைக்கான அடிப்படை வரைவாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஒரு குற்றச் செயல் என்ற அடிபடையில் UHCG ஆனது ஒரு மதக்குழுவையோ, தேசத்தையோ, தேசிய இனப்பகுதையோ, இனக்குழுவையோ, பகுதியாகவோ முழுமையாகவோ நிர்மூலம் செய்யும் நோக்கத்தைக் கொண்ட செயற்பட்டை இனப்படுகொலை என வரைமுறை செய்தது. இதன் பின்னதாக International Criminal Court (ICC) என்ற சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இந்த வரைமுறையை ஏற்றுக்கொண்டது.

இன்று வரைக்கும் இனப் படுகொலையென்பது சமூகவிஞ்ஞான ஆய்வுகளில் குறிக்கத்தக்க பாத்திரத்தை வகிகிறது.

பல சிக்கலான விரிவைக் உருவாக்கவல்ல இந்த இனப்படுகொலை தொடர்பான வரை முறை, அடிப்படையில் இரண்டு விடயங்களை தெளிவாக்குவதாகக் குறிப்பிடுகிறார் ஆர்.ஜே.ருமெல் என்ற சமூகவியலாளர்.

1. ஒரு வேறுபட்ட குழுவச் சார்ந்தவர்கள் என்ற காரணத்தின் அடிப்டையில்,அவர்களை கொலைசெய்யும் எண்ணத்தைக் கொண்டிருக்கும் செயற்பாடு இனப்படுகொலையாக வரைமுறை செய்யப்படுகிறது.

2. அனாதரவான அல்லது ஆயுதமற்ற மக்கட் பகுதியை குறித்த காரணங்களை முன்வைத்து நிர்மூலமாக்கும் செயற்பாடு.

இனப்படுகொலை : சர்வதேசக் குற்றம்

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின்(ICC) ஆறாவது சரத்தின் அடிப்படையில், முழுமையாகவோ பகுதியாகவோ ஒரு குறித்த அடையாளத்தைக் கொண்ட மக்கள் பிரிவினரை குறித்த காரணங்களுக்காக நிர்மூலமாக்கவல்ல பின்வரும் நடவடிக்கைகள் குற்றமாகக் கருதப்படுகிறது.

1. ஒரு அடையாளத்தைக் கொண்ட குழுக்களைக் கொலை செய்தல்.

2. உளவியல் ரீதியாகவோ சாரீர அடிப்படையிலோ ஒரு குறித்த இனக்குழுவைச் சார்ந்த உறுப்பினர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தல்.

3.பகுதியாகவோ முழுமையாகவோ சாரீர ரீதியான சீர்குலைப்பை ஏற்படுத்தும் வகையில் திட்டமிட்டுத் திணிக்கப்டும் வாழ்வு முறை.

4. பிறப்பைபுரிமையைத் தடுக்கும் வைகையில் திணிக்கப்படும் நடவடிக்கைகள்.

5. வன்முறையின் பலம் கொண்டு ஒரு மக்கள் கூட்டத்தைச் சேர்ந்த பிள்ளைகளை இன்னொரு மக்கள் கூட்டத்திற்கு உரிமையாக்குதல்.

இங்கு பிரதானமான சில விடயங்களை அவதானிக்கலாம்.

ஒரு குறித அடையாளத்தைக் கொண்ட இனக்குழு அல்லது மக்கள் கூட்டம் ஒன்றின் முழுமையான அல்லது பகுதியான பிரிவின் மீது மேல் வருபவை பிரயோகிக்கப்படும் போது அவை சர்வதேச நீதிமன்றம் அதன் சட்ட வரையறைகளுக்குட்பட்ட குற்றமாகக் கருதுகிறது.
சர்வதேச நீதிமன்றத்தின் உருவாக்கமும், ஐ.நா சபையின் நடவடிக்கைகளும் உட்படக்கூடிய விமர்சன நோகுநிலைக்கு அப்பால், வெறுமனே சட்ட வரையறைகளைப் பேசுவோர் மத்தியில் அதன் உள்ளடக்கத்தை விபரிபதும் வெளிக் கொண்டுவருவதுமே  பகுதியின் நோக்கமாகும்.

சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் (ICC)

ICC என்பது 2002ம் ஆண்டிலிருந்தே செயற்பட ஆரம்பிக்கிறது. ஐ.நா சபையிலிருந்து முற்றிலும் சுதந்திரமாக இயங்கும் சர்வதேச நீதிமன்றமானது சர்வதேச அளவிலான இனப்படுகொலை, பாரிய மனித உரிமை மீறல்கள் என்பவற்றைச் சர்வதேச அளவில் கையாளும் வைகையில் உருவாக்கப்பட்டது என்கின்றனர் இதன் கர்த்தாக்களான 139 நாடுகள்.
இதன் உருவாக்கத்தின் போது பிரதானமாகக் முன்மொழியப்பட்ட கருத்துக்களாவன:

1. சர்வதேச அளவில் துயர்தரவல்ல பாரதூரமான மனித உரிமை மீறல்களையும் பரிய மனிதப்படுகொலைகளை மேற்கொள்பவர்களையும் சுதந்திரமாக சமூகத்தில் அனுமதிக்க முடியாது என்பதும் அதனால் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதுமாகும்.

2. இவ்வாறான குற்றங்களை மேற்கொள்பவர்களைச் தண்டிப்பதனூடாக மனித இனத்திற்கெதிரான வன்முறைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

3. சர்வதேச நீதிமன்றத்தை ஏற்றுக்கொண்டு கைச்சாத்திட்ட இலங்கை உட்பட அனைத்து நாடுகளும், மனித உரிமை தொடர்பாக அதன் வரை முறைகளுக்கு உட்பட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்பதால் அரச குற்றச்செயல்கள் குறைவடையும்.

இனப்படுகொலையை வரையறுத்தல்

இனப்படுகொலை என்பதற்கான வரையறை அந்தந்த நாடுகளின் புறச் சூழலை முன்னிட்டு வேறுபாடானதும் சிக்கலானதுமான வடிவங்களைக் கொண்டிருந்ததால், 1945 ஆம் ஆண்டிலுருந்து பொதுவாக ஆய்வாளர்களும் சமூகவியலாளர்களும் வேறுபட்ட வரைமுறைகளை முன்வைத்தனர்.

இலங்கை போன்ற நாடுகளில் இனப்படுகொலையை வரையறுப்பதென்பது சிக்கலான ஒன்றல்ல. ஒரு குறித்த அடையாளத்தைக் கொண்ட மக்கள் மீது அரச படைகளின் தொடர்ச்சியான தாக்குதல் என்பது, வெளிப்படையானதாகவும் அரசியல் மயப்படுத்தப்பட்ட தத்துவமாகவும் காணப்படுகின்ற இலங்கையின் சூழ்னிலையைப் போலல்லாது ஏனைய நாடுகளில் இதன் சிக்கலான தன்மையும் அதற்கான அரசிய சமூகப் பகைப்புலமும் சிக்கலானதாகக் காணப்பட்டதால், வேறுபட்ட வரையறைகள் உருவாகின.

எது எவ்வாறாயினும் எல்லா வரைமுறைகளுமே பகுதியாகவோ முழுமையாகவோ ஒரு குறித்த அடையாளத்தைக் கொண்ட மக்கள் கூட்டம் மீதான சாரீர அல்லது கருத்தியல் வன்முறை என்பது இனப்படுகொலை என்பதை எல்லா வரை முறைகளுமே ஏற்றுக் கொள்கின்றன.

ஒரு குறித்த அடையாளத்தைக் கொண்ட மக்கள் கூட்டத்தின் மீதான, குடியிருப்புக்கள் மீது விமானத்தாக்குதல்கள், நச்சுவாயுத் தாக்குதல்கள் போன்ற பாரிய மனிதப் படுகொலைகள் சர்வதேசக் கரிசனையை ஏற்படுத்தக் கூடிய இனப்படுகொலைகளாகக் கருதப்படுகின்றன.
பொதுவாக இதன் ஆரம்பம் இனரீதியான வேறுபாடுகளாயும் இதன் உச்சநிலை (மகிந்த சிந்தனைய போன்ற) கருத்தியல் சார்ந்த நியாயப்படுத்தலுடன் கூடிய சீரழிப்புக்களாகவும் அமையலாம் என ஹெலன் fபெயின் போன்றோர் கருதுகின்றனர்.

பெரும்பாலும் இவ்வகையான இனப்படுகொலை, இலங்கையில் நடைபெறுவது போன்ற ஒரு குறித்த மக்கள் கூட்டத்தின் ஆதரவுடன் மற்றொரு அடையாளத்தைக் கொண்ட மக்கள் கூட்டத்தை சீர்குலைக்கும் பாசிசமாக உருவெடுக்கும் என ஸ்ரீவன் காட்ஸ் போன்றோர் எதிர்வு கூறுகின்றனர்.

இனப்படுகொலைகளுக்கான முன்நிபந்தனை

இனப்படுகொலைகளுக்கான முன்நிபந்தனையான எட்டுப்படி நிலைலகளை இனப்படுகொலை ஆணையகத்தின்(Genocide Watch) தலைவரான கிரகொறி ஸ்டன்டன் 1996ம் ஆண்டு வரைமுறை செய்கிறார்.

முதலாம் நிலை: “நாங்களும் அவர்களும்” என மக்கள் பிரிவடைதல்.

இலங்கையில் காலனியத்தின் இறுதிக் காலப்பகுதியில் இதற்கான சூழல் ஏற்படலாயிற்று. குறிப்பாக அனகாரிக்க தர்மபாலவின் அரசியல் வருகைக்குப் பின்னர் இவ்வேறுபடும் தன்மை அதிகரித்தது.

இரண்டாம் நிலை: குறித்த அடையாளங்களை இணைத்து நலிவடைந்திருப்போர் மீது அவற்றை வெறுப்படையும் வகையில் திணித்தல்.

சிங்கள பௌத்த அடையாளம் முன்னிலைப்படுத்தப்பட்டு அது தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியில் வெறுக்கத் தக்கவகையில் பல சந்தர்ப்பங்களில் திணிக்கப்பட்டது.

மூன்றாம் நிலை: ஒரு குழுவானது மற்றைய குழுவின் மனிதத் தன்மையை நிராகரித்தல், பெரும்பாலான சந்தர்ப்பங்களில், அதன் உறுப்பினர்கள் விலங்குகளோடும், கிருமிகளோடும், நோய்களோடும் ஒப்பிடப்படுதல்.

அனகாரிக தர்மபால ஆரியரல்லாத் தமிழர்கள், முஸ்லீம்கள் அரை மனிதர்கள் என்றும் இலங்கையை அசுத்தப்படுத்த வந்தவர்கள் என்றும் குறிப்பிடுகிறார்.

நான்காம் நிலை: இனப்படுகொலை எப்போதும் அமைப்பு மயப்படுத்தப்படல். பயிற்சி பெற்ற ஒரினத்தின் இராணுவம் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இதற்காக ஆயுதமயப்படுத்தப்படும்.

சிங்கள பௌத்த இனவாதத்தால் அரசியல் மயப்படுத்தப்பட்ட இராணுவம் தமிழ் பேசும் மக்கள் மீதான இனப்படுகொலையை நிறைவேற்றுகிறது.

ஐந்தாம் நிலை: வெறுக்கப்படும் குழுவிற்கெதிரான பிரசாரங்களை முன்னெடுத்தலும் அதனைத் துருவ மயமாக்குதலும்.

சுரேந்திர அஜித் ரூபசிங்க கூறுவது போல், மகிந்த சிந்தனையானது அடிப்படையில் சிங்கள பௌத்த நிலவுடைமைக்கு தனி உரிமை கோருகிறது. இது ஒரு தேசத்தை அதுவும் சிங்கள பௌத்த தேசத்தைத் திணிக்கிறது. ஏனைய தேசிய இனங்களை அதற்கேற்ப இயைந்து போகுமாறு கோருகிறது.

ஆறாம்நிலை: அடையாளத்தை முன்வைத்து பாதிப்படைவோர் அடையளப்படுத்தப்பட்டு தெரிவு செய்யப்படுதல்.

ஏழாம்நிலை: அவர்கள் மனிதர்களாக கருதப்படுவதில்லை என்பதால், கொலைவரை அவர்கள் நிர்மூலமாக்கப் படுகின்றனர்.

பிரித்தானியர்களுக்கு எதிராகப் போராடி இந்த நாட்டை மீட்டவர்களும் இந்த நாட்டின் மீது உரிமையுடையவர்களும் சிங்களவர்களே. இனமோதலால் பாதிக்கப்பட்டவர்களும் அவர்களே எனக்கூறும் அதுராலியே ரத்னா தேரர், தேர்தலுக்கான ஜனாதிபதியின் பாராளுமன்றக் குழுவின் ஆலோசகரும், தன்னார்வ நிறுவனங்களின் கண்காணிப்புகுழு உறுப்பினருமாவார்.

எட்டாம்நிலை: இனப்படுகொலை மேற்கொள்வோர் தாம் எந்தக் குற்றத்தையும் மேற்கொள்ளவில்லை என நிராகரித்தல்.


ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பதையும்,தமிழ் அகதிகளுக்கான சர்வதேச உதவிகளை முடக்குவதும், தன்னார்வ நிறுவனக்களின் மனிதாபிமானப் பணிகளைக் கூட நிராகரிப்பதும் இலங்கை அரசால் நியாயப்படுத்தப் படுகின்றது.

இந்தோனிசிய அரசானது பப்புவா தேசியவாதப் போராட்டத்தைக் காரணமாக முன்வைத்து பப்புவா மக்கள் மீதான இனப்படுகொலையை நிறைவேற்றுவதை உலகுக்கு முன்கொண்டுவந்த யெல் பல்கலைக்கழகத்தின் சட்டக்கல்லூரியின் நீண்ட அறிக்கை இந்தோனேசிய அரசின் மீதான உலக ஜனநாயக வாதிகளின் கவனத்தைத் திருப்பியது.

குர்தீஸ் மக்கள் மீதான இனப்படுகொலைக்கு இலங்கையில் நடைபெறும் இனப்படுகொலை எந்தளவிலும் குறைந்ததல்ல.

இனப்படுகொலை மேற்கொள்ளும் இலங்கை அரசு சர்வதேச அரசியல் முரண்பாடுகளைக் கையாள்வதனூடாகவும் இலங்கை என்ற சிறிய நாட்டை அன்னிய நாடுகளுக்கு அடகு வைப்பதனூடாகவும் தன்னைத் தக்கவைத்துக்கொள்ள முயற்சிக்கிறது.

புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளைத் தனது தமிழ் பேசும் மக்கள் மீதான இனப்படுகொலையின் அடிப்படையாக சர்வதேசத்திற்குப் பிரசாரம் மேற்கொள்ளும் இலங்கையரசு சர்வதேச முற்போக்கு இயக்கத்தை மௌனிக்கச் செய்யயும் முயற்சியில் குறித்தளவு வெற்றியும் கண்டுள்ளது.

பெரும்பாலான அரச ஆதரவு சக்திகள் இலங்கை அரசின் தமிழ் பேசும் மக்கள் மீதான கொலைகளை இனப்படுகொலை அல்ல என நிராகரிக்க பின்வரும் நியாயங்களை முன்வைக்கின்றன.

1. 1980 களின் இறுதிப் பகுதியில் மூன்று வருட காலப்பகுதியின் சுமார் 80 ஆயிரம் சிங்கள் இளைஞர்கள் ஜே.வி.பி என்ற அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்ற அடிப்படையில் பிரேமதாச அரசால் கொலைசெய்யப்பட்டனர். ஆக. இவ்வாறான படுகொலைகள் இனப்படுகொலைகளல்ல என்றும் பயங்கர வாதத்திற்கெதிரான ஜனநாயக அரசின் போராட்டம் என்றும் நியாயப்படுத்துகின்றனர்.

-ஜே.வி.பி இன் இராணுவக்குழு அழிக்கப்பட்ட போது மக்கள் குடியிருப்புக்கள் மீதான எழுமாறான எந்தத் தாக்குதல்களும் இடம்பெறவில்லை. கைது செய்யப்பட்ட ஜே.வி.பி உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் விசாரணையின்றி அரசால் கொலை செய்யப்பட்டனர். மாறாக தமிழர்கள் என்ற ஒரே காரணத்தின் அடிப்படையிலேயே மட்டுமே மக்கள் குடியிருப்புக்கள் மீது, தமிழ் ம்க்களின் இழப்புக்கள் பற்றி எந்தத் தயக்கமுமின்றி கனரக ஆயுதங்களைக்கொண்டு தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
தாம் மேற்கொள்ளும் பொதுமக்கள் மீதான தாக்குதல்களை நியாயப்படுத்தும் நோக்குடன் இலங்கை அரசானது அமரிக்க அரசின் ஆப்கான் மக்கள் மீதான தாக்குதல்களை சுட்டிக்காட்டுகின்றது.
தமிழ் பேசும் மக்கள் என்ற ஒரே காரணத்தை முன்வைத்தே 200 ஆயிரம் மக்கள் தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டு சாரீர மற்றும் உளவியற் சித்திரவதைக் குள்ளாக்கப்படுவது மட்டுமல்ல, பாலியல் வன்முறையிலிருந்து படுகொலைகள் வரை நாளாந்தம் அனுபவிக்கிறார்கள்.
சுதந்திரமான எந்த ஊடகங்களும் மனிதாபிமான உதவிகளும் கூட அனுமதிக்கப்படுவதில்லை. உலக நாடுகள் வழங்கிய மில்லியன் கணக்கிலான உதவிப் பணம், முகாம்களில் தடுத்துவைத்திருக்கும் அகதிகளை மீழ் குடியேற்றம் செய்யப் போதுமானது.
மே மாதம் முதலாம் திகதியிலிருந்து லங்கா சேவா போன்ற உள்ளூர்த் தன்னார்வ நிறுவனங்கள் கூட முகாம்களிலிருந்து விரட்டியடிக்கப்பட்டுள்ளன. மதவாச்சிக்கு அப்பால் எந்த உதவிநிறுவனங்களும் அனுமதிக்கப்படுவதில்லை. முன்னர் அனுமதிக்கப்பட்ட பெளத்த பிக்குகளுக்குக் கூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
ஆனால் அகதிகள் மிருகங்கள் போல நடாத்தப்பட்டு உடல்ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். சிங்கள மக்கள் மீது இவ்வாறான தாக்குதலை மேற்கொள்ளும் பட்சத்தில் பெரும்பான்மைச் சிங்கள் வாக்காளர்களைக் கொண்ட அரசு நிலைக்க முடியாது. ஆக, இத் தாக்குதல்கள் தமிழ் பேசும் இலங்கை மக்கள் மீதான திட்டமிட்ட இனப்படுகொலையே!

இவையெல்லாமே இனப்படுகொலையின் சாராம்சக் கூறுகள் தான். அரச ஆதரவாளர்கள் வாதிடும் ஜே.வி.பி படுகொலைகள் காலகட்டத்தில் அப்பாவிச் சிங்கள மக்கள் மீது எந்த சந்தர்ப்பத்திலும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படவில்லை என்பதை இவர்கள் மறந்துவிடுகிறார்கள். இந்த வாதத்தை முன்வைக்கும் அரச ஆதரவாளர்களோடு முன்னாள் “ஜனநாயக வாதி” களும் தம்மை இணைத்துக்கொண்டு அரசை ஆதரிக்கும் கைங்கரியத்தை செவ்வனே செய்து முடிக்கின்றனர்.

2. போர் நடக்கும் பகுதி தவிர்ந்த ஏனைய பகுதிகளில் தமிழர்கள் பாரிய அளவில் அழிக்கப்படுவதில்லை என்பதால் இலங்கையரசு தமிழர்கள் மீதான திட்டமிட்ட இனப்படுகொலை நடத்தவில்லை என்று நியாயம் கற்பிக்கின்றனர்.

-இனப்படுகொலை தொடர்பாக வரையறை செய்ய முற்பட்ட எவருமே ஓர் இனம் முழுமையாக அழிக்கப்படுதலே இனப்படுகொலை என வாதாட முன்வரவில்லை. “ஓர் இனக்குழுவின் மீதான பகுதியான அல்லது முழுமையான” சீர்குலைப்பு என்பதே இவ்வரைவிலக்கணங்களின் பொதுவான கருப்பொருளாக அமைந்திருந்தது.
தவிர இனச் சுத்திகரிபு இனப்படுகொலை என்பதெல்லாம் இன்று அதன் உச்ச நிலையைத் தொட்டிருந்தாலும், காலனியத்தின் முடிபிற்குச் சற்று முன்னரே இவை திட்டமிட்டு உருவாக்கப்பட்டன. இன்று வடபகுதியில் அரசு உருவாக்கிய திறந்தவெளிச் சிறைக்குள் மக்கள் வாழ்கின்றனர். கிழக்கில் நாளாந்த கொலைக்களத்துள் மக்களின் வாழ்வு அரச அதிகாரத்தின் கைகளில் சிக்குண்டுள்ளது.

இலங்கையின் ஏனைய பகுதிகளில் இரண்டாம்தரப் பிரஜைகளாகவே தமிழ் பேசும் மக்கள் நடாத்தப்படுகிறார்கள். இவையெல்லாம் இனப்படுகொலையின் வெளிப்படையான கூறுகளே!

3. புலிகள் அமைப்பினால் நூற்றுக் கணக்கான தமிழர்களும் சிங்களவர்களும் கொன்றொழிக்கப்பட்ட நிலையில் புலிகளின் பிடியிலிருந்து மக்களைக் காப்பாற்ற இலங்கையரசு நடாத்தும் போரில் அப்பவி மக்களின் உயிர்கள் பறிக்கப்படுவது தவிர்க்கமுடியாதது என்று வாதிடுகின்றனர்.

-தமிழர்கள் என்ற ஒரே காரணத்தால் தான் இந்தத் தவிர்க்கமுடியாமை நியாயப்படுத்தப்படுகிறது. மகிந்த அரசி சிங்கள அப்பாவிகளை இதே அளவில் கொன்றுபோட்டால், ஒரு இரவு கூட சிங்கள மயப்படுத்தப்பட்ட இராணுவமும் மக்களும் ஆட்சியிலிருக்க அனுமதிக்கமாட்டார்கள். ஆக, தமிழர்கள் என்ற ஒரே காரணத்தால் மட்டுமே இனப்படுகொலை மேற்கொள்ளப்படுகிறது.

இனப்படுகொலையை ஒரு புறத்தில் வளர்த்தெடுக்கப்பட்ட மக்களின் பாசிசத்தின் துணைகொண்டு, பெரும்பகுதி அப்பாவிச் சிங்கள மக்களின் ஆதரவுடன் சிறீ லங்கா அரசு திட்டமிட்டு நடத்திவருகிறது.

ஜேர்மனிய யூதர்களின் படுகொலைக்குப் பின்னர், தீபெத், ஆர்மேனியா, இந்தோனேசியா என்று எல்லா நாடுகலிலுமே இனப்படுகொலை மேற்கொள்ளும் அரச அதிகாரம், ஏதாவது ஒரு புறக்காரணி ஒன்றை முன்வைத்தே இப்படுகொலைகளை மேற்கொள்ளுகின்றன. தமிழ்பேசும் மக்கள் மீதான இலங்கை அர்சின் இனப்படுகொலை என்பது புலிகளைக் காரணம் காட்டியே மேற்கொள்ளப்படுகிறது. ஆரம்பத்தில் இது தூய இனப்படுகொலையாக ஆரம்பித்தாலும் இன்றைய பாரிய படுகொலைகளுக்குப் புலிகளையே அரசும் அரச ஆதரவாளர்களும் முன்வைக்கிறார்கள்.

மூடிய இரும்புத் திரைக்குள் சாட்சியமின்றி இரகசியமாக நடாத்தப்படும் இனப்படுகொலைக்கு பலியாகும் மக்கள் என்றாவது ஒருநாள் சாட்சியமாவார்கள்.

புலி அழிப்பிற்குப் பின்னால் மறைக்கப்படும், படுகொலைகளும், மனித உரிமை மீறல்களும், தமிழ் பிரதேசங்களில் வன்முறை நிறைந்த சிங்களக் குடியேற்றங்களும், ஆயுதமயமாக்கப்படும் சிங்களக் கிராமங்களும் நிறைவேற்றப் பட்டுக்கொண்டிருக்கும் இனப்படுகொலைக்குச் சாட்சியங்களாகும்.

இராணுவத்திற்கான ஆட்சேர்ப்பு

தடுப்பு முகாம்களிலுள்ள அனாதரவான தமிழர்கள் விலங்குகளைவிடக் கேவலமாகப் பட்டினிச் சாவை எதிர்கொள்ளும் அதே வேளை திவிரமாக இராணுவத்திற்கு மறுபடி ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. இலங்கை அரச ஊடகங்களில் போரின் வெற்றியுடன் கூடவே இராணுவத் தொழிலிற்கு ஆட்சேர்ப்பிற்கான பிரச்சாரம் முனைப்புடன் மேற்கொள்ளப்படுகிறது. தியத்தலாவை இராணுவப் பயிற்சிமுகாம் மேலும் விரிவுபடுத்தப்படுகிறது. ஒரு பகுதித் தம்ழ் பேசும் மக்களின் உயிர் வாழ்விற்கும் சாவிற்கும் இடையில் ஊசலாடும் சூழலில் அவர்களுக்கு எதிராகப் பாதுகாப்பு என்ற பெயரில் இராணுமயப்படுத்தப்படுதலை நியாயப்படுத்தும் இலங்கை அரசானது, இதனைத் தீவிர வாததை முற்றாக ஒழிக்கும் மகிந்த சிந்தனைய என்கிறது. ஓரினத்தின் பட்டினிச் சாவிலும், திட்டமிட்ட அழிப்பிலும் கட்டியெழுப்பப்படும் பாதுகாப்பு என்பது இனப்படுகொலையே!

இலங்கையை இராணுவமயமாகும் திட்டம் என்பது மறுபுறத்தில் தமிழ் மக்களின் அரை நூற்றாண்டுகால தேசிய இனப்பிரச்சனைக்கு அரசியற்தீர்வை முன்வைக்க மகிந்த அரசு முன்வரப்போவதில்லை என்பதையும் துருவ வல்லரசுகளின் துணையோடு இனப்படுகொலையைத் தீவிரப்படுத்துவதே அதன் நோக்கம் என்பதும் தெளிவாகிறது.

என்ன செய்யப்போகிறோம்?

மே மாதம் முதலாம் திகதியிலிருந்து  லங்கா சேவா போன்ற உள்ளூர்த் தன்னார்வ நிறுவனங்கள் கூட முகாம்களிலிருந்து  விரட்டியடிக்கப்பட்டுள்ளன. மதவாச்சிக்கு அப்பால் எந்த உதவிநிறுவனங்களும் அனுமதிக்கப்படுவதில்லை. முன்னர் அனுமதிக்கப்பட்ட பெளத்த பிக்குகளுக்குக் கூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இவைகளை வேளிக்கொண்டுவர எண்ணும் மிகச்சிறுதொகையான ஜனநாயக சக்திகள் புலி ஆதரவாளர்களாகச் சித்தரிக்கப்படுகிறார்கள்.

அபிவிருத்தியையும் மனிதாபிமான உதவிகளைப்பற்றி மட்டுமே சிந்திக்குமாறு ஆணையிடப்படுகிறார்கள்.

மில்லியன் கணக்கில் டொலர்களாகப் பண உதவிகளை பதுக்கி வைத்துக்கொண்டிருக்கும் இலங்கை அரசின் காலடியில் மண்டியிடுமாறு கட்டளையிடப்படுகிறது.
புலிகளின் தவறுகளே அரசின் பலமாகிவிட்ட சூழ்னிலையில் தயக்கமின்றி நிறைவேற்றப்படும் மனிதப்படுகொலைகளை நிறுத்துவதற்காகக அனைத்து முற்போக்கு சக்திகளும் குரல்கொடுக்க வேண்டும்.

இனப்படுகொலையின் சூத்திரதாரிகளுக்கெதிராக சர்வதேச நீதிமன்றத்தில் புலம்பெயர்சமூகம் முறையிட வேண்டும்.

அரசின் உதவிப்பணத்தை மக்களுக்கு வழங்குமாறு சர்வதேச அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட வேண்டும். அரச தாக்குதல்களைக் கண்டு கொதிதெழுந்த புலம்பெயர் சமூகம் இன்று அகதிகளுக்காக, அரசிற்கெதிராகக் கிளர்ந்தெழ வேண்டும். தடைமுகாம்களில் வதைக்கப்படும் மக்களை அரசின் பிடியிலிருந்து விடுவிக்க சர்வதேச சமூகத்தையும் ஜனநாயக சக்திகளையும் கோரவேண்டும்.

அகதிகளுக்கான பணத்தை முடக்கியுள்ள அரசு, புலம்பெயர்மக்களிடமிருந்து மேலும் பணம் கேட்பதாக அரச அமைச்ச பீலிக்ஸ் பெரேரா குற்றம் சுமத்துவது கேலிக்கிடமான கோரமாகும்.
உதவிகள் அரசினூடாக அல்ல உறவிர்களூடாக மட்டுமே வழங்கப்படுதலே பாதுகாப்பானது என புலம் பெயர் இலங்கையர்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள்.

புலிகளின் அரசியற் பொறுபாளர் பா.நடேசன் கோருவது போல் புலிகளைக் காப்பாற்ற அல்ல, மாறாக மக்களைக் இனப்படுகொலையிலிருந்து காப்பாற்ற உலகம் போல்முழுவதுமுள்ள மனிதபிமான சக்திகளுடனும் ஜனநயக சக்திகளுடனும் இணைந்து பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்படவேண்டும்.

Exit mobile version